மண்ணே எமது உணவின் தொடக்கம்
உலக மண் தினம் மார்கழி 5 ஆம் திகதி வருடாந்தம் கொண்டாடப்படுகிறது. மண் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் மனித குலத்திற்கு அதன் முக்கியத்துவம் குறித்தும் அதனை பாழடையாமல் பாதுகாப்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா.
புவியில் வாழும் அனைவரும் உண்ணும் உணவில் ஏறத்தாழ தொண்ணூற்றி ஐந்து வீதமான உணவு மண்ணில் இருந்து தான் பெறப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இருந்த போதும் மண் எக்காலத்திலும் இதனை தொடர்ந்து வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் யாரும் இருக்கவில்லை. விவசாயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மண்ணை பாதுகாக்க வேண்டும், மண்ணை வளப்படுத்த வேண்டும், மனித முயற்சியால் மண்ணின் வளம் பெருப்பிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தெரிந்த சமூகமாக நாங்கள் இருந்திருக்கிறோம். உலகெல்லாம் வாழ்கின்ற விவசாயிகள் ஏறத்தாழ 10 ,12 ஆயிரம் ஆண்டு காலமாக இந்த அடிப்படையிலேயே விவசாயத்தை செய்து வந்திருக்கின்றோம்.
நாம் பழுதாய் போன நிலத்தை பற்றி அறிந்திருக்கிறோம், பாலைவனமாக போயுள்ள நிலத்தைப் பற்றிய படித்திருக்கிறோம். ஆனால் பண்படுத்தப்பட்ட நிலத்தை மிகவும் அக்கறையோடு எல்லை போட்டு பங்கு பிரித்து பரிமாறி தலைமுறை தலைமுறையாக கொடுத்து வந்து வாழ்ந்திருக்கிறோம். மனித முயற்சியால் வளர்த்தெடுக்கப்பட்ட மண், மனித முயற்சியால் பண்படுத்தி வளம் சேர்க்கப்பட்ட மண், அதற்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட தானிய வகைகள், காய்கறி வகைகள், பயிர் வகைகள் என்பவற்றைக் கொண்டு மண்ணுக்கு உகந்த வகையில் பயிர் செய்தல் என்று அந்த மண்ணை பாதுகாத்து வந்திருக்கிறோம். அந்த மண்ணுக்கு உகந்த விதையையும் அந்த மண்ணையும் கூட ஒரு குடும்பத்திலிருந்து விலகிப் போகாமல் வைத்திருந்து கிராமங்கள் தோறும் எமது மண்ணை பாதுகாத்து வந்துள்ளோம். ஏனென்றால் தலைமுறை தலைமுறையாக எமக்கு முன்னே வந்தவர்கள் உழைத்த உழைப்பின் பெறுபேறாகத் தான் அங்கே அந்த மண் வளமான மண்ணாக உள்ளது.
மண்ணைப் பாழாக்காமல் மேலும் அதற்குரிய பெறுமதியை தெரிந்து அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கிறோம். அதனைத் தான் சீதனம் என்றும் கூட நாம் சொல்லி வந்திருக்கிறோம். எனவே மண்ணின் பெறுமதி இங்கே மண்ணின் வளத்தை தான் குறித்து நிற்கின்றது. மண்ணின் பரப்பெல்லையை விட மண்ணின் கீழேயுள்ள வளம் அங்கே முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது. இந்த மண்ணை வளர்த்து எடுப்பதில் பண்படுத்துவதில் கால்நடைகளின் பங்கும் பயிர் சுழற்சி முறைகளின் பங்கும் பருவகாலத்துக்கு உகந்த வகையில் வெவ்வேறு பயிர்களை பயன்படுத்துவதன் அவசியமும் முக்கியமானவை. உதாரணமாக, எல்லா நேரமும் எல்லோருக்கும் நீர் வளம் போதியளவில் இருக்காது. மழையை நம்பி வாழ்ந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதற்கேற்ற வகையில் பயிர்களை தெரிவு செய்தார்கள்.
எம் முன்னோர்கள் மண்ணை வெறுமனே காய்ந்து காற்றோடு காற்றாக கலந்து போகும் வெறும் தரையாக விடுவது குறைவு. ஏதோ ஒரு வகையில் அண்மைக்காலம் வரை மண் பற்றிய மனித முயற்சி தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் எமக்கு தெரிந்த அந்த பொது அறிவை விட இன்னும் நுணுக்கமான நல்ல அறிவியல் பூர்வமான அறிவு மண்ணைப் பற்றி இன்று வளர்ந்து இருக்கிறது. எனினும், அந்த மண்ணை இன்றைக்கு ஒரு சடப்பொருளாக உயிரற்ற பொருளாக கருதும் தன்மை வளர்ந்து வருகிறது.
மண்ணில் விளைச்சல் வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக ஏதாவதொரு மூலப்பொருள் சேர்த்தாக வேண்டும், அதுவும் செயற்கை வழி வந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அண்மையில் என்னை விட 20-30 வயது இளையவர்களான இங்கு வாழும் தமிழர்களும் மற்றும் வேறு நாடுகளில் இருந்தவர்களும் என்னுடன் நேரடியாக மோதி துணிவாக சொன்ன கருத்து என்னவென்றால் ‘யூரியா இல்லாமல் ஒன்றும் செய்ய ஏலாது’ என்பதாகும். அப்படி அடித்துச் சொல்வார்களோடு விவாதிக்க போவதில்லை. ஆயினும், ‘அந்த மூலப்பொருள் யூரியாவாகத் தான் வந்து சேர வேண்டும் என்று இல்லை, வேறு வழியாகவும் அந்த வளத்தை பெறலாம்’ என்பதை சிலரோடு உரையாட வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.
இந்த மண் தினத்தில் சொல்ல வருவது எம்முடைய உணவின் அடிப்படையாக எம் இருப்பின் மூலமாக நாம் ஊன்றி நிற்கும் இந்த நிலத்தின் கீழே இருக்கின்ற மிகப்பெரிய அண்டம் இருக்கிறது. பல்வேறு ஜீவராசிகளை கொண்டிருக்கின்ற அந்த உலகத்தை நாம் இப்போது புரிய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்னும் பல உண்மைகள் அதனுள்ளே மறைந்திருக்கின்றன. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னான இக் காலத்தில் இது தொடர்பாக பலரும் மீளாய்வு செய்து வருகிறார்கள். எனவே தான் இந்த மண் தினத்தினுடைய கோசச் சொல்லாக ஆங்கிலத்தில் “Soil: source of all food” என்பதை வைத்துள்ளார்கள். அதாவது மண்ணே எமது உணவின் மூலம் என்ற தொனிப்பொருளில் தான் இந்த ஆண்டுக்கான மண்தினம் நடத்தப்படுகிறது.
இந்த மண்தினம் மார்கழி ஐந்தாம் திகதி அவதானிக்கப்பட வேண்டியது, நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியது என்ற கருத்தை முதலில் முன்னெடுத்தவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த தாய்லாந்து தேசத்தினுடைய மன்னர் புமிபோல் அடுல்யடேஜ் (Bhumibol Adulyadej) அவர்கள். அவர் மிகப்பெரிய சனத்தொகை கொண்ட எம்மைப் போன்ற நிலப்பரப்பை கொண்ட ஓர் ஆசிய நாட்டின் பாரம்பரிய மன்னராக நீண்ட காலம் இருந்தவர். மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒருவர். அவர் இயற்கை வளத்தை நேசித்தவர். அவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை தெரிந்தவர். தனது நாட்டில் மட்டுமல்ல, அண்டைய நாடுகள் சிலவற்றிலும் கூட தன்னுடைய அரச செயற்திட்டம் (Royal project) என்ற அடையாளமிட்டு தன்னுடைய சொந்த செல்வத்தில் ஒரு பகுதியை இயற்கை வளம் பேணுவதற்காக ஒதுக்கி செயற்பட்டவர். அந்த நாட்டு மக்கள் நம்மை போல் ஒரு ஆசிய இந்து பெளத்த பண்புகளை உள்ளடக்கிய சமூகத்தை சார்ந்தவர்கள். இன்று உணவு உற்பத்தியில் உணவை அளவாக பதனிட்டு பேணி பாதுகாப்பது போன்ற தொழில்நுட்பங்களில் மிக தலைசிறந்த நாடாக தாய்லாந்து இருக்கிறது. அங்கே உள்ள பல்கலைகழகங்கள் பல்வேறு முனைகளில் மிக திறமையானவையாக இருக்கின்றன.
இவை எல்லாவற்றையும் சொல்வதற்கு காரணம், தாய்லாந்து அரசர் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் international soil association இற்கு முன் உலக மண் தினம் அவதானிக்கப் பட வேண்டும் என்று ஒரு கருத்தை முன் வைத்தார். அதனை அவர்கள் முழுமையான செயற்பாடாக ஆக்குவற்கு சில ஆண்டுகள் சென்றன. 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகளாவிய ரீதியில் எல்லோராலும் கவனிக்க வேண்டிய தினமாக முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வருகின்ற மண் தினத்தில், எமது உணவின் அவசியமான மூலப்பொருளான எம்மை தாங்கி நிற்கின்ற பூமியின் வெளிப்பாடாக இருக்கின்ற எம்முடைய மண் பற்றி நாம் ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம். மண் என்றால் துகளாக இருக்கின்ற மேல்படை மட்டுமல்ல அதற்கு கீழே மீட்டர் கணக்கில் ஆழமாக புதைந்திருக்கின்ற பொக்கிஷம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனூடாக மட்டுமே மண்ணின் தாற்பரியத்தை நாம் உணரலாம்.
இந்த மண் தினத்தில் பள்ளிகளிலும் வீடுகளிலும் மண்ணை பாதுகாப்பது பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்கு எம்முடைய இளைய தலைமுறையினருக்கு நாம் பல விடயங்களை சொல்லிக் கொடுக்கலாம். ஒரு பக்கம் பட்டப் படிப்பிற்கும் மேற்கல்விக் கூடங்களிலும் கல்வி கற்பவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களும் அவர்கள் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும இந்த தினத்தின் போது தம்முடைய துறை சார்ந்த அறிவை மண்வளம் சார்ந்த விடயங்களோடு இணைத்து பார்க்க வேண்டும். அந்த வகையில் கற்கும் அனுபங்களை தங்களுடைய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பார்களேயாயின் அது மிகவும் சிறப்பான ஒன்றாக அமையும்.
நான் கால்நடை வளர்ப்போடு தொடர்புபட்டவன். அது தான் என்னுடைய அறிவியல் துறையாக இருந்தாலும் விவசாய கல்வி கூடங்களில் பல நாடுகளில் ஆய்வுசெய்து ஆசிரிய பணி செய்து உலவி வந்துள்ளவன் என்ற வகையில் நான் ஒரு சில விடயங்களை முக்கியமாக சொல்லலாம். என்னுடைய கல்வி ஆய்வு பயணத்தில் உயர்கல்வி எல்லாம் பெற்று ஒரு நிரந்தரமான ஆய்வாளனாக வெளிவந்த போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு பல்கலைகழகமாக வருவதற்கு முதல் ஒரு சிறியகல்விக் கூடமாக வெறும் கல்லூரியாக மட்டும் இருந்த ஒரு விவசாய கல்லூரியில் 80 களின் ஆரம்பத்தில் நான் ஆசிரியராக சேர்ந்தேன்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து அந்நாட்டில் முதல் முதல் விவசாயத்தை ஆரம்பித்தார்கள். அந்த 200 ஆண்டு காலத்தில் அவர்கள் குறிப்பிட்ட வளம் மிக்க பகுதிகளில் செய்த விவசாயத்தின் பெறுபேறாக மண் பாழாகுதல் (soil degradation) என சொல்லப்படுகின்ற ஒரு விடயம் பெருந்தலைப்பாக உணரப்பட்டது. அப்பொழுது அங்கு செய்யப்பட்ட விவசாயத்திற்கும் அவர்கள் மேற்கொண்ட விவசாய முறைகளிற்கும் ஏற்பட்ட நெருக்கடியையும் ஆபத்து நிலையையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
மண் அரிப்பு, மண் உவராகுதல், மண் அமிலத்தன்மையடைதல் ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரு மண் பாழடைந்த தன்மைக்கு போவதை மத்திய அரசாங்கம் கருத்தில் எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண் பாழடைந்து போய்விடும் என்பதை அவர்கள் முக்கிய பொருளாக எடுத்து பேச வெளிக்கிட்டார்கள். அவுஸ்திரேலியா மரங்கள் அடர்த்தியாக உள்ள ஒரு நிலப்பரப்பு அல்ல. உலகத்திலேயே மிக வலு குறைந்த ஒரு மண், பூர்வீக மணல் சார்ந்த மண்ணைக் கொண்ட நிலப்பரபு அது. இருந்த மரங்களையும் வெட்டி அங்கே இயந்திர மயப்படுத்தப்பட்ட விவசாயம் உருவாக்கப்பட்டு பெரும் ஏக்கர் கணக்கில் செய்த விவசாயத்தின் விளைவை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். எத்தனை எத்தனை மில்லியன் கனவளவு மண் காற்றோடு அள்ளுப்பட்டு கடலினுள் செல்கின்றது என்பதை துல்லியமாக கணக்கிட்டார்கள். இதற்கான பரிகார முறைகளை தேடிய போது மர நடுகை அங்கே முக்கியமான ஒரு பரிகாரமாக சொல்லப்பட்டது. அந்நேரத்தில் இருந்த அரசு மிகப்பெரிய மில்லியன் கணக்கான டொலர் தொகையை தேசம் எங்கும் மரங்களை நாட்ட ஒதுக்கியது.
அதேவேளை, நானிருந்த கல்லூரியில் இருந்த விவசாய பீட ஆசிரியர்கள் 40 பேரும் நானும் “இங்கே விஞ்ஞானம் சார்ந்த விவசாயம் (Agricultural science) என்ற துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட விவசாயம் எம்மை நடுச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இனிமேல் இப்பகுதிகளில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாம் விவசாயம் செய்ய முடியாது.” என்கின்ற ஒரு தீர்க்கமான ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டோம். விவசாயம் செய்வது என்கின்ற தொழில் முயற்சியையே நாம் மீள வரைவிலக்கணம் செய்ய வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்தோம். அதன் விளைவாக அந்த பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு என்ற பெயரில் விவசாய பீடத்தில் வழங்கப்பட்ட நான்கு ஆண்டு பட்டதாரிப் படிப்புக்கான கல்வி முறையை நாம் தலைகீழாக புரட்டிப் போட்டோம்.
அதாவது ஒரு விஞ்ஞான பூர்வமான விவசாயக் கல்வி என்பது தன்னந்தனியே மக்களையும் மண்ணையும் பிரித்து மண்ணையும் உற்பத்தியையும் பிரித்து உற்பத்தியில் மட்டும் அக்கறையை செலுத்துகின்றது. பொருளியல் கோட்பாடுகளுக்கு அமைய நல்ல சந்தைப்படுத்தப்படுத்தப் படக்கூடிய பொருள், அதனுடைய விளைச்சல், என்ற ஒன்றை மட்டும் ஒரு அளவீடாக கொண்டு செய்த விவசாயத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இந்த விவசாயப் போக்கு மற்றும் அதற்குரிய அறிவுத்துறைகள் மீள சிந்திக்கப்பட வேண்டியவை. மண்ணையும் மண்ணின் கீழுள்ள உயிரிகளையும் நிலத்தில் வளர்ந்திருக்கின்ற மரங்களையும், பறவைகள், விலங்குகளையும், மனிதர்களையும் மனிதர்களின் ஆசைகள் அபிலாசைகளையும் அவர்களுடைய உணவுத் தேவைகளையும் வருமான தேவைகளும் வாழ்வாதாரம் கொண்டிருக்கின்ற அடிப்படை விடயங்களையும் என்று எல்லாவற்றையும் ஒன்றிணைத்து பார்க்கின்ற ஒரு பார்வையை அனைத்து பட்டதாரிகளும் பெற வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Holistic என்று சொன்னோம்.
இவை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி பார்க்கின்ற ஒரு பார்வையை அனைத்து பட்டதாரிகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நான்கு ஆண்டு பட்டப்படிப்பை மாற்றியமைதோம். தனித்தனி பாடங்களை ஒவ்வொரு விரிவுரையாளரிடம் கற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் ஏதோவொரு நாள் ஒன்று திரட்டிப் பார்த்து விவசாயிகளுக்கு உதவுவோம் என்று இல்லாமல், படிக்கிற காலத்திலேயே படிப்பின் ஆரம்பத்தின் முதல் நாளில் இருந்தே உண்மையான தோட்டங்களில் உண்மையான பண்ணைகளில் உண்மையான விவசாயிகளோடு ஈடுபடுவதன் மூலம் அவர்களின் தேவைகளை பிரச்சனைகளை அவற்றின் பன்முகத்தன்மைகளை தெரிந்து அதற்கேற்ற வகையில் அவர்களின் கல்வியை வகுத்து எடுத்துச் செல்வதாக அவர்களின் கல்விப் பயணத்தை மாற்றி அமைத்தோம்.
அந்த பயணத்திற்கு மூலமாக அதற்கு உந்து சக்தியாக என்ன அச்சுறுத்தல் இருந்தது என்று நான் ஏறத்தாழ 35 வருட காலத்திற்கு பின்பு திரும்பி பார்க்கிறேன். அந்த உந்து சக்தியாக இருந்தது அங்கே பாழடைந்து கொண்டிருந்த மண். அதாவது அந்த தேசத்தின் பெரும் ஏக்கர் விவசாயத்தின் மூலமாக மண்ணிற்கு ஏற்பட்ட அந்த மிகப்பெரும் பாதிப்புத் தான் உந்துசக்தியாக இருந்தது. அதை தொடர்ந்து வந்த இந்த 40 ஆண்டு காலத்தில் நில பாதுகாப்பு, நிலமுகாமைத்துவம், நிலைபேறான மண்ணின் முகாமைத்துவம் எல்லாம் புதிய சிந்தனைகள் புதிய வாய்ப்புகளின் அடிப்படையில் இன்று முன்னர் இருந்ததை விட மேம்பட்ட நிலைக்கு அங்கே சென்றிருக்கின்றன.
அதை ஒப்பீடாக நம்முடைய தேசத்தினுடைய நிலத்துடன் ஒப்பு நோக்கினால் இங்கே மண் பாழடையவில்லை. மண் மலடாகி எதுவுமற்ற வெறும் தரையாக ஆகவுமில்லை. ஆனால் பெரும் நிலப்பரப்புக்களில் ஒரே பயிரை அது நெற்பயிராக இருந்தால் அதே பயிரை நீண்ட காலம் செய்தவர்கள் சிலவேளைகளில் மண் மலடாகி போவதை ஏற்கனவே கண்ணால் கண்டு இருக்கக்கூடும். என்னோடு செயற்கை உரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் என்னோடு வாதிட வந்தவர்கள் அந்த மாற்றத்தை கண்டவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் இன்னும் அந்த விளிம்பு எல்லைக்குப் போய் சேரவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. இருப்பவற்றை இன்னும் செழுமையாக பராமரிப்பதற்கு விஞ்ஞானம் தந்த உதவியை ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எம்மிடம் வந்து சேர்வன எல்லாம் உகந்தவை அல்ல என்ற நிலைப்பாட்டில் நின்று நோக்கி தேவையானவற்றை தேவையான அளவில் எடுத்து கொண்டு போகலாம் என்ற ஒரு செய்தியும் இங்கு முக்கியமாகிறது.
நெற்பயிர் சார்ந்த நெல் விளைச்சலுக்கு உகந்ததாக எல்லோராலும் அறியப்பட்ட யூரியா என்ற செயற்கை பசளையை பற்றிப் பேசுவதாக இருந்தால் அதையும் அதையொட்டிய மற்றைய ரசாயன பசளைகளையும் மேற்கு உலகத்தில் இருந்து பெரும் செலவில் இலங்கை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. அதற்குரிய பணவசதி இல்லாத ஒரு நெருக்கடியின் மத்தியில் அந்த இறக்குமதியை தடை செய்கிறோம் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அதைப் பற்றிய அறிவுள்ள சமூகம் இது தவறானது மீள சிந்திக்கப்பட வேண்டும் என்று அறிக்கைகள் விட்டது. அந்த நெருக்கடியை சமாளிக்க ஏறத்தாழ ஏழு எட்டு மாதங்களுக்குள் சில பயிர்களுக்கு சில தேவைகளுக்கு நாம் இந்த உரத்தை இறக்குமதி செய்வோம் என்று அரசாங்கம் பின் வாங்கிக் கொண்டது பலருக்கு தெரிந்த விடயம். அதன் பின்விளைவாக இங்கு 2022ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கை இன்னும் பல பகுதிகளில் போதிய அளவு உரம் இல்லாத நிலையில் தான் நடைபெற்றுள்ளது. அந்த விளைச்சலின் பெறுபேறுகளை நாம் இங்கு சில மாதங்களில் அறிவோம்.
இங்கே நினைவில் வைத்திருக்க வேண்டியது, நீண்டகாலமாக பசுமைப்புரட்சிக்கு தேவை என உரத்தை இறக்குமதி செய்து அதை அரைவிலைக்கும் கால்விலைக்கும் மானியத்தின் அடிப்படையில் வழங்கி மக்களை பழக்கப்படுத்தியதன் ஒரு விளைவாகத்தான் அது இல்லை என்றால் விவசாயம் இல்லை என்ற எண்ணத்திற்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். அது இலகுவாக கிடைக்கின்ற பொருள், மலிவாக கிடைக்கின்ற பொருள், போட்டு அடுத்த நாள் காலையிலேயே கண்கூடாக காணுகின்ற பச்சைத் தன்மையை தவறாக விளங்கி, அதுதான் மந்திரவித்தையால் வந்த பொருள் அது இல்லை என்றால் விவசாயம் இல்லை என்ற எண்ணத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு தலைமுறை தான் இன்று விவசாயம் செய்கிறது என்பதை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு இந்த நம்பிக்கையின் மறுபக்கங்களை சொல்லிக் கொடுப்பது யார்? அரசாங்க விவசாயத்துறையா? அவர்களுடைய விவசாய போதனா ஆசிரியர்களா? அல்லது அந்த இரசாயன பொருட்களை எம்மிடம் வந்து விற்பவர்களா? அல்லது இரண்டைப் பற்றியும் போதியளவு தெளிவில்லாமல் வேறு பல்வேறு கருத்துக்களை பொறுப்பற்ற வகையில் சொல்லித் திரிபவர்களா? அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. அதை எல்லோரும் கணித்துக் கொள்ளலாம்.
இங்கே பல சிக்கல்கள் இருக்கின்றன. இங்கே உள்ளக முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த உரம் இலேசாக கிடைக்கின்ற பொருள் இல்லை. அது செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றபடியால் அதற்கொரு செலவிருக்கின்றது. உண்மையிலே பார்த்தால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முழு உலகிலும் இரசாயன உரங்களின் விலை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இதற்கு உக்ரைன் தேசத்தில் நடைபெறுகின்ற யுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடி இதனை மேலும் சிக்கல் ஆக்கி வைத்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் நாம் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும் நான் நிற்கின்ற இந்த மண்ணின் இயற்கை வளத்தையும் இந்த மரங்களில் இருந்து சொரிகின்ற இலை குழைகள் இந்த மண்ணிற்கு கொடுக்கின்ற வளத்தையும் பூரணமாக பயன்படுத்த வேண்டும். மரங்கள் இயற்கையாக கொடுக்கின்ற இந்த கொடையை கூட்டி கொண்டு போய் குப்பையாக்கி வேலிக்கு அப்பால் போட்டு நெருப்பாக கொளுத்தி வேடிக்கை பார்ப்பதைப் போன்ற முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்கவும் முடியாது.
தொகுப்பு - துருவன்
நிமிர்வு தை 2023 இதழ்
Post a Comment