ஏழாவது ஆண்டில் நிமிர்வு



நிமிர்வு சஞ்சிகை தமிழ் மக்களின் பிறப்புரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு உரித்தான தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. குறித்த விடயங்களை வலியுறுத்தி அரசியல், சமூக, பொருளாதார கோணங்களில் ஆராய்ந்து அறிவுத் திரட்டலை செய்யும் ஊடகமாக இருந்து வருகிறது.

ஈழத்தமிழ் மக்களின் பூகோள அமைவிடம் அதனை தொடர்ந்து வரும் புவிசார் அரசியலின் முக்கியத்துவம் தொடர்பிலும், சிங்கள தேசம், இந்தியா, சர்வதேச உறவுகள் தொடர்பிலும், கல்வி மருத்துவம் சார்ந்தும், தேசியத்தின் அடிப்படைகளில் ஒன்றான சூழலியலை சிறந்த முறையில் பேணும் இயற்கை விவசாயம் தொடர்பிலான விடயங்கள், எங்கள் மண்ணுக்கே உரித்தான சிறுகைத்தொழில் முயற்சிகளையும் இனங்கண்டு இவை தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது.

தமிழ் மக்கள் மத்தியில் தேசம் சார்ந்து தொலைநோக்கு கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் ஊடகங்கள் குறைந்து வரும் நிலையில் அந்தப் பணியை எடுத்து செய்வதில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட போதிலும்  நிமிர்வு முன்னின்று வருகிறது. இன்னும் பல்வேறு விடயப் பரப்புகளை ஆராய்ந்து, பல்வேறு புதிய கருத்துருவாக்கிகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நிமிர்வு திட சங்கற்பம் பூண்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு, அதனை அடையும் வழிவகைகள்,அதற்கான அரசியல் வேட்கையை தக்கவைத்துக் கொள்வது என்பவை ஒரு  புறம், மறு புறம் இன்றும் தொடரும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வது தொடர்பிலும், ஏற்கனவே நடந்த படுகொலைகள், திட்டமிட்ட அழிப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் வேண்டியுள்ளது.   இன்னொரு பக்கம் இனப்பிரச்சினையை தீர்க்க முன்வராத சிறீலங்கா அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகம் பேசப்பட வேண்டியுள்ளது.

தற்போது தமிழர் தாயகத்தில் எம் சூழல் அளவுக்கதிகமான இரசாயன பாவனைகளால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இயற்கை விவசாயத்தை திறம்பட முன்னெடுக்கக் கூடிய சகல ஏதுநிலைகளும் உள்ளநிலையில் அளவுக்கதிகமான நச்சு பாவனை எதிர்காலத்தில் புற்றுநோய் வைத்தியசாலைகளை அதிகரிக்கவே செய்யும். அளவுக்கதிகமான நுகர்வால் நீர்வளம் குறைந்து செல்கிறது. பல்வேறு காரணிகளால் தண்ணீர் மாசடையும் தன்மையும் அதிகரித்து வருகிறது. இவை தொடர்பிலும் சம நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டியுள்ளது. இல்லாவிடில் இங்குள்ள சூழல் ஆர்வலர் கேட்டது போல இப்படியே போனால் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாத தாயகத்தை வைத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிவரும். இங்குள்ள தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் சூழலியல் தேசியம் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாதவர்களே உள்ளனர். இவ்வாண்டு சூழலியல் தேசியம் தொடர்பிலும் அதிகம் பேச வேண்டியுள்ளது.

இலங்கைத்தீவில் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் மற்றைய தேசிய இனங்களுடனான தமிழ் மக்களின் உறவுகள் தொடர்பில் வலுவான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இன்னும் நாங்கள் ஆராய்வதற்கும், அறிந்து கொள்வதற்கும், மக்கள் மத்தியில் பரப்புவதற்கும், கருத்துருவாக்கங்களை பல்வேறு நிலைகளில் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இக்கருத்துருவாக்கங்கள் ஊடாக தமிழ்த் தேசிய அரசியலில் மக்களை தக்க வைத்துக் கொள்வதுடன் எதிர்காலம் குறித்தும் தூரநோக்கிலான சிந்தனையை ஏற்படுத்த முடியும். இதனை நோக்கி நிமிர்வு தொடர்ந்து பயணிக்கும்.

-செ. கிரிசாந்-

நிமிர்வு மாசி 2023 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.