தென்சூடான் பொதுவாக்கெடுப்பு : தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு – பகுதி 02


2011 ஆம் ஆண்டு தை 15 ஆம் திகதி தென்சூடானில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அதாவது, தென்சூடான் மக்கள் சூடான் நாட்டுடன் இணைந்து வாழ விரும்புகிறார்களா அல்லது பிரிந்துபோய் சுதந்திரமான தனிநாடு ஒன்றில் வாழ விரும்புகிறார்களா என்பதே அந்த பொதுவாக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்வி.

சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (Sudanese People’s Liberation Movement, SLMP) மற்றும் சூடான் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையினாலேயே இந்தப் பொதுவாக்கெடுப்பு சாத்தியமானது. ஏறத்தாழ மூன்று வருடங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் 2005 ஆம் ஆண்டு தை மாதம் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை நைவாசா உடன்படிக்கை (Naivasha agreement) என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் முக்கியமான விடயம், அது தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தது என்பதே. அதனூடாக அம்மக்கள் தங்களின் எதிர்காலத்தை ஒரு பொதுவாக்கெடுப்பின் ஊடாக தீர்மானிப்பதற்கு அது வழி வகுத்தது.

மேலும், பொதுவாக்கெடுப்புக்கு முன்னர் பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நைவாசா உடன்படிக்கை சொல்லியது:

1. பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இடைக்கால தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. இந்த அரசாங்கத்தில் மூன்றில் ஒரு பகுதி பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகிய தென்சூடான் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. நாடு தழுவிய ஒரு மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனூடாக அந்த பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதியான தென்சூடானிய மக்கள் யார், நாட்டின் வளங்களும் அதன் கடன்களும் எவ்வாறு  பங்கிடப்பட வேண்டும் என்பவை தீர்மானிக்கப்பட வேண்டும்.

தென்சூடானின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நீண்ட சரித்திரத்தைக் கொண்டது. ஆங்கிலேய-எகிப்திய ஆதிக்கத்திடமிருந்து 1956 ஆம் ஆண்டு சூடான் விடுதலை அடைந்தது.  இதற்கு முன்னராக 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை ஊடாக சூடானில் ஒரு சுயாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே சமஸ்டிக்கான கோரிக்கைகள் ஆரம்பித்து விட்டன.  விடுதலையடையப் போகும் சூடானில் சமஸ்டி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் தென்சூடானுக்கு பிரிந்து போகும் உரிமையை உள்ளடக்கிய சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று  தென்சூடானைச் சேர்ந்த தலைவர்கள் நம்பினார்கள்.

சமஸ்டிக்கான கோரிக்கை பிரிந்து போவதற்கான முயற்சி என்று சொல்லி பெரும்பாலும் வடசூடான் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் அதனை நிராகரித்தது.  இதன் காரணமாக எழுந்த போராட்டத்திற்கு தென்சூடான் விடுதலை இயக்கம் (South Sudan Liberation Movement, SSLM) தலைமை வகித்தது. 1955 இலிருந்து நடந்த இந்தப் போராட்டம் 1972 மாசி மாதம் அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட உடன்படிக்கை ஊடாக முடிவுக்கு வந்தது.  இந்த உடன்படிக்கையின் படி Bahr-el-Ghazal, Equatoria, Upper Nile ஆகிய மாகாணங்களை உள்ளிட்ட தென்சூடான் பிரதேசத்துக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. சூடானின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட இந்த உடன்படிக்கை 1983 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

சனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓர் இராணுவக் கிளர்ச்சி வெடித்தது.  அதன் விளைவாக சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) என்ற ஓர் அமைப்பு உருவாகியது. அது தென்சூடானின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் நாடு முழுவதற்கும் ஒரு சமஸ்டி அமைப்பு வேண்டுமென்றும் இனவாதம் (racism) மற்றும் பழங்குடிமைவாதம் (tribalism) நீக்கப்பட வேண்டும் என்றும் போராடியது. அதேவேளை SPLM இலிருந்து பிரிந்த தென் சூடான் சுதந்திர இயக்கம் (South Sudan Independent Movement, SSIM) போன்ற தென்பகுதி ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடினார்கள். இப்போராட்டங்களின் ஊடாக 2005 இல் எட்டப்பட்ட நைவாசா உடன்படிக்கை தென்சூடானின் சுயநிர்ணய உரிமையை மையக் கருவாக கொண்டிருந்தது.  அதனை நடைமுறைப்படுத்தும் ஓர் அங்கமாக தென்சூடானில் நடந்த பொதுவாக்கெடுப்பு அமைந்தது.

இந்த வாக்கெடுப்புக்கு பல சவால்கள் இருந்தன. முதலாவது ஒரு இடைக்கால தேசிய அரசாங்கமும் அதற்கான ஓர் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட வேண்டி இருந்தது. தென்சூடான் பொதுவாக்கெடுப்புக்குத் தேவையான சட்டமூலங்கள் மற்றும் கால அட்டவணைகள் அந்த அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டி இருந்தது. அதன்படி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் சொல்லப்பட்டவாறு தென்சூடான் பொதுவாக்கெடுப்பு ஆணைக்குழு (Southern Sudan Referendum Commission, SSRC) என்ற ஒரு சுயாதீன ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் உருவாக்கப்பட்டது.  இந்த ஆணைக்குழு பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் வடக்கைச் சேர்ந்த நால்வரும் தெற்கைச் சேர்ந்த ஐவரும் அங்கம் வகித்தார்கள். இடைக்கால அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அலுவலகங்கள் என்பவற்றுக்கும் ஆணைக்குழுவுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்பட தென்சூடான் செயலணி (taskforce) ஒன்றும் உருவாக்கப்பட்டது. பொதுவாக்கெடுப்பை நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான விழிப்பூட்டல்களை உருவாக்குதல் இந்த செயலணியின் கடமைகளாக இருந்தன.

பொதுவாக்கெடுப்பை நடத்துவதில் SSRC பல சவால்களை சந்தித்தது.  பொதுவாக்கெடுப்பில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் யார் என்பதை தீர்மானிப்பது அவற்றில் முக்கியமான ஒன்றாக இருந்தது.  நைவாசா உடன்படிக்கையில் கேட்கப்பட்டவாறு ஒரு சனத்தொகை கணக்கெடுப்பு இடைக்கால அரசாங்கத்தால் 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. சூடானின் புவியியல் தன்மைகள், அங்கு வாழ்ந்த பல மக்கட் கூட்டங்களின் நாடோடி வாழ்க்கை முறை, தொழில்நுட்ப பற்றாக்குறை, தகுதியான பணியாளர்கள் இன்மை போன்ற காரணங்களால் அந்த சனத்தொகை கணக்கெடுப்பு பல குறைபாடுகளை கொண்டிருந்தது. அதேவேளை தென்சூடானிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் முழுதான தகவல்கள் இருக்கவில்லை.

2008 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு தென்சூடானில் அமைக்கப்படவிருக்கும் எந்த வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க கூடிய மக்கள் யார் முடிவு செய்ய வேண்டி இருந்தது. அதே போன்று சூடானின் ஏனைய பகுதிகளில் வசித்த தென்சூடானிய மக்கள் எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டி இருந்தது. மேலும் இடைக்கால அரசியலமைப்பு அவுஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியது. அந்த நாடுகளில் எங்கு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டி இருந்தது.

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தகுதியானவர் என்று இடைக்கால அரசியலமைப்பில் பின்வருமாறு நிறுவப்பட்டிருந்தது:

1. 1956 தை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தென்சூடானில் வசித்த பழங்குடி மக்களின் வழித்தோன்றல்கள் அல்லது அந்த திகதிக்கு பிற்பாடு தென்சூடானில் தொடர்ந்து வசிப்பவர்கள் அல்லது அவ்வாறு வசிக்கும் பெற்றோருக்கு பிறந்தவர்கள்  

2. 18 வயதை அடைந்தவர்கள்

3. சுயபுத்தியுடன் இருப்பவர்கள்

4. பொதுவாக்கெடுப்பு வாக்காளர் அட்டவணையில் பதிவு செய்தவர்கள்

2010 ஆண்டு ஆனி மாதம் உருவாக்கப்பட்ட SSRC 2011 ஆம் ஆண்டு தை மாதத்துக்குள் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்பார்கப் பட்டது.  இந்த குறுகிய கால அட்டவணை SSRC எதிர்நோக்கிய இன்னுமொரு சவாலாக இருந்தது.  முன்னர் கூறப்பட்ட பல சவால்களை கொண்டுள்ள ஒரு நாட்டில் இந்தக் குறுகிய கால எல்லைக்குள் வாக்காளர் அட்டவணையில் தகுதியானவர்களை பதிவு செய்து ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவது என்பது இமயத்தில் ஏறுவதற்கு ஒப்பானது.

மேலும், வாக்காளர் அட்டவணையை தயாரிக்கும் பொழுது மேற்குறிப்பிட்ட தகவுகளுக்கு இணங்க ஒருவரை அடையாளம் கண்டு அவர்களை அட்டவணையில் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட பல நபர்களின் தகுதி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதிலளிப்பதிலும் தகவல்களை சரி பார்ப்பதிலும் பெருமளவு நேரமும் முயற்சியும் விரயமாக்கப்பட்டன.

வெளிநாடுகளில் நடத்தப்படவிருந்த பொதுவாக்கெடுப்பை சர்வதேச இடப்பெயர்வுக்கான நிறுவனம் (International Organization for Migration, IOM) செய்ய வேண்டும் என்று இடைக்கால அரசியலமைப்பு சொன்னது.  ஆனால், இந்த சட்டம் இயற்றப்படும் பொழுது இது தொடர்பாக IOM இற்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் இவ்வாறான வாக்கெடுப்பை நடத்துவதற்கான கொள்ளளவு IOM இற்கு இருக்கிறதா என்பதையும் சட்டமியற்றியவர்கள் அறிந்திருக்கவில்லை.

பொதுவாக்கெடுப்பு அலுவல்களில் ஈடுபடத் தகுதியான ஆளணிகளை திருட்டுவது SSRC இற்கு அடுத்த சவாலாக இருந்தது. பொதுவாக்கெடுப்புச் சட்டம் இந்த ஆளணியில் இருப்பவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லியது.  ஆனால், தென்சூடானில் இருந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள்.

வாக்காளர் அட்டவணை தயாரித்து, அதனை பரிசோதனை செய்து, பொதுவாக்கெடுப்புக்கான பிரச்சாரத்துக்கு நேரம் கொடுத்து, எல்லாம் அரசியலமைப்புக்கு அமைவாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்து, வாக்குச் சாவடிகள் தொடர்பான கடைசி நேர மாற்றங்களை  செய்து பின்னர் பொதுவாக்கெடுப்பை நடத்த SSRC இற்கு கிடைத்தது 4 மாதங்களே.  

அமெரிக்க முன்னாள் சனாதிபதி ஜிம்மி காட்டர், ஐ.நா. முன்னாள் செயலாளர் கோபி அனான், முன்னாள் தான்சானிய பிரதமர் ஜோசப் வரியோபா ஆகியோர் தலைமையிலான சர்வதேச கண்காணிப்புக்குழு பொதுவாக்கெடுப்பை கண்காணிக்கும் வேலையை செய்தது. ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், அரபு நாடுகளின் கூட்டு, நாடுகளுக்கிடையேயான அபிவிருத்தி ஆணையகம் ஆகியவையும் கண்காணிப்பில் பங்கெடுத்தன. இவற்றுடன் உள்நாட்டு அமைப்புகள் பலவும் கண்காணிப்பில் ஈடுபட்டன. பொதுவாக ஐ.நா. தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை. ஆனால், இடைக்கால அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. உம் ஒரு கண்காணிப்புக் குழுவை அனுப்பியிருந்தது.

2011 ஆம் ஆண்டு தை 9 ஆம் திகதி தொடங்கி 15 ஆம் திகதி வரை தென்சூடானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மாசி 7 ஆம் திகதி இந்த பொதுவாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்டது. பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 98.83% ஆன மக்கள் பிரிந்து போக வேண்டும் என்று வாக்களித்தார்கள்.  இந்த பொதுவாக்கெடுப்புக்கு தகுதி பெற்றவர்களில் தென்சூடானில் இருந்து 83% ஆனவர்களும் வடசூடானிலிருந்து 53% ஆனவர்களும் வாக்களித்து இருந்தனர்.

தென்சூடானிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வந்த புலம்பெயர்ந்தோர்  இந்த வாக்கெடுப்பில் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுத்திருந்தனர். ஒரு பகுதியினர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து இருந்தனர், மற்றும் ஒரு பகுதியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து இருந்தனர். பொதுவாக்கெடுப்பு முடிவுகளின் பெறுபேறாக 2011ஆம் ஆண்டு ஆடி மாதம் 9 ஆம் திகதி தென்சூடான் எனும் புதிய நாடு உருவாகியது.

தென்சூடானில் நடந்த பொதுவாக்கெடுப்பின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது ஈழத்தமிழர் கோரும் பொதுவாக்கெடுப்பும் ஏறத்தாழ இதுபோன்ற ஒன்றைத்தான் என்று புரிந்து கொள்ளலாம். பொதுவாக்கெடுப்புக்கு முன்னர் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஈழத்தமிழர் கோருகின்றனர்.  அந்த இடைக்கால நிர்வாகத்தின் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு வாழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய பொதுவாக்கெடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் இடைக்கால அரசாங்கத்தின் அரசியல் அமைப்பில் சட்டங்களாக ஆக்கப்பட வேண்டும். அந்த வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் யார் என்பது அவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் மற்றும் மலையக தமிழ் மக்களை இந்த பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும். அவர்களில் எந்தப் பிரிவினராவது  உள்ளடக்கப்படுவது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருக்குமானால் அவற்றைத் தீர்ப்பதற்கு பிரத்தியேகமான சிறிய பொதுவாக்கெடுப்புகள் (targeted mini referendums) நடத்தப்பட்டு அவை சட்டமாக்கப்படலாம்.

சூடான் போன்ற நிலப்பரப்பிலும் சனத்தொகையிலும் பெரிய ஒரு நாட்டில் பொதுவாக்கெடுப்பு சர்வதேச அனுசரணையுடன் நடத்தப்பட முடியுமாயின் இலங்கையிலும் அது சாத்தியம். அதனை சட்டரீதியாக முன்னெடுக்கத் தேவையானது இங்குள்ள அரசாங்கத்தினதும் ஏனைய இனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றே. ஆனால், ஈழத்தமிழ் மக்களை இராணுவ வன்முறையால் அடக்கிய சிங்கள பௌத்த அரசு, முஸ்லிம் மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அரசு, மலையக மக்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் அரசு அவ்வாறான ஓர் ஒப்பந்தத்துக்கு வராது. இன்று அது ஒரு படி மேலே போய் தன் சொந்த இன மக்களையும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க புதிய பயங்கரவாதச் சட்டத்தை இயற்றிக் கொண்டு இருக்கிறது.

அப்படியான அரசு இருக்கும் பொழுது ஈழத்தமிழர் கோரும் பொதுவாக்கெடுப்பு நடைமுறைச் சாத்தியம் அற்றது. இதனைத்தான் பொதுவாக்கெடுப்புக்கு எதிரான குரல்கள் தமது வாதத்தின் மையப்புள்ளியாக வைக்கிறார்கள். சூடானில் தென்சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக ஒரு பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதே போன்று ஈழத்தமிழர் கோரும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டால் பொதுவாக்கெடுப்பு சாத்தியம். ஈழத்தமிழர் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியும் இந்தக் கோட்பாட்டைத்தான் முன் நிறுத்தியது.  இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். நடைமுறைச் சாத்தியம் அற்றது என்பதற்காக சரியான கருத்தியலை கைவிட முடியாது.

அந்த கருத்தியலை நடைமுறைப்படுத்த எவ்வாறு உழைக்கலாம் என்று விவாதிப்பதே எமது இலங்கையின் இனப்பிரச்சனைக்கான் தீர்வு நடவடிக்கைகளை முன்னோக்கி செலுத்தும். சூடான் நாட்டில் சுயநிர்ணய உரிமை வேண்டி போராடிய மக்கள் அரசாங்கத்துடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் ஊடாக ஒரு சட்டரீதியான பொதுவாக்கெடுப்பை நடத்தினார்கள்.  

பொதுவாக்கெடுப்புக்கான சட்டரீதியான சூழல் இல்லாத பொழுது ஸ்பெயின் நாட்டின் கிழக்கு கரையோரங்களில் வாழும் கடலோனிய (catalonia) மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம். 

தமிழ் மக்கள் கோரும் பொது வாக்கெடுப்பு - பகுதி 01

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.