திருகோணமலையும் உள்ளூராட்சி தேர்தலும்

 


தமிழர் தாயகத்தின் தலைநகர் எனக் கருதப்படும் திருகோணமலையில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தல் தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு மிகவும் முக்கியமான ஒன்று. திருகோணமலை நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

வரவிருக்கும் மாநகர சபையில் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்கும் அதனூடாக மாநகர சபையை சிங்களவர் கைப்பற்றுவதற்கும் ஏது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக திருகோணமலை மாநகரசபை எல்லைக்குள் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை உள்வாங்கவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை வெளித்தள்ளும் வகையிலும் திருகோணமலையின் எல்லையை மாற்றியமைக்கும் வேலைகளும் நடந்துள்ளன. 

இந்தப் பின்னணியில் இடம்பெறவுள்ள திருகோணமலைக்கான நகரசபைத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் திருகோணமலை தமிழ் மக்கள் நகரசபையை தமிழர்கள் தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  அதன் பின்விளைவாக 2023 தைமாதம் 8 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைமுறைகள் தொடர்பிலும், அத்தேர்தலில் தமிழர் நலன் சார்ந்த முன்னெடுப்பு தொடர்பிலும் கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் “தளம்” அமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி சார்ந்தோர், சுயேட்சை குழுக்கள், அரசியல் ஆர்வம் உடையோர் மற்றும் நலன் விரும்பிகள் பங்களிப்புடன் இது இடம்பெற்றது. "தமிழரின் எதிர்கால இருப்பை சிந்தித்து செயற்படுவோம்",  "நாம் வாழ ஒரு நிலம்" என்ற தொனிப்பொருட்களில் இந்த கலைந்துரையாடல் அமைந்திருந்தது.

இதில் பெரும்பாலான கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களை சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு திருக்கோணமலையின் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிலவரங்கள், இம்முறை தேர்தலில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பிலும், சுயேட்சைக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதுடன், உள்ளூராட்சி சபைகளின் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


அங்கு மாநகரசபை தமிழர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கட்சி வேறுபாடு இன்றி எங்கள் பிரதேச மக்களுக்காக செயற்பட வேண்டும். நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். தனித்தனியாக பிரிந்து போகாமல் எல்லோரும் ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேலும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தனிப்பட்ட ஆளுமை தான் பலமாக இருக்க வேண்டும். சிறந்த இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும். விட்டுக்கொடுப்போடு கலந்து பேசி தொடர்ந்து செயல்பட வேண்டும். பலமான கட்சியை தேடாமல் வாக்கு பெறக்கூடிய வெற்றி ஈட்டக்கூடிய ஆளுமை உடையவர்கள் நல்ல பலமான சுயேட்சையாக ஒன்று திரண்டு செயல்பட வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்தி சார் விடயங்களை மாத்திரம் கதைக்காமல் எமது உரிமை, கடமை, என்பவை பற்றியும் கதைக்க  வேண்டும். நாங்கள் சமஷ்டி முறை தமிழருக்கு தீர்வாக வேண்டும் என்பதை சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் சொல்கிறோம். நிரந்தரமான தீர்வை பெற வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான அடிப்படையான விடயங்கள் நடக்க வேண்டும். அதேவேளை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாகவும் நாம் கதைக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்ப்பட்டது.

தற்போது இருக்கும் தேர்தல் முறைமையின் படி பெரும்பான்மை கட்சிகளை விட சிறுபான்மை கட்சிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து தேர்தல் கேட்கும் போது ஆசன எண்ணிக்கை குறையும். ஆகவே வெற்றி பெற்றதன் பின்பு சுயேட்சை குழு எல்லாம் சேர்த்து கூட்டாக ஆட்சி அமைப்போம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இன்று தமிழர் அரசியற் பரப்பில் முக்கிய தாக்கத்தை கொண்டு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது விசனத்துக்கு உரியது. ஒரு இனமாக திருகோணமலையில் எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள். இச் சூழலில் இவ்வாறான நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது கவலைக்கு உரியது.  


உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக திருகோணமலையில் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட அவர்களுக்கு நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். இவ்வாறான கூட்டங்கள் தமது நேர விரயம் என்றுகூட அவர்கள் கருதியிருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் தமது பக்க நியாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லவாவது இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

“இவ்வாறான கூட்டங்கள் கட்சிகளிடையே ஒற்றுமையை கோருவதற்காக நடத்தப்படுகின்றன. கட்சிகளின் நிறுவனம் சார்ந்த ஒற்றுமைக்கு அரசியல் பெறுமதி இல்லை. கொள்கை சார்ந்த ஒற்றுமையே அரசியல் பெறுமதி வாய்ந்தது. ஆகவே ஒரு குறிக்கோளுக்காக, நிலைப்பாட்டுக்காக அல்லது கொள்கைக்காக மட்டுமே ஒற்றுமைப்பட வேண்டும்.” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகள் சிங்களவர் கைகளுக்கு அல்லது சிறிலங்கா அரசின் கைக்கூலிக் கட்சிகள் மற்றும் சிறிலங்கா தேசியக் கட்சிகளின் கைகளுக்கு போய்விடக் கூடாது என்பதுவும் ஒரு குறிக்கோள் தான். ஒரு நிலைப்பாடு தான். ஒரு கொள்கை தான். இந்த நிலைப்பாட்டின் மூலமே ஈ.பி.டி.பி  போன்ற அரசு ஆதரவுக் கட்சிகளையும் தென்னிலங்கை கட்சிகளையும் தோற்கடிக்க முடியும். இவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதும் ஒரு கருத்தியல் தான். அந்த கருத்தியலை வைத்துக் கொண்டாவது ஒன்றுபட முடியாவிடின், கொள்கை வேறுபாடு காரணமாக மற்றக் கட்சிகளுடன் ஒன்றுபட முடியாது என்று இக்கட்சிகள் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் கொள்கைகள் கோட்பாடுகளால் தமிழ் மக்களுக்கு இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் என்ன பயன்? 

பாராளுமன்ற அரசியலில் இனப்பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதிற்கு கைக்கொள்ளப்பட வேண்டிய தந்திரோபாயம் தொடர்பாக கட்சிகளிடையே முரண்பாடு இருக்கலாம். ஆனால் திருகோணமலையில் இன்று நடப்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இருப்புக்கான வாழ்வா சாவா என்ற போராட்டம். இதனை தமிழ் தேசிய கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இன்று எமக்குத் தேவைப்படுவது சிங்கள அரசுக்கு எதிராக தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றார்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பது. அதற்காக சும்மா ஒரு தேர்தலுக்காக ஒற்றுமையாகுமாறு மக்கள் கோரவில்லை. தேர்தல் முடிந்த பின் பிரிந்து போகுமாறும் கோரவில்லை.  இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகரீதியில் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டுங்கள். 

உள்ளூராட்சி சபைகளை ஈ.பி.டி.பி  இடமும் பிள்ளையானிடமும் தென்னிலங்கை கட்சிகளிடமும் தூக்கி கொடுத்து விட்டு, அவர்கள் கடலட்டை பண்ணைகளுக்கும் காடுவெட்டவும் மணல் அகழவும் அனுமதி வழங்கிய பின்னர் அவற்றை வைத்து எதிர்ப்பு அரசியல் நடத்துவதன் மூலம் மக்கள் இன்று எதிர் நோக்கும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு பதில் கிடைக்குமா? 

இன்று நாடு எதிர் நோக்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைக்கு முகம் கொடுக்க அரசு எல்லா வளங்களையும் சுரண்டி விற்கவே பார்க்கும். இதனை தடுக்க வேண்டுமாயின் திருகோணமலை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும்  ஆகக்கூடிய அளவுக்கு உள்ளூராட்சி சபைகளை தமிழர்கள் கைப்பற்றுவது இன்றைய இக்கட்டான சூழலில் மிகவும் முக்கியமானது. அதுவே தமிழ் மக்கள் நலன் சார்ந்தது. தமிழ் தேசத்தின் நலம் சார்ந்தது.


தொகுப்பு - ரஜீந்தினி 

தை 2023 நிமிர்வு இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.