ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் பிரச்சனை - பகுதி : 012022 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐ.நா பாதுகாப்புச் சபை மியான்மாரின் இராணுவ ஆட்சியாளரைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  இத்தீர்மானம் இராணுவத்தால் நடத்தப்படும்  படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிப்பதுடன் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தேவைப்படும் நடவடிக்கைகளை பாதுகாப்பு சபை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறது. மிகவும் அபூர்வமான ஒரு நிகழ்வாக உலகத்தின் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் இது பார்க்கப்படுகிறது. இத்தீர்மானத்தை அவர்கள் வரவேற்றுள்ளார்கள். ஈழத்தமிழர் மீது நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையும் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும், சிறிலங்கா அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட வேண்டும் என்பதுவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதேவேளை, ஈழத்தமிழர் மீது சிறிலங்கா அரசு நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை தொடர்பான பிரச்சனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (Human Rights Council, HRC) கதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மனித உரிமைகள் பேரவை ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு இந்த விடயத்தை பாரப்படுத்த வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில்,  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கதைத்துக் கொண்டிருப்பதை விடுத்து சிறிலங்காவுக்கு எதிரான வழக்கு ஒன்று ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice, ICJ) இல் தொடரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழர் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.  மேலும் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court, ICC) கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு நடத்தப்பட்டு அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் பலமடைந்து வருகின்றன. இந்தக் கோரிக்கைகளின் பின்னால் இருப்பது ஈழத்தமிழர் மத்தியில் மேலெழுந்து வரும் ‘ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எமக்கு நீதி கிடைக்காது’ என்ற மனப்பாங்கே.

ஆயினும், பிரச்சனையை பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்துமாறு HRC ஐக் கோருவதோ,  சர்வதேச நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதோ, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை செய்தவர்களை நிறுத்துவதோ இலகுவான காரியமல்ல. இதற்கு HRC இன் அங்கத்துவ நாடுகளில் பெரும்பான்மையினரின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். HRC இல் ஈழத்தமிழர் சார்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே பலரது அயராத உழைப்பையும் தன்னலமற்ற தியாகத்தையும் வேண்டி நின்றன.  மேலும் இதற்கு பெருமளவு பொருட்செலவும் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. இனி, HRC ஐ அடுத்த நடவடிக்கையாக சர்வதேச நீதிமன்றத்துக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் எமது பிரச்சனையை கொண்டு செல்வது என்பது நாம் இதுவரை செய்த முயற்சியை விட பல மடங்கு முயற்சியை வேண்டி நிற்கும்.

இந்த முயற்சியில் இருக்கும் சிக்கல்களை விளங்கிக் கொள்ள இந்த நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம். அதற்கு முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அவற்றின் பின்னணியையும் இங்கு சுருக்கமாக பார்ப்போம். இந்தப் பின்னணிகளை வைத்துப் பார்க்கும் போது தான் சிறிலங்கா அரசை மேற்கூறிய நெருக்குதல்களுக்கு உள்ளாக்குவதில் உள்ள சிக்கல்களை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

பங்குனி 2012 – நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிக்கும் தீர்மானம் 19/2 நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையை (LLRC) இத்தீர்மானம் குறித்துக் கொண்டாலும் அதன் குறைபாடுகளை கவனத்தில் கொண்டு ஒரு விரிவான செயற்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்தியா உட்பட 23 நாடுகள் இத்தீர்மானத்தில் இணைந்து கொண்டன.

பங்குனி 2013 – நிலைமாறுகால நீதிக்கான நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தீர்மானம் 22/1 நிறைவேற்றப்பட்டது. அது LLRCஇன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்த செயற்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் உண்மைகளை அறிவதற்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கை A/HRC/22/38 ஐ வரவேற்றது.  இந்தத் தீர்மானமும் இந்தியா உட்பட 25 நாடுகளினால் ஆதரிக்கப்பட்டது.

பங்குனி 2014 – யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 2002 மாசி மாதத்திலிருந்து LLRC அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 2011 ஆண்டு காலப்பகுதியில் மனிதகுலத்துக்கு எதிராக நடந்த குற்றங்களை விரிவாக ஆராய்வதற்கு அதிகாரமளிக்கும் தீர்மானம் 25/1 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், முந்தைய பரிந்துரைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பேரவை அதிருப்தியை தெரிவித்தது. மேலும் இனவாத வன்முறை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச தனது பிடியை இறுக்கிக் கொண்டிருந்த காலத்தில் 2015 தை மாதம் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார். மைத்திரிபால சிறிசேன சனாதிபதியாக பதிவியேற்கிறார். இதன் மூலம் ஐ.நா. தொடர்பான சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. ஊழலை வேரறுக்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வரவும் சிறிசேன சபதம் செய்கிறார். மேலும் சிறிலங்கா அரசின் பொறுப்புக்கூறல் சாத்தியம் என்ற நம்பிக்கை எழுகிறது.

ஐப்பசி 2015 – மனித உரிமைகள் பேரவையின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. ஓரளவுக்கு சர்வதேசத்தின் பங்குபற்றுதலுடன் உள்ளகப் பொறிமுறையைக் கோரும் தீர்மானம் 30/1 நிறைவேற்றப் பட்டது. அதில் சிறிலங்காவும் இணைந்து கொண்டது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு பற்றியும் பல்வேறு வகைப்பட்ட நிலைமாறுகால செயற்பாடுகள் பற்றியும் இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. சாட்சிகளை பாதுகாப்பது, வடக்கிலிருந்து இராணுவத்தை நீக்குவது, காணிகளை கையளிப்பது என்பவை உட்பட்ட நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சிறிலங்காவின் உறுதிமொழியைப் பாராட்டியது. மேலும், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு பொறுப்புக்கூறலின் அவசியத்தை இத்தீர்மானம் வலியுறுத்தியது.

பங்குனி 2017 – மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்களை தொடர்ந்து அவதானிக்கவும் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையாளரைக் கோரும் தீர்மானம் 34/1 நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகளை ஆணையாளர், ஐ.நாவின் செயலாளர் நாயகம், மற்றும் பல ஐ.நா. நிறைவேற்று அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்த பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 கார்த்திகையில் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார். 2020 மாசி மாதம் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின்  30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் பங்களிப்பதிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தது.  தான் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக்கூறலுக்கும் ஒரு உள்ளகப் பொறிமுறையை மட்டுமே தொடரப் போவதாக கூறியது.

தை 2021 – மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பச்சலெட் (Michelle Bachelet) சிறிலங்கா மீதான தன்னுடைய அறிக்கையை வெளியிட்டார்.  தண்டனைகளிலிருந்து தப்புவது, மனித உரிமைகள் நிலைமாறுகால நீதி என்பவற்றில் ஏற்படும் பின்னடைவுகள், அதிகரிக்கும் இராணுவமயமாக்கல், அதிகரிக்கும் பொதுமக்கள் சமூகத்தின் மீதான பயமுறுத்தல், அதிகரிக்கும் இனவாத பேச்சுக்கள் என்பவற்றை அந்த அறிக்கை வலுவாக கண்டித்தது. யுத்தத்தின் போது நடத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாகவும் சிறிலங்காவில் புரையேறிப் போயிருக்கும்  தண்டனைகளிலிருந்து தப்புவது தொடர்பாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உள்ளகப் பொறிமுறைகள் தோற்றுப்போய் விட்டதாகவும், தண்டனைகளிலிருந்து தப்பும் போக்கு மேலும் ஆழமாக்கப்படுவதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிலங்காவின் அமைப்புமுறையில் அதிகளவில் நம்பிக்கையீனம் அடைவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

பங்குனி 2021 – சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டமை அது தொடர்பான குற்றங்கள் என்பவற்றுக்கான ஆதாரங்களை திரட்டவும் அவற்றைப் பேணவும் ஆராய்வதற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு (Office of the UN High Commissioner for Human Rights, OHCHR) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 46/1 நிறைவேற்றப்பட்டது. இதற்கு 23 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா நடுநிலைமை வகித்தது.

ஐப்பசி 2022 – மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா தொடர்பான தனது வருடாந்த அறிக்கை A/HRC/51/5 ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையில் வைகாசி 2022 இல் OHCHR ஆல் உருவாக்கப்பட்ட குழு தன்னுடைய வேலைகளை ஆரம்பித்ததாகவும், ஆடி மாதம் உண்மைகளை கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு போவதற்கான அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், OHCHR இற்கு கொடுக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் என்றும் அவர்களை பழிவாங்கப்படாமல் இருப்பதற்கான உள்ளக மற்றும் சர்வதேச முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளை OHCHR குழு ஆராய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

அந்த வகையில் உதாரணங்களாக, 2021 ஐப்பசி, கார்த்தகை மாதங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) வழங்கப்பட்ட அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  அந்த அறிக்கைகளில் சிறிலங்கா றோம் சாசனத்தில் கையொப்பமிடாத நாடு என்றாலும் அந்த நாட்டின் குற்றங்கள் பல அந்த சாசனத்தில் உள்ள நாடுகளில் நடத்தப்பட்டுள்ளதால் சிறிலங்காவில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக ICC இல் வழக்குத் தொடர முடியும் என்று வாதிடப்பட்டுள்ளது. மேலும் உலகளாவிய சட்ட அதிகாரம் (universal jurisdiction) என்ற கோட்பாட்டின் கீழ் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் நெதர்லாந்து நாட்டின் பத்திரிகையாளரின் கொலைகளை விசாரிக்கும் நீதிமன்றில் இலங்கையில் நடந்த உண்மைகளை கண்டறிவதற்காக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். 

அதேவேளை, அமெரிக்க அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகள் சிலர் தனது நாட்டுக்குள் வருவதை தடை செய்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அறிக்கை A/HRC/51/5 கூறியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது அந்த அவையின் செயற்பாடுகள் அதன் எல்லையைத் தாண்டிப் போக முடியாத ஒரு  கட்டத்தை அடைந்திருப்பதாக தோன்றுகிறது. அடுத்து சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice, ICJ) எவ்வாறு இயங்குகின்றது என்று சுருக்கமாக பார்ப்போம்.

சர்வதேச நீதிமன்றம்

ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இரண்டு வகையான வழக்குகளை கையாளும். ஒன்று நாடுகளுக்கு இடையேயான வழக்குகள் மற்றையது ஐ.நா.வின் கீழ் செயற்படும் பல்வேறு குழுக்களால் முன்வைக்கப்படும் சட்டப் பிரச்சனைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கல்.  இதில் நாடுகளுக்கு இடையேயான வழக்குகளை விசாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் கூட்டாக இந்த நீதிமன்றத்தை அணுகினாலே அவற்றை நீதிமன்றம் விசாரிக்கும். இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயத்திற்கு இது தொடர்பில்லாதது, ஆகவே அதனை விட்டு விடுவோம். அடுத்தது ஐ.நா. வில் செயற்படும் நிறுவனங்கள் முன்வைக்கும் சட்டப் பிரச்சனைகள். அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்று பார்ப்போம்.

சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைகளைக் கோரும் உரிமை ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து உறுப்பு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்த 16 சிறப்பு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுக்கு மட்டுமே உண்டு.  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு பேரவை "எந்தவொரு சட்டக் கேள்விக்கும்" ஆலோசனைக் கருத்துக்களைக் கோரலாம். ஆலோசனைக் கருத்துக்களைப் பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிற உறுப்பு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு முகவர் நிறுவனங்கள் "தங்கள் செயல்பாடுகளின் எல்லைக்குள் எழும் சட்டக் கேள்விகள்" தொடர்பாக மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ஆலோசனைக் கருத்து கேட்டு நீதிமன்றத்துக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றால், நீதிமன்றம் அனைத்து உண்மைகளையும் சேகரிக்க வேண்டும். ஆகவே,மேலும் சர்ச்சைக்குரிய வழக்குகளைப் போலவே எழுத்து மற்றும் வாய்மொழி நடவடிக்கைகள் ஊடாக உண்மைகளை சேகரிக்க அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கோட்பாட்டளவில், அத்தகைய நடவடிக்கைகள் இல்லாமலே அதனை நீதிமன்றம் செய்யலாம், ஆனால் அது ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை.

சட்ட ஆலோசனைக்கான கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்விக்கு தகவல்களை வழங்கக்கூடிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பட்டியலை நீதிமன்றம் தயாரிக்கும். இந்த நாடுகள் அந்தக் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட நாடுகளாக இருக்க மாட்டா. அந்தப் பட்டியலில் இருக்கும் நபர்கள் அவர்களைச் சார்ந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்படமாட்டார்கள். மேலும் ஆலோசனை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்பது நீதிமன்றத்தின் கருத்துக்கு அவர்களைக் கட்டுப்படுத்தாது. பொதுவாக இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகள் கருத்தைக் கோரும் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு நாடு நீதிமன்றம் தன்னையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்கலாம்.

பிரச்சனை தொடர்பாக கருத்தைக் கோரும் சர்வதேச அமைப்புகளைத் தவிர வேறு ஒருவரையும் ஆலோசனை நடவடிக்கைகளில் பங்கேற்க ICJ அனுமதிப்பது அரிது. இதுவரை மேற்கு ஆபிரிக்காவின் சர்வதேச நிலமை என்ற விடயத்தில் மட்டும்தான் ஓர் அரசுசாரா நிறுவனத்தினால் தகவல்கள் வழங்கப்படுவதற்கு  ICJ  அனுமதி அளித்தது.  அனால் அந்த நிறுவனம் இறுதியில் அவ்வாறு செய்யவில்லை.  அதனை விட மற்ற எல்லா விடயங்களிலும் தனியார் தரப்பு கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முதலில் எழுத்து மூலம் நடத்தப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் பின்னர் வாய்மொழி மூலம் நடத்தப்படும் கருத்துப் பருமாற்றத்தை விட சுருக்கமாக இருக்கும். மேலும் எழுத்து மூல வாதப் பிரதிவாதங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் தளர்ச்சியானவை. பங்கேற்பாளர்கள் எழுத்துமூல அறிக்கைகளை தாக்கல் செய்யலாம். அவற்றில் சொல்லப்பட்டவை மற்றைய பங்கேற்பாளர்களின் கருத்துகளிற்கு கருப்பொருளாக அமையலாம். எழுத்து மூல  அறிக்கைகள் மற்றும் கருத்துகள் இரகசியமானவையாக கருதப்படுகின்றன.  ஆனால் பொதுவாக வாய்மொழி நடவடிக்கைகளின் தொடக்கத்தில், இந்த எழுத்துமூலக் கருத்துப் பரிமாற்றங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கும். அதன் பின்னர் நாடுகள் தமது கருத்தை பொதுமக்களும் அறியக்கூடிய வகையில் வாய்மொழி மூலம் முன்வைக்க அழைக்கப்படுவார்கள்.

தொகுப்பு - லிங்கம் 

நிமிர்வு தை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.