தையிட்டியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குள் அமைந்துள்ள தனித்தமிழ் கிராமமான தையிட்டியும் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. தையிட்டி தெற்கு (J 250) கிராம சேவகர் பிரிவுக்குள் வரும் பத்திற்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தே சிறீலங்கா அரசினால் விகாரை, தூபி என்பன கட்டப்பட்டுள்ளன.
காங்கேசன்துறையில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தையிட்டியில் 2019 இல் விகாரை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்ற போது அப்போதைய வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சுகிர்தன் அவர்களுக்கு பல தடவைகள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் குறித்த முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் இனவழிப்பு இராணுவம் தையிட்டியில் ஆக்கிரமிப்பு விகாரை ஒன்றை விரைவாக கட்டி முடித்துள்ளது.
இன்று விகாரை அமைத்தல் தொடர்பில் மக்களுக்குள்ள கோபம் யாதெனில், விகாரை கட்டி முடியுமட்டும் இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்பதே மக்கள் எழுப்பும் கேள்வி? உண்மையில் இந்த விடயத்தில் ஒருவரையொருவர் கைகாட்டுவதில் நியாயம் இல்லை.
ஆனாலும், அடிப்படையில் பிரதேச சபைக்கு இப்படியான கட்டுமானங்களை நிறுத்தும் அதிகாரம் உள்ளது. ஆனால் அன்றைய தவிசாளர் இப்படி விகாரை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தாக காட்டும் ஆவணம் எதுவும் இல்லை. இதன் மூலம் சுகிர்தன் அவர்கள் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற வகையிலேயே நடந்து கொண்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.
1945 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களவர் ஒருவர் வெளிப்படுத்தல் உறுதி மூலம் 20 பரப்பு காணியை பெற்றுக் கொண்டதாகவும் பின் அதனை இரு பிக்குகளுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. பின் அவர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த காணியை சூழ இருந்த பத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் நூறுக்கும் அதிகமான பரப்புகள் கொண்ட காணிகளை அபகரித்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் தையிட்டியில் தற்போது கட்டப்பட்டு இருக்கும் 100 அடி உயரமான தூபி (Stupa) கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவீந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்டது. அதே சமயம் தையிட்டி திஸ்ஸ ராஜா விகாரை (Vihara) நல்லாட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்டது.
இது தொடர்பில் ஏற்கனவே வலிதெற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எனினும் தற்போது விகாரை கட்டி முடிக்கப்பட்டு முழுமைப் பெற்றுள்ளது. தமிழ்மக்களின் பாரம்பரிய நிலமாக உளுத்தங்கலட்டி என பெயர் பெற்றிருந்த குறித்த இடம் பின் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் தெரிவித்த விடயங்கள் வருமாறு, சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சி யாப்பின் ஒன்பதாவது உறுப்புரை சொல்கிறது பௌத்த மதம் அரச மதம், அதனைப் பாதுகாக்கின்ற பொறுப்பு அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காணி அதிகாரங்கள் அனைத்துமே மத்திய அரசிடம் இருக்கிறது. மத்திய அரசிடம் காணி அதிகாரம் இருந்த காரணத்தால் தான் 2018 இல் ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் குரே அடிக்கல்லை நாட்டியிருக்கிறார். அப்போது வடமாகாண சபையும் இருந்தது என்கிற துன்பகரமான செய்தியையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். வலிவடக்கு பிரதேச சபை, மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு அப்பாலே இன்று கட்டப்பட்டுள்ள சட்ட விரோதமான கட்டடம் அகற்றப்பட வேண்டும். உறுதிமாற்றம் செய்யப்படாத ஒரு தனியார் காணியிலேயே மேற்படி தூபி அமைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அவர்களாலேயே கொண்டு நடத்தப்படுகின்ற திஸ்ஸ மகா விகாரை என்றே வாசலில் உள்ள கல்வெட்டில் பெயர் பொறித்துள்ளார்கள். அது கிறிஸ்துவுக்கு முன் 236 ஆண்டுகள் அதாவது விஜயனோடு வருகையோடு சம்பந்தப்படுத்தப்பட்டதாக புனையப்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக நடந்த போராட்டம் தொடர்பில் கிராமவாசியான ஐயாத்துரை யோகராஜா என்பவர் கருத்து தெரிவிக்கையில், இது தமிழ்மக்களின் பாரம்பரிய விவசாய பூமி. இங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட 80 வீதமானோர் விவசாயிகள், 20 வீதமானோர் மீனவர்கள். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிக்குள் பெரிய நன்னீர் கிணறு ஒன்று உள்ளது. அதிலிருந்து தான் எம் மக்கள் அன்று விவசாயம் செய்து வந்தார்கள். இப்போது அந்த தண்ணீரை பொலிஸ், இராணுவம் கொள்தாங்கிகள் கணக்கில் எடுத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இப்போது அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள விகாரையின் எல்லையில் எங்களின் நாதவளை வைரவர் கோயில் காணி இருக்கிறது. அந்தக் கோயிலின் அரைவாசி இடத்தையும் விகாரைக்காக பிடித்திருக்கிறார்கள். கடந்த வருடங்களில் வெசாக் தினத்தில் பாரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவது வழமை. ஆனால் இம்முறை போராட்டம் நடந்ததால் வீதிகளில் பாரிய வெசாக் பேரணிகளை காணவில்லை என்றார். அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் வரை தையிட்டி வாழ் உறவுகள் ஏதாவதொரு வழியில் போராடுவார்கள் என தெரிவித்தார்.
ஈழவன்-
நிமிர்வு வைகாசி 2023 இதழ்-
Post a Comment