மழலையர் கல்வியை மாண்புற வளர்ப்போம்
மக்கட் செல்வத்தின் மாண்பு
மனிதன் தனது வாழ்க்கையில் பெறும் செல்வங்களில் மிக உயர்ந்த செல்வமாக மக்கட் செல்வமே கருதப்படுகிறது.
ஒரு குழந்தையைப் பெற்றுச் சமூகத்திற்குத் தருவது தாயின் கடமை. அப்பிள்ளையைச் சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. நல்ல பிரஜையாக அவனை வாழ வைப்பது அரசனின் கடமை என்பதை,
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனேநன்னடை நல்லகல் வேந்தற்குக் கடனே”
எனச் சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு கூறுகிறது.
குழந்தைச் செல்வத்தைப் பெற்றதாலேயே அவர்கள் பெற்றோர் ஆவார். பல ஏக்கர் நிலத்தையும் மாடி வீடுகளையும் கோடிக்கணக்கான பணத்தையும் பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்றோர் ஆகார்.
அறிவு சார்ந்த நன் மக்களைப் பெறுவதே அடைய வேண்டிய நன்மைகளில் மிக உயர்ந்ததாகும் என்பதை
“பெறுமவற்றுள் யாமறிவதில்லை
அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற”
எனத் தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகிறது.
பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு
மழலையின் சிரிப்பு தெய்வத்தின் சிரிப்புக்குச் சமனாகும். குழந்தைகளின் உள்ளம் கள்ளம் கபடம், பொறாமை, வஞ்சகம், சூது போன்ற அசுர குணங்கள் பீடிக்காத பருவத்தை உடையது. குழந்தையின் நடத்தைக் கோலங்கள் உருவாகுவதற்கு அவன் வாழும் சூழலே காரணமாக அமைகிறது. இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றன. சிறிய வயதில் குழந்தையின் மனதில் படியும் எண்ணக்கருக்கள் வளர்ந்த பின்பும் அவளிடம் தொடர்கின்றன. பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சு விதைகளை விதைக்காமல் நல்ல விதைகளை விதைத்து விட வேண்டிய பொறுப்பு பெற்றோரின் கடமையாகும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதிலே தாய்மார்கள் மிகவும் அக்கறையோடு செயற்படுகிறார்கள். உடலைப் போஷித்து வளர்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அறவிழுமியங்களை மதித்து வாழும் தன்மையைச் சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பொறுப்பும் தாய்மாருக்கே உண்டு. “நல்லவனாவதும், கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே” என்றே சினிமாப் பாடலும் குறிப்பிடுகிறது.
பத்துமாதம் கருவிலே சுமந்து பெற்றெடுத்த குழந்தையை தாயானவள் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள். பிள்ளை பிறந்தவுடன் தாய் அடையும் மகிழ்ச்சியினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தான் பெற்ற பிள்ளை சான்றோன் எனப் பலராலும் பாராட்டப்படுவதை தாயானவள் விரும்புவாள் என்பதை
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்”
என்றே தெய்வப் புலவர் திருவள்ளுவரும் கூறுகின்றார்.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பது நம்மிடம் உள்ள முதுமொழி. தந்தை தன் மகனுக்கு அறிவைக் கொடுப்பது போல இந்திரனே நமக்கு அறிவைத் தா” என்று பிரார்த்திப்பதை வேதங்களிலே காணலாம். தான் பெற்ற பிள்ளையை அறிவாளியாக்கி கற்றறிந்த சபையிலே முந்தியிருக்கச் செய்வது தந்தையின் கடமை என்பதை,
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்”
எனச் செந்நாப் போதராகிய வள்ளுவரும் திருக்குறளில் கூறுகின்றார்.
குழந்தைகளின் உருவாக்கத்தில் பாலர் கல்வி நிலையங்களின் பங்களிப்பு
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது நம்மிடம் உள்ள முதுமொழி. ஐந்தில் வளைத்துவிட்டால் ஐம்பதில் வளைவது எளிதாகும். அதனால் சின்னஞ் சிறுபருவத்திலேயே சீரிய குடி மக்களாக்குவதற்கு ஏற்ற வகையில் பயிற்சி தருவது நாட்டிற்கும்இ வீட்டிற்கும் நலம் தரும். சிறுவர்கள் ஒழுங்கான முறையில் கல்வியைப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர், ஆசிரியர், சமூகநலன் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் உண்டு. ஒரு மாணவனின் அறிவுக்கண் திறப்பதற்குத் துணை செய்வதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆரம்பக்கல்வி ஒழுங்காக அமைந்தால் தொடர்ந்து மாணவன் பெறும் கல்வி சீராக இருக்கும்.
மூன்று வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளை ஆதரித்துக் கல்வி போதிக்கும் நிலையங்களாகப் பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. இன்று இலங்கையின் பல பாகங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான முன்பள்ளிகள் தனியார்களாலும், சில நிறுவனங்களாலும் நடாத்தப்பட்டு வருகின்றன. முன்பள்ளியைப் பெறக்கூடிய வயதில் உள்ள மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே முன்பள்ளிக்குச் செல்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக முன்பள்ளியை கல்வியைச் சீர் செய்வதில் அரசாங்கமும் அக்கறை காட்டி வருகிறது.
பாலர் கல்வியில் அக்கறை எடுத்துச் செயற்பட்ட கல்வியியலாளர்களில் மொன்ரிசூரி அம்மையார் முதலிடம் பெறுகின்றார். பிள்ளைகளின் இயற்கை நிலையில் அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதன் மூலம் அவர்களைத் திறமைசாலிகளாக வளர்க்கலாம் என்பதை மொன்ரிசூரி அம்மையார் எடுத்துக்காட்டினார். உளவிருத்தியில் பின் தங்கியுள்ள பிள்ளைகளுக்குக் கல்வியறிவு புகட்டுவதில் ஈடுபட்ட அம்மையார் தாம் கையாண்ட கற்பித்தல் முறையைச் சாதாரண குழந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில் செயற்படுத்தினார். குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை அவர் பெரிதும் விரும்பினார். குழந்தைகள் எவருடைய நிர்ப்பந்தமோ, குறுக்கீடோ இன்றித் தாமாகவும், சுதந்திரமாகவும் கற்கக்கூடிய இடமாகப் பாடசாலைகள் அமைய வேண்டும் என்றார். பிள்ளைகளிடம் இயல்பாகவே அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துவதே ஆசிரியரின் கடமை என்றார்.
மாணவர்கள் திணிக்கப்படும் பாத்திரங்கள் அல்ல ஏற்றப்படும் தீபங்கள் என்பதே கல்விச் சிந்தனையாளர்களின் கருத்தாகும். பாலர்களாக மொன்ரிசூரிப் பள்ளிகளிலும் சிறுவர்களாக ஆரம்பப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களே நாட்டின் தலைவர்களாக நாளை திகழப் போகின்றார்கள்.
இதனை
“ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்”
என குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தனது பாடலில் குறிப்பிடுகின்றார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் செயற்பாடு
வீட்டு சூழலில் இருந்து விடுபட்டு கல்வி கற்க வரும் குழந்தைகளிடம் துடுக்கும், குறும்பும் அதிகமாகவே இருக்கும். இவற்றைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை முன்பள்ளி ஆசிரியர்களிடம் இருத்தல் வேண்டும். ஆடியும் பாடியும் அபிநயத்துடன் கற்பிப்பதனையே சிறுவர்கள் விரும்புகிறார்கள். கலைகளின் ஊடாகப் பிள்ளைகளை ஈர்த்துக் கற்பிக்கக் கூடிய ஆற்றல் முன்பள்ளி ஆசிரியர்களிடம் இருத்தல் வேண்டும்.
குழந்தைகள் ஓடி விளையாட வேண்டும். சோர்வின்றிச் சுடரோடு பிரகாசிக்க வேண்டும். குழந்தைகளின் உடலிலோ, உள்ளத்திலோ சோர்வு ஏற்படக்கூடாது. கூட்டுறவு மனப்பான்மையோடு அனைவருடனும் கூடி விளையாட வேண்டும். குழந்தைகளின் மனம் புண்படும் விதமாக எதுவித வார்த்தையும் பேசக்கூடாது. இந்த உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் பாரதியார் தனது ஓடிவிளையாடு பாப்பா என்ற பாடலின் ஊடாக விளக்குகிறார்.
“ஓடி விளையாடு பாப்பா- நீ
ஓய்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா– ஒரு
குழந்தையை வையாதே பாப்பா”
குழந்தைகளின் உடல் வளர்ச்சியோடு அறிவு வளர்ச்சி, தன்னம்பிக்கை, தன்மானம், மனிதப்பண்பு, அன்பு, நாட்டுப்பற்று போன்ற பண்புகள் எல்லாக் குழந்தைகளிடமும் உருவாகக் கூடியதாகக் கல்வி வழங்கப்படல் வேண்டும்.
குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில் அன்னையர்களாகவும், அறிவூட்டுவதில் தந்தையர்களாகவும், பழகுவதில் நண்பர்களாகவும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் திகழ வேண்டும்.
முன்பள்ளிச் சூழல் மாணவர்களை ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும். மாணவர்கள் மகிழ்வுடன் விரும்பி வரக்கூடிய சூழல் அங்கே காணப்படல் வேண்டும். கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் சிறுவர்கள் விரும்பிக் கற்கக்கூடிய தன்மையில் கற்பித்தல் முறைகளும் அமைதல் வேண்டும். குழந்தைகளின் மனம் பச்சைக் களிமண் போன்றது. அதில் எப்படிப்பட்ட உருவத்தையும் செய்யலாம். கையெழுத்தைச் சரிசெய்வதிலிருந்து தலையெழுத்தை முடிவு செய்வது வரை குழந்தையின் முன்னேற்றத்திற்குப் பல தளங்களில் ஆசிரியரால் உதவ முடியும்.
வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு அனைத்தையும் மாணவர்கள் கவனிக்கிறார்கள். கனிவான பேச்சும், கண்ணியமான நடத்தையும் உடைய ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் மனதில் வைத்து என்றும் போற்றுவார்கள். அவரைப் பின்பற்றி வாழவும் நினைக்கிறார்கள். சுய ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. தனிமனித ஒழுக்கத்தையும் வெறும் வார்த்தைகளால் கற்பித்து விட முடியாது. கடைப்பிடிக்கவும் முடியாது. வாழ்ந்து காட்டுபவர்களால் தான் வழிநடத்த முடியும். கல்வியோடு சேர்த்து வாழும் கலையையும் கற்றுத் தர வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
ஆசிரியர் உற்சாகத்தின் ஊற்றாக அமைந்து விட்டால் மாணவர்களின் வளர்ச்சி எளிதாகி விடுகிறது. ஆசிரியர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் சுவைபடப் பேசுபவராகவும் அமைந்துவிட்டால் மாணவர்களின் உற்சாகம் பன்மடங்காகி விடும். நல்லாசிரியருக்கு ஞாபக சக்தி, மனவலிமை, கருணை என்பன இருக்க வேண்டும். மாணவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமலும், அதே சமயம் அவர்களின் காயங்களை கண்டுபிடித்து மருந்து போடும் மருத்துவர்களாகவும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவனின் இதயத்திலும் கல்வியோடு சேர்த்து ஆசிரியர்களும் நிறைந்திருப்பது தான் ஆசிரியர்கள் பெறும் மிகச் சிறந்த விருது ஆகும்.
அமரர் திரு. சிவமகாலிங்கம்
முன்னையநாள் விரிவுரையாளர்,
பலாலி ஆசிரியர் கலாசாலை
நிமிர்வு மாசி 2019 இதழ்
Post a Comment