1985 தைப்பொங்கல் பிரதிபலிப்புகள்!

இலங்கை அரசுகளுக்கு எதிராக தென்னிலங்கை அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், வடக்கு இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசால் வெட்கமின்றி நடாத்தப்பட்ட ‘தேசிய தைப்பொங்கல்’ பண்டிகைக்கு வடக்கு எதிர்ப்பைக் காட்டியது. இந்த எதிர்ப்பானது, தென்னிலங்கை செய்வது போன்று அரசாங்கத்திற்கு எதிரான குறுகிய எதிர்ப்பு அல்ல என்பதையும், சிங்கள மேலாதிக்க அரசிற்கு எதிராக அவர்கள் எப்பொழுதும் போராடுவதையும் தெற்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தைப்பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் மீது அரச பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியபோது நடந்த தைப்பொங்கல் அவலத்தை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு-வவுனியா வீதியில் அமைந்துள்ள முள்ளியவளை கிராமம், வளமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு தொன்மையான தமிழ்க் கிராமம். அதன் தொன்மையான நாட்டுப்புற கலாச்சார அம்சங்கள் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 16.01.1985 தைப்பொங்கலுக்கு மறுநாளும் ஒரு பண்டிகை நாள். தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகை. மறுநாள் விவசாயிகளுக்கு வாழ உதவும் பண்ணை விலங்குகளை கௌரவிக்கும் பண்டிகையாகும். அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் முள்ளியவளை கிராமம் இலங்கை இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டது.

17 கிராமவாசிகளை இராணுவம் கைது செய்தது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப்பெண். மற்றொருவர் மூன்று பிள்ளைகளின் இளம் தாய். கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், இராணுவம் பல வீடுகளை எரித்தது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, கிராம மக்கள் பல துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டனர். கைது செய்யப்பட்ட 17 பேரும் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த வதந்தியால் ஒடிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த தகவலை அவர்களுக்கு தெரிவிக்காமல் கிராம மக்கள் தாமதப்படுத்த முயன்றனர்.

சிறிது நேரத்தில் இராணுவ வாகனங்கள் முல்லைத்தீவு நகரை நோக்கி நகர ஆரம்பித்தன. தங்கள் உறவுகளை தேடிய உறவினர்கள் அந்த இராணுவ வாகனங்கள் செல்வதை பார்த்தனர். அவர்களது அன்புக்குரியவர்கள் மறுநாள் வரை திரும்பி வராததால், உள்ளூர் சமாதான நீதவான் தியாகராஜாவுடன் அவர்கள் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்றனர்.

அங்கு அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்கள் தரையில் கிடப்பதைப் பார்த்தனர். இறந்த உடல்களில் ஆடைகள் எதுவும் இல்லை. கை, கால்கள் மற்றும் தலைகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. நிர்வாணமாக இருந்த அந்த சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான பல அறிகுறிகள் இருந்தன. ஒரு பெண்ணின் உடலில் பல சிகரெட் தீக்காயங்கள் இருந்தன. தமது அன்புக்குரியவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு உறவினர்கள் கோரியபோது, இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என்று உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு இராணுவம் உத்தரவிட்டது. உறவினர்கள் மறுத்ததால், சடலங்களை அவர்களிடம் ஒப்படைக்க இராணுவத்தினர் மறுத்துவிட்டனர்.

பல வருடங்களின் பின்னர் முள்ளியவளை கிராமத்தைச் சேர்ந்த தவரத்தினம் திலகவதி கூறுகிறார்: “ஜனவரி 16, 1985 இல், இலங்கை இராணுவம் எனது கணவர் மற்றும் எனது மகன் உட்பட 17 பேரை கைது செய்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றது. இராணுவம் பல வீடுகளை எரித்ததுடன், எமது சொத்துக்களையும் சூறையாடியது.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராணி கூறும்போது, ‘‘எங்கள் வீட்டுக்குள் புகுந்த இலங்கை இராணுவம் எனது அண்ணன், அம்மாவை கைது செய்து பின்பு இருவரையும் கொன்று விட்டது. அவர்கள் புலிகள் என்பதால் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறியது. விஜயகுமாரி என்ற ஏழு மாத கர்ப்பிணியையும் கொன்றுவிட்டது. இச்சம்பவத்தால் இங்குள்ள பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தைப்பொங்கலுக்கு மறுநாள் இது நடந்ததால் நாங்கள் இன்றும் தைப் பொங்கலை கொண்டாடுவது இல்லை."

இலங்கையால் படுகொலை செய்யப்பட்ட நாகரத்தினம் ஸ்ரீகாந்தராசா (35), தம்பையா விவேகானந்தம் (17), சின்னப்பன் அன்னலட்சுமி (35), சுப்பன் சின்னன் (40), பிலிப்பையா யோகராசா (17), செல்லதுரை குமாரசாமி(35), செல்லதுரை நவரத்தினம் (38)  குமாரசாமி விஜயகுமாரி (27), மார்க்கண்டு தட்சணாமூர்த்தி (19), தம்பையா பாலசுப்ரமணியம் (30), நவரத்தினம் தயாபரன் (15) ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் மரியாதையுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். அவர்கள் உட்பட இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் தியாகங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் முற்றுப் பெறாத தமிழ் தேசியப் போராட்டத்தின் அரசியல் அபிலாஷைகளையாவது நிறைவேற்றுவதற்கு சிங்கள சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

(மனித உரிமைகள் தொடர்பான வடக்கு கிழக்கு செயலகத்தால் வெளியிடப்பட்ட 1956 - 2008 தமிழர் படுகொலைகள் என்ற புத்தகத்திலிருந்து...)


 - தக்ஷிலா ஸ்வர்ணமாலி- (www.nivahal.com)

   (தமிழாக்கம்: நிமிர்வு)

      நிமிர்வு மாசி 2023 இதழ்

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.