நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு குடிமக்கள் சமூகத்தின் பங்கேற்பு அவசியம்

 


வடமாகாண நீர்வளம் சார்ந்த உரையாடல் வட்டத்தின் ஒரு பகுதியாக ‘நல்லூர் நீர்வள உரையாடல்’ நல்லூர் பிரதேச சபை அரங்கில் 25.03.2023 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் - இளைய நீர்த்துறையாளர் - வடக்கு வட்டமும் இணைந்து நடாத்திய உரையாடலில், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களும் நீர்சார் ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து கலந்துரையாடினர். ஏற்கனவே இவ்வுரையாடல் வட்டம் கடந்தாண்டு கார்த்திகை மாதம் 22 ஆம் திகதியும், இவ்வாண்டு தை மாதம் 12 ஆம் திகதியும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் நீர்வள உரையாடலின் பின் குறித்த செயற்திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

வட மாகாணத்தினுடைய நீர் பாதுகாப்பு, அதனை தொலைநோக்குப் பார்வையில் உறுதிப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள், அதற்குத் தேவையான தரவுகளை திரட்டுதல், அந்தத் தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கின்ற அரச அலகுகளுடைய தீர்மானங்களுக்கு அனுசரணையாக இருத்தல், தண்ணீரின் நெருக்கடி நிலையை அதிலும் நிலத்தடி நீரின் நெருக்கடி நிலையை வட மாகாணம் முழுவதுக்குமான ஒரு பார்வையில் பள்ளி மாணவர்கள் தொடக்கம் வீட்டு தலைவிகள் வரையிலுமாக முன்னர் இருந்ததை விடவும் மிகவும் தெட்ட தெளிவாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல். இவை எல்லாம் இன்று நாம் உடனடியாக செய்ய வேண்டியவை.

பல தசாப்தங்களாக இங்கே முன்னோடிகளாக இருந்த தலைசிறந்த தொழில்நுட்ப பொறியியலாளர்கள் இத்துறையைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களது சிந்தனைகள், செயற்றிட்டங்கள் யாழ் கடல் நீர் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றக்கூடிய வழிமுறைகள், யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு (River for Jaffna) என்ற வழிமுறை என்பவற்றை எல்லாம் திரட்டினோம். அவை  தந்த கேள்விகளையும் அறிவுகளையும் ஒன்று சேர்த்த பின்னர் நான் முதல் கூறிய அத்தனையையும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் செய்து முடிப்பதற்காக யாழ் பல்கலைக்கழகம் ஒரு செயல்திட்டத்தில் இறங்கியது.

2020 பங்குனி மாதம் 12 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் ‘வட மாகாணத்தின் நீர் பாதுகாப்பினை மக்களை ஒன்றிணைத்து செய்கின்ற ஆய்வுத் திட்டத்தின் மூலம் நடத்துதல்’ (Water Security through Participatory Action Research in the Northern Province of Sri Lanka, WASPAR) என்ற பெயரில் ஒரு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு அறிவுத் துறைகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவ பீடத்தில் உள்ள சமூக உடல் நலவியல் துறையைச் சேர்ந்தவர்களின் வழிநடத்தலில் இந்த செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான அணுகுமுறையை வரைந்து கொடுத்ததன் காரணமாக என்னையும் அழைத்து இருந்தார்கள். அதைத் தொடர்ந்து வந்த கோவிட் காலத்தில் அது படிப்படியாக நகர்ந்து தற்போது அது அடைய வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் அடைந்திருக்கின்றது.

வடமாகாணத்தின் நீர்நிலை சார்ந்து அத்தனை பதிவுகளும் ஒன்று சேர்க்கப்பட்டு, எண்ணிமைப்படுத்தப்பட்டு, சேமிப்பகம் (repository) ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாம் எதையும் அந்த  சேமிப்பகத்தில் தேடுதல் மூலம் தேடிக் கொள்ளக் கூடிய வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பெறுபேறு.

சமூகத்தில் இவ்விடயங்களில் அக்கறை போதுமான அளவு இல்லாமல் இருக்கின்றது. இந்த பின்னணியில் நீர் வளத்தை காப்பதற்கான எந்த ஒரு விடயத்திலும் குடிமக்களையும் தலைவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போகின்ற தேவை இருக்கின்றது. அவர்களுடைய பங்களிப்புடன் ஏற்படுகின்ற முடிவுகள் நல்ல முடிவுகளாக நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்கின்ற முடிவுகளாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான ஒரு உரையாடல் வட்டம் (dialog forum) நிறுவப்பட்டுள்ளது. இது இரண்டாவது பெறுபேறு.

மூன்றாவது பெறுபேறு, இவை இரண்டும் சேரும் போது செய்யப்பட வேண்டிய ஆய்வு பகுப்பாய்வு (research) என்பவற்றுக்கான வழி மூலம். தற்போது வட மாகாணத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. ஒன்று யாழ் பல்கலைக்கழகம் மற்றையது வவுனியா பல்கலைக்கழகம். இரண்டிலும் உள்ள அறிவுத் துறையின் பங்களிப்புடன் இந்த ஆய்வுத் திட்டங்கள் மாணவர்களுடைய ஆய்வுகளாகவும் பேராசிரியர்களின் ஆய்வுகளாகவும் வருவதற்கு இது வழி சமைத்து கொடுக்கும்.

இன்னுமொரு விடயம் இங்கே முக்கியமானது, இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இங்கே வெளியாகும் முக்கிய தினசரிகளில் நீர்சார்ந்த செய்திகள், பதிவுகள், கட்டுரைகள் எத்தனை வெளியாகி இருக்கின்றன என்பதனை ஒவ்வொன்றாக பார்த்தபோது அதிர்ச்சியாக தான் இருந்தது. கடந்த சில வருடங்களில் ஒரு சில கட்டுரைகள் மாத்திரமே வெளியாகி இருந்தன. நீர் சார்ந்த விளம்பரங்கள் அதிகளவு வெளியாகி இருந்தன. குறித்த ஆய்வு முடிவுகள் தொடர்பில் இங்குள்ள பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டு நீர் சார்ந்த கட்டுரைகளை அதிகரிப்பது தொடர்பில் பேசப்பட்டது.  

நாம் இந்த மூன்று பெறுபேறுகளையும் ஏதோ ஒரு வகையில் நல்லூர், கோப்பாய், அக்கராயன் என்கின்ற மூன்று பிரதேச சபை நிலப்பரப்புகளிலும் நிறைவேற்றி இப்பொழுது இதனுடைய விளிம்பை வந்து அடைந்திருக்கின்றோம். வடக்கின் நீர் வளத்திற்கான உரையாடல் வட்டம் உருவாக்கப்பட்டு நான்கு மாதங்களில் நான்கு தடவைகள் சந்தித்து இருக்கின்றோம். அந்த உரையாடல் வட்டத்தில் பல்வேறு துறை சார்ந்தவர்களும் பல்வேறு அரசியல் துறைகளில் உள்ள பொறுப்பாளர்களும் மக்கள் குழுக்களும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் விவசாய சம்மேளனங்களும் பெண்கள் அமைப்புகளும் ஊடகவியலாளர்களும் ஆக 40 பேர் அளவில் இருக்கின்றோம். கிரமமாக இக்கூட்டத்தில் பங்கேற்று நல்ல முடிவை நோக்கி ஆரோக்கியமான உரையாடலை நடத்திக் கொள்வதற்காக பயிற்சி செய்து, கற்றுத் தேர்ந்து வருகிறோம்.

பொதுவாக இவ்வாறான உரையாடல்கள் தானாக நிகழ்வது இல்லை. எல்லோரும் அதற்கு ஆயத்தமாக இல்லை. அதை யாரோ ஒருத்தர் முன்மொழிந்து வழி நடத்தி கொண்டு செல்ல வேண்டும் என்பதை இப்போதைக்கு நான் ஏற்றுக் கொள்கிறேன். அதில் பயிற்றப்பட்டவனாக நான் இருக்கின்ற காரணத்தால் அதை நீங்கள் பயின்று கொண்டால் எல்லோரும் அதனை நடத்தலாம். சமூகத்திற்கு இதனால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

இந்த முயற்சிக்கு சமமாக இளைய நீர்வள ஆர்வலர்கள் (young water professionals)   என்ற பெயரில் வடக்குக்கான பல்வேறுப்பட்ட துறைகளை சார்ந்த இளம் துறையாளர்களைக் கொண்ட வட்டம் ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது. அவர்களுடைய முன்மொழிவுடன் அவர்களுடைய ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையில் அங்கம் வகித்த உறுப்பினர்களும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடப் போகின்ற அங்கத்தவர்களையும் அழைத்து உள்ளூராட்சி சபையின் வகிபாகம், அவர்கள் கையில் இருக்கின்ற அதிகாரங்கள், அவர்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், அவர்கள் பணிகளை இன்னும் நேர்த்தியாக செய்வதற்கான வழிமுறைகள் பற்றி பேசுவதற்கு அழைத்திருந்தோம்.

இதுவரை மாகாண அலகுகளை உள்ளடக்கிய உரையாடல் இன்று ஒரு படி கீழே வந்து, கிராம நிர்வாகத்துக்கு மேலே இருக்கின்ற பிரதேச சபை என்று சொல்லப்படுகின்ற அதிகார அலகுகளில் ஒன்றாகிய நல்லூரில் நிறைவேறி இருக்கின்றது. முதல் முயற்சி ஒரு வகையான பதற்றத்துடன் ஆரம்பமானது. ஆனால், எந்த ஒரு விடயத்தையும் சரியான அணுகு முறையுடன் திறந்த மனதோடு நல்ல வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்ல உரையாடல்கள் நிகழும் நிகழ்த்த முடியும் என்ற உற்சாகத்தை இது கொடுத்துள்ளது.

எமது மொழியில் பணிவும் உணர்வும் அன்பும் கலந்த வகையில் உள்ள விடயங்களை உள்ள வகையில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொழுது அவர்கள் அவதானிக்கின்றார்கள். சரியான முறையில் கருத்துகளை முன்வைக்கின்ற போது அவர்கள் அதற்கான பதில்களை சொல்ல முன் வருகின்றார்கள். இது எல்லோருக்கும் முடியும். வந்த 11 பேரை நீங்கள் எந்த கட்சியில் உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரிய தேவை இல்லை நீங்கள் சொல்லவும் தேவையில்லை என்று விதிமுறைகளில் ஒன்றாக அச்சிட்டு ஒட்டியதன் அடிப்படையில் அவர்கள் ஒரு புன்முறுவலுடன் எழுந்து தாராளமாக பேசினார்கள். இங்கே நடப்பது பற்றி கேள்விப்பட்டு தாங்களும் ஏதும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லித்தான் வந்தார்கள். அவர்களை கற்பதற்கான முதல் படியை எடுப்பதற்கான வாய்ப்பை நாங்கள் தந்திருக்கிறோம்.

‘இது ஒரு வட்டம், இது ஒரு வழி, இது ஒரு பாதுகாக்கப்பட்ட வெளி. இந்த வெளியில் பேசப்படும் விடயங்கள் உங்கள் பெயரில் வெளியே போகாது. ஆனால் இங்கே பேசப்படுகின்ற கருத்துகள்  தாராளமாக உலகத்திற்கு எடுத்துச் சொல்லப்படும். நீங்கள் பிரதிநிதிகளாக தேர்தலில் வெற்றி பெற்று நல்லூர் பிரதேச சபையில் வேலைகளை தொடங்கும் பொழுது இந்த இளம் பொறியியலாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய அறிஞர்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அனைத்திலும் பங்கு ஏற்கக் கூடிய நிலையில் ஆயத்தமாக இருப்பார்கள். உங்களுக்கு கை கொடுப்பார்கள். நீங்கள் நல்ல முடிவுகளை எடுங்கள். விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். பின்பற்றாதவர்களை கண்டியுங்கள். குழாய் கிணறுகள் தேவைப்படுகின்ற இடத்தில் தேவைப்படுகின்ற நேரத்தில் அங்கீகாரங்களை வழங்குங்கள்.  வீடு கட்டும்போது வீடுகளைச் சுற்றி நிலத்துக்குள் நீர் போகாமல் தடுப்பு செய்யும் கற்களை பதிப்பதை கேள்விக்குள்ளாக்குங்கள்.’ இவ்வாறான பல விடயங்களை பேசியதின் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு அவசியமாகப்பட்ட விடயங்களை எடுத்துப் பேசத்தான் போகின்றோம் என்று உறுதி பூண்டார்கள்.

நீர் மாசடைதல், நீரில் கழிவுகள் சேர்த்தல் போன்றவை தமது இதயத்தோடு தொடர்பாக உள்ள தலைப்புகள் என்று சொல்லி அவை தொடர்பான நடவடிக்கைகளை செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். எதையும் நாங்கள் உறுதியாக அங்கீகாரமாக அல்லது கட்டாயமா நிறைவேறும் என்ற எண்ணத்துடன் போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்  நல்ல மனமும், நல்ல மன உறுதியும் நல்ல பாதையும் இருந்தால் நல்ல முடிவுகள் வரும். எல்லாமே கற்றல் தான். எல்லா பெரிய யாத்திரைகளும் எடுக்கப்படுகின்ற முதல் படியில் தான் ஆரம்பிக்கப்படுகிறது. அவ்வாறான ஒரு முதல் படி நல்லூர் பிரதேச சபையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதை நான் வழி நடத்துவதற்கு பல்கலைக்கழகம் தந்த வாய்ப்புக்கு நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். இதனை மற்றைய பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாக ஆக்க விரும்புகிறேன். எல்லா பிரதேச சபைகளிலும் நீர் வளம் அச்சுறுத்தலாக இருக்கின்றதால் இது எல்லா பிரதேச சபைக்கும் பொருந்தும். ஊர்காவற்றுறைக்கும் பொருந்தும், கரவெட்டிக்கும் பொருந்தும், காரைநகருக்கும் பொருந்தும். காணாமல் போன குளங்களை மீட்டெடுப்பது உட்பட நல்ல ஒரு பாதைக்கு நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவின் இந்தக் கருத்துகளை தொடர்ந்து கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் பலர் தமது கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளில் சிலவற்றை கேழே தொகுத்து இருக்கிறோம்.

நீர் என்ற பரப்புக்குள் மட்டுமல்லாமல் சமூகத்தின் ஏனைய வளங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு விழிப்பூட்டல் என்பதையும் தாண்டிய அறிவூட்டலுடன் சரியான வழிகாட்டலையும் வழங்க வேண்டும். அவற்றின் உரித்தாண்மையை அவர்களிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் தான் தலைமுறை தலைமுறையாக கடத்திக் கொண்டு போக கூடியவர்கள்.

அரசாங்க நிறுவனங்களும் சந்தை நிறுவனங்களும் இந்த மக்களுடன் இணைந்து பயணிக்க கூடிய வகையில் தங்களுடைய திட்டங்களை கொள்கைகளை நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் இலகுவாக அணுகக் கூடியவையாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். சுன்னாகம் குடிநீர் விடயத்தில் சமூகத்திடம் பிரச்சினையை கையளிக்காமல் போன படியால் தான் பின்னூட்டம் இல்லாமல் போனது.

எங்கெல்லாம் குளங்கள் உள்ளன என அடையாளம் காண வேண்டும். அவற்றின் எல்லைகளை தெளிவாக்க வேண்டும். அந்த விபரங்கள் பொருத்தமான முறையில் கணனிமயப்படுத்த வேண்டும். குளங்கள் தொடர்பில் இதுவரை வெளிவந்துள்ள கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளை தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு நான்காம் ஆண்டிலிருந்து நீர் தொடர்பிலான பாடம் இருக்கின்றது. மாணவர்களை அருகிலுள்ள குளங்களுக்கு அழைத்து சென்று அங்கே என்னென்ன பறவைகள் வருகின்றன, என்னென்ன பூச்சியினங்கள் உள்ளன, எவ்வகையான தாவரங்கள் சுற்றி உள்ளன போன்ற அடிப்படை அறிவியல் ரீதியான விடயங்களை நடைமுறை ரீதியாக காட்ட வேண்டும்.

சிறிய வெற்றிகளை முதலில் அடைந்து கொண்டு செல்வது தான் நல்லது. இன்றைய நாட்டு சூழலில் அரசாங்கம் நிதியை தந்து அதனை கிராமங்கள் செலவழிக்கும் நிலை இல்லாமல் போய் விட்டது.  இப்படியான உரையாடல்கள் கிராமங்கள் ரீதியில் பரவலாக்கப்பட வேண்டும். 

குளம் என்பது வயலுக்கு மட்டும் தண்ணீர் கொடுப்பதாக தான் முதலில் இருந்தது. இனி குடிதண்ணீரில் இருந்து பல தேவைகளுக்கும் குளங்களின் தண்ணீர் தேவையாக உள்ளது.

பல்வேறு இடங்களிலும் நீர் தொடர்பில் சிந்திக்கும், உரையாடும் குழுக்களை செயற்படுத்துவது அவசியமானது. நீர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் மட்ட தீர்வுகளை முதன்மைப்படுத்த வேண்டும். உலக நாடுகளிலும் நீர் பிரச்சினைகளை தீர்க்க எவ்வாறான முன்னெடுப்புகளை செய்தனர், அதில் எமது தேசத்துக்கு எவ்வாறான விடயங்கள் பொருத்தமாக இருக்கும் என ஆராய வேண்டும். அதிலிருந்து நாம் பல்வேறு அனுபவங்களையும் கற்றுக் கொள்ள முடியும்.

இங்கே கதைக்கிற விடயங்களை சிறியளவில் நடைமுறைப்படுத்தி சமூகங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் இந்தக் கட்டமைப்பு பலம் பெறும். அதன் மூலம் எமது சமூகமும் பலமிக்கதாக மாறும். குளங்களின் பராமரிப்பு அப்பகுதி மக்களின் பங்குபற்றல் பொறிமுறையூடாக செயற்படுத்தப்பட வேண்டும். இருக்கின்ற வளங்களை பாதுகாத்துக் கொண்டு தான் நாங்கள் புதிய செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும்.  

சமூகங்களின் பங்குபற்றல் அதிகரிக்கக் கூடிய வகையில் செயல் ரீதியான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்களை சரியான இடத்துக்கு நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.  ஒரு திட்டத்தை சரியாக செயற்படுத்துதல் மட்டுமல்ல, அதனை தொடர்ந்து பராமரிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும் மிகவும் முக்கியமானது.  

இரண்டு வருடங்களாக நீர் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உரையாடல் மன்றங்களை நடாத்தி வருகிறோம். நீர் தொடர்பான தொழிநுட்ப விடயங்களை தெரிந்தவர்களும் அறிவு, ஆய்வு தளத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்தையும் ஒரே தளத்தில் வைத்து உரையாடல் செய்வது முக்கியமானது. அடுத்த உரையாடல் செயற்பாட்டுக்கான உரையாடலாக அமைய வேண்டும். 

அமுது-

நிமிர்வு வைகாசி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.