சிங்கள பௌத்தத்திடம் நாம் இழந்த நாடு


நட்புறவுடன் வாழ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் சகிப்புத்தன்மையுடன் இணைந்து வாழ உதவும் சில ஏற்பாடுகளை உருவாக்குவதே எங்களுக்கு முன்னால் உள்ள சவால்.” 

- ஜவஹர்லால் நேருகறுப்பு யூலையின் போது கொலைகாரக் கும்பல்கள், தாம் பலியெடுக்க நினைத்த நபரின் இனத்தை நிர்ணயம் செய்ய முடியாமல் இருந்தால், பௌத்தத்தின் ஐந்து கட்டளைகளை பாளி மொழியில் சொல்லச் சொன்னார்கள். அல்லது இதிபிசோ பகவ என்ற மந்திரத்தை ஓதும்படி கட்டளையிட்டார்கள். (இந்த செயற்பாட்டில் இருந்த முரண்நகை மிகவும் கோரமானது. ஏனெனில் ஐந்து கட்டளைகளில் முதல் கட்டளையானது எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்ற உறுதி மொழியாகும். இடிபிசோ பகவ புத்தரின் ஒன்பது குணங்களைக் குறிப்பிடுகின்றது. ‘அரஹாம்’ என்பதில் தொடங்கும் அது வெறுப்பை ஒழிப்பதை உள்ளடக்கியது.) எந்தத் தமிழனும் பௌத்தனாக இருக்க மாட்டார் அல்லது ஒரு தமிழன் பௌத்தத்தின் அடிப்படைகளை அறிந்திருக்கமாட்டார் என்பது அந்த கும்பல்களின் அனுமானமாக இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் பௌத்த மறுமலர்ச்சி புத்தரின் போதனைகளிருந்து இரண்டு குறிப்பிடத்தக்க வழிகளில் விலகிப் போனது. ஒன்று, கண்டிய மன்னர்களால் சங்கத்தின் மீது திணிக்கப்பட்ட சாதியப் பிரிவினையை அது ஏற்றுக்கொண்டு அதற்கு இடமளித்தது. இரண்டு, சிறுபான்மையினரை சந்தேகிக்கும், பயமுறுத்தும் மற்றும் விரோதிக்கும் ஒரு கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, சிங்கள இனக்குழுவுக்குள் அது தன்னைத் தானே அமிழ்த்திக் கொண்டது.

 

பௌத்த மறுமலர்ச்சி புத்தரின் போதனைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், சுதந்திரத்தின் பின்னரான இந்த 75 வது ஆண்டை நாம் ஒரு வேறுபட்ட இலங்கையில் வாழ்ந்திருக்கலாம்.

19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பௌத்த சீர்திருத்தவாதிகள் புத்தசாசனத்திற்குள்ளும் சிங்கள சமூகத்திற்குள்ளும் இருந்த சாதிய பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடியும். அதற்குரிய தேவை, வாய்ப்பு இரண்டும் இருந்தன. அவ்வாறு செய்வது புத்தரின் போதனைக்கும் மற்றும் நடைமுறைக்கும்  ஏற்பவும் இருந்திருக்கும். ஆனால் அந்த விடயம் அவர்களின் சீர்திருத்த வரம்பிற்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்டது. இவ்வாறான ஒரு சமரச ஏற்பாட்டுக்கு மூன்று நிக்காயாக்களும் தங்களின் மறைமுக சம்மதத்தை வழங்கியதாகத் தென்படுகிறது.

ஓர் அறைக்குள் யானை ஒன்று இருந்தாலும் அங்கிருப்பவர்கள் அதன் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றே மகாசங்கத்தினுள் சாதிய வேறுபாடு என்பது அன்றும் இன்றும் இருந்து வருகிறது. அது இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அது ஓரிரு நூற்றாண்டுகளாகத் தான் அங்கு இருக்கிறது. இந்த உண்மையை அறியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது இருப்பதாக பலர் கருதுகின்றனர். இதனைப் பற்றிக் கதைப்பது அநாகரீகமாக இருந்தாலும் இதனைப் பற்றிக் கதைப்பது ஒன்றும் தடை செய்யப்பட்ட விடயமல்ல. ஒருவருடைய அழுக்கு துணியை பொது இடத்தில் கழுவுவது என்பது இங்குபொருத்தமான பழமொழியாக இருக்கலாம்.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய பௌத்தம், ஜிம் க்ரோ சட்டங்களை நியாயப்படுத்த அமெரிக்காவின் தெற்கில் உள்ள வெள்ளை இனவாதிகளால் பயன்படுத்தப்பட்ட கோட்பாட்டைப் போன்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டது. அதாவது சமமான உரிமை ஆனால் தனியாக பிரிக்கப்பட்டு இருத்தல் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் உயர் பதவி வழங்கும் வழக்கத்தை கண்டிய மன்னர்களும் உயர்சாதித் துறவிகளும் செயல்படுத்தி இருந்தால், அது புத்தரின் போதனைகளின் அடிப்படைக் கொள்கைகள் ஒன்றிலிருந்து மோசமான விலகல் என்று சொல்லி அதற்கு எதிராக ஒரு உட்கிளர்ச்சி வெடித்து இருக்கும். ஆனால் கொவிகம அல்லாத சாதிகள் தங்களுக்கே உரித்தான நிக்காயாக்களை உருவாக்க முடியும்என்று அனுமதிக்ப்பட்டதால் (துறவிகள் மற்றும் பாமர மக்கள் மத்தியில்) ஒரு சிக்கலான அமைப்பு உருவாகி திடப்படுத்தப்பட்டது. எனவே, சங்கத்திற்குள் சாதிப்பிரிவுகள் உயிருடன் இருக்கும் அதே வேளையில், அந்த ஒழுங்கை சீர்திருத்த விரும்புபவர்கள் கூட, இந்தப் பிரச்சினையைப் பற்றி பொதுவெளியில் கதைக்கவில்லை.

அனகாரிக தர்மபால கோவிகம அல்லாத சாதியிலிருந்து வந்தவர். ஆனால் சாதிப் பிரிவினைகள் மகாசங்கத்தின் கட்டமைப்பில் உள்ளடக்கப்படுவதால் ஏற்படும் பௌத்த கோட்பாடுகளின் சிதைவை அவர் புறக்கணிக்க முடிவெடுத்தார். மாறாக பல எதிரிகள்/அச்சுறுத்தல்களை உருவாக்குவதன் மூலம் அனைத்து சிங்கள-பௌத்தர்களையும் ஒன்றிணைக்கும் வழியை அவர் தெரிவு செய்தார். 19 ஆம் நூற்றாண்டின் பௌத்த மறுமலர்ச்சியில் சிறுபான்மையினரைத் தாக்கும் கோட்பாட்டை உள்நுழைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதுவரை காலமும் மறைமுகமாக இருந்த இந்த  தப்பெண்ணத்தை வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒன்றாக்கினார்.

அவர் பிரித்தானியாவுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் நாயகனாகக் கருதப்பட்டாலும், அவரது கோபத்தின் முக்கிய கவனம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் அல்ல. ஆங்கிலேயர்கள் மீதான அவரது தாக்குதல்கள்அரசியல் என்பதை விட கலாசாரம் சார்ந்ததாகவே இருந்தன.

அக்கால இலக்கிய ஜாம்பவான்களாக இருந்த பியதாச சிறிசேன மற்றும் ஜோன் டி சில்வா ஆகியோருடன் சேர்ந்து, சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, சிறுபான்மை இருப்பு மற்றும் அன்னிய மத-கலாசார தாக்கங்களிலிருந்தும் விடுதலை பெறுவது என்று அனகாரிக தர்மபால விளக்கினார். இந்த விளக்கத்தின் படி முதன்மையான எதிரி பிரித்தானிய காலனித்துவவாதிகள் அல்ல.தமிழர்கள், இந்திய-தமிழர்கள், முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள், பறங்கிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரே முதன்மையான எதிரிகள். நிலத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு மேலாக இந்த அன்னிய சமூகங்களை ஆதரிப்பது தான் ஆங்கிலேயர்கள் செய்த முக்கிய பாவம்.  அந்த பாவச் செயல் தான் பிரித்தானியர்களின் சுரண்டல் நடவடிக்கைகளை எளிதாக்கியது. ஏனைய விடயங்களில் செல்வாக்கு செலுத்துதலை எளிதாக்கியது. இவ்வாறாக அவர் கருதினார்.

சாதியை நிராகரித்த ஒரு மகாசங்கம் (புத்தர் செய்தது போல்) இத்தீவில் சாதிய ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்திருக்க முடியும். இலங்கையும் தனது சொந்த டாக்டர் அம்பேத்கர்களை உருவாக்கி இருக்க முடியும். தோட்டத் தமிழர்கள் உட்பட அனைத்து இனக்குழுக்களின் ஒடுக்கப்பட்ட சாதியினரையும் அணுகியிருக்க முடியும். ஒற்றை இனவாத மற்றும் சிறுபான்மைக்கு எதிரான ஒரு பௌத்தமாக இல்லாத ஒரு பௌத்தம் ஒரு புதிய இலங்கை தேசத்தின் பிணைப்பு முகவராக மாறியிருக்கும். சிங்கள பௌத்தம் என்பதில் சிங்களத்தை நீக்கி இருந்தால் பௌத்த சாசனம் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழ்க் கூறுகளைக் கொண்டிருக்கக்கூடும். அது புத்தர் விரும்பிய பௌத்தமாக இருந்திருக்கும். ஒருவரின் பிறப்பு எப்படிப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் புகலிடமாக இருந்திருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு தீவில் ‘தனிச் சிங்களம்’ என்ற சட்டம் வெற்றி பெற்றிருக்க முடியுமா? அத்தகைய நிலத்தில் கறுப்பு ஜூலை நடப்பது சாத்தியப்பட்டிருக்குமா?

புத்தர் தன்னுடைய போதனைகள் அதன் பழமையான வடிவத்தில் நிலைத்திருக்கும் ஒரே இடமாக இலங்கை இருக்கும் என ஆசீர்வதித்ததாக சொல்கிறது மகாவம்சத் தொன்மம். ஆனால்இந்த தொன்மம் நிலத்தை மையமாகக் கொண்டது, இனத்தை மையமாக கொண்டது அல்ல. இதன் விளைவாக, ஓர் அரச பரம்பரையில் இருந்து வருதல் மற்றும் பௌத்தத்தை கடைப்பிடித்தல் என்பன மட்டுமே இலங்கையில் அரசாட்சிக்கான முக்கிய தகுதிகளாக இருந்தன. எந்த இனத்திலிருந்தோ அல்லது எந்த நிலத்தில் பிறந்தவர் என்பதோ முக்கியமாக கொள்ளப்படவில்லை. கண்டியின் நாயக்க மன்னர்கள் பல முன்னோடிகளைக் கொண்டிருந்தனர். பொலன்னறுவையின் (12 ஆம் நூற்றாண்டு) மன்னர் நிசங்க மல்ல போன்றவர்களும் அதில் அடக்கம். அவர் கலிங்க வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்தியாவில் பிறந்தவர் என்றும் அவரால் சொந்தமாக பொறிக்கப்பட்ட பாறைக் கல்வெட்டுகள் சொல்கின்றன.

மதத்துடன் இனத்தைச் சேர்ப்பது 19 ஆம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது. அனகாரிக தர்மபாலவும் அவரைப் போன்றவர்களும் சிங்களத்தையும் பௌத்தத்தையும் பிரிக்க முடியாத ஒரு அடையாளமாக இணைத்து அதை தேசம் என்று அழைத்தனர். இந்த தேசியக் கருத்தாக்கமானது, உணர்வு பூர்வமாகவும் முன்னோக்கத்துடனும் சிங்கள இனம் மற்றும் பௌத்த மதம் இல்லாத எவரையும் புறம் தள்ளியது அல்லது ஒதுக்கியது. இது மேலெழுந்த வாரியாக ஒரு படிநிலை அமைப்பை நிறுவுவதாகவும் அடிப்படையில் கொலைகாரத்தனமானதாகவும் இருந்தது.

சிங்கள-பௌத்தர்களே இந்தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்ற வரலாற்றுத் திரிபுக் கூற்று தான் இந்தக் கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கிறது.

 

ஆங்கிலத்தில் திசரனீ குணசேகர

www.groundviews.org

 மொழிபெயர்ப்பு : நிமிர்வு

நிமிர்வு மாசி 2023 இதழ்

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.