புனர்வாழ்வு பணியக சட்டமூலமும் சர்ச்சைகளும்
இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே அது சிங்களவர்களின் வாழ்வியலில் தேவையான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது. சிறிலங்காவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து வந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்ட பொழுது தான் சிங்களவர் இந்தச் சட்டம் தொடர்பாக கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவையும் விழித்தெழ தொடங்கின. இதனையடுத்து இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கிலிருந்தும் எழத் தொடங்கின.
அதனை சமாளிப்பதற்காக அச்சட்டத்தை நீக்கி விட்டு புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை நிறைவேற்ற 2022 புரட்டாசி மாதத்திலிருந்து அரசு முனைந்து வந்த நிலையில், பாராளுமன்றத்தில் 18.01.2023 அன்று இரண்டாம் வாசிப்பின் மீது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி, நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் நிலை உள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய விமானப்படை, கடற்படை, இராணுவத்தின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலம் எனவும், நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்றி குறித்த பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடுவதாக அமையும் எனவும், சடடத்தரணிகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம், முன்னர் தமிழர்கள், ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லிம்கள், அரகலய போராட்டத்தின் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் என்று ஒரு பெரும் தரப்பை மட்டுமே குறிவைத்து அந்த தரப்பிலிருந்த தனிநபர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தது.
உண்மையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட தரப்பை மட்டும் குறிவைத்து ஒரு சட்டம் பயன்படுத்தப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது இந்த சட்டவிரோத செயற்பாட்டை சட்டபூர்வமாக்குகிறது.
அதாவது இந்த புதிய சட்ட மூலம் மக்களை குழுக்களாக பிரிக்கிறது. உதாரணமாக, முன்னாள் போராளிகள், தீவிரவாத போக்குள்ளவர்கள், போதைப் பொருட்கள் பாவிப்பவர்கள், சிறுகுற்றங்களை புரிபவர்கள் என்று மக்களை வகைப்படுத்துகிறது. பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றம் ஒன்றின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படுவார்கள். ஆனால் புனர்வாழ்வு பணியகம் உருவாக்கப்படுமாயின் அதனால் புனர்வாழ்வளிக்கப்படுபவர்களை நீதிமன்றம் மேற்பார்வையிட முடியாது.
இந்த புனர்வாழ்வு பணியகத்தால் நடத்தப்படும் மையங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களாகவும் இருக்கலாம்.
அடிப்படையில் இந்த சட்டமானது அரசு தனக்கு எதிரானவர்கள் என்று கருதுபவர்களை நீதிமன்ற மேற்பார்வை இன்றி தன்னிச்சையாக முகாம்களில் அடைக்க வசதி செய்து கொடுக்கிறது.
இந்த மையங்களை நடத்துபவர்கள் அங்கு கொண்டு வரப்படுபவர்களை சித்திரவதை செய்யலாம்,
அவர்களை குறிப்பிட்ட மருந்துகளை அல்லது தடுப்பூசிகளை எடுக்குமாறு வற்புறுத்தலாம், அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்கலாம், மேலும் புனர்வாழ்வுக்கு இணங்கி இந்த மையங்களில் சேர்பவர்கள் கூட தாம் நினைத்தபடி அங்கிருந்து வெளியே போக முடியாது.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், உயர் நீதிமன்றத்தில் சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்திய பின்னர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரம் புனர்வாழ்விற்காக இந்த சட்டம் வரையறுக்கப்படுவதாக அரச தரப்பால் அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அரசுக்கு எதிரானவர்களை பழிவாங்குவதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக சட்டத்தரணி சுவஸ்திக்கா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் மேற்கின் அழுத்தத்தை குறைப்பதற்கு பயங்கரவாத தடை சட்டத்துக்கு புதிய ஆடையை அணிவிக்கிறது ரணில் அரசு.
தொகுப்பு - சிவா
தை 2023 நிமிர்வு இதழ்-
Post a Comment