தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும்(பகுதி-4)

 

ஈழ தமிழர்களுடைய பிரச்சனை பூகோள அரசியல் பிரச்சனை அல்ல. புவிசார் அரசியல் பிரச்சனை தான் ஈழத்தமிழர்களுடைய முதலாவது பிரச்சனை. பூகோள அரசியல், புவிசார் அரசியல் என்று சொல்லப்படுகின்ற இந்த விடயங்களை புரிந்து கொள்ள நாங்கள் சற்றுப் பயணிக்க வேண்டும்.

உலகளாவிய பொதுவான அரசியலைப் பற்றி சொல்வதற்கு பின்வருமாறு ஓர் அட்டவணையை சொல்ல முடியும். முதலாவது பூகோள அரசியல் (Global Politics), இரண்டாவது சர்வதேச அரசியல் (International Politics), மூன்றாவது புவிசார் அரசியல் (Geo Politics), நான்காவது அரசியல் புவியியல் (Political Geography), ஐந்தாவது தேசிய அரசியல் (National Politics) இந்த ஐந்து விடயங்களோடும் இணைந்தது தான் எங்களுடைய போராட்டம்.

பூகோள அரசியல்சர்வதேச அரசியல் இரண்டும் அரசியல் ரீதியானவை. புவிசார் அரசியல், அரசியல் புவியியல், தேசிய அரசியல் இந்த மூன்றும் அடிப்படையில் புவியியல் ரீதியானவை. தேசம் என்பதன் முதலாவது கட்டமைப்பே அரசு. அதன் தொடக்கமே புவிசார் அரசியல் தான். புவியை சார்ந்து மனிதன் அரசு என்ற நிறுவனத்தை கட்டுவதனால் தான் அந்த அரசு என்கிற நிறுவனம் உருவாகிறது. எனவே அரசு என்கிற நிறுவனம் முதலாவது அர்த்தத்தில் புவியை சார்ந்திருக்கிறது.

இரண்டாவது , அந்த அரசினுடைய அமைவிடம் ,அதனை சூழ்ந்திருக்கக் கூடிய நாடுகள், ஆறுகள், கடல்கள், வளங்கள், மலைகள் என்கின்ற அந்த நாட்டினுடைய அமைவிடம் பிராந்தியம் தொடர்பான அதன் அரசியல்.

புவியினுடைய வளத்திற்கு ஏற்ப அரசினுடைய வளம் இருக்கும். புவியினுடைய வளத்தை கையாள்வதற்கு ஏற்ப அரசியல் வளம் இருக்கும். இன்று மத்திய கிழக்கு என்று சொல்லப்படுகின்ற மேற்காசியாவானது அதன் புவிசார் அரசியல் அமைவிடமாக இருக்கிறது. இரண்டாவது, அதன் புவியியல் வளம். அவர்களுக்கு அது பெற்றோலியத்தால் இருக்கும். ஆகக் கூடியது 75 வருடத்துக்கு பின்னர் அந்த வளம் இருக்காது. அது ஒரு முடிவடையப் போகும் பொருள். ஆனால் அந்த நாடுகளின் அமைவிடம் அப்படியே தான் இருக்கும்.

இப்போது புவிசார் அரசியலில் முதலாவதாக இருக்கக்கூடிய அரசு,தேசம் என்பவை புவியை அடிப்படையாக கொண்டு தான் இருக்கின்றன என்பதை கருத்தில் கொள்வீர்களாக இருந்தால், அதாவது நிலத்தை அடிப்படையாக கொண்டு அரசு, தேசம் என்கிற இரண்டும் இருக்கிறதாக இருந்தால், தமிழ் மக்கள் பிரித்தானிய இராச்சிய காலத்தில் வைத்த கோரிக்கையில் புவி சம்பந்தபட்டிருக்கவில்லை. இதனை அரசியல் விஞ்ஞானத்தோடு சம்பந்தப்பட்ட, அரசறிவியலோடு சம்பந்தப்பட்ட, அரசியல் தலைமைகளோடு சம்பந்தப்பட்ட, போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட யாவரும் தெளிவாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசியலில் "ஆக்க காலம்" என்ற ஒரு பகுதி இருந்தது. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து 1956 ஆம் ஆண்டு வரை சுமாராக பத்து, பன்னிரெண்டு வருடங்கள் உள்ள காலம் இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரசியலின் ஆக்க காலப்பகுதி. இந்த காலத்தில் தான் அவர்கள் ஒற்றை ஆட்சியை முன் வைக்கிறார்கள். இந்த காலத்தில் தான் அவர்கள் குடியேற்றத்தை முன்வைக்கிறார்கள். குடியேற்றம் தான் தமிழ் மக்களினுடைய தேசத்தை சல்லடையாக்கியது. எலும்புக்கூடாக்கியது. எனவே இந்தபத்து வருட காலமான ஆக்க காலத்தில் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்த பின்பு 1956 ஆம் ஆண்டு வரையான 10 வருடத்துக்குள் தமிழ் மக்கள் தங்களுடைய புவிசார் அரசியலுக்கு என்னவெல்லாம் அடிப்படையோ அவற்றை எல்லாம் இழந்தார்கள்.

சிங்கள பேரினவாதம் எது எல்லாம் தனக்கு வேண்டுமோ அதை எல்லாம் கட்டி எழுப்பியது. உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் அவர்கள் பிரித்தானியாவோடு படைத்தளத்தை அமைத்து கொடுத்து அவர்களின் உதவியை பெற்று மேலும் சர்வதேச உதவியையும் பெற்று எல்லாவற்றையும் கையாண்டார்கள். எனவே இங்கு தேசம் என்கின்ற ஒரு சிந்தனை நிலத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்கள் தம்மை தேசமாக உணரும்படி நிலத்தோடு சம்பந்தப்பட்ட கோரிக்கையை அவர்கள் முன்வைக்கவில்லை. நிலத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல் வாழ்வு முறையை சிந்திக்கவில்லை. நிலத்தோடு சம்பந்தப்பட்ட எதிர்காலம் பற்றி சிந்திக்கவில்லை.

தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி சமஸ்டி கோரிக்கை முன்வைத்தாலும் 1952 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தான் அவர் கட்சியிலிருந்து  வெற்றி பெற்றார்கள். ஜி. ஜி. பொன்னம்பலம் தான் தலைவராக வெற்றி பெற்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு தேர்தலில் செல்வநாயகம் வெற்றி பெற்ற போது தான் தமிழ் மக்கள் சமஸ்டி கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டும். 1949 ஆம் ஆண்டு கோரிக்கையாக முன்வைத்தாலும் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டது 1956 ஆம் ஆண்டு தான்.

இங்கு ஒரு தேசிய இனம் புவி சார்ந்து இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்ளாமல், அதனுடைய வாழ்வு தேசிய கட்டமைப்போடு புவியோடு சம்பந்தப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ளாமல் புவிசார் சிந்தனை அற்று நாங்கள் இருந்தோம். சிங்கள குடியேற்றத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் சிங்கள குடியேற்றம் நிகழ அனுமதித்தோம். உதவி செய்தோம். ஒத்துழைத்தோம். தமிழ் தலைமைகளும் தமிழ் அதிகாரிகளும் சிங்கள ஆட்சியாளர்களோடு நூறு வீதம் ஒத்துழைத்தார்கள். டி. எஸ் சேனநாயக்க காலத்திலும் 1956ஆம் ஆண்டு காலம் வரையிலும் சிங்கள குடியேற்றத்திற்கு தமிழ் தலைவர்கள் முழு ஆதரவாக இருந்தார்கள். தமிழ் அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தினார்கள்.

1956ஆம் ஆண்டு வரைக்குமான இந்த காலகட்டத்தில், இந்த பத்து ஆண்டு ஆக்க காலப்பகுதியில் சிங்களம் தன்னை முழு அளவில் ஸ்தாபிதம் செய்து கொண்டது. இந்த சிங்கள பௌத்தத்தின் எழுச்சி 1950 களின்  மத்தியில் தெளிவாக வெளிப்பட்டது. இதனை எங்களுடைய தேசம் பற்றிய அடிப்படை சிந்தனையோடு அனைவரும் பின்னிப் பிணைத்து பார்க்க வேண்டும். நிலம் பற்றிய சிந்தனையோடு பின்னிப் பிணைத்து பார்க்கவேண்டும். எனவே தேசம் என்றால் அது நிலத்தை சார்ந்து இருக்கிறது. அரசு, நாடு, தேசம், தேசிய இனம் யாவும்நிலத்தை சார்ந்து இருக்கின்றன. நிலம் சார்ந்த கொள்கையற்ற மக்களாக நாங்கள் ஆக்க காலத்தில் இருந்தோம்.

குடியேற்றத்தை அரசியல் புவியியல் என்று சொல்வார்கள். புவிசார் அரசியலின் இரண்டாவது அம்சம் இடம்(Location). இந்த இடம் தான் இன்று ரஷ்யாவினுடைய பிரச்சனை. அதாவது அது அமைந்திருக்கின்ற இடம். ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையை புவிசார் அரசியலாகத் (Geo politics) தான் முதலாவது கட்டத்தில் பார்க்க வேண்டும். பூகோள அரசியலாக (Global politics) அல்லவே அல்ல.

ரஷ்யாவை பொறுத்த வரையில் அதனுடைய புவிசார் பகுதிகள் நேட்டோ உடன் இணைக்கப்பட்டால் ரஷ்யா என்கிற தேசம் அழிந்து விடும் என்பது தான் அதன் பிரச்சினை. தனது புவிசார் அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கு தான் ரஷ்யா போராடுகிறது. மத்தியதரைக்கடல், கருங்கடல், கிழக்கு ஐரோப்பியாவில் ரஷ்யா சார்ந்த பகுதி இந்த மூன்றும் தான்  ரஷ்யாவினுடைய பகுதிகள். இந்த மூன்றும் புவிசார் அரசியல் பகுதிகள். இந்த மூன்றுக்கும் வெளியில் ரஷ்யா வரவில்லை.

மறுபுறமாகப் பார்த்தால், அமெரிக்காவோடு இந்தியா கூட்டு சேர்ந்து இருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் உலகளாவிய அரசியல். அது பூகோள அரசியல். அமெரிக்கா உலகளாவிய நலனில் இந்துமா கடலில் அரசியல் நலனை பங்கு போடுவதற்கு அது இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறது. அமெரிக்காவுடன் கூட்டு சேருவதற்கு இந்தியாவுக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதே போன்று ரஷ்யாவுடன் கூட்டு சேருவதற்கும் இந்தியாவுக்கு  ஒரு காரணம் இருக்கிறது.

முதலாவது அர்த்தத்தில் தன்னுடைய தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான ஆயுதம், தளபாடம்விஞ்ஞானம், தொழிநுட்பம் என்பவற்றுக்கு இந்தியாவிற்கு அமெரிக்கா வேண்டும். இதை இந்தியாவால் தனித்துசெய்ய முடியாது. எனவே அது அமெரிக்காவுடன் கூட்டுக்கு போகிறது. அது சீனாவை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அமெரிக்காவோடு இந்தியா செய்து இருக்கிற இந்தோ பசுபிக் கூட்டு என்பது இந்தியாவின் பிராந்திய நலனை நிலை நாட்டுவதற்கு அது செய்துள்ள புவிசார் அரசியல் (Geo politics). இங்கு அமெரிக்காவின் நலன் உலகளாவிய நலன் (Global Interest). இந்தியாவின் நலன் புவிசார் அரசியல் (Geo politics) நலன். இந்துமா கடல் பகுதியில் சீனாவை புறம் தள்ளவும், தன்னை நிலை நிறுத்தவும், இலங்கைக்குள் வெளி அரசுகள் வராமல் பாதுகாத்து கொள்ளவும் அமெரிக்காவின் கூட்டு இந்தியாவுக்கு தேவை.

இந்தியா 140 கோடி மக்களை கொண்ட பெரிய நாடு. தன் ஐம்பது வீதத்திற்கும் குறையாத ஆயுதங்களுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்கிறது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை சார்ந்து இருக்கும் அதேவேளை, புவிசார் அரசியலுக்காக அது அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் அமெரிக்க ரஷ்ய பிரச்சனையில் அது தன்னை தற்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டி இருக்கிறது. எனவே இந்தியா ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இருந்தது. ரஷ்யா தொடர்பான அமெரிக்காவின் பூகோள அரசியலில் கூட்டுச் சேராமல் இருப்பது எல்லாம் இதன் விளைவு தான். இங்கு இந்தியாவினுடைய புவிசார் அரசியல் நலனுக்காக ரஷ்யாவினுடைய புவிசார் அரசியல் நலனை அது அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது. இப்படி பார்த்தால் ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தெளிவான படம் ஒன்று கிடைக்கும்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அது எதிர்கொள்ளும் யுத்தங்கள் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோடு நீண்டகால திட்டங்களோடு உள்ளன.  அது கணக்கு தீர்க்க வேண்டிய எதிரிகள் ‘சிவப்பு’, ‘பச்சை’, ‘மஞ்சள்’ குழுக்களை சார்ந்தவர்கள். இதில் சிவப்புடனான பிரச்சனையை 1990 ஆம் ஆண்டு தீர்த்து விட்டது. அது ஒரு கோட்பாட்டு யுத்தம்.  மார்க்கசீயம் - கொம்யூனிசத்தை உடைத்து உலகம் முழுவதற்குமான வர்த்தக சந்தை பொது சந்தை என்கிற முறையை நிலை நாட்டுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்வாறு வடிவம் பெற்று இருக்க கூடிய அமெரிக்கா சிவப்பிற்கு முடிவு கட்டிய பின்பு சிவப்புடன் ஏற்பட கூடிய ஒரு யுத்தம் உலகப் போராகவே இருக்கும். அதை பனிப் போராக சுருக்கி உலகப்போர் வர விடாமல் தடுத்து அது பனிப்போரில் வெற்றி கொண்டு விட்டது.

சீனாவின் உதவி தான் அமெரிக்கா வெற்றி கொள்ள மூல காரணம். இவ்வாறு வெற்றி கொண்ட அமெரிக்காவிற்கு, அடுத்த பிரச்சனை பச்சை. அணு ஆயுத பலத்தை கொண்டு இருந்த ரஷ்யாவோடு யுத்தம் இன்றி ஒரு உலக போருக்கு போகாமல் தீர்த்து கொண்ட பின்பும்,அது பெரிய சண்டைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சதாம் உசைன், பின்லேடன், கடாபி இவர்கள் எல்லோரையும் அவர்கள் திட்டவட்டமாக வெற்றி பெற்று விட்டார்கள்.  பனிப்போர் முடிந்த பின்பு அமெரிக்காவின் கவனம் பச்சை எதிர்ப்பு (anti green), முஸ்லிம் எதிர்ப்பு (anti muslim), இஸ்லாம் எதிர்ப்பு (anti Islam).  இதிலும் அவர்கள் திட்டவட்டமாக வெற்றி பெற்று விட்டார்கள்.

இந்த உலகப் போரை பனிப்போராக மாற்றியதில் அணு குண்டுகளுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அணுகுண்டுக்கு பயந்து தான் உலக போருக்கு போகவில்லை. 1990ஆம் ஆண்டுக்கு பின்பு, அமெரிக்கா பெரிய போரில் வெற்றி பெற்று விட்டது. பின்லேடன் இல்லை, சதாம் உசைன் இல்லை, கடாபி இல்லை, இஸ்லாமிய உலகமே இல்லை. இஸ்லாமிய உலகில் அரசியல் தலைமைத்துவம் இல்லை. இதன் பின்பு அமெரிக்காவினுடைய பெரிய போர் ரஷ்யா.

ரஷ்யாவை நேரடியான ஒரு உலகப்போருக்கு போக விடக்கூடாது என்ற வகையில் தான் அமெரிக்கா அந்த போரை ஒரு பிரதிநிதித்துவப் போர் (proxy war) ஆக்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த கருவி தான் நேட்டோ(NATO). அமெரிக்காவின் இரண்டு கண்டங்களும் அமைதியாக உள்ளன. அமெரிக்காவை சார்ந்த இரண்டு சமுத்திரங்களும் அமைதியாக உள்ளன. அங்கே எந்த விதமான குண்டூசி விழுந்த சத்தங்களும் கேட்கவில்லை. 

நேட்டோ நாடுகள் முழுவதும் ரஷ்யாவிற்கு பக்கத்தில் இருக்கின்ற புவிசார் நாடுகள். ரஷ்யா தன்னுடைய புவிசார் பகுதியை தீண்ட விடாது. அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அமெரிக்க நிபுணர்கள், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், அமெரிக்க இராணுவ நிபுணர்கள் தொடர்ச்சியாக சொல்லி இருக்கிறார்கள். ‘நீ இந்த நேட்டோவிற்குள் உக்ரைனை கொண்டு வர முற்பட்டால் அந்த பிராந்தியத்தை குழப்புகின்ற பழிக்கு உள்ளாவாய். அல்லது அந்தப் பிராந்தியத்தை  குழப்புகின்ற நிகழ்ச்சி நிரலை நீ தான் கொண்டு இருக்கிறாய் என்று எதிர்காலம் அமெரிக்காவை குறை சொல்லும்.’ என்று அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால் உக்ரைனை எடுத்தால் அது ரஷ்யாவின் இருதய பகுதி. ரஷ்யாவின் அழிவுக்கு வழி வகுக்க கூடியபகுதி. எனவே ரஷ்யா ஒரு போதும் உக்ரைனை நேட்டோவிற்கு விட்டுக் கொடுக்காது. இந்த உக்ரைன் பிரச்சனை ஈழப்பிரச்சனையில், இந்தியப் பிரச்சனையில், இலங்கைப் பிரச்சனையில் பாரிய தாக்கத்தை விளைவிக்கும். இதனை தமிழர்கள் யோசிக்க வேண்டும். இது உடனடிக் காலத்தில் இல்லை, வருங்காலத்தில், ஈழத்தமிழர்களது அரசியலை நிர்ணயிப்பதில் ரஷ்ய அமெரிக்க பிரச்சனை ஒரு பெரிய முன்மாதிரியாக இருக்கிறது. அமெரிக்காவின் கண்ணில் ரஷ்ய பிரச்சனை ஒரு பூகோள பிரச்சனை. ரஷ்யாவின் கண்ணிலும் நேட்டோ நாடுகளின் கண்களிலும் இந்தியாவின் கண்ணிலும் சீனாவின் கண்ணிலும் அது ஒரு புவிசார் பிரச்சனை. ஒருவகையில் சீனாவிற்கும் அது ஒரு பூகோள அரசியல் பிரச்சினையின் ஒரு பகுதி தான். அமெரிக்காவின் வெற்றியும் வீழ்ச்சியும் சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

இத்தகைய பின்னணியில் ரஷ்ய பிரச்சனையை முழு அளவில் முதலாவது அர்த்தத்தில் புவி சார் அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டும். உலகளாவிய பிரச்சனையாக பார்க்கவே கூடாது.

அமெரிக்க சனாதிபதி பைடன் மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார், ‘இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவீர்களேயானால் அது உலக போருக்கு போகும், அல்லது நேட்டோவை போரில் ஈடுபடுத்தினால் அது உலகபோருக்கு போய்விடும்.’ என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உலகப் போருக்கு கொண்டு போக விரும்பவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால் இதன் விளைவுகள் உலகத்துக்கு போகும்.

 இப்போது புவிசார் அரசியல் பிரச்சினையாக இருக்கும் இந்த யுத்தம் பின் உலகப் பிரச்சினையோடு கலக்கும். முழங்காலில் புண், இருந்தால் மேற்காலில் நெறி கட்டும். எனவே நெறிக்கு வைத்தியம் செய்வதில்லை இங்கே முக்கியம், முழங்காலில் உள்ள புண்ணுக்கு வைத்தியம் செய்துவிட்டால் நெறி மாறும். நெறிக்கு வைத்தியம் செய்து முழங்காலுக்கு வைத்தியம் செய்யாவிட்டால் முழங்காலில் புண் இருக்கும் வரையில் நெறி கட்டித்தான் ஆகும். இந்த மூன்று விடயங்களும் முக்கியம். அதில் முதலாவது ஒரு நோய் வந்து அதன் விளைவாக இன்னுமொரு நோய் வருவது. பூகோள அரசியல் (global politics), புவிசார் அரசியல் (geo politics) என்ற இரண்டையும் பொதுவாக சொல்ல கூடாது. அது பிழையான வழிக்கு கொண்டு போகும். அரசியல்வாதிகளும் சரிஅரசியல் மாணவர்களும் சரி இந்த வேறுபாட்டைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஈழத்தமிழரின் பிரச்சனை புவிசார் அரசியல் அதனுடைய நீட்சியாக பூகோள அரசியல். புவிசார் அரசியலில் இருந்து பூகோள அரசியலுக்கு போகும். புண்ணுக்கு மருந்து கட்டித் தான் நெறியை மாற்ற வேண்டும். நீங்கள் நெறிக்குப் போய் மருந்து கட்டிக் கொண்டிருக்க முடியாது. எங்களுடைய பிரச்சனை பூகோள அரசியல் பிரச்சினை அல்ல புவிசார் அரசியல் பிரச்சனை.

அறிவியல் சார்ந்து ஒழுங்காக சரியாக எழுத தவறினால் பிழையான முன்னெடுப்புகளோடு மக்கள் சீரழிய நேரிடும்.  இத்தகைய ஒரு பின்னணியில் ஈழத்தமிழர்களுடைய பிரச்சனை எத்தகையது ? உலகளாவிய பிரச்சனையா? புவிசார் பிரச்சனையா இரண்டும் எப்படி கலக்கிறது? இரண்டினது கலப்பும் இருக்க முடியும். ஆனால் அடிப்படையானது ஒன்று இருக்கிறது. அதை நோக்கி தான் நீங்கள் கொள்கை வகுக்க வேண்டும். நாங்கள் முதலில் கதைத்த மூன்று (தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள்தேசிய கூட்டணி) பகுதியினரும் வெளிநாடுகளோடு நல்ல உறவை வைத்திருக்கிறோம் என்று சொல்கின்றார்கள். நாங்கள் ஒருவருக்கும் எதிரி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை.

இந்த இடத்தில் ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை பேர்முடா போல அடையாளம் காண வேண்டும். நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தோல்வி. மக்கள் போராட்டத்தின் பக்கம் நின்றார்கள். எல்லாவற்றையும் கொடுத்தார்கள். எல்லா வழியிலும் பின்னால் போனார்கள். மானசீகமாக ஆதரித்தார்கள். ஆனால் முழு தோல்வி. மக்களை அணி திரட்டி மட்டும் வெல்லலாம் என்கிற கற்பனை இருக்க கூடாது. சரியான கொள்கை இருக்க வேண்டும்,சரியான திட்டம் இருக்க வேண்டும், சரியான அணுகுமுறை இருக்க வேண்டும், அதற்கு சரியான அறிவு இருக்க வேண்டும்,அறிவியல் பார்வை இருக்க வேண்டும், எங்களுக்கு அடிப்படை வல்லமை இருக்க வேண்டும். வல்லமை இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது.

எல்லா கட்சிக்காரர்களையும் நோக்கி நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் பேசுகின்ற பிரதானமான விடயங்கள் உங்கள் கட்சியின் செயற்குழுவில் தீர்மானமாக எடுத்த பின்பு தான் பேசுங்கள். இது மக்களுடையது. உங்களுடைய சொத்து அல்ல. கட்சிக்குள் தீர்மானித்த பின்பு பேசுங்கள். நீங்கள் நீங்களாக நினைத்தபடி எதையும் சொல்கின்ற எழுமாற்று அரசியலுக்கு ஒரு நாளும் போகாதீர்கள். அது ஜனநாயகமும்ஆகாது. முறைசார் அரசியலும் ஆகாது. நான் இவ்வாறு சொல்வது அரசியலை சீர்திருத்தவே தவிர, செம்மைப்படுத்தவே தவிர நிச்சயமாக யாரையும் குறை சொல்ல அல்ல. தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் கலாசாரத்தை முதலில் கொண்டிருங்கள். கடந்த பன்னிரெண்டு வருடமும் நீங்கள் ஒருவரும் வெற்றி பெறவில்லை என்கிற பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். என்ன செய்ய போகிறீர்கள்? முன்னோடியாக தொடர்ந்து தோல்வி இருக்கிறதே.

பூகோள அரசியலுக்கு அடுத்ததாக சர்வதேச அரசியல். International politics ஐ தமிழில் தவறாக சர்வதேச அரசியல் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி தெரிந்தவர் அரசியல் தெரியாமல் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாகவே இது உள்ளது. International என்பது முழு உலகமும் என்பது அல்ல. International என்றால் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான உறவு. இந்த வகையில் சர்வதேசம் என்பது அரசியல் பதமாக இருக்காது. தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் பூகோள அரசியல் என்பதை புவியியல் பதமாக பிரயோகிப்பதாக தான் எனக்கு தோன்றுகிறது. பூகோள அரசியல் என்பது நூறு வீதம் புவியியல் பதமேஇல்லை. அது அரசியல் பதம். அதன் அடிப்படையில் புவிசார் அரசியல் தான் புவியியல் பதம்.

இப்போது மூன்றாவது கட்டத்துக்கு வருவோம். இப்போது எல்லோரும் சமஸ்டி தான் தீர்வு என்ற அடிப்படை முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் தானே. இந்த மூன்று பகுதியினரும் சேர்ந்து மக்களையும் இணைத்து ஒரு பொது சபையை உருவாக்குங்கள். ஒரு பொது போராட்டத்தை முன்வையுங்கள். சமஸ்டி என்ற கோரிக்கையை முன்வைத்தால் ஏனைய விடயங்கள் பற்றி பேசத் தேவையில்லை. புலம்பத் தேவையில்லை. பெரிய விடயம் பற்றி பேசினால் சின்ன விடயமும் அதனுள் அடங்கும்.

ஏன் மக்களை திசை திருப்புகிறீர்கள்? ஏன் உங்களுக்குள் குழம்புகிறீர்கள்? சமஸ்டி எனும் கோரிக்கையை முன்வைத்து மூன்று பேரும் மூன்று அணியும் சேர்ந்து போராடுங்கள். இது தான் அடிப்படையான பிரச்சனை. உங்கள் சக்திகளை ஒன்று திரட்டுங்கள். வீணாக சீதறடிக்காதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள். மக்களை திசை திருப்பாதீர்கள். மூன்று துண்டுகளாக இருக்கும் வரை மூன்று தலைகளாக இருந்து நாகம் அழிந்தது போலவே நாங்களும் அழிய நேரும். ஆகையினால் அதற்கு முடிவு கட்ட வேண்டி இருக்கிறது. இது முதலாவது விடயம்.

மூன்று பேரும் சேர்ந்து பொது முடிவை எடுத்து அதை முன்வையுங்கள் போராடுவோம். போராடி காட்டுங்கள். போராட்டம் வளரும். மக்களைத் திரட்டி தான் போராட போகிறோம் என்று சொல்கிறீர்கள் அல்லவா, அதற்கு இலேசான வழி நீங்கள் போராடுவது. நீங்கள் போராடுங்கள், மக்கள் திரள்வார்கள். யாராவது உண்ணாவிரதம் இருங்கள் பார்ப்போம். ஆயுதப் போராட்டமோ அகிம்சைப் போராட்டமோ நீங்கள் செய்கின்ற போராட்டம் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய போராட்டமாக இருக்க வேண்டும். நீங்கள் கொழும்பில் போராட வேண்டும். தலைநகரத்தில் போராட வேண்டும். அந்த போராட்டம் அனைவரையம் கவர கூடிய வகையில் காத்திரமாக இருக்க வேண்டும்.

மக்களை ஏமாற்றும் வழியாக நான்கு பேர் ஐந்து பேர் ஊர்வலம் போவது போராட்டம் அல்ல. 1970ஆம் ஆண்டு தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்த பின், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சின்ன சின்ன கோயில்களில் போய் காலையில் எட்டு மணியிலிருந்து பின்னேரம் ஐந்து மணி வரை உண்ணாவிரதம் இருப்பார். அந்த உண்ணாவிரதம் பழரசம் அருந்துவதோடு முடியும். இவை அல்ல போராட்டம். நீங்கள் எதிரிக்கு தாக்கம் ஏற்படகூடிய வகையில் போராடினால் தான் அதற்கு பெயர் போராட்டம். எதிரிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் போராட வேண்டும். எதிரிக்கு நெருக்கடியான வகையில் போராடா விட்டால் போராட்டமே கிடையாது.

1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் எதிரிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாமல் இருந்தது. போராடுவதற்கு தலைவர்கள் தான் முன்னுக்கு சென்று போராட வேண்டும். மக்கள் பின்னுக்கு வருவார்கள். தலைவர்கள் தியாகம் செய்து காட்ட வேண்டும். எல்லோருக்கும் துரோகிகள் என்று நீங்கள் இலேசாக பட்டம் சூட்டுகிறீர்கள். அதை நிறுத்துங்கள். நீங்கள் தியாகிகள் என்று காட்டுங்கள். துரோகிகள் தாங்களாகவே இல்லாது போவார்கள். ஒருவனை துரோகி என்று பட்டம் சூட்டுவதனை விட நடைமுறையில் உங்களை தியாகி என நிரூபியுங்கள். அப்படி போராடிக் காட்டுவதனூடாக  உன்னை தியாகியாக மேலே கொண்டு வா. வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன அந்த தியாகத்திற்கு பின்னால் மக்கள் எப்பொழுதும் திரளுவார்கள்.

எதிரி என்ன தருகிறான் என்பதல்ல பிரச்சினை. உனது தியாகத்தை மக்கள் மதித்து மேலும் முன்னெடுப்பார்கள். ஆகையினால் போராடப் போகிறீர்களா? போராடும் போது எதிரிக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய  வகையில்  தியாகி என காட்டும் வகையில் உங்களுடைய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது முதலாவது. இரண்டாவது, நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு போராட தயார் இல்லை என்றால் இன்னொரு வழி இருக்கிறது.

எல்லோரும் சமஸ்டி தானே கோருகிறீர்கள். எல்லோரும் தனித் தனியே உங்களுக்கு தெரிந்த வழியில் ஒரே நாளில் போராடுங்கள். உதாரணமாக செல்வநாயகத்தின் வழியில் தமிழரசு கட்சிக்காரர்கள் சத்தியக்கிரகமாக போராடப் போவதென்றால் போராடுங்கள். ஆனால் ஒரு நாளை குறியுங்கள். ஒரு நாளில் போராடி விட்டு போவதில்லை. அது தொடர் போராட்டமாக இருக்க வேண்டும். அதே நாளில் அதே காலத்தில் அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் உங்களுடைய போராட்டத்தை போராடுங்கள். உங்களுடைய போராட்டத்தை நீங்கள் தீர்மானியுங்கள்.

தமிழரசு கட்சி ஒரு நாளை நிர்ணயிக்கட்டும் அதே நாளையே உங்கள் போராட்டத்திற்கு நிர்ணயம் செய்யுங்கள். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் அதையே செய்ய வேண்டும். மூன்று பேரும் ஏக காலத்தில் மூன்று துண்டாக நின்று போராடினாலும் பிரச்சனை இல்லை. பலம் குறைவு தான். ஆனால் போராடாமல் விடுவதை விட பரவாயில்லை.

சமஸ்டி அடிப்படையில் நீங்கள் போராட முற்பட்டால் இலங்கை அரசியல் கொதிநிலை அடையத் தொடங்கும். அப்போது மக்கள் உங்களுக்கு பின்னால் வருவார்கள். சர்வதேசத்தில் முக்கியத்துவம் பெறும். அயல் நாட்டில், வெளிநாடுகளில் முக்கியத்துவம் வளரும். அந்த நேரத்தில் போராட்டத்தின் பலத்திற்கு ஏற்ப நீங்கள் சொல்கின்ற வெளிநாடுகளை கையாளலாம். ஆகையினால் இரண்டு வழிகள் இருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து ஒரு செயற்குழுவை அமைத்து அந்தக் குழு ஊடாக போராட்டத்தை முன்னெடுங்கள். திட்டமிட்டு அதை செய்யலாம். சாத்வீகவழி போராட்டங்களையே நான் குறிப்பிடுகிறேன்.   உங்கள் யாரையுமே மரணத்தை நோக்கி போராடுங்கள் என சொல்லவில்லை. உச்ச கட்டமாக எதிரிக்கு நிர்க்கதி கொடுக்க கூடியவாறு போராடுங்கள். இது முதலாவது வழி. அல்லது இரண்டாவது வழியாக எல்லோரும் சேர்ந்து ஒரே கோரிக்கையை முன்வைத்து போராடுங்கள். தனித்தனியாகவேனும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் போராடுங்கள்.

இந்த இரண்டையும் செய்ய தயார் இல்லை என்றால் தயவு செய்து மக்களை பன்னிரெண்டு வருடங்களாக ஏமாற்றியது போதும். இன்னும் தொடர்ந்து ஏமாற்ற போகிறோம் என பந்தயம் பிடித்தீர்களேயானால் ஹெமிங்வேயின் நாவல் போலவே கடைசியில் எலும்புக்கூடு தான் மிஞ்சும்.

- மு. திருநாவுக்கரசு -

 நிமிர்வு மாசி 2023 இதழ்

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.