தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் - பகுதி : 03

 


ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 13.03.2022  அன்று நடாத்தப்பட்ட "தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும்" என்கிற உரையாடல் வகுப்பின் மூன்றாவது பகுதி இங்கே பிரசுரமாகிறது.

சமஸ்டி தான் வேண்டுமென்று கோரிய தமிழ் தலைவர்கள், சமஸ்டி வேண்டாம் ஒற்றை ஆட்சி தான் வேண்டும் என்று கோரிய தமிழ் தலைவர்கள் இரண்டு பகுதியினரும் இணைந்து 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். முற்று முழுவதும் சிங்கள அரசில் இருந்து பிரிந்து  நின்று தனி அரசை அமைத்தல் என்கிற வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தில் இரண்டு நாடு என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தீவு இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும். ஒரு நாடு சிங்கள நாடாக இருக்கும். மற்றையது தமிழர்களின் நாடாக இருக்கும்.  எனவே இறைமை உள்ள இரண்டு நாடுகள் என்ற கோட்பாட்டிற்கு வந்தார்கள்.

இறைமை உள்ள இரண்டு நாடுகள் என்பதற்கு பதிலாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்று இன்று சொல்லப்படுகிறது. அல்லது, ஒரு நாடு இரு தேசங்கள் என்று சொல்லப்படுகிறது. கனடாவினுடைய வடிவத்தை தமிழ் காங்கிரஸ் கட்சி சொல்லி இருக்கிறது. விக்னேஸ்வரனினுடைய அணியினர் “நாடுகளின் கூட்டாட்சி” (confederation) என்று சொல்கிறார்கள். இந்த மூன்று பத பிரயோகங்களையும் தெளிவாக அறிவுபூர்வமாக நாங்கள் விவாதிக்க வேண்டும். அப்படி தெளிவான விளக்கங்கள் சொல்லத் தவறினால் அறிஞர்களே இந்த காலகட்டத்தில் இவற்றைப் பற்றி தெளிவான வரையறைகளை செய்யாமல் இருந்தார்கள் என்ற பழிக்கு ஆளாக நேரிடும். ஒரு காலத்தில் நாங்கள் அறிஞர்களாக மக்களின் பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்தோம், இன்று அவற்றுடன் சம்பந்தமற்றவர்களாக மாறி விட்டோம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்.

தமிழீழ கோரிக்கையை களத்தில் இருக்கும் மூன்று பிரிவினரும் கைவிட்டு விட்டார்கள். சமஸ்டி கோரியவர்களும் ஒற்றை ஆட்சி கோரியவர்களும் சேர்ந்து தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரினார்கள். இன்று அதனை கைவிட்டு சமஸ்டி கோருகிறார்கள். இந்த சமஸ்டியில் விக்னேஸ்வரன் கூறுகின்ற confederation என்பதற்கு அவர் அதிகம் விளக்கங்களை கொடுக்க வேண்டியவராக இருப்பார். உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் confederation இல்லை. அமெரிக்காவில் 1776ஆம் ஆண்டு முதலாவது யாப்பு உருவாக்கப்பட்ட போது confederation அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்தில் தோல்வியில் முடிந்தது. அது கைவிடப்பட்டு பின்பு 1789ஆம் ஆண்டு அமெரிக்க யாப்பு கூட்டாட்சி (federation) என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அது தான் இன்று வரையும் இருக்கிறது.

 சுவிற்சர்லாந்தில் இருப்பதை confederation என்று சொல்கிறார்கள், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு சில அம்சங்கள் தான் உண்டு. அங்குள்ள தேசியம் துண்டு துண்டாக அறுக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு உடைக்கப்பட்டது. Confederation கன்பெடரேஷன் என்பது அதி உச்ச கோரிக்கை.

Confederation வரலாற்றில் எங்கே தொடங்கியது தெரியுமா? கி. மு. 492 ஆம் ஆண்டு பாரசீகர்கள் இலட்சக்கணக்கான துருப்புக்களோடு கிரேக்கத்தை ஆக்கிரமிக்க படையெடுத்தார்கள். பாரசீகம் என்பது இன்றைய ஈரான். பாரசீகர்களின் இந்த படையெடுப்பு கி. மு. 490 ஆம் ஆண்டு வரை இரண்டு வருடங்கள் நீடித்தது. அந்தக் காலத்தில் தான் பல நூற்றுக்கணக்கான நகர அரசுகளாக இருந்த கிரேக்கர்கள் ஐக்கியப்பட்ட ஒரு அரசை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தார்கள். பாரசீகருக்கு எதிரான ஓர் ஒருமித்த முன்னணியை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தனர். பாரசீகரினது 2 ஆவது படையெடுப்பு கி. மு. 480 இல் நிகழ்ந்தது. அது ஒரு வருடத்துக்குள்ளாகவே கி. மு. 479 இல் தோற்கடிக்கப்பட்டது. அப்போது கிரேக்கத்தின் பல நூற்றுக்கணக்கான நகர அரசுகளும் இறைமை உள்ள நகர அரசுகளாக இருந்தன. அவை தம் இறைமையை பேணிக்கொண்டு confederation என்ற ஒரு படைக் கட்டமைப்புக்குள் சென்றன. அந்த படைக்கட்டமைப்பு இரண்டு வகைகளில் இணைக்கப்பட்டது, காலாட்படை, கடற்படை. காலாட்படைக்கு ஸ்பார்டா (Sparta) வும் கடற்படைக்கு ஏதென்ஸ் (Athens) சும் தலைமை தாங்கின. ஏனைய நூற்றுக்கணக்கான அரசுகளை ஒன்றிணைத்து confederation ஐ அவர்கள் வடிவமைத்தார்கள். அங்கு எல்லா அரசுகளும் இறைமையோடு கூட்டுச்சேர்ந்து எதிரியை எதிர்த்து போராடின, வெற்றியும் பெற்றன. அவ் வெற்றியை இன்று வரை நிலைநாட்டுகின்றன. அது முக்கியமான விடயம். வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல வெற்றியை நிலைநாட்டுவது மிக முக்கியம். இங்குதான் confederation இறைமையுள்ள அரசுகளின் கூட்டாக வந்தது.

சமஸ்டியை பார்ப்போமேயானால், இந்த confederation அமைப்பில் இருந்து தான் சமஸ்டி வந்தது. பரந்த அதிகாரமுள்ளதாக confederation இருப்பது சாத்தியம் என்பது தெரிந்த பின்பு மத்தியரசுக்கு அதிக அதிகாரங்களும் மாநில அரசுக்கு குறைந்த அதிகாரங்களும் என்ற வகையில் உலகெங்கும் சமஸ்டி அலகுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாகிய சமஸ்டி முறையின் கீழ் உலகம் பல்லினப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது. தீர்வு காண மறுக்கப்பட்ட இடங்களில் தேசங்கள் பிரிந்து சென்றிருக்கின்றன. 

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் சமஸ்டி முறையிலான தீர்வுக்கான போராட்டம் நூறு வீதத் தோல்வியில் இன்று வரைக்கும் இருக்கிறது. ஏனெனில் இந்த சமஸ்டிக் கோரிக்கைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ் தலைவர்கள் முதலில் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒற்றை ஆட்சியில் இருந்து வந்தார்கள். அடுத்து வந்த தலைவர்கள் சமஸ்டியை கோரினார்கள். பிறகு இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து தனி நாடு என்று வந்தார்கள். தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். இப்பொழுது அந்த இரண்டு தரப்பினரும் ஒன்று சேர்ந்து தான் மூன்று அணிகளாக இருக்கிறார்கள். இந்த மூன்று அணிகளும் ஏறக்குறைய சமஸ்டி என்ற கோட்பாட்டையே முன்வைக்கிறார்கள்.

இன்று முன்வைத்திருக்கின்ற சமஸ்டி கடந்த காலத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்று பாரம்பரியத்தில் நீங்கள் இப்போது வெற்றியை பெற என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? இது தான் பிரதானமான விடயம். கடந்த காலத்தில் தோல்வியடைந்ததில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? இப்போது சொல்ல போகிற விடயம் என்ன? இதில் ஒரு தெளிவுக்கு போக வேண்டும். ஏனென்றால் இலங்கை இனப்பிரச்சனை ஏனைய உலக நாடுகளில் உள்ள இனப்பிரச்சனை போல அப்படியே ஒப்பிட முடியாது. இலங்கை இந்திய புவிசார் அரசியல் யதார்த்ததோடு இதனை பார்க்க வேண்டும். இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியலினுடைய தாக்கத்தோடு தான் இலங்கையில் இந்த இனப்பிரச்சனை தோன்றியிருக்கிறது. இது தான் அதனுடைய மூலம். 

தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்த பொழுது ஐக்கிய தேசிய கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திர கட்சியும் சரி இரண்டும் சொன்ன விடயம், ‘தமிழன் பிரிந்து சென்று சமஸ்டி ஆட்சி முறையோடு இந்தியாவோடு இணைய போகிறான்’ என்பது. ‘சமஸ்டி முறையோ தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதோ இரண்டும் தமிழன் பிரிந்து தென் இந்தியாவோடு இணைய வழி வகுக்கும். எனவே நாங்கள் சமஸ்டியை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழை உத்தியோபூர்வ மொழியாக்கவும் முடியாது. தமிழுக்கு சம அந்தஸ்தும் கொடுக்க முடியாது.’ இதனைத்தான் இரண்டு கட்சிகளும் ஒன்றாக முன்வைத்தார்கள். இதற்குள் தான் இனப்பிரச்சனையின் சூத்திரம் தங்கி இருக்கிறது.

இப்போது இந்த மூன்று அணியினரும் ஓரே கொள்கையை சொல்கின்ற போது ஏன் ஒன்றுப்பட்ட வகையில் போராட்டத்தை பலமாக முன்னெடுத்து எதிரிக்கு நீங்கள் ஒரு சவால் விட முடியாது? மன ரீதியாக ஒரு மாற்றத்திற்கு வர வேண்டும். மூன்று பேரும் மூன்று துண்டுகளாக இருங்கள், ஆனால் மூன்று பேரும் சேர்ந்து  ஒரு பொது அமைப்பை உருவாக்கி குறைந்தபட்ச உடன்பாட்டு அடிப்படையில் எதிரிக்கு எதிராக போராடுங்கள். நாங்கள் ஏன் துண்டு துண்டாக இருந்து அழிகிறோம்? இந்த நிதர்சனமான உண்மையை ஏன் புரிய தவறுகிறோம்?

பலம் வாய்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே கட்டமைப்பை கொண்ட இலங்கை அரசுக்கு எதிராக பலவீனமான, அளவால் சிறிய இனமான தமிழ் இனம் துண்டுபட்டிருக்கும் தலைவர்களால் மூன்று தலை நாகமாக இருக்கிறோம். ஆனால், ஒரே வயிற்றோடு இருக்கிறோம். கடந்த காலத்தில் தோல்வியை கொடுத்த நீங்கள் இனியும் தோல்வியை கொடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்து இருக்கின்ற முயற்சி என்ன? இனியும் வெற்றியை பெற என்ன செய்ய போகிறீர்கள்? செல்லக் கூடிய வழி என்ன? 

களத்தில் நிற்கும் மூன்று அணியினரும் கடந்த பன்னிரெண்டு  வருடமாக தோல்வியை தான் கொடுக்கிறீர்கள். சமஸ்டி என்ற கோரிக்கை பொது என்றால் அந்த பொதுவான கோரிக்கையின் அடிப்படையில் நீங்கள் பொதுவாக ஏன் போராட கூடாது? பொதுவாக போராடுவதற்கான வழிமுறை என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.  

மு. திருநாவுக்கரசு-

தை 2023 நிமிர்வு இதழ்-

தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் பகுதி : 01

தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் - பகுதி : 02

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.