மலையக தமிழ் மக்களும் நான்கு கோட்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும்




1947 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது அந்த தேர்தலில் மலையகத்தில் இருந்து 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை இந்திய காங்கிரஸ் இல் இருந்து 6 பிரதிநிதிகளும் சுயேட்சையாக ஒரு பிரதிநிதியும் தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை 20 இற்கும் மேற்பட்ட இடதுசாரி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு மலையக மக்களினுடைய வாக்குகள் காரணமாக இருந்திருக்கிறது. இது கண்டிய சிங்களவர்களுடைய ஆதிக்கத்திற்கு மலையகத்தில்  இடைஞ்சலாக இருக்கும் என்று தான் 1948 ஆம் ஆண்டு முதலில்  பிரஜாவுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமை சட்டமும் அதே ஆண்டு தேர்தல்கள்  திருத்த சட்டமும் கொண்டு வரப்பட்டு மலையக மக்களினுடைய வாக்குரிமையும்  இல்லாமல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மலையக மக்கள் ஒரு பிரதிநிதித்துவ அரசியலின் பலன்களை அனுபவிக்க முடியாத ஒரு மோசமான இருட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தார்கள்.

1977 ஆம் ஆண்டின் பின்னர் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மூன்றாவது உறுப்பினராக தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். அதற்கு பிறகு தான் மலையக மக்களினுடைய பிரதிநிதித்துவ அரசியல் வளரத் தொடங்கியது. 1989 ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்ற பின்னர் மலையக மக்களை ஒரு தேசிய இனமாக கொள்கின்ற ஒரு போக்கு வளரத் தொடங்கியது. ‘மலையகம் எமது தாயகம், நாம் ஒரு தேசியம்’ என்கின்ற கோசங்கள் எல்லாம் எழுச்சி அடைய தொடங்கின. இதற்கு பிறகு இவ்வளவு காலமும் ஒரு தொழிற்சங்க அரசியலோடு கட்டுப்பட்டு இருந்த மலையக அரசியல் ஒரு தேசிய இன அரசியலை நோக்கி நகருகின்ற செயற்பாடு என்பது உண்மையில் வளரத் தொடங்கியது.

இன்றைக்கு மலையகத்தில் இரண்டு  பெரிய அரசியல் அணிகள் இருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றது தமிழ்  முற்போக்கு கூட்டணி. இரண்டுமே ஓரளவுக்கு பலமாக இருக்கின்றன. ஆனால் மலையக மக்களினுடைய நலன்களை வெற்றி கொள்வதில் போதுமான அளவிற்கு அவர்கள் செயற்பாட்டாளர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் மலையக மக்களினது பிரதிநிதித்துவ அரசியலை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதான நிலைமை அங்கு இருக்கின்றது.

இந்த பின்னணியில் தான், இந்த 200 ஆவது வருடத்தில் ஒரு தீர்மானத்திற்கு நாங்கள் வர வேண்டும். மலையக மக்களினுடைய நலன்கள் தொடர்பாக எதிர்காலத்தில்  என்ன செய்யலாம் என்பது தொடர்பாக நாங்கள் ஒரு வலுவான தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலைமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு முதலில் மலையக மக்கள் சில கோட்பாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 

அதில் நான்கு பிரச்சனைகள் மிக முக்கியமானவை.

1. மலையக மக்களினுடைய அடையாள பிரச்சனை. அவர்கள் இந்திய வம்சாவழியினரா? மலையக தமிழரா?.

2.மலையக மக்கள் ஒரு சிறுபான்மை இனமா, தேசிய இனமா?

3. மலையக மக்களினுடைய பிரச்சனை இறைமைப்  பிரச்சனையா அல்லது அடையாளப் பிரச்சனையா?

4. மலையக மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு என்பது நில ரீதியிலான அதிகாரப் பகிர்வா அல்லது சமூக ரீதியிலான அதிகாரப் பகிர்வா?

இந்த நான்கு கோட்பாட்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுகின்ற போது தான் உண்மையில் மலையக மக்களின் அரசியல் நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்றுவதற்கான படிகளில் கால் வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரையில் நான் மலையக பிரதேசத்தினை சேர்ந்தவன் அல்ல, அதற்கு வெளியில் இருக்கின்ற வடக்கு கிழக்கு சமூகத்தை சேர்ந்தவன். ஆனால் மலையக மக்களின் நலன்களில் அதிகளவில் அக்கறை உள்ள ஒருவன். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த கோட்பாட்டு பிரச்சனைகள் தொடர்பாக என்னுடைய கருத்தை சொல்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அதில் முதலாவது கோட்பாட்டு பிரச்சனையான இந்திய வம்சாவழியினரா மலையக தமிழரா என்கின்ற பிரச்சனையில் மலையக தமிழர் என்கின்ற அடையாளத்தை பேண வேண்டும் என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இன்றைக்கு இலங்கையில் இருக்கின்ற எல்லோருமே இந்தியாவில் இருந்து தான் வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. முதல் இந்த இடையில் இருக்கின்ற பாக்குநீரினை கடல் என்பது இருக்கவில்லை. ஆகவே வந்து போவதற்கு இலகுவாக இருந்த காலப்பகுதி. மலையக மக்களை வேண்டுமென்றால் கொஞ்சம் பின்னுக்கு வந்தவர்கள் என்று சொல்லலாம். ஆகவே அவர்களுக்கு மட்டும் இந்திய வம்சாவழியினர் என்று ஒரு அடையாளத்தை போடுவது எவ்வளவு தூரம் சரியானது என்கிற கேள்வி என்னிடம் இருக்கின்றது.

மலையகத்தினை பொறுத்தவரை 8 ஆவது தலைமுறையினர் தான் மலையகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை பற்றி பெரிதாக தெரியாது. ஆகவே இந்தியாவுடன் ஒரு தொடர்பும் இல்லாத மக்களை ஏன் அந்த பெயருடன் அடையாளப்படுத்த வேண்டும் என்ற ஒரு கேள்வியும் வருகிறது.

மூன்றாவது, மலையகம் என்ற பிரதேசம் வெறும் காடாக இருந்த பிரதேசம். அதனை வளமான பூமியாக மாற்றியவர்கள் மலையக மக்கள். ஆகவே அது அவர்களுக்கு சொந்தமானது. இந்திய வம்சாவழியினர் என்று சொல்லும் போது அந்த மண்ணில் இருந்து அந்நியப்பட வேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. மனோகணேசன் இது தொடர்பாக அரசாங்க கட்சிகாரரை நேரடியாக கேட்டது: “சுதந்திரத்திற்கு பிறகு இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை தாங்கி பிடித்தவர்கள் மலையக மக்கள். நீங்கள் அனைவரும் வளமாக இருந்தீர்கள் என்றால் அதற்கு மலையக மக்களின் உழைப்பு தான் காரணம். கொழும்பு-கண்டி  வீதி போட்டது மலையக மக்கள். துறைமுகங்கள் கட்டியது மலையக மக்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன நன்றி தெரிவித்தீர்கள்?” என்று அரசாங்க கட்சிகாரரை பார்த்து கேட்டதிலும் கூட பல நியாயங்கள் இருக்கின்றன.

அவர்களை இந்திய வம்சாவழியினர் என்று சொல்கின்ற பொழுது உளவியல் ரீதியாகவே அந்நியப்படுகின்றதாக ஒரு சூழல் உருவாகின்றது. மூன்றாவது இன்றைக்கு மலையகம் என்பது ஓரளவுக்கு சுற்றி வளைக்கப்பட்ட பிரதேசமாக இருக்கிறது. சுற்றிவர சிங்கள மக்கள் வாழுகின்ற பிரதேசமாக  இருக்கின்றது. சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்தியாவை  எதிரியாக பார்க்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. ஆகவே மலையக மக்களும் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தினை பேணுகின்ற போது அவர்கள் மலையக மக்களையும் எதிரியாக பார்க்க வேண்டிய நிலைமை ஒன்று உருவாகும். இது மலையக மக்களின் நலன்களில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிக்கல் வரும். மற்றது ஒரு இலங்கையர் என்ற அடையாளத்தை பேணுவதற்கு அவர்களுக்கு இந்திய வம்சாவழியினர் என்பதனை விட மலையக மக்கள் என்பது தான் கூடுதலான வாய்ப்புகளை தரும் என்று நான் நினைக்கிறேன்.

மலையக தமிழர்களா இந்திய வம்சாவழியினரா என்கின்ற அடையாளப் பிரச்சனை. கிட்டத்தட்ட சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே விவாதத்திற்கு உள்ளான ஒரு விடயம். குறிப்பாக இந்திய வர்த்தகர்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவை கொண்டவர்கள். இந்திய அரசாங்கத்துடனும் நெருக்கமான உறவை கொண்டவர்கள். அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தை பேணுவதில் தான் விருப்பமாகவும் குறியாகவும் இருக்கிறார்கள். அதேவேளை மலையகத்தில் புதிதாக எழுச்சி அடைந்து வருகின்ற அந்த மலையகத்தினுடைய நடுத்தர வர்க்கம் மலையக தமிழர் என்ற அடையாளத்தை கூடுதலாக வலியுறுத்துவதில் அக்கறையாக இருக்கிறது. இந்திய அரசாங்கமும் தன்னோடு மலையக மக்களை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தை  பேணுவதற்கான தூண்டுதலை கொடுத்து கொண்டு இருக்கின்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்கள் அந்த மண்ணில் சொந்தமாக கால் ஊன்றி நிற்பதற்கு எந்த அடையாளம் உதவக் கூடியதாக இருக்குமோ அந்த அடையாளத்தை நிலை நிறுத்துவது தான் மலையக மக்களினது நலன்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இரண்டாவது, மலையக மக்கள் ஒரு சிறுபான்மை இனமா தேசிய இனமா என்று பார்க்கின்ற போது மலையக மக்கள் தங்களை ஒரு தனியான மக்கள் கூட்டமாக தான் பார்க்கின்றார்கள். ஆகவே அவர்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல தேசிய இனம். மார்க்சிய மூலவர்கள் கூறுகின்ற நிலம், மொழி,பொருளாதாரம், கலாசாரம் எல்லாம் மலையக மக்களுக்கும் இருக்கிறது. இன்றைக்கு அது இல்லாவிட்டால் கூட ஒரு தேசிய இனமாக கொள்கின்ற நவீன சிந்தனை என்பது வளர்ந்து விட்டது. ஆகவே இந்த அடிப்படையில் மலையக மக்களை ஒரு தேசிய இனமாக கொள்ளலாம் என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். இன்றைக்கு மலையகத்தினுடைய இளைய தலைமுறையினருக்குள் தாம் ஒரு தேசிய இனம் என்கின்ற ஓர் உணர்வு நன்றாகவே வளரத் தொடங்கி இருக்கின்றது.

அடுத்தது, அப்படியென்று சொன்னால் மலையக மக்களின் பிரச்சனை இறைமை பிரச்சனையா அடையாள பிரச்சனையா என்றால் இறைமை பிரச்சனை தான் வரும். ஏனென்றால் தேசிய இனப் பிரச்சனை எல்லாம் இறைமை பிரச்சனை. சிறுபான்மையினரின் பிரச்சனை என்றால் தான் அடையாளப் பிரச்சனை. ஆகவே மலையக மக்களினுடைய பிரச்சனை என்பது இறைமை பிரச்சனையே தவிர அடையாளப் பிரச்சனை அல்ல. அப்படியென்றால், அடுத்த கோட்பாட்டு பிரச்சனை வருகிறது. இதுவும் அதனுடன் தொடர்புடையது. அதாவது, மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன?

உண்மையில் மலையக மக்கள் மத்திய மலைநாட்டில் செறிந்து வாழ்கின்றார்கள். அதேவேளையில் ஏனைய இடங்களில் ஐதாக வாழ்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு இரண்டு அம்சங்களை கொண்ட அரசியல் தீர்வு தேவையாக இருக்கிறது. செறிவாக வாழ்கின்ற இடங்களில் அவர்களுக்கு நில ரீதியிலான அதிகாரப் பகிர்வு தேவையாக இருக்கிறது. ஐதாக வாழ்கின்ற இடங்களில் அவர்களுக்கு சமூக ரீதியிலான அதிகாரப் பகிர்வு தேவையாக இருக்கிறது. நில ரீதியிலான அதிகாரப் பகிர்வையும் சமூக ரீதியிலான அதிகாரப் பகிர்வையும் ஒரு அரசியல் தீர்வாக வைப்பது தான் கூடுதலாக பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இன்றைக்கு கூட மலையக மக்களிடம் கிட்டத்தட்ட 8 உள்ளூராட்சி சபைகள் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிறகு அடுத்தபடியாக தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற இடம் நுவரேலியா மாவட்டம்.  இந்த 8 உள்ளூராட்சி அமைப்புகளையும் இணைக்கின்ற போதே அவர்களுக்கு ஒரு நிலத் தொடர்ச்சி வந்துவிடும். ஆகவே உண்மையில் அவர்கள் ஒரு நில ரீதியிலான அதிகாரப் பகிர்வை கட்டாயம் கோர வேண்டிய தேவையில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இதனை விட மலையகம் வளமான ஒரு பிரதேசம். பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் என்பது அவர்கள் உருவாக்கிய பொருளாதாரம். அதனை விட இரத்தினக்கல் தொழில்துறை, சுற்றுலாத்துறை என்பவை இருக்கின்றன. உப உணவு பயிர்ச்செய்கை இருக்கிறது. ஒரு வளமான பொருளாதாரத்தை கொண்ட மக்கள். அவர்கள் எவரிலும் தங்கி நிற்க தேவையில்லை. தங்களுடைய சொந்த காலில் தங்கி நிற்கலாம். ஆகவே ஒரு அதிகாரப் பகிர்வினை எடுப்பதன் ஊடாக அவர்கள் சொந்த காலில் நிற்க கூடிய நிலைமையை உருவாக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதுதான் மலையக மக்களுக்கான அரசியல் தீர்வாக இருக்க வேண்டுமென்றால் அதனை அடைவதற்கு மலையக மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று அடுத்த கேள்வி ஒன்று வருகிறது.

இதில் உண்மை நிலை என்னவென்றால் மலையக மக்களினுடைய அரசியல் தீர்விற்கான நியாயப்பாடுகளை நாங்கள் மலையக மட்டத்திலும், இலங்கை மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் குறிப்பாக தமிழக மட்டத்திலும் பேசுபொருளாக்க வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. முதல் கட்டமாக முக்கியமாக செய்யப்பட வேண்டிய வேலை.

இரண்டாவது, மலையகத்தை பொறுத்தவரையில் மூன்று வகையான தரப்பினர் இருக்கின்றார்கள். ஒன்று அரசியல் கட்சிகள், மற்றது தொழிற்சங்கங்கள், மூன்றாவது பொது அமைப்புகள். இவை மூன்றுக்கும் இடையில் ஒரு ஐக்கியம் தேவை. ஒருங்கிணைந்த அரசியலும் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமாக இருக்கின்றன. மலையகத்திற்கான ஒரு தேசிய இயக்கத்தை கட்டி எழுப்பலாமா என்று யோசிப்பது கூட கூடுதலாக பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தேர்தலில் என்னவென்றாலும் செய்யுங்கள், ஆனால் மலையக மக்களின் பொதுவான பிரச்சனை என்று வரும்போது இந்த மூன்று தரப்பும் ஒரு ஒருங்கிணைந்த குடையின் கீழ் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

மூன்றாவது மலையக மக்களைப் பொறுத்தவரையில் மலையகத்தில் வாழ்கின்ற மக்கள் தான் உண்மையில் அடிப்படை சக்திகள். ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற மலையக வம்சாவளியினரும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் வாழ்கின்ற மலையக  வம்சாவழியினரையும் நாங்கள் அடிப்படை சக்திகளாக கொள்ளலாம். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எல்லாம் மலையக மக்களுக்கு நல்லதொரு வலுவான சேமிப்பு சக்திகளாக இருப்பார்கள். சிங்கள முற்போக்கு சக்திகள் கட்டாயம் தேவை. சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட உலகெங்கும் வாழ்கின்ற முற்போக்கு  ஜனநாயக சக்திகள் நல்ல நட்பு சக்திகளாக இருப்பர். ஆகவே இந்த அடிப்படை சக்திகள், சேமிப்பு சக்திகள், நட்பு சக்திகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த குடையின் கீழ் கொண்டு வர வேண்டிய தேவை மலையக மக்களுக்கு இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.

நான்காவது விடயம் இலங்கையை மையமாக வைத்த புவிசார் அரசியலில் மலையக மக்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. மலையக மக்களுக்கு பங்கு இருந்தபடியால் தான் நரேந்திரமோடி இங்கு வந்த போது மலையகத்திற்கும் பயணம் செய்தார். ஏனென்றால் வடக்கு கிழக்கு மக்கள் இந்தியாவுடன் நிற்கிறது குறைவு, ஆகவே  அவர்களுக்கு இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னொரு பலம் ஒன்று தேவையாக இருக்கிறது. ஆகவே மலையக மக்களை அவர்கள் தங்களின் பக்கம் வைத்திருக்க கூடியதான ஒரு சூழலை நோக்கி நகர்த்துகின்ற ஒரு நிலைமையும் கூட காணப்படுகின்றது. மலையகத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் நடக்கின்ற நிலைமை இருக்கிறது. அவை எல்லாவற்றையும் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

இதைவிட மலையகத்தை எப்படி உலகத்திற்கு கொண்டு செல்வது உலகத்தை எப்படி மலையகத்திற்கு கொண்டு செல்வது என்பதிலும் நாங்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். இவற்றை அடிப்படையாக வைத்து ஒரு வலுவான வழி வரைபடத்தினை உருவாக்கி நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் மலையக மக்களின் வளர்ச்சியில் ஒரு பாரிய பாய்ச்சலை காணக் கூடியதான சூழல் உருவாகும் என்று நான் நினைக்கிறேன்.

வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரையில் மலையக மக்கள் தொடர்பாக அவர்களுக்கு பொறுப்புணர்வு இருக்கிறது. ஒரு சக தேசிய இனம் என்பதற்கு அப்பால் இந்த இலங்கை தீவில் மிகவும் மோசமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் என்ற வகையில் அவர்களோடு கை கோர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு தமிழ் அரசியலினுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே அது தொடர்பான அக்கறை என்பது காட்டப்பட்டது. தமிழரசு கட்சி 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது தந்தை செல்வா தலைமையுரை ஆற்றுகின்ற போது பிரதானமாக, “மலையக மக்கள் தொடர்பாக நாங்கள் வலு அக்கறையாக இருக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று சொன்னார்.

இதற்கு பிறகு தமிழரசு கட்சியின் ஒவ்வொரு மாநாட்டிலும் மலையக மக்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆகவே 1985 ஆம் ஆண்டு திம்பு மாநாட்டில் நான்காவது கோரிக்கையாகவும் மலையக மக்களின் கோரிக்கை தான் வைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரச்சனை வந்த போது  நான்கு அம்ச கோரிக்கையை தமிழரசு கட்சி வைத்தது. அதில் மூன்றாவதும் நான்காவதும் கோரிக்கை மலையக மக்கள் பற்றிய கோரிக்கைகள். ஆகவே தொடர்ச்சியாக அக்கறை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அது போதுமானது என்று சொல்ல வரவில்லை அந்த அக்கறையை இன்னும் எப்படி வலுவாக்குவது என்பது பற்றி வடக்கு கிழக்கு சக்திகளும் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

இதனை விட, வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்களை இங்குள்ள மக்கள் போதியளவு கவனம் செலுத்தி அவர்களை இணைத்து வாழவில்லை என்ற அதிருப்தி ஒன்று மலையக படித்த மத்திய தர வர்க்கம் மத்தியில் மத்தியில் இருக்கின்றது. அதில் பல உண்மைகளும் இருக்கின்றன. ஆகவே அந்த உண்மைகளையும் கவனத்திலே எடுத்து இங்கே வாழ்கின்ற மலையக மக்கள் தொடர்பாக வலுவான கவனத்தினை செலுத்தி அவர்களுடைய வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்கு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஏனைய மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்பதும் என்னுடைய அபிப்பிராயம்.

தமிழ் மக்கள் நடத்திய இந்த தேசிய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் நிறைய பங்களிப்புகளை செய்திருக்கின்றார்கள். நிறைய பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆகவே அந்த தியாகங்களுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்கவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. உண்மையில் என்னவென்று சொன்னால் மலையகத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் வலதுகரமான ஒரு வலுவான கரமாக இருக்க வேண்டும், அதேபோல வடக்கு கிழக்கிற்கு  மலையக மக்கள் வலுவான கரமாக இருக்க வேண்டும். ஆகவே இதனை நாங்கள் எப்படி கட்டி எழுப்புவது என்பது பற்றி கூடுதலாக யோசிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்.

சி.அ. யோதிலிங்கம் -

நிமிர்வு வைகாசி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.