மூதாளர் அரங்கு ஏன் முக்கியமானது?

 போருக்கு பின்னரான தமிழ் சமூகத்தில் முதியவர்களின் இன்றைய நிலை, முக்கியமாக அவர்களின் உடல், உள நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.

இலங்கையில் 2010 ஆம் ஆண்டில் பத்தில் ஒன்றாக இருந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை 2050 ஆம் ஆண்டளவில் மூன்றில் ஒன்றாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.  தென்னாசியாவிலேயே மிக விரைவில் மிகக்கூடிய வயதானவர்களின் வீதத்தை கொண்ட நாடாக இலங்கை மாறி வருகிறது. முதியோர்கள் தொகை அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார விடயங்களிலும் நிச்சயமாக கூடுதலான தாக்கத்தை செலுத்தும். முன்னேறிய நாடுகள் போன்று முதியோர்களுக்கான சரியான உடல், உள, சமூக பாதுகாப்பு செயல்திட்டங்கள் இங்கே இல்லையென்றே கூறலாம்.

ஆரம்ப காலங்களில் கூட்டுக் குடும்பங்களாக இருந்த போது முதியோரின் நிலை ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தது. இப்போதைய காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக்குடும்பங்கள் அதிகமாகி கொண்டு வரும் நிலையில் முதியோர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை உள்ளது.  இதனால் அவர்கள் உளரீதியாக பாதிக்கப்படும் நிலையும், குடும்ப கட்டமைப்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தான், முதியோர்களை ஆற்றுப்படுத்தும் மூதாளர்கள் அரங்கு எனும் செயல்திட்டமொன்றை  பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் அரங்க செயல்பாட்டாளர் சிதம்பரநாதன்.

மனிதர்கள் தனித்து தனித்து இருக்கின்ற வாழ்க்கை முறையின் காரணமாக உடல் அசைவில்லாமல் இருத்தல், மன அமைதியின்மை போன்றன  அதிகம் ஏற்படுகின்றன. இன்று சமூகத்தில் தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. மனிதர்கள் தங்கள் உடலையும் மனதையும் செயல்முனைப்பானவர்களாக மாற்ற வேண்டும். ஆகவே, இந்தக் களத்தில் மூதாளர்கள் ஒன்று கூடி தங்கள் உடலையும் மனதையும் செயல்முனைப்பானவர்களாக மாற்றி செயல்திறன் உள்ளவர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த அரங்கு உதவி புரிகிறது.

மூதாளர்கள் இந்த இடத்தில் ஒருவரையொருவர் சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு இடையில் பரஸ்பரம் உறவு ஏற்படுவதன் மூலம் தைரியமாக தங்கள் பட்டறிவை, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அப்படியான உரையாடல்கள் மூலம் இன்று நாங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு கூட்டாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் இங்கே மேற்கிளம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பட்டறிவை பகிர்வதன் மூலம்  வெளிவரும் விடயங்கள் எம் இளைய தலைமுறையையும் வருங்கால சந்ததியையும் ஆரோக்கியமான திசையில் நகர்த்த உதவியாக அமையும்.  நாங்கள் எல்லோரும் நெருங்கி வந்த போது தனக்கு இனம்புரியாத பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டதாக  இன்று நடந்த அரங்கின் பின் முதியவர் ஒருவர் கூறினார். இன்னொருவர் தன்னை புதுப்பித்துக் கொண்டதை போல புத்துணர்வாக இருந்ததாக, வயதை மீறிய உற்சாகம் வருவதாக கூறினார்.

அரங்கின் ஊடாக செயல்முனைப்பானவர்களாக மாறும் போது தாங்கள் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணங்களும் ஏற்படும். வீடுகளில் முடங்கி இருக்காமல் சமூகத்தில் செயல்பாட்டாளர்களாக மாறும் நிலையும் உள்ளது. ஐம்பது வயதுகளில் உள்ள பலரும் குடும்ப பொருளாதார சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு உள்ளனர். இன்று வயது அதிகமானவர்கள் என்றால் இவர்களால் பிரயோசனமில்லை என்று குடும்பமும், சமூகமும் ஒதுக்கி வைக்கும் நிலை தான் உள்ளது. தினமும் குறிப்பிட்ட சில செயல்பாடுகளுடன் வீட்டில் செயலற்றவர்களாக முடங்கும் நிலை தான் உள்ளது.  

இன்று இருக்கின்ற வயதானவர்கள் அனைவருமே போராட்ட காலங்கள் அது சார்ந்த பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்ந்து தங்கள் குடும்பங்களையும் வாழ வைத்தவர்கள். நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர்களாக உள்ளனர். பழைய ஞாபகங்களை பகிருகின்ற போது புதிய எண்ணங்கள் மேற்கிளம்புகின்றமை தான் முக்கியமான விடயம்.  

2009 க்குப் பிறகு இந்த சமூகம் சீரழிந்ததை தவிர எதுவுமே நடக்கவில்லை. ஒரு பிரச்சினைக்கும் எங்களால் தீர்வு காண முடியாமல் உள்ளது. இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் புதிய கற்பனைகள் எங்களுக்கு தேவையாக உள்ளது. இப்படியான அரங்குகள் இவ்வாறான பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பதனை அனுபவக் கிடங்கினுள் ஆழப் புதைந்து புதிய கற்பனைகளோடு மேலுழும்புகின்ற ஒரு வழிமுறை தான் இது.மூதாளர் அரங்கில் பங்கேற்ற மருத்துவர் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில், உடல் அசைவு குறைந்த வாழ்க்கை முறையை நாங்கள் வாழ்வதால் புதிதாக எதையுமே சிந்திக்க முடிவதில்லை. எந்த விடயத்தையும் நாங்கள் புதிதாக செய்ய யோசித்தாலும் எங்களுக்கு வரக் கூடிய பதில்கள் "அதை இப்ப செய்யேலாது, நீங்கள் நினைக்கிறமாதிரி நிலைமைகள் இங்க இல்லை." இப்படி எங்கள் மனமும் உடலும் இறுகி இருக்கிறதால் நாங்கள் இணைந்து வேலை செய்யக்கூடிய வெற்றிடங்கள் தென்படுவதில்லை. இதனால் எங்கள் சமூகத்திலிருந்து புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் வருவது மிகக் குறைவாகும். சாதாரண முயற்சிகள் கூட வினைத்திறன் குறைந்த வேலைகளாக தான் இருக்கும்.

அடுத்து ஒரு இயந்திரமயமான ஒரே முறையான வாழ்க்கை. இது காலப்போக்கில் சோம்பலாக்கும். பல்வேறு உடல் உள உபாதைகளை தரும். முக்கியமாக 60 வயதுக்கு பிறகு இப்படியான ஒன்றுகூடல்கள் நடந்து பாடல், ஆடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு தங்களது மனங்களையும் உடல்களையும் இலகுவாக்கி எங்கள் சமுதாயத்தை நல்ல ஒரு வழிக்கு திருப்புகின்ற முயற்சியாக தான் நான் இதனைப் பார்க்கிறேன்.  

அரங்கினூடாக மூதாளர்களை செயல்முனைப்பானவர்களாக ஆக்கி இந்த சமூகத்துக்கு அவர்களின் சிந்தனைகள் பயன்பட வேண்டும்.

துருவன்-

நிமிர்வு வைகாசி 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.