தொடரும் பௌத்த மயமாக்கல் - மூலோபாயமில்லாமல் நகர்கிறதா தமிழர் தேசம்?
அதே போல் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நாவற்குழியில் விகாரையொன்று கட்டப்பட்டு அதற்கு 19.03.2023 அன்று இராணுவத்தளபதி கலசம் வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் மேற்கொண்டனர்.
இதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி விகாரை அமைத்து இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்பையும், சட்டத்தையும் மீறி அங்கே கட்டுமானப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொல்லியல் திணைக்களம் குறித்த அடாவடிக்கு முழுமையாக துணை நிற்கிறது. அரசற்ற தரப்பான தமிழ் மக்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர். இலங்கையில் நீதித்துறை பேரினவாத அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குறித்த பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றம் கட்டளை வழங்கியும் அதனை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் அல்லது விருப்பம் அற்ற நிலையில் நீதித்துறை உள்ளது.
ஆக்கிரமிப்புகள் தொடர்வதற்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தான் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ் சமூகம் திரண்டு இவற்றுக்கு கூட எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்நிலையில் மக்களை மேலும் அரசியல் மயப்படுத்தி அவர்கள் மத்தியில் இவற்றை விளக்கி பொதுமக்களையும் இணைத்து வலுவான போராட்டங்களை நடாத்த வேண்டும். இன்னொரு பக்கம் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகிறது. பிறக்கும் குழந்தையும் பல இலட்சம் கடனோடு பிறக்கிறது. ஆனாலும் சிங்கள அரச இயந்திரத்தின் பூரண ஒத்துழைப்புடன் சிங்கள பெருந்தேசியவாதம் தமிழ்மக்களை ஒடுக்குவதில் தான் முனைப்பாக உள்ளது.
இதனை எதிர்கொள்ள எவ்வாறு ஒன்றாக சேர்ந்து இயங்கப் போகிறோம்? குழுநிலை வாதம், கட்சி அரசியல் என்பவற்றைத் தாண்டி ஆக்கபூர்வமாக எவ்வாறு செயற்பட போகிறோம்? கொடூர இனவழிப்பில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் எங்களை சரியாக கட்டமைக்காமல் எவ்வளவு காலத்துக்கு இருக்கப்போகிறோம்? அரசாங்கமும், அரச அதிகாரிகளும் அவர்களது அபிவிருத்தி திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் சிங்கள தேசத்தை வளப்படுத்தி தமிழர் தாயகத்தை சிதைப்பதை மையமாக கொண்டதாகவே உள்ளன.
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யப் புறப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் இப்படியான பொதுவான பிரச்சினைகளுக்கு கூட ஒன்றாக குரல் கொடுக்க தயாரில்லாத நிலை தான் தொடர்கிறது. எங்களது மக்களது வளர்ச்சிக்காக எங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக எமது தேசத்தை வளர்க்கும் உணர்வு கொண்டவர்களாக நாம் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழ் மக்களின் மேன்மைக்கான, விடிவுக்காக மூலோபாய ஆவணமொன்றை அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், புலம்பெயர்ந்து வாழும் செயற்பாட்டாளர்கள் பொதுமக்களை இணைத்து உருவாக்க வேண்டும். அப்படி உருவாகும் ஆவணத்தை மூலமாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-செ. கிரிசாந்-
நிமிர்வு பங்குனி 2023 இதழ்
Post a Comment