தாயக ஒருமைப்பாட்டை உணர்த்திய வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணிசிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் சிவில் சமூக அமைப்புகளையும் இணைத்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய போராட்டமும் பேரணியும்  இடம்பெற்றது. சிறீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் மரபு ரீதியாகவே புறக்கணித்து  வந்துள்ளனர். ஆனால், 2009 க்குப் பிறகு குறிக்கப்பட்ட காலம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சியாக  இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பை அனுசரித்துப் போகின்ற ஒரு அரசியலை செய்தது. தென்னிலங்கையில் நடந்த சுதந்திர தின எழுச்சிக் கொண்டாட்டங்களில் சம்பந்தனும், சுமந்திரனும் பங்கேற்று சிறப்பித்தமை தான் நடந்தது.  சிங்க கொடியை சம்பந்தன் அசைத்ததையும் நல்லாட்சிக்  காலத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் தான் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம். அந்த அனுமதிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு தான் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கும் வேலைத்திட்டத்தை சிங்கள ஆட்சியாளர்கள் தொடங்கினர்.   ஒடுக்குமுறைகள் இரு வழிகளில் இருந்தன. ஒன்று ஆட்சி அதிகார கட்டமைப்பை சிங்களமயமாக்கும் செயற்பாடு. அது தேசியக் கொடியில் இருந்து தொடங்கி தனிச் சிங்கள சட்டமூடாக  கடைசியாக 1972 ஆம்ஆண்டு யாப்பில் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது வரை, சிங்கள மயமாக்கல் தொடர்ந்து வருகிறது. இரண்டாவது தமிழ்மக்கள் தேசமாக இருப்பதை அழிப்பது.

இந்த இரண்டு அக்கிரமங்களையும் சுதந்திர தின அனுமதிப்பத்திரத்தை வைத்துக் கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்மக்கள் மீது அக்கிரமங்களை நிகழ்த்தினர். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பதற்கு தான் சிங்கள குடியேற்றங்கள் உருவாகின. சிங்கள குடியேற்ற திட்டங்களை தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை இணைக்கும் மையமான திருகோணமலையில் தான் தொடங்கினார்கள். மையமாக இருக்கிற மாவட்டத்தை சிதைப்பதனூடாக தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கலாம் என்கிற இலக்குதான் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தது. இந்த அழிப்பு வரலாற்றையும், சிங்கள மயமாக்கல் வரலாற்றையும் புதிய தலைமுறைக்கு ஓரளவுக்காவது இப்பேரணி மூலம் கடத்தியிருக்கிறது.

2009 இறுதிப்போருக்கு பிறகு நீண்டகாலமாக இந்த சுதந்திர தின எதிர்ப்பு நடக்கவில்லை. இப்போது மாணவர்கள் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிப் போராட்டம் கிழக்கிலிருந்து வடக்குக்கு வந்தது.  இந்தப் போராட்டம் வடக்கில் இருந்து கிழக்குக்கு போகிறது.  தேசிய இன ஒடுக்குமுறை வலுவாக இருக்கிற மாகாணம். எல்லா பக்கங்களாலும் கிழக்கு தமிழ் மக்களை சிதைக்கின்ற வேலைத்திட்டம்  நடக்கிற மாகாணம். மாணவர்களின் போராட்டம் கிழக்கில் முடித்து வைக்கப்பட்டது முக்கியத்துவமானது. 

வடக்கு கிழக்காக ஒரு தேசமாக நாங்கள் நிற்கிறோம் என்கிற செய்தியை அழுத்தி சொல்கிறது. புதியதலைமுறைக்கு நாங்கள் வரலாற்றை தொடர்ச்சியாக கடத்தி வருகிறோம் என்பது முக்கியமானது. தமிழ் மக்கள்ஒரு அரசற்ற சமூகமாக இருப்பதால் வரலாற்றைக் கடத்தும் முயற்சிகளை தமிழ் மக்களே முன்னெடுக்க வேண்டும். அந்தவகையில் வலுவான முக்கியத்துவம் இதற்கு இருக்கிறது. பெரும் தேசியவாதிகளும் புவிசார் அரசியல்காரரும், பூகோள அரசியல்காரர்களும் இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்கவே விரும்புகின்றனர். அரசியல் தீர்வையும் அதற்கேற்பவே சிபார்சு செய்ய முனைகின்றனர். மறுபக்கத்தில் கிழக்கில் தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் ஒன்று முன்னாள் போராளிகளைக் கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் வடக்கும் கிழக்கும் ஒன்றாக எழுந்து நிற்பது அவசியம்.

 இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தியதற்கு பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு அவசியமாக இருந்திருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு போதுமானதாக இருந்திருக்கவில்லை. பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு உயர்வான நிலையில் இருந்தது.  தற்போது உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சி அரசியலும், தேர்தல் அரசியலும் இதற்குள்ஓடும் நிலையால் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு போதுமான வகையில் இருக்கவில்லை. ஒன்று சுமந்திரன் - சாணக்கியன் தரப்பு வெளியில் நின்றது. தமிழத் தேசிய மக்கள் முன்னணியும் வெளியில் நின்றது. இந்த இரண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

 வடக்கை விட கிழக்கில் தான் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதனால் அவர்களது பங்குபற்றுதலிலும் தொய்வுநிலை ஏற்பட்டது. அம்பாறையில் இருந்து வந்த பேரூந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இறுதி நேரம் பிரகடன உரையை வாசிக்கத் தயாரானபோது சிவப்பு - மஞ்சள் கொடிகளை சிலர் எரிக்கமுற்பட்டனர். மாணவர்கள் அதனையும் தடுத்து நிறுத்தினர்.

பல்வேறு போதாமைகள் இருந்தாலும் கூட அண்மைய வரலாற்றில் இந்தப் போராட்டத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்றே நாங்கள் கூறலாம். 

போராட்டம் என்று வரும் போது மூன்று விடயங்கள் முக்கியமானது. ஒன்று பேரணியும் மக்கள் திரளும் அவர்கள்எழுப்பும் கோஷங்களும், இரண்டாவது  இறுதியாக நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களின் தொகை மற்றும் அங்கு உரையாற்றுபவர்களின் கருத்துகள், மூன்றாவது இறுதிநாள் மேடையில் வைக்கப்படுகின்ற பிரகடனம்.

பேரணியின் மிகுந்த முக்கியத்துவம் அதன் பிரகடனம் தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் வழி வரைபடம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் பிரகடனம்  தெளிவாக வெளிக்காட்டியது. அரசியல் தீர்வு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் இக் காலத்தில் இப்பிரகடனம் மிகவும் முக்கியமானது. அதிகளவில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையை பிரகடனம் ஒத்திருந்தது எனலாம். பிரகடனத்தில் நான்கு விடயங்கள் மிகவும் முக்கியமானவை.

முதலாவது, அரசியல் தீர்வின் கோட்பாட்டு அடிப்படைகளாகும். தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுய நிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டு அடிப்படைகளை பிரகடனம் வெளிப்படுத்தியிருந்தது.

இரண்டாவது, சமூக ஒப்பந்தமாகும். இந்த சமூக ஒப்பந்தம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையிலும் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சமூக ஒப்பந்தத்தின் போது கோட்பாட்டு அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இக் கோட்பாட்டு அடிப்படைகள் திம்பு மாநாட்டிலும் தமிழ்த் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பனவே திம்பு மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டு அடிப்படைகளாகும்.

மூன்றாவது, அரசியல் தீர்விற்கான வழி வரைபடமாகும் இதில் பிரதானமாக சர்வதேச மத்தியஸ்தம் கால அட்டவணை, உடனடிப் பிரச்சினைகள், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள் உட்பட சிவில் சமூகம் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை செயற்பாட்டில் உள்ளடக்குதல் பொதுவாக்கெடுப்பு, முஸ்லீம்கள், மலையக மக்கள் என்போருக்கான அரசியல் தீர்வு என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

உடனடிப் பிரச்சினைகளுக்குள் ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல், சிங்கள குடியேற்றங்களை அகற்றுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், நினைவேந்தல்களுக்கான அச்சுறுத்தல்களை அகற்றுதல் என்பன உள்ளடக்கப்படடிருந்தன.

இந்தப் போராட்டத்தில் போதாமைகள் இருந்தன என்பது ஒரு விடயம். ஏனெனில் மாணவர்கள் தான்போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.   மாணவர்களின் போராட்டத்தை நடாத்தும் கொள்ளளவு என்பது எல்லைக்கு உட்பட்டது.   படிக்க என்று வந்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் காலத்துக்கு காலம் மாறிய வண்ணம் இருப்பார்கள். அவர்கள் நிறுவன ரீதியாக இருப்பதனால் போராட்டத்துக்கு முன்னுக்கு நிற்பார்கள்.  ஆனால் அவர்கள் தனித்து போராட்டத்தை நடாத்த முடியாது.  ஆகவே சிவில் சமூக அமைப்புகளுடன் வலுவாக இணைந்து கட்டமைப்புகளை உருவாக்கி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடாத்தி இருக்கலாம். 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடாத்தி இருந்தாலும் அதில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை என்கிற விமர்சனம் உண்டு.  போராட்டத்தில் சகல மக்களையும் தேசமாக திரட்டுதல் என்பதிலும் பலவீனம் இருந்தது.  சாவகச்சேரியில் மிகவும் சொற்பமானவர்களே ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் ஒத்துழைத்த காரணத்தால் கூட்டத்தை ஓரளவுக்காவது திரட்ட முடிந்தது. ஒரு பிரதேசத்தை பேரணி கடக்கும் போது அந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் அதில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்தப் போராட்டம் வலுவாக இருக்கும்.  பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் மக்கள் பெருமளவு தன்னெழுச்சியுடன் பங்கேற்கும் நிலை இருந்தது. இதில் அவ்வாறு இருக்கவில்லை.

இவ்வாறான குறைகள் இருந்தாலும் இந்தப் பேரணி தெற்குக்கும் உலகுக்கும் ஒரு பிரதான செய்தியை சொல்லிஉள்ளது. அது, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்றும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கான வழிவரைபடம் அம்மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதுவும் ஆகும். இந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் இந்த விடயங்களை தெற்கும் சர்வதேசமும் கணக்கில் எடுக்கவேண்டியது இன்றியமையாதது.

 சி.அ யோதிலிங்கம் -

நிமிர்வு மாசி 2023 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.