தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையும் சாதியமும்

 


ஒரு சமூகத்திற்கு பல புறவயமான பிரச்சனைகள் இருக்கும், பல அகவயமான பிரச்சனைகள் இருக்கும். அச்சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இந்தப் பிரச்சனைகளில் சில கூர்மையடைந்து அச் சமூகத்தின் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படைப் பிரச்சனைகளாக மாறும். அப்பொழுது, தமது அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்று அச்சமூகம் போராட முற்படும். ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று அடிப்படைப் பிரச்சனையாக இருப்பது புறவயமான தேசிய இன ஒடுக்குமுறை என்பதே. அந்த அடக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஆளும்தரப்பு அகவயமான பிரச்சனைகளை முன்னுக்குத் தள்ளி அடிப்படைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடக்கும் போராட்டத்தை உடைக்கப் பார்க்கும். ஈழத்தமிழ் மக்களுக்கிடையே பிளவுகளை உண்டாக்க அடக்குமுறையாளர் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்றாக அண்மைக்காலங்களில் முன்தள்ளப்படும் சாதியவாதம் இருக்கின்றது.

அதேவேளை, அக ஒடுக்குமுறைகளில் எமது சமூகம் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு சமூகத்துக்கும் அகவயமான பிரச்சனைகள் இருக்கும். அவற்றை இல்லை என்று மறுப்பது அந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்தாது. இன்னும் பார்க்கப் போனால், அப்படி மறுப்பது அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும். அவை இருக்கின்றன என்று ஒத்துக் கொள்வதும் அவற்றையும் தீர்ப்பதற்கான கொள்கைகளை வகுப்பதும் வேலைத்திட்டங்களை முன்வைப்பதும் மிக மிக அவசியமானவை.

ஒரு சமூகம் தனது எல்லாப் பிரச்சனைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றைத் தீர்ப்பதற்கான தனது சக்தியை பகிர்ந்து கொள்ளும். இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதான். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தை நிர்வகிப்பதில் கூட அக்குடும்பத்துக்கு தேவையானவற்றை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொண்டுதான் அது அவற்றை தீர்க்க முற்படும். அந்த வகையில் இன்று ஈழத்தமிழ் சமூகமும் தன்னுடைய பிரச்சனைகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்து அவற்றின் தீர்வை ஒழுங்குபடுத்த முனைய வேண்டும். அந்த ஒழுங்குபடுத்தல் அவர்களுக்குள் இருந்து தன்னிச்சையாக தானாக எழ வேண்டும்.  வெளியில் இருப்பவர்கள் சொல்லி அல்ல.

ஈழத்தமிழ் சமூகத்தில் சாதியம், பெண்களுக்கான சமவுரிமை மறுப்பு, ஏழைகளின் உழைப்புச் சுரண்டல், பிரதேசவாதம் என்பன முக்கியமான அகவயமான பிரச்சனைகளாக இருக்கின்றன. மேலும், கல்வியில் பின்னடைவு, கலாச்சாரப் சீரழிவு, போதைப்பொருள் பாவனை, என்று பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். அடிப்படைப் பிரச்சனையை தீர்க்கும் போராட்டத்தில் இந்தப் பிரச்சனைகளை பற்றி கவனிக்க வேண்டியதில்லை என்பதை ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள முடியாது.

போராடும் மக்கள் தமது அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வுக்கு மீண்டும் மீண்டும் அறைகூவல் விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேவேளை அகவயமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகளும் அந்த மக்கள் கூட்டத்தினுள் இருந்து தானாக உள்ளெழுந்து வர வேண்டும். அதாவது, எவ்வாறு ஒரு மக்கள் கூட்டம் தனது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் போராட்டத்தை தானாகவே தன்னியல்பாக முன்னெடுக்க முற்படுகிறதோ அதே மாதிரி தனது அகவயமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகள் அதற்குள்ளிருந்தே தன்னியல்பாக வர வேண்டும்.

அந்த அகவயமான பிரச்சனைகளை முன்னுக்குத் தள்ளி அடிப்படைப் பிரச்சனையிலிருந்து போராடும் மக்களின் கவனத்தை வேறுதிசைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்பாக போராடும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக வெளியிலிருந்து வந்து ‘அடிப்படைப் பிரச்சனை அல்ல உனது பிரச்சனை, இங்கே பார் இந்த மற்றைய பிரச்சனை தான் இப்போது தீர்க்கப்பட வேண்டியது.’ என்று சொல்லும் நடவடிக்கைகள் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு படி மேலே சென்று ‘இந்த மற்றைய பிரச்சனையை தீர், உனது அடிப்படைப் பிரச்சனையே தீர்ந்து போகும்.’ என்றும் சொல்வார்கள்.

முக்கியமாக ஆளும் தரப்பும் அதற்கு சார்பானவர்களும் அந்த நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது அந்த நடவடிக்கைகளின் பின்புலத்தை மக்களுக்கு விளக்கி அந்த நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டியது போராடும் மக்களின் தலைமையின் கடமையாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த அகவய பிரச்சனை தொடர்பாக இருக்கும் கொள்கை என்ன, அதனை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முற்போக்கு வேலைத்திட்டம் என்ன என்பதையும் மக்களுக்கு தெளிவாக்க வேண்டும்.

ஈழத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சனையை ஆய்வு செய்ய வேண்டுமானால் அவர்கள் இன்று எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதனூடாக அவர்கள் முன்னெடுக்க வேண்டிய போராட்டம் என்ன என்பதற்கான சரியான பார்வையை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.  அதற்கான ஆய்வுகள் எதுவும் இன்று முன்னெடுக்கப்படவில்லை.

ஒடுக்கப்பட்ட சாதி மக்கள், பெண்கள், ஏழைத் தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், குயர் (queer) மக்கள் என பல பிரிவுகளை உள்ளடக்கிய சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினரும் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் வேறு வேறானவை. அந்த அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தான் அவர்கள் முதலில் போராட முன்வருவார்கள். அதேவேளை ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனையாக இன்னுமொன்று இருக்கும். ஒரு சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனையை தீர்க்கும் போராட்டத்திற்கும் அச்சமூகத்தின் அங்கங்களாக இருப்பவர்களுக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக போராட்டத்திற்கும் இடையில் ஓர் உரையாடல் நடத்தப்பட வேண்டும்.

அந்த உரையாடல் ஊடாக சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் தமது நலன்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று அச்சமூகத்தின் அங்கங்களாக இருக்கும் பிரிவுகளும் நம்பும் பட்சத்தில் மட்டுமே அந்த மக்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்காக போராட முன்வருவார்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அச்சமூகம் பிளவுபட்டுப் போவதும், எதிரியின் சதிக்கு பலியாகிப் போவதும், போராட்டம் தோல்வியடைவதும் தவிர்க்க முடியாதவை.  

ஆயுதமேந்திய தேச விடுதலைப் போராட்டம் ஈழத்தின் சாதியத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்னர் அரசியற் கட்சிகள் எதுவும் செய்து இருக்காதபடி சாதியத்தின் கொம்புகளைப் பற்றி அதனை முடக்கிப் போட்டிருந்தது ஆயுதப் போராட்டம். முன்னெப்போதும் இல்லாதபடி சாதியத்தை உடைப்பதற்கான சட்ட அலகுகளை நிழல் அரசாங்கம் உருவாக்கி இருந்தது. வெளிப்படையாக சாதியத்தை ஆதரித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. ஒரு சமூகமாற்றத்துக்கான அத்திவாரங்களை அன்று இருந்த அரசியல் அதிகாரம் உருவாக்கி இருந்தது.

அந்த மாற்றங்களின் பின்னர் உள்ள இன்றைய நிலைமையில் சாதியத்தின் இருப்பு மற்றும் அந்த இருப்பால் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன என்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்த ஆய்வுகளின் அடிப்படையிலேய சாதியப்பிரச்சனை பேசப்பட வேண்டும். கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அதனை இன்றைய அரசியற் தலைமைகள் செய்யாமல் விட்டது ஓர் அபாக்கியமான நிலைமை.

சாதியம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு அதன் இன்றைய நிலமை என்ன என்பதற்கான ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது போராடும் மக்களின் தலைமையின் கடமை. அந்த ஆய்வுகளின் ஊடாக அந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்குவதும், வேலைத்திட்டத்தை உருவாக்குவதும் இருக்கும் வேலைத்திட்டத்தை மாற்றிக் கொள்வதும் இன்றியமையாதது. அப்படியான வேலைத்திட்டம் இல்லாமலிருக்கும் பட்சத்தில் அல்லது இருக்கும் வேலைத்திட்டத்தை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் அல்லது அந்த வேலைத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருக்கும் பட்சத்தில் மக்கள் சதிகளுக்கு பலியாவார்கள். இன்று நடப்பதைப் பார்க்கும் போது சதிகார்கள் வெற்றியடைந்து வருவதாகவே படுகிறது. இதற்கு சில இடதுசாரிகளும் பலியாகிப் போவது தான் அபாக்கியம்.

தமிழ்த் தேசியக்கட்சிகள் தமது தேசிய விடுதலைக்கான போராட்டம் தேசத்தின் அங்கங்களாக உள்ள பல்வேறு பிரிவினரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கொள்கைத் திட்டம் ஒன்றை முன்வைக்கவில்லை. அதனூடாக அந்த அங்கத்துவ சமூகங்களுக்கு அவர்களின் பிரச்சனைகள் பேசப்படுகின்றன, அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை அந்தக் கட்சிகள் ஏற்படுத்தவில்லை. இந்த பெருந்தவறை கட்சிகள் திருத்திக் கொள்ளாவிட்டால் எமது போராட்டம் வெற்றி பெறப்போவதில்லை.

சாதியம் இன்று மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அதனை உறுதி செய்வதற்கான தரவுகள் எம்மிடையே இல்லை. சாதியம் பற்றி மக்கள் வெளிப்படையாக பேசுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அப்படிப் பேசக்கூடிய அளவுக்கு ஒரு வெளியை எமது சமூகம் ஏற்படுத்தி இருக்கிறதா என்று ஆராய வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இன்னமும் தமது சாதி வெளியே தெரிந்தால் தமக்குரிய மரியாதை கிடைக்காது என்று மனப்பாங்கிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்மக்கள் தமது சாதி வெளியே தெரிந்தாலும் சமூகத்தில் தமது அந்தஸ்து குறையப் போவதில்லை என்று எண்ணும் அளவுக்கான நிலைமையை எமது சமூகம் இன்னமும் உருவாக்கவில்லை. இந்தப் பிரச்சனை ஒரு முக்கியமாக தீர்க்கப்பட வேண்டிய அகவயமான பிரச்சனை.

அதேவேளை உயர்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள் தீண்டாமை என்ற அகவயமான மனப்பாங்கை கொண்டிருப்பதை மறுக்க முடியாது. ஒடுக்கப்பட்ட சாதியினர் கல்வியில், பொருளாதாரத்தில் இன்ன பிறவிடயங்களில் எல்லாம் தமக்கு சமமாக இருந்தாலும் அவர்களுடன் குடும்பச் சடங்குகளில், கோயில் சடங்குகளில் ஒரே தரப்பாக கலந்து கொள்ளும் மனப்பான்மை உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களிடத்தில் இல்லை. இது ஓர் அறிவியல் சார்ந்த பிரச்சனை. இதனைப் பொருளாதார வளர்ச்சியால் தீர்த்து விட முடியாது. இதனைத் தீர்ப்பதற்கான சமூக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டங்கள், உதாரணமாக கல்வித் திட்டங்கள், வகுக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கட்சிகள் சாதியம் பற்றி தமது கோட்பாடுகளையும் வேலைத்திட்டங்களையும் பகிரங்கமாக முன்வைக்காத நிலைமையை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. சாதியத்துக்கு எதிராக தேசியக் கட்சிகள் போராடவில்லை, தாம்தான் போராடுகிறோம், ஆகவே தேசவிடுதலைக்கான போராட்டமே பிழையானது என்று இட்டுக்கட்ட முற்படுகிறார்கள். தேச விடுதலை சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்காது என்ற பிழையான கருத்தை முன்வைத்து தேச விடுதலையே தேவையில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.  அதன் மூலம் எமது தேச விடுதலைப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய பாய்ச்சல்களை பூச்சியமாக்க நினைக்கிறார்கள்.

ஒடுக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார வாழ்வுநிலை இன்று பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடும் நிலை உள்ளது. சில பிரதேசங்களில் சமூக ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் கல்வி, பொருளாதாரம், விளையாட்டு, கலாசார ரீதியில் நன்கு முன்னேறி வருகிறார்கள். பாடசாலை கல்வியில் உயர்நிலையை அடைந்து பல்கலைக்கழகத்துக்கு பலரும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ஆலயங்களில் திருவிழாக்களும் பெருமெடுப்பில் இடம்பெறுகின்றன. சனசமூக நிலையங்களும் வலுவாக இயங்குகின்றன. ஆனால் இவற்றில் பல சாதிய ரீதியாக பிரிந்தே இயங்குகின்றன என்பதே உண்மை.

எமது சமூகத்தில் நிலவும் இந்த இயங்கியல் ‘சமனான ஆனால் பிரிந்த’ (equal but separate) என்ற வளர்ச்சியை அடையும் போக்கிலேயே நிகழ்கின்றது. இது வளர்ச்சியே என்று பலர் வாதிட்டாலும் இது ஒட்டுமொத்த சமூகமாற்றத்தை நோக்கிய வளர்ச்சி அல்ல என்பது தெளிவு. உதாரணமாக அமெரிக்காவில் அடிமையுடைமை ஒழிக்கப்பட்ட பின்னர் கறுப்பு இனத்தவருக்கு சம உரிமை வழங்கப்பட்ட பொழுதும் அவர்கள் வெள்ளை இனத்தவரிடமிருந்து பிரித்தே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கென தனி பாடசாலைகள், உணவகங்கள் என்று எல்லாமே பிரித்து வைக்கப்பட்டிருந்தன. பொருளாதாரம் உட்பட பல துறைகளில் அவர்கள் வெள்ளையர்களுக்கு சமமாக அல்லது அதற்கும் மேலாக வளர்ந்து இருந்தாலும் அந்த மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டே  வந்தார்கள். அந்த ஒடுக்குமுறையின் விளைவுகளிலிருந்து விடுபட முடியாமல் அமெரிக்கா இன்னும் திணறிக் கொண்டிருப்பதை நாம் காணலாம்.

சில பிரதேசங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போதும் கூலி வேலைகள் உள்ளிட்ட குறைவான சம்பளம் பெறும் வேலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் சாதிய ஒடுக்குமுறையுடன் உழைப்புச் சுரண்டலுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுதுள்ள எந்த பொறிமுறையும் இவர்களின் வாழ்வியலை முன்னேற்ற வழிகளைக் கொண்டிருக்கவில்லை. அதாவது, கல்வியில், அரசியலில், வெளிநாடு செல்வதில், வேலை வாய்ப்பு பெறுவதில் சாதிய அடக்குமுறையை இவர்கள் இன்னமும் எதிர்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேட்பாளர் தெரிவில் கூட சாதி அரசியல் பேசப்பட்டதாக அண்மையில் சர்ச்சை எழுந்திருந்தது.

சாதிய ஒடுக்குமுறை தொடர்பில் இவ்வாறான அவதானிப்புகள், தரவுகள், கருத்துகள், காரணிகள் என்பவற்றை எல்லாம் உள்ளடக்கிய ஒரு பரந்த மற்றும் ஆழமான ஆய்வு ஒன்று இன்று செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையிலேயே சாதியப் பிரச்சனை கையாளப்பட வேண்டும். இந்த அகவயமான பிரச்சனையைத் தீர்க்க சமூக ஆர்வலர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைத்திட்டமாக இதனைக் கொள்ள வேண்டும்.

தேசத்தின் விடுதலை ஊடாக கைப்பற்றப்படும் அரசியல் அதிகாரங்கள் ஊடாக இயற்றப்படும் சட்டங்கள், எட்டப்படும் பொருளாதார வளர்ச்சிகள், அடையப்படும் அறிவியல் மாற்றங்கள் என்பவற்றின் ஊடாகவே சாதிய வேறுபாடுகள் களையப்பட முடியும். அரசியல் அதிகாரம் இல்லாமல் சமூகத்துக்குள் புரையோடிப் போயுள்ள சாதியத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நினைப்பது பேதமை. இந்தக் கோட்பாட்டை புரிந்து கொண்டு சாதியத்தைப் பேசுபொருள் ஆக்கி அதனை தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தலைமைகள் செய்யாத பட்சத்தில் இந்தப் பிரச்சனையை பேசிக் கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதிகள் அரங்கு அமைத்து கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அரங்கைப் பயன்படுத்தி தமிழ் தேசத்துரோக சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதனை இல்லாதொழிக்க வேண்டியது தமிழ் தேசியத் தலைமைகளின் தலையாய பணியாக இன்று உள்ளது.  

முடிவாக, ஈழத்தமிழ் சமூகத்தில் சாதியம் இன்றும் புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கின்றது. அதற்கு எதிரான போராட்டம் தன்னிச்சையாக அச்சமூகப் பிரிவுகளிடமிருந்து மேலெழுந்து வரவேண்டும். அவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனையாக இன்று இருக்கும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதற்குரிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அது இன்றைய சமூக ஆர்வலர்களினது முக்கிய கடமையாக இருக்கிறது. அதற்குரிய உந்து சக்தியை வழங்க வேண்டியது அரசியற் தலைமைகளினது முக்கியமான பொறுப்பாக உள்ளது.  

சிவா-

நிமிர்வு வைகாசி 2023 இதழ்-


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.