இலகுவழியில் மட்கு எரு தயாரிப்பது எப்படி?



புதிய வெளிச்சம் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இருநாள் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு வேளாண் அறிஞர் பாமயன் அவர்கள் ஒரு பயிற்றுனராக கலந்து கொண்டார். எங்கள் சூழலில் உள்ள இயற்கை கழிவுகளை எளிய முறையில் மட்க வைத்து கூட்டெரு/மட்கு எரு (compost) தயாரிப்பது எப்படி என்று செய்முறையுடன் தெளிவாக விளக்கி இருந்தார். 

மட்கு எரு தயாரிப்பு அதாவது கறுப்பு வடிவிலான இயற்கை உரம் தயாரிப்பை சிறிது கடினமானதாகவே எல்லோரும் நினைத்திருப்போம். உண்மையில் அதன் செயன்முறையை பார்த்த போது தான் அதனை எவ்வளவு இலகு வழியில் உற்பத்தி செய்ய முடியும் என்பது தெரிந்தது.

தெல்லிப்பளையில் உள்ள பண்ணையொன்றின் மரத்தடியின் கீழ் நிழல் பாங்கான மழைநீர் தேங்கி நிற்காத, சமதரையாக உள்ள 12 x 4 அளவுள்ள இடத்தை தெரிவு செய்து அதன் நான்கு மூலைகளிலும் தடிகளை நட்டு அதில் கயிற்றை கட்டி அதன் படை படையாக இயற்கையாக கிடைக்கும் கழிவுகளை போட வேண்டும். இலைகள், சருகுகள், தாவரங்களின் வேர்கள், தண்டுகள், புல் என மீதமாக உள்ள தாவர கழிவுகள், ஆட்டெரு, மாட்டெரு, கோழிஎரு போன்றவற்றில் உங்கள் சூழலில் கிடைப்பவற்றை எடுத்து படிப்படியாக போட வேண்டும். பூக்காத பாதீனியம் செடிகளையும் இதனுள் போடலாம்.

30 பங்கு தாவர கழிவுக்கு ஒரு பங்கு விலங்கு கழிவுகள் (30:1) என்ற அளவிலும் போடலாம். விஞ்ஞான ரீதியில் கூறினால் கார்பனையும் நைட்ரஜனையும் சேர்த்தால் மட்கு எரு தயார். விலங்கு கழிவுகள் அதிகமாக இருந்தால் அதிகமாகவும் போட முடியும். 30 பங்கு தாவர கழிவின் மேல் ஒரு பங்கு சாணத்தை கரைத்து தெளித்துவிட்டால் மட்காக மாறிவிடும்.

ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 10 கிலோவுக்கும் குறையாத சாணி கிடைக்கும். வருடத்தில் 300 நாள் என்று பார்த்தாலே 300x10 = 3000 கிலோ சாணி கிடைக்கும். ஒரு நாளைக்கு 30 கிலோ தாவரக்கழிவு என்று பார்த்தால் 300x30 = 9000 கிலோ கிடைக்கும். அவை மட்கும் போது மூன்றில் ஒரு பகுதி மட்கிய எருவாக கிடைக்கும். அதாவது சராசரியாக 4000 கிலோ எரு கிடைக்கும்.

முதலில் தாவர கழிவுகளை ஆறு அங்குலம் வரைக்கும் பரவ வேண்டும். அதன் மேல் மூன்று அங்குலத்திற்கு விலங்கு கழிவுகளை ஒரு படையாக பரவ வேண்டும். கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக் தவிர அனைத்தையும் இதனுள் போடலாம். ஒவ்வொரு படை இடைவெளியிலும் நாட்டு மாட்டின் சாணத்தை தண்ணீரில் கலந்து நன்றாக ஈரலிக்குமாறு தெளிக்க வேண்டும். குறித்த ஒழுங்கில் ஐந்து அடி வரை தாவர கழிவுகளையும், விலங்கு கழிவுகளையும் மாறி மாறி பரவி இடைக்கிடை சாணத்தண்ணீரை நன்றாக தெளித்து, நான்கடிக்கு மேல் வந்ததும் மீண்டும் சாண தண்ணீரை நல்ல ஈரலிப்பாக தெளித்து பின் நீரையும் நன்றாக கீழே வழிந்தோடுமாறு தெளித்து பழைய சாக்கு அல்லது வேறு பொருள்களால் மூடி விடவும். கோழி, நாய் போன்ற விலங்குகள் கிளறாமல் இருக்கவே மூடப்படுகிறது.

பயிற்சி பட்டறை நடைபெற்ற பண்ணை சூழலில் இருந்த புல் பூண்டுகள், தாவர கழிவுகள், வாழை சருகுகள், சாணம், சீமைக்கிளுவை தடிகள், தென்னோலைகள்  என அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டதால் அரை மணிநேரத்தில் பண்ணை பகுதியும் சுத்தமாகியது. 



இந்த படுக்கைக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போது தான் ஈரலிப்பாக இருந்து நுண்ணுயிர்களின் தொழிற்பாடு வேகமாக நடக்கும். விரைவாக மட்கும். இந்த படுக்கைக்கு மேலே நுண்நீர்ப்பாசன முறைகளை செய்து விட்டால் இலகுவாக தண்ணீர் விடக் கூடியதாக இருக்கும். இதனை ஒவ்வொரு நாளும் கிண்டி கிளறி விட வேண்டிய தேவையில்லை. இது தான் மிகவும் இலகுவான மட்கும் பசளை தயாரிப்பு முறையாகும்.

15 - 20 நாள்களில் இந்த படுக்கையின் சூடு அதிகமாகி பின் குறையும். அதன் பின் இதனுள் மண்புழுவை விட்டு விட்டால் இது மண்புழு உரமாகவும் மாறிவிடும். குறிப்பிட்ட காலப்பகுதியை விட வேகமாக மட்கும் செயற்பாடு நடக்கும். மண்புழுக்களை விடும் போது அருகருகே இன்னும் பல படுக்கைகளை உருவாக்குவது நல்லது. ஏனெனில் மண்புழு ஒரு படுக்கையில் தனக்கு உணவு கிடைக்கும் வரையே அங்கே இருக்கும். அங்கு தனக்கான உணவு முடிந்த பின்பு பக்கத்தில் உள்ள படுக்கைக்கு நகர்ந்து செல்லும். 

120 நாளில் இந்த பொருள்கள் எல்லாம் மட்கி கறுப்பு உரம் தயாராகி விடும். உங்கள் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகமாக இருந்தால் இன்னும் விரைவாக மட்கும் உரம் தயாராகி விடும்.

 ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் மட்கும் உரம் தேவைப்படும். வளம் குறைந்த மண்ணாக இருந்தால் இன்னும் கூடுதலாக மட்கும் உரம் தேவைப்படும். உங்களுக்கு இயற்கை உரம் அதிகமாக தேவைப்படின் இந்த இயற்கை பசளை தயாரிப்பு படுக்கைக்கு அருகில் அடுத்தடுத்து இன்னும் பல படுக்கைகளை தயார் செய்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பசளைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

 

தொகுப்பு - துருவன்

நிமிர்வு மாசி 2023 இதழ்











No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.