ஐநா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் பிரச்சனை (பகுதி - 02 )


                                                 

பொது அமர்வில் ICJ தனது ஆலோசனைக் கருத்தை வழங்குவதன் மூலம் ஆலோசனை நடவடிக்கைகள் முடிவடையும். அடிப்படையில்   இத்தகைய கருத்துக்கள் ஆலோசனைகள் மட்டுமே.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் போலல்லாமல், அவை சட்ட ரீதியாக ஒருவரையும் கட்டுப்படுத்தாது. ஆலோசனை கோரிய ஐ.நா.வின் உறுப்பு நிறுவனம் அல்லது அமைப்பு, கருத்தை எடுத்துக்கொண்டு தனக்கு ஏற்றவாறு செயல்படுவதற்கு சுதந்திரம் உள்ளது. அல்லது அது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பதற்கும் சுதந்திரம் உள்ளது. எவ்வாறாயினும், சில கருவிகள் அல்லது விதிமுறைகள் நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துக்கு சட்ட பலத்தை கொடுக்க முடியும்.  உதாரணமாக, ஐ.நா. சபையின் சலுகைகள் மற்றும் விலக்குகள் மீதான ஆலோசனைகளை கூறலாம்.

ICJ இன் ஆலோசனைக் கருத்துக்கள் அதன் அதிகாரம் மற்றும் கௌரவத்துடன் தொடர்புபட்டவை. அதன் ஆலோசனையை கோரிய நிறுவனம் அந்த ஆலோசனையை அங்கீகரிப்பதாக எடுக்கும் முடிவு அந்தக் கருத்தை ஒரு சர்வதேச சட்டமாக வரித்துக் கொள்ளும் முடிவாகவே கருதப்படும்.

ஈழத்தமிழர் பிரச்சனையை எடுத்துக் கொண்டால், ICJ சிறிலங்கா அரசை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆலோசனையை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகளை செயற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அதற்கு முதலில் ICJ யிடம் இந்த வழக்கு சமர்ப்பிக்கப் பட வேண்டும். அதனை ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான HRC செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். HRC இதனை செய்யாமல் இழுத்தடிப்பது தான் இங்குள்ள பிரதான சிக்கல். இதற்கு HRC இல் இருக்கும் நாடுகளில் பெரும்பான்மையானவற்றின் ஆதரவு தேவைப்படும். இதுவரை ஈழத்தமிழருக்கு அந்தப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் பிரதானமான புள்ளி. இந்த நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது தான் இன்று ஈழத்தமிழர்கள் கலந்தாலோசிக்க வேண்டிய விடயம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உருவாக்கத்திற்கான அடிப்படை சாசனமாகிய றோம் சாசனம் இந்த நீதிமன்றத்திற்கு பிரதானமாக குற்றங்களை விசாரிப்பதற்கு சட்ட உரிமையை வழங்கி உள்ளது.

முதலாவது, இனப்படுகொலை: இனப்படுகொலை குற்றமானது ஒரு தேசிய இனம், இனம் அல்லது மதக் குழுவைஅதன் உறுப்பினர்களைக் கொல்வதன் மூலம் அல்லது வேறு வழிகளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவது என்று வகைப்படுத்தப்படுகிறது.

இந்த செயற்பாடுகள், ஒரு மக்கள் கூட்டத்தின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மனத் தீங்கு விளைவிப்பது, முழு அல்லது பகுதியாக அவர்களுக்கு அழிவைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்ட ரீதியில் அவர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றுவது, அவர்களின் பிறப்பு வீதத்தைக் குறைக்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை செய்வது, அல்லது அவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு மக்கள் கூட்டத்திற்கு மாற்றுவது என்பவற்றை உள்ளடக்கும்.

இரண்டாவது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்: இவை எந்தவொரு குடிமக்களுக்கும் எதிரான பெரிய அளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாக செய்யப்படும் கடுமையான  குற்றங்களை குறிக்கும். ரோம் சட்டத்தில்15 வகையான மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கொலைபாலியல் வன்முறை, சிறைப் பிடித்தல், கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், அடிமைப்படுத்துதல் - குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தல், சித்திரவதை செய்தல், நிறவெறிப் பாகுபாடு மற்றும் நாடு கடத்தல் போன்ற குற்றங்கள் இவற்றுள் அடங்கும்.

மூன்றாவது, போர்க் குற்றங்கள்: ஆயுத மோதல்களில் ஜெனீவா உடன்படிக்கைகளை மீறுதல் போர்க்குற்றம் என்று வகைப்படுத்தப்படும். உதாரணமாக, சிறுவர்களை படைகளில் சேர்ப்பது, பொதுமக்கள் அல்லது போர்க் கைதிகளை கொல்வது அல்லது சித்திரவதை செய்வது, மருத்துவமனைகள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்வி, மதம், கலை, அறிவியல் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கட்டிடங்களை வேண்டுமென்றே தாக்குவது போன்ற செயற்பாடுகள் இவற்றுள் அடங்கும்.

நான்காவது, ஆக்கிரமிப்பு: இது ஒரு நாடு தனது இராணுவத்தை மற்றொரு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது சுதந்திரத்திற்கு எதிராக பயன்படுத்துவதாகும். 2010 இல் உகண்டாவின் கம்பாலாவில் நடந்த ரோம் சட்டத்தின் முதல் மறு ஆய்வு மாநாட்டில் இந்த குற்றத்தின் வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2018 ஆடி 17 ஆம் திகதியிலிருந்து இது ஒரு ICC இன் சட்ட வரம்புக்கு உட்பட்டது என்று ரோம் சாசன நாடுகள் எல்லாம் 2017 மார்கழி 15 இல்  இணங்கி ஏற்றுக் கொண்டன.

1 ஜூலை 2002 அன்று அல்லது அதற்குப் பிறகு இனப் படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது போர்க் குற்றங்கள் நடந்தால் பின்வரும் சந்தர்ப்பங்களில் ICC தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தலாம். 

இக் குற்றங்கள் ரோம் சாசன நாட்டின் நபர் ஒருவரால் நடத்தப்பட்டால், அல்லது ரோம் சாசன நாடு ஒன்றில் நடத்தப்பட்டால், அல்லது ரோம் சாசனத்தின் சட்ட வரம்பை ஏற்றுக் கொண்ட நாடு ஒன்றில் நடத்தப்பட்டால் ICC அவற்றை விசாரிக்க முடியும்.

அல்லது, இக் குற்றங்கள் தொடர்பான வழக்கு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 7ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டதற்கு இணங்க ஐ.நா. பாதுகாப்புச் சபையால் ICC இற்கு பாரப்படுத்தப்பட முடியும்.

17 ஆடி 2018 இற்குப் பின்னர் மேலே கூறப்பட்ட ஆக்கிரமிப்புச் செயலை ஒரு ரோம் சாசன அரசாங்கமோ அல்லது அதை ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசாங்கமோ நடந்தியிருந்தாலும், அது தொடர்பான வழக்கு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 7ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டதற்கு இணங்க ஐ.நா. பாதுகாப்புச் சபையால் ICC இற்கு பாரப்படுத்தப்பட முடியும். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில், ICC ஒருநாட்டின் தேசிய குற்றவியல் அமைப்புக்களில் உள்ள குறைகளை நிரப்புவதற்கோ, அல்லது அதற்கு மாற்றாக செயற்படவோ உருவாக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பு அல்ல.  நாடுகள் வழக்குத் தொடர மறுக்கின்ற, அல்லது வழக்கு தொடர விரும்பாத, அல்லது அந்நாடுகளால் உண்மையாக வழக்குத் தொடர முடியாத சூழலில் மட்டுமே அந்த வழக்குகளை ICC விசாரிக்கின்றது.

மேலும், ஒரு நீதித்துறை நிறுவனமாக, ICC க்கு சொந்தமான பொலிஸ் படையோ அல்லது அமலாக்க அமைப்போ இல்லை. எனவே, தனது செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பை அது நம்பியுள்ளது. குறிப்பாக சந்தேக நபர்களை தளை செய்தல், தளை செய்யப்பட்ட நபர்களை ஹேக்கில் (Hague) உள்ள ICC தடுப்பு மையத்திற்கு மாற்றுதல், சந்தேக நபர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் தண்டனைகளை அமல்படுத்துதல் போன்றவற்றுக்கு உலக நாடுகளிலேயே ICC தங்கியிருக்கிறது.

ICC ஒரு ஐக்கிய நாடுகளின் அமைப்பாக இல்லா விட்டாலும், அதற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு வழக்கு ICC இன் அதிகார வரம்பிற்குள் இல்லாத போது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அந்த வழக்கை ICC இற்கு வழங்கலாம். சூடான் மற்றும் லிபியா சம்பந்தமான வழக்குகளில் இது செய்யப்பட்டது.

அனைத்து பிராந்தியங்களிலும் புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் உருவாக்க ICC தீவிரமாக செயற்பட்டு வருகிறது. கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை உலகளாவிய ரீதியில் நடத்துவதன் மூலம் அதனைச் செய்கிறது. அது ரோம் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடுகளுடனும் கையொப்பமிடாத நாடுகளுடனும் ஒத்துழைத்து செயற்படுகிறது.

நீதிமன்றத்தின் புதிய நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணித்தல், சந்தேக நபர்களை ICC தடுப்பு மையத்திற்கு மாற்றுதல், நீதிமன்றத்தில் அவர்கள் தோன்றுவதற்கு வசதி செய்தல் மற்றும் பல விடயங்களில் ICC அதன்புரவலர் நாடான நெதர்லாந்துடன் குறிப்பாக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.

அதேபோன்று, பிற நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூகக் குழுக்களும் ICC இற்கு தமது ஆதரவை பல வழிகளிலும் வழங்குகின்றன. ICC தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் ICC இற்கும் அதன் சட்ட வரையறைகளுக்கும் மக்களிடையே ஆதரவை உருவாக்குதல் போன்ற பல வழிகளில் அவை ICC உடன் ஒத்துழைக்கின்றன. கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் போன்ற வழிகளில் இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை அதிகரிக்க ICC முயல்கிறது.

ICC இன் செயற்பாட்டு வழிமுறைகளைப் பார்க்கும் போது, ஈழத்தமிழர் பிரச்சனையை அங்கு கொண்டு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.  ஒன்று, ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு வழக்கை ICC இடம் பாரப்படுத்த வேண்டும்.  அதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரச்சனையை பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும்.  ஆனால், அதற்கான சாத்தியங்கள் மந்த கதியிலேயே உருவாகி வருவதை நாம் மேலே பார்த்தோம்.  இரண்டாவது வழி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் தமக்கு நடந்த பாதிப்புக்கும் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒரு நாட்டுக்கும் தொடர்பிருப்பதாக கூறி ஒரு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று ICC இற்கு ஒரு பிரேரணையை சமர்ப்பிக்கலாம்.

இந்த இரண்டாவது உத்தியைப் பயன்படுத்தி மியான்மாருக்கு எதிரான வழக்கு ஒன்று ICC இல் தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பான விபரங்களை மார்கழி இதழில் வெளியிட்டு இருந்தோம். மியான்மார் ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத ஒரு நாடாக இருந்தாலும் அங்கு நடந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள பங்களாதேசுடன் சம்பந்தப்பட்டவை என்ற ரீதியில் அந்த வழக்கு முன்வைக்கப்பட்டது. ICC அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு ஒரு வழக்கை நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையான உண்மையை கண்டறிவதற்கும் அதற்கான ஆதாரங்களை சேகரித்து வழக்குகளை கட்டமைக்கவும் வேண்டிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 ‘உலகளாவிய உரிமைகளை பின்பற்றல் (Global Rights Compliance, LLP)’ என்ற அமைப்பு 2021 ஐப்பசி மாதம் ஈழத்தமிழர்கள் சார்பாக ஒரு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று ICC இல் ஒரு பிரேரணை சமர்ப்பித்துள்ளது. 200 ஈழத்தமிழர்கள் சார்பாக, அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.  சிறிலங்கா அரசின் துன்புறுத்தல் மிரட்டல் காரணமாக அவர்கள் இங்கிலாந்தில் இருந்து தமது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.  அந்த வகையில் அவர்கள் மீது நடத்தப்படும் குற்றத்தில் இங்கிலாந்து சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கை ICC விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.  இங்கிலாந்து ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள ஒரு நாடு.

மியான்மார் தொடர்பான வழக்கில், குற்றம் தொடர்பான தனது வியாக்கியானத்தை ICC விரிவுபடுத்தி உள்ளது. அதாவது மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் “குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது வங்காளதேசத்தின் பிரதேசத்தில் (அல்லது ரோம் சாசனத்தை ஏற்றுக் கொண்ட அங்கத்துவ நாடு ஒன்றின் பிரதேசத்தில்) நடந்திருக்கின்றமையால் அக்குற்றம் மீதான விசாரணையை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. பர்மியரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் வங்காளதேசத்துடன் போதிய அளவுக்கு தொடர்புபட்டு இருப்பதால் அக்குற்றங்களை செய்தவர்கள் மீதான விசாரணை அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் மேற்கொள்ளப்பட முடியும்.” இவ்வாறாக ICC இன்  குறை நிரப்பு மற்றும் ஒத்துழைப்பு பிரிவின் இயக்குனர் பாகிசோ மொசொசொகோ (Phakiso Mochochoko) கூறியுள்ளார். அதே வாதத்தைப் பின்பற்றியே‘ உலகளாவிய உரிமைகளை பின்பற்றல்’ அமைப்பும் ICC இல் ஈழத்தமிழர்கள் தொடர்பான வழக்கை தொடரும் பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்தப் பிரேரணையில் முன்னாள் சனாதிபதி கோதாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அவர்கள் நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான மனித உரிமையை சம்பந்தப்பட்ட ஈழத் தமிழருக்கு துன்புறுத்தல் மிரட்டல் ஊடாக மறுத்ததன் மூலம் மனித குலத்துக்கு எதிரான குற்றத்தைப் புரிந்துள்ளதாக அதில் வாதிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் காரணமாக சம்பந்தப்பட்ட ஈழத்தமிழர்கள் தமது சொந்த நாட்டை விட்டு ஓடி இங்கிலாந்தில் தஞ்சமடைய வேண்டி வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஈழத்தமிழர்கள் இங்கிலாந்தில் தம்மை நோக்கி சிறிலங்கா அரச அதிகாரிகளால் தொடர்ந்து நடத்தப்படும் கண்காணிப்பு, பின்தொடர்தல் மற்றும் துன்புறுத்தல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றங்கள் ICC அங்கத்துவ நாடாகிய இங்கிலாந்து எல்லைக்குள் செய்யப்பட்டுள்ளன என்பதனால் ICC தனது அதிகார வரம்பைப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று இந்த சமர்ப்பிப்பு கூறுகிறது. ஈழத்தமிழர் சார்பாக ICC க்கு இது போன்ற சமர்ப்பிப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இலங்கையில் தொடர்ந்து இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி ஈழத்தில் இருக்கும் தமிழரும் புலம்பெயர்ந்த தமிழரும் HRC ஊடாகவும், ICC ஊடாகவும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த முயற்சிகள் வெற்றியடைய  வேண்டியது உலகளாவிய மனித குலத்தில் நீதியும் நியாயமும் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமானவை. ஈழத்தமிழரின் இந்த முயற்சி எந்தவோர் அடக்குமுறை அரசும் தான் செய்பவற்றுக்கு பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்ற தத்துவத்தை நிலைநாட்டும் பாரிய பணியில் ஒரு சிறிய அங்கம் என்பதை சர்வதேசத்தினரும் உணர வேண்டும்.  ஆகவே இந்த முயற்சிக்கு தம்மாலான உதவிகள் அனைத்தையும் அவர்கள் வழங்க வேண்டும்.

தொகுப்பு - லிங்கம்

நிமிர்வு மாசி 2023 இதழ்

 




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.