கடலோனியா பொதுவாக்கெடுப்பு! தமிழ்மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு - பகுதி : 03

 


ஈழத்தமிழர் கோரும் பொதுவாக்கெடுப்பு தொடர்பாக உரையாடலில் தென்சூடான் விடுதலைக்காக நடந்த பொதுவாக்கெடுப்பு பற்றி சென்ற இதழில் பார்த்தோம். மோதிக் கொண்டிருந்த இரு தரப்பினரும் ஒரு சமாதானத்தை அடைந்து அதனூடாக ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைத்துக் கொண்டதையும், அந்த இடைக்கால நிர்வாகத்தின் யாப்பு தென்சூடானின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தது பற்றியும் அதன் விளைவாக அங்கு ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது பற்றியும் பார்த்தோம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றிலும் ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கான வாய்ப்பு ஒன்று 2003 ஆம் ஆண்டில் நிலவியது. அந்த சந்தர்ப்பம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலே நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளின் பொழுது உருவாகியது. அந்த இடைக்கால நிர்வாகத்துக்கான வரைவை புலிகள் பிரேரித்து இருந்தனர். அதில் இடைக்கால நிர்வாகத்துக்கு என தனியான அரசியல் யாப்பு உருவாக்கப் படவேண்டும் பிரேரிக்கப் படவில்லை. அந்த இடைக்கால நிர்வாகம் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு தளம் அமைக்கும் நோக்கத்துடனேயே பிரேரிக்கப்பட்டதால் அங்கு பொதுவாக்கெடுப்பு என்பது பற்றி பேசப்பட சந்தர்ப்பம் எழவில்லை. ஆனாலும், அது நடைமுறைக்கு வந்து 5 வருடங்களுக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படாவிடில் வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடைக்கால நிர்வாகத்தினால் நடத்தப்படும் என்று பிரேரிக்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு சார்பாக செயற்பட விளைகிறார் என்று குற்றம்சாட்டிய அப்போதைய சனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவசரகால நிலையை பிரகடனம் செய்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த அதிகாரங்களை தனது கையகப்படுத்தி இந்த இடைக்கால நிர்வாகத்துக்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் இல்லாமல் செய்து விட்டார்.

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி யுத்தத்தை வெற்றி கொண்டுவிட்ட சிங்கள பௌத்த பேரினவாத அரசு இடைக்கால அரசாங்கம் தொடர்பாகவோ பொதுவாக்கெடுப்பு தொடர்பாகவோ எந்தவிதமான இணக்கப்பாட்டுக்கும் வரப்போவதில்லை. அப்படி வருமாறு நிர்ப்பந்திக்கக் கூடிய பலம் எதுவும் தமிழ் மக்களிடம் இப்பொழுது இல்லை. அவ்வாறான நிலையில் தமிழ்மக்கள் கோரும் பொது வாக்கெடுப்பு சாத்தியம் இல்லை. ஆனால் அதற்கான சூழலை உருவாக்கக் கூடிய பலத்தை நாம் இன்னமும் இழந்து விடவில்லை. அது தொடர்பாக பின்னர் கதைப்போம். அதற்கு முன்னர், மத்திய அரசு பொதுவாக்கெடுப்புக்கு இணங்குவதற்கான சாத்தியங்கள் இல்லாத பொழுதும் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்திய கடலோனிய (Catalonia) மக்கள் பற்றி இந்த இதழில் பார்ப்போம். தென் சூடான் போன்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பு சூழ்நிலைக்கும், தமிழ் மக்களைப் போல் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்தவிதமான சாத்தியப்பாடும் இல்லாத சூழ்நிலைக்கும் இடைப்பட்ட ஒரு சூழ்நிலையை கடலான் மக்கள் கொண்டிருந்தனர்.

அந்த சூழ்நிலையை விளங்குவதற்கு ஸ்பெயின் நாட்டின் நிர்வாக அலகுகள் பற்றி தெருந்து கொள்வது அவசியம். ஸ்பெயின் 1978 ஆண்டு நிறைவேற்றிய அரசியல் அமைப்பின் படி 17 சுயாட்சியுடைய சமூகங்களால் (autonomous communities) ஆன ஒரு நாடாகும். ஒரு மக்கள் கூட்டத்தின் இனம் அல்லது அவர்கள் வாழும் பிரதேசம் என்பது இந்த சமூகத்தை தீர்மானிக்கிறது. ஒரு சுயாட்சி சமூகம் தனக்கேயுரிய பாராளுமன்றத்தையும் சட்டங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.  இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 17 சமூகங்களுக்கும் உரிய சுயாட்சி உரிமைகள் சமமானவை அல்ல. ஒரு இனத்தால் அடையாளப் படுத்தப்படும் ஒரு சமூகத்திற்கு கூடிய அதிகாரங்கள் இருக்கும். இந்த அதிகாரப் பகிர்வு சமனற்ற அதிகாரப் பகிர்வு (asymmetrical devolution) என்று குறிப்பிடப்படும்.

இந்த 17 சுயாட்சி சமூகங்களில் ஒன்றான கடலான் இன மக்கள் வாழும் கடலோனியா ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 7.7 மில்லியன் மக்கள் வாழும் இப்பிரதேசம் 32,113 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவைக் கொண்டது. இச்சமூகம் 1978 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக தனது அதிகாரங்களை அதிகரித்து வந்தது. கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சூழல் பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம், போக்குவரத்து, வர்த்தகம், உள்ளூராட்சி மற்றும் உள்ளூர் பாதுகாப்பு என்பவற்றுக்கான அதிகாரங்களை கடலோனிய பாராளுமன்றம் கொண்டிருந்தது. நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள் மட்டுமே ஒன்றிய அரசாங்கத்துடன் பகிரப் பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கடலோனிய பாராளுமன்றம் ஒரு புதிய அரசியல் அமைப்பை தனக்கென வரைந்து கொண்டது. அந்த அரசியலமைப்பில் கடலோனியா ஒரு தேசம் (nation) என்று வரித்துக் கொண்டது.

இந்த அரசியலமைப்பை எதிர்த்து மற்றைய சுயாட்சிச் சமூகங்களில் சில அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அந்த வழக்கின் நீதிபதிகள் கடலோனியா பாராளுமன்றம் நிறைவேற்றிய அதன் புதிய அரசியலமைப்பில் பல பகுதிகள் ஸ்பெயின் அரசியலமைப்புக்கு முரணானவை என்று 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினர். அதேவேளை, அத்தீர்ப்பு கடலான் மக்களை ஒரு தேசம் என்று அங்கீகரித்தது. ஆனால் அது வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மட்டுமே பொருந்தும் என்றும் அதற்கு எந்த விதமான சட்ட வலுவும் இல்லை என்று சொல்லியது. ஸ்பெயின் மட்டுமே ஒரு தேசம் என்றும் கடலோனியா தன்னை சட்டரீதியாக  ஒரு தேசம் என்று அழைக்க முடியாது என்றும் சொல்லியது. அடுத்து கடலோனிய தேசிய தினமாகிய புரட்டாதி 11, 2012 இல் கடலோனியாவின் தலைநகர் பார்சலோனாவில் இடம்பெற்ற சுதந்திரத்தைக்  கோரும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து கடலான் மக்கள் தம்மை தேசமாக உணரும் விகிதம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடலோனிய அரசாங்கத்தின் கருத்துக் கணிப்பு நிறுவனம் 2011இன் பின்னர் ஒவ்வொரு வருடமும் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் கடலோனியாவின் சுதந்திரத்துக்கான கோரிக்கை வளர்ந்து வந்ததை காட்டின. மேலும் 2009 ஆண்டிலிருந்து கடலோனியாவில் அவ்வப்போது நடத்தப்பட்ட நூற்றுக் கணக்கான சட்டரீதியாக கட்டுப் படுத்தாத (non-binding) உள்ளூர் பொதுவாக்கெடுப்புகள் கடலோனியா மக்களின் சுதந்திரத்துக்கான வேணவாவை தெளிவாக வெளிப்படுத்தின.

கடலோனிய அரசாங்கத்தால் 2016 ஆம் ஆண்டு பங்குனி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 57.2% ஆன மக்கள் சுதந்திரத்தை விரும்பி இருந்தனர். ‘கடலோனியா சுதந்திரம் அடைந்த நாடாக வரவேண்டுமா?’ என்ற கேள்வியை கடலோனிய மக்களிடம் கேட்கும் பொதுவாக்கெடுப்பு ஒன்று 2017 ஐப்பசி மாதம் முதலாம் திகதி நடத்தப் படவேண்டும் என்ற சட்டமூலம் அதே ஆண்டு புரட்டாதி மாதம் 6-7 ஆகிய திகதிகளில் கடலோனிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. மேலும் இந்த வாக்கெடுப்பில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதில்களில் எந்தப் பதில் பெரும்பான்மை பெறுகிறதோ அந்தப் பதில் சட்டமாக்கப்படும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. மேலும் மற்றைய நாடுகளில் நடக்கும் பொதுவாக்கெடுப்பு போல் அல்லாது அந்த பொதுவாக்கெடுப்பில் ஆகக் குறைந்தது இவ்வளவு மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று இந்த சட்ட மூலத்தில் சொல்லப்படவில்லை. 

இந்த சட்டமூலம் தேசியவாதிகளால் அவசர அவசரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது, அதனை விவாதிக்க தமக்கு போதியளவு நேரம் தரப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. முக்கியமாக ஸ்பெயினின் அரசியலமைப்பை மீறுகின்றதும் கடலோனியாவின் சுயாட்சி அரசியலமைப்பை மாற்றுகின்றதுமான ஒரு சட்டமூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் நிறைவேற்றப் பட்டதை அவை எதிர்த்தன. இது தொடர்பாக ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.

 அதேவேளை, பிரதம மந்திரி மரியானோ றஹோய் தலைமையிலான மக்கள் கட்சியின் (People’s Party) கட்டுப்பாட்டில் இருந்த மத்திய அரசாங்கமும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தது. அந்த நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கும் வரை கடலோனியாவில் பொதுவாக்கெடுப்பு இடைநிறுத்தப் படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும், நீதிமன்ற உத்தைரவை மீறி பொதுவாக்கெடுப்பு நடத்தப் படும் என்று கடலோனிய அரசாங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த 2 நாட்களுக்குள் கடலோனியாவின் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் (74%) பொதுவாக்கெடுப்புக்கு தேவையான வாக்குச்சாவடிகள் உட்பட எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்தன.

இதனையடுத்து மத்திய அரசாங்கத்தால் அதனது பாதுகாப்பு படைகள் கடலோனியாவில் இறக்கி விடப்பட்டன. உள்ளூராட்சி சபைகள் பொதுவாக்கெடுப்பு வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப் பட்டது. அப்படி ஈடுபட்டால் அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தளை செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று மிரட்டப் பட்டனர். உள்ளூராட்சி சபை தலைவர்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தப் படாது என்று அறிவிக்குமாறு வற்புறுத்தப் பட்டனர். அதே சமயம், கடலோனியாவின் ஜனாதிபதி Carles Puigdemont, துணைத் தலைவர் Oriol Junqueras, பாராளுமன்ற சபாநாயகர் Carme Forcadell உட்பட முழு கட்டலான் அரசாங்கமும், பாராளுமன்ற அதிகாரிகளும் பொதுவாக்கெடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் வாக்களிக்க அனுமதித்தமை, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.  மத்திய அரசின் வழக்கறிஞர்களால் சுமத்தப் பட்ட இந்தக் குற்றவியல் புகார்களை கடலோனியாவின் உயர் நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டது.

அந்நீதிமன்றம் பொதுவாக்கெடுப்புக்கு பொதுச்சொத்துகள் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு கடலோனிய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் திட்டமிட்டவாறு ஐப்பசி 1, 2017 அன்று பொதுவாக்கெடுப்பு நடந்தப் பட்டது. கடலோனிய காவல்துறை செயலாற்றாமல் இருந்து வாக்குச் சாவடிகளை திறக்க அனுமதித்தது. அதனையடுத்து தேசிய காவல் படையினர் தலையிட்டு வாக்குச்சாவடிகளை நீக்க முற்பட்டனர். பல இடங்களிலும் நடந்த மோதலிம் பொது மக்கள் பலரும் தேசிய காவல் படையினரும் காயங்களுக்கு உள்ளாகினர். தேசிய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் வலுவாக கண்டித்தன.

தடைகளையும் மீறி 43% ஆன மக்கள் பொதுவாக்கெடுப்பில் வாக்களித்தனர். அவர்களில் 90% ஆனவர்கள் கடலோனியாவின் சுதந்திரத்துக்கு ‘ஆம்’ என்று வாக்களித்து இருந்தனர். பெருந்தொகையான மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவாறு தேசிய காவல் படையால் தடுக்கப்பட்டனர் என்று கடலோனிய அரசாங்கம் குற்றம் சுமத்தியது. அதேவேளை கடலோனியாவின் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த பொதுவாக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்க வேண்டாம் என்று கடலோனியாவின் சுதந்திரத்தை எதிர்த்த கட்சிகள் அவர்களை கேட்டிருந்தன. 

2017 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் நாள் கடலோனியாவின் பாராளுமன்றம் தாம் சுதந்திரமடைந்து விட்டதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு குறியீடாகவே அமைந்தது.  ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் கடலோனியாவின் அரசாங்கத்தை கலைத்து அதனை தன்னுடைய நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. 2017 மார்கழி 21 இல் புதிய அரசாங்கத்துக்கு தேர்தல்கள் நடத்தப் படும் என்று அறிவித்தது. இதனையடுத்து கடலோனிய சனாதிபதி Carles Puigdemont பெல்ஜியத்துக்கு தப்பியோடினார். உப சனாதிபதியாக இருந்த  Oriol Junqueras சிறையில் அடைக்கப் பட்டார். 2018 வைகாசி 17 ஆம் திகதி கடலோனியாவின் புதிய சனாதிபதியாக Quim Torra பதவியேற்றார்.

இந்த பொதுவாக்கெடுப்பை ஏற்பாடு செய்த பல கடலான் அரசியல் தலைவர்களுக்கு ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் 14 அக்டோபர் 2019 அன்று  தண்டனை விதித்தது. தேசத்துரோகம் முதல் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் வரையிலான குற்றச்சாட்டுகளில் 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த முடிவு கடலோனியாவைச் சுற்றி ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. பின்னர் அவர்கள் ஸ்பெயின் அரசாங்கத்தால் மன்னிக்கப்பட்டு ஜூன் 2021 இல் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

தென்சூடானில் நடந்த பொதுவாக்கெடுப்பிலிருந்தும் கடலோனியாவில் நடந்த பொதுவாக்கெடுப்பிலிருந்தும் ஈழத்தமிழர் பல பாடங்களை கற்றுக் கொள்ளலாம். அப்பாடங்களிலிருந்து எமது சூழலுக்குப் பொருத்தமான வழியை நாம் தேடிக்கொள்ள வேண்டும். அந்த வழிகளில் ஒன்றாக அமையக் கூடிய ஒன்றை அடத்த இதழில் பார்ப்போம்.

லிங்கம்- 

நிமிர்வு வைகாசி 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.