தமிழ் மக்கள் கோரும் பொது வாக்கெடுப்பு

 


இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாசி மாதம் நடந்த “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியின் இறுதியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்குகிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டிப் போராடும் அமைப்புகள், மற்றும் தமிழ் சமூக அமைப்புகள் என்பனவற்றால் வெளியிடப் பட்டது.

இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து பொதுவாக்கெடுப்பு தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்த பொதுவாக்கெடுப்பு என்பது மேற்குலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தியல் என்று சொல்லப் படுகிறது. இந்த கருத்தியல் தொடர்பான ஆழமான அறிவின்றி இந்த கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தான் பேரணியனர் மீது இந்த  கருத்தை திணித்திருப்பதாகவும் சொல்ல முனைகிறார்கள். ஆனால்தாயகத்திலிருந்து தமிழ் அரசியல்வாதியான சிவாஜிலிங்கம் அவர்கள் இக்கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

தமிழ் சமூகத்தில் புரட்சிகரமானவர்களாகவும் முற்போக்கு சிந்தனைகளின் ஊற்றிடமாகவும் இருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் சுயபுத்தி இல்லாமால் அந்தக் கோரிக்கையை பிரகடனத்தில் சேர்த்து இருக்கிறார்கள் என்ற பார்வை கண்டிக்கத்தக்கது. மேலும், தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் இணைந்து இந்த கருத்தியலுக்கு பேரணியினரை இணங்கப் பண்ணியிருந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அதில் தவறு எதுவும் இல்லை. மேலும் அந்தக் கோரிக்கையுடன் பல்கலைக்கழக மாணவர்கள் உடன்படாதிருந்தால் அந்தப் பேரணியை அவர்கள் நடத்தாமல் இருந்திருக்கலாம். அதற்கான முடிவெடுக்கும் பலம் அவர்களிடம் இருக்கிறது. ஈழத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறு அசைவிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அந்த வகையில் ஈழமண்ணில் நடக்கும் அரசியல் கருத்தாக்கங்களில், அரசியல் நடவடிக்கைகளில் களத்தில் இருப்பவர்களுக்கு சமமாக புலத்தில் இருப்பவர்களும் பங்கு கொள்வதில் தவறு இல்லை. அவர்கள் பங்கு கொள்ள வேண்டும். இதுதொடர்பான விடயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அடிப்படையில் இன்று தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு என்ன என்பதில் தெளிவு தேவை. அதன் பின்னர் அந்த பொதுவாக்கெடுப்புக்கு அவர்கள் உரித்துடையவர்களா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை காணுவதற்கு உலகில் வாழும் மற்றைய தேசிய இனங்களின் அனுபவங்களை பார்க்க வேண்டும். அவர்களின் நிலைகளோடு ஒப்பிடுகையில் எமது நிலை எவ்வாறு ஒத்துப் போகிறது அல்லது வேறுபடுகிறது என்ற பார்க்க வேண்டும். அதன் பின்னர் அந்த பொதுவாக்கெடுப்புக்கான கோரிக்கையை யாரை நோக்கி வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் கோரிக்கை  சட்டபூர்வமானதாஇல்லையா என்று பார்க்க வேண்டும். அது சட்டபூர்வமற்றதென்றால் அது சட்டபூர்வமாக்கப்படக் கூடியதா அல்லது சட்டபூர்வமாக்கப் பட முடியாததா என்று ஆராய வேண்டும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் யார் என்று வரையறை செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுகளின் ஊடாகவே தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு பற்றிய கருத்தியலையும் அதன் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி ஓர் இனம் சரியெனக் கருதும் கருத்தியலை நிராகரிப்பதோ, அல்லது கருத்தியல் சரியென ஏற்றுக்கொண்ட பின்னும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை முயற்சிக்காமல் இருப்பதோ அந்த இனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லாது.

முதலில், தமிழ் மக்கள் கோரும் பொதுசனவாக்கெடுப்பு என்ன என்பதைப் பார்ப்போம். பேரணிப் பிரகடனத்தின் இறுதிப் பந்தியில் இருப்பது கீழே தரப்பட்டுள்ளது:

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும் சர்வதேசத்தினால் ஒழுங்குடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதும் நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.”

அடிப்படையில், பொதுவாக்கெடுப்பற்கு முன்வைக்கப்படும் கேள்வி இதுதான்: சர்வதேசத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளினூடாக எட்டப்படும் தீர்வை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தரத் தீர்வை ஏற்றுக் கொள்கிறார்களா?

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சர்வதேசத்தின் பாரபட்சமற்ற கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் பேச்சுவார்த்தையூடாகத் தான் தீர்வு எட்டப்படலாம் என்பதை பிரகடனம் வெளிப்படுத்துகிறது. அதன் விளைவாக எட்டப்படும் தீர்மானங்கள் பொதுவாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று கேட்பதில் எந்தவிதமான பிரதிவாதங்களுக்கும் இடமில்லை.

அடுத்து இந்தக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்களா என்று பார்க்கலாம். இலங்கையில் தமிழ்மக்கள் பல்வேறு இனரீதியான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையில் தமிழ் மக்கள் ஓர் இனமாக இருப்பதை வெளிப்படுத்தும் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு போன்ற அடையாளங்கள் சிங்கள பௌத்த அரசால் அதிகாரம், வன்முறை என்பவற்றைக் கொண்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றன. இந்த அடக்குமுறைகள எதிர்த்து தம்மை ஓர் இனமாக தக்கவைத்துக் கொள்ள சாத்வீகப் போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்.  அந்தப் போராட்டங்களும் வன்முறை கொண்டு அடக்கப்பட்டன. இலங்கையில் ஜனநாயக அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டுமானால் பிரிந்து செல்வது தான் ஒரே வழி என்று 1976ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனநாயக வழிகளை அவர்கள் தேடினார்கள். பிரிந்து போவதற்கான உரிமையை தமிழர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் கோரும் முகமாக 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலை அவர்கள் பயன்படுத்தினார்கள். பிரிந்து போவது தொடர்பாக எடுக்கப்பட்ட முதலாவது மறைமுக பொதுவாக்கெடுப்பாக அந்த தேர்தலை கருதலாம்.

அத்தேர்தலில் பிரிந்து போகும் உரிமைக்கான கோசத்தின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெருவெற்றியை ஈட்டினார்கள். தமிழ் மக்களின் இந்த அபிலாசையை புரிந்து கொண்டு சமாதானமாக இனப்பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க வேண்டிய அரசு பேரினவாதத்தையும் வன்முறையையும் கையில் எடுத்தது. 1977ஆம் ஆண்டு பெரும் இனக்கலவரமாக அது வெடித்தது. அரச வன்முறையை எதிர்கொள்ள தமிழ் மக்களும் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினார்கள். அந்தப் போராட்டமும் 2009ஆம் ஆண்டு மிகவும் மோசமான மனித உரிமை மீறல், யுத்தவிதிகள் மீறல், இனப்படுகொலை என்பவற்றின் ஊடாக தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் தொடர்ந்து தனது சொந்த அரசாலேயே இராணுவரீதியாக அடக்கப்படும் ஓர் இனம், அந்த அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தன்னை ஓர் இனமாக தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் ஓர் இனம், தனது நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை பாதுகாக்க நினைக்கும் ஓர் இனம் தனது நிலைமையை இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு முறையிடவும், அதன் அரசியல் வேணவா என்ன என்பதை சர்வதேசத்துக்குத் தெரிவிக்கவுமான ஒரு வழிதான் இந்த பொதுவாக்கெடுப்பு. பாதிக்கப்பட்ட ஓர் இனம் தனது பாதிப்புகளுக்கு நீதி கோருவதற்கும் அந்த பாதிப்புக்கள் மீள நிகழாமல் இருப்பதற்கு சர்வதேசத்திடம் உதவி கோருவதற்கும் உரித்துடையது. இது ஒரு அடிப்படை மனித உரிமை. அந்த வகையில் தமிழ் மக்கள் இந்த பொதுவாக்கெடுப்புக்கு உரித்துடையவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாதிப்புகளுக்கு நீதி கோருவதையும், மீள நிகழாமல் உறுதிப்படுத்தக் கோருவதையும் பாதிக்கப்பட்டவர்கள் பாதித்தவர்களை நோக்கி வைக்க முடியாது. அந்த வகையில் இன்று தமிழ் மக்கள் சர்வதேச அரங்கில் ஐக்கியநாடுகள் சபையையும், இந்தியாவையும் ஏனைய நாடுகளையும் இந்த விடயத்தில் தலையிட்டு தமக்கு நீதி வழங்குமாறு கோருகிறார்கள். அந்த தீர்வுக் கோரிக்கையில் ஓர் அங்கம் தான் இந்த பொதுவாக்கெடுப்பு பிரேரணை.

பொதுவாக்கெடுப்பு ஒன்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மேற்குலக கருத்தியல் அல்ல. இலங்கையிலேயே பொதுவாக்கெடுப்புக்கு முன்னுதாரணம் ஒன்று இருக்கிறது. 1982ஆம் ஆண்டு அப்போது சனாதிபதியாக இருந்தJ.R. ஜெயவர்தனா தனக்கு அரசியலமைப்பில் இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டு முடிவுக்கு வரவிருந்த தனது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு பொதுமக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டு ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தினார். அந்த வாக்கெடுப்பின் முடிவுகளின் படி அந்த ஆட்சி 1989ஆம் ஆண்டுவரை நீடிக்கப் பட்டது.

ஆகவே, இலங்கையின் அரசியல் அமைப்பிலேயே பொதுவாக்கெடுப்பு இருக்கிறது. இது ஒரு மேலைநாட்டு கருத்தியல் அல்ல. ஆனால், இன்று தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு என்பது இதிலிருந்து பல வகைகளில் மாறுபட்டதாக இருக்கின்றது. அது எமது அரசியற் சூழலுக்கு ஏற்றவாறு அரசு தொடர்பாக நாம் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

முதலாவது, அரசியலமைப்பின் பிரகாரம் இன்றைய சனாதிபதி அல்லது இனிவரும் சனாதிபதி தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பை நடத்த முடியும், அதற்கான வரையறைகளை அவர் உருவாக்க முடியும் என்று இருந்தாலும் அவர் அதைச் செய்யப் போவதில்லை. அதனைச் செய்ய வைப்பதற்கான அழுத்தம் வெளியிலிருந்து வரவேண்டும். இலங்கையில் நடந்த முக்கியமான அரசியல் மாற்றங்கள் எல்லாம் வெளியுலக அழுத்தங்கள் ஊடாகவே நிகழ்ந்துள்ளன. 13 ஆம் திருத்தம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பொருளாதாரப் பிரச்சனையின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாக இன்று நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் இன்னோர் உதாரணம்.

ஆகவே பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான அழுத்தம் இப்பொழுது சனாதிபதிக்கு இல்லை என்பது இன்றைய யதார்த்தமாக இருந்தாலும் இந்த நிலைமை மாறாது என்பது முடிந்த முடிவன்று.  அதேவேளை இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பதுவும் தர்க்கரீதியான முடிவாக இருக்க முடியாது. அரசியல் அமைப்பில் அனுமதிக்கப் பட்ட ஒன்றைத்தான் தமிழ் மக்கள் கோருகிறார்கள். சட்டத்தால் அனுமதிக்கப் பட்ட ஒன்றுக்கு சிறிலங்கா சனாதிபதி இணங்காமல் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியும் அதன் பிரகடனமும்.

சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்கள் தமது கோரிக்கையை எடுத்துச் செல்வதாயின் சர்வதேச சமூகத்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்புகள்  தொடர்பாக நாம் விளங்கிக் கொள்வது அவசியம். அதன் பிற்பாடே அந்தப் பொதுவாக்கெடுப்புகள் எவ்வாறு எமது அரசியற் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்படலாம் என்று ஆராயப்பட முடியும்.  அந்த வகையில் ஏனைய நாடுகள் சிலவற்றில் நடந்த பொதுவாக்கெடுப்புகள் பற்றியும் அதற்கு ஏதுவாக இருந்த அந்நாட்டு நிலைமைகள் தொடர்பாகவும் அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொகுப்பு : லிங்கம் 

நிமிர்வு பங்குனி 2023 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.