முள்ளிவாய்க்கால் திரட்சியை ஆக்க சக்தியாக மாற்றுவதே காலத்தின் தேவை

 


அடுத்த ஆண்டு 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுட்டிக்கப்பட போகிறது. எங்கள் மக்களும் பெருமளவில் திரள்வார்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி பொதுச் சுடர்களை ஏற்றுவார்கள், கண்ணீரை காணிக்கையாக்குவார்கள், மலர்த்தூவி அஞ்சலி செய்வார்கள். பின் கலைந்து செல்வார்கள். கடந்த 14 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இவ்வாறாகத் தான் வெறுமனே ஒரு சடங்காக இடம்பெற்று வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் திரளும் பெரும் மக்கள் திரட்சியை எவ்வாறு ஆக்க சக்தியாக மாற்றப் போகிறோம். ஒவ்வொரு வருடமும் திரண்டு பின் கலைந்து செல்லும் இனமாக போகிறோமா? இதனை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இன்று தமிழ் மக்களின் நிலங்கள் வேகமாக பௌத்த மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசின் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இன்னொரு பக்கம் தமிழ் இளையோரை போதைப்பொருள் எனும் படுகுழியில் வீழ்த்தும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்ந்து வருகிறது. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய சரியான பாதை வகுக்கப்படவில்லை. வெறுமனே சர்வதேசம் அதை செய்யும் இதை செய்யும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழ்மக்களாகிய நாங்கள் ஒரு இனமாக, தேசமாக என்ன செய்யப் போகின்றோம். இந்த ஆண்டு இந்த வேலைத்திட்டத்தை தமிழினம் நடைமுறைப்படுத்தப் போகிறது என்று முள்ளிவாய்க்காலில் உறுதியெடுத்து உலகெங்கும் வாழும் தமிழ்மக்களும் இணைந்து குறித்த வேலைத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இது தான் இப்போது தேவையாக உள்ளது.

குறிப்பாக முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரங்கள் இன்று என்ன நிலையில் உள்ளன, போரால் பாதிப்புற்று வறுமை நிலையிலுள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் போசாக்கு, கல்வி எதிர்காலம் என்ன? பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை? அரசியல் கட்சிகளையும் தாண்டி பொருத்தமான சிவில் சமூக கட்டமைப்பை ஏற்படுத்தல், தமிழர் பகுதிகளில் சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலை எவ்வாறு எதிர்கொள்வது?,      தமிழ்மக்கள் தங்கள் வெளியுறவுக் கொள்கையினை கட்டமைப்பது எவ்வாறு?, பொருளாதார கொள்கைகளை வகுத்து எவ்வாறு மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தப் போகின்றோம்?, தமிழ்மக்களுக்கான அவர்கள் விரும்பும் தீர்வுத் திட்டத்தை எவ்வாறு அடைய போகிறோம் போன்ற பலவற்றுக்கான சரியான செயற்பாட்டு அணுகுமுறைகளை தேட வேண்டியுள்ளது.

இதற்கான சரியான பொறிமுறை, கால அளவு போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு செயற்படுத்த வேண்டும்.

 மக்கள் போராட வீதிக்கு வரவில்லை என்று குறை கூறுகிறோம். மக்கள் திரளாக இல்லை என்கிறோம், சமூகம் சமூகமாக இல்லை தனித்தனியாக இருக்கிறார்கள் என்கிறோம். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ்மக்கள் மே 18 முள்ளிவாய்க்காலிலும், நவம்பர் 27 மாவீரர் தினமன்றும் மக்கள் தன்னியல்பாக பெரும் எழுச்சியுடன் திரள்கின்றார்கள்.

இந்த திரட்சியை ஆக்க சக்தியாக மாற்றி ஈழத்தமிழினம் தங்களை இத்தீவில் தக்க வைக்க உரிய திட்டங்களை தீட்டி முன்நகர்த்துகின்ற நாட்களாக அவற்றை கொள்ள வேண்டும்.

தனியே அதை செய்ய வேண்டும், அப்படி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்காமல் செயற்படுகின்ற செயலூக்கத்தை நோக்கி செல்கின்ற கால கட்டம் நெருங்கி விட்டது.

இவற்றை எல்லாம் செய்வதற்கு தமிழ்மக்களின் ஒட்டுமொத்த விவகாரங்களையும் கையாளக் கூடிய சிவில் சமூக கட்டமைப்பு ஒன்றை தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

செ. கிரிசாந்- 

நிமிர்வு வைகாசி 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.