ரணிலின் போலிப் பொங்கலும், தாய்மார்கள் கோரிய உரிமைப் பொங்கலும்
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் தமிழ்மக்களில் பலரது காணிகளும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டே உள்ளது. தமிழ்மக்கள் தங்கள் காணிகளில் குடியிருந்து கொண்டு சுதந்திரமாக பொங்கல் விழாவைக் கூட கொண்டாட முடியாத நிலையில் தேசிய பொங்கல் விழாவை யாழ்ப்பாணம் நல்லூரடி சிவன் கோவிலில் கொண்டாடியுள்ளார் ரணில்.
தமிழ்மக்களுடன் தாங்கள் நல்லிணக்கத்துடன் உள்ளோம் என சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே ஜனாதிபதி இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். ஆயிரக்கணக்கான நாட்களை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் தொடர்ந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நிம்மதியாக பொங்கல் கொண்டாட முடியாத மனநிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.
பொங்கல் கொண்டாடுவதற்கு முதலில் நிலம் இருக்க வேண்டும், சூழ உறவுகள் இருக்க வேண்டும். இவை இரண்டும் தமிழ்மக்களுக்கு இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை.
ரணிலின் பொங்கல் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்த தாய்மாரை வட்டுவாகலில் பலவந்தமாக பரிசோதித்து பல்வேறு நெருக்கடிக்குள்ளும் உள்ளாகியிருக்கிறது படைத்தரப்பு. அதையும் தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ரணிலின் வருகைக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். வயதான தாய்மாரின் போராட்டத்தை அடக்க தண்ணீரை வேகமாக பீச்சியடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். அவற்றையெல்லாம் தாண்டி பொலிசாரின் மேலாடையை இழுத்துப் பிடித்து கேள்விகளை கேட்ட தாய்மாருக்கு பதிலில்லாமல் பொலிஸாரும் திணறினர்.
''காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது. காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் வழங்கும் பொருட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளோம்.'' என்கிற தொனியில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றியிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என கண்துடைப்பு ஆணைக்குழுக்கள் பலவற்றை நிறுவி அதன் மூலம் காலத்தை இழுத்தடித்தனர். உள்நாட்டு பொறிமுறையில் தமிழ்மக்கள் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என பலதடவைகளும் வலியுறுத்திய நிலையில் மீண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என ரணில் பச்சைப் பொய்யை சொல்லி இருக்கிறார்.
தங்கள் பிள்ளைகள் என்று வீடு வந்து சேர்கிறார்களோ, என்று எங்கள் காணிகளில் கொட்டில்களை போட்டுக் கொண்டாவது குடியேறுகிறோமா அன்று தான் உண்மையான பொங்கல் என்று போராடிய தாய்மார் கண்ணீருடன் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதித்தடைகள் மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களை மேற்கொண்டதை நவ சமசமாஜக் கட்சி கண்டித்துள்ளது.
அந்தக் கட்சி விடுத்த அறிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கும் அவர்கள் எதிர்பார்த்த நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை எந்த நம்பகத்தன்மையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், சமூக நீதி ஆணைக்குழுவை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த ஜனாதிபதியின் உரைகள் இனிமையாக இருக்கலாம். ஆனால், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர்களின் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் நீண்டகாலத் தடுப்பு, சிவில் ஆட்சியில் இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு அவசியம்.
ஜனாதிபதி பதவியின் மரபு, பதவிப் பெயரால் அன்றி, நீதியைக் கோரும் மக்களுக்கு அதை வழங்குவதன் மூலம் மாத்திரமே கிடைக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதான தாய்மார்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனங்களை கூட தமிழ்த் தேசியக் கட்சிகள் விடுத்ததாக தெரியவில்லை. ஆனால், சிங்கள பக்கமிருந்து போராட்டத்துக்கு ஆதரவான குரல் வலுவாக வந்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் பல்கலைக்கழக மாணவர்களும் முன்னெடுத்த வலுவான போராட்டத்தை அங்கேயிருந்த சிலர் திசை திருப்ப முயன்றனரா என்கிற சந்தேகம் உள்ளது. பொலிஸார் வீசியடித்த தண்ணீரில் சிலர் தலை கழுவி குளித்ததான செய்தி தான் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆகியுள்ளது. தென்னிந்தியா உட்பட வெளிநாடெங்கும் அந்த செய்தி அதிகம் பார்வையிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சட்டையைப் பிடித்து உரத்து கேள்வி கேட்கும் தாய்மாரின் காணொளிகள் அதிகம் பகிரப்பட்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஒரு களியாட்டம் மாதிரியான செய்திகள் சர்வதேச ரீதியில் பரப்பப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் போராட்டம் தொடர்பில் பிழையான விம்பத்தை கட்டமைக்கும். இனிவரும் காலங்களில் இவ்வாறான கேலிக்கூத்துகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்களால் நடாத்தப்பட்ட போராட்டம் வெற்றியடைந்துள்ளது. உண்மையில் யாழ்ப்பாணத்தில் ரணிலின் பொங்கல் தோல்வியடைந்தது தான் வெளியான செய்தி.
தொகுப்பு - அமுது
தை 2023 நிமிர்வு இதழ்-
Post a Comment