இனப்படுகொலையை தடுக்கத் தவறிய இலவசக் கல்வி

 


நீதிமன்றங்களில் பிரம்படி தண்டனை நிறுத்தப்பட்ட போதே பள்ளிக்கூடங்களிலும் பிரம்படி தண்டனை நிறுத்த வேண்டும் என்பது சட்ட ரீதியாக வந்து விட்டது. 2005ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் செயலாளராக கலாநிதி தாரா டீ மெல் இருக்கும் போது அந்த சட்டம் வந்து விட்டது.

அதன்படி பிள்ளைகளை உடல் ரீதியாக தண்டிக்க முடியாது, அதேநேரம் மன ரீதியாகவும் மனக்காயம் வருமளவில் தண்டிக்க முடியாது. இந்த சட்டத்திற்குள் நின்று தான் மிகுதியை யோசிக்கலாம்.

எங்களுடைய பாரம்பரிய ஆசிரியத்துவம் வேறு, 2005 க்கு பின்னரான கல்விச் சூழல் வேறு. ஆனால், இன்றைக்கு போட்டிக்கல்வி என்று வந்த பிறகு பல இடங்களில் பிரம்பு இருக்கிறது.

கல்வியில் சிறந்த பெறுபேறை காட்டுவதற்கு பிரம்பு தேவை என்ற ஒரு கருத்து ஒரு பகுதி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் இருக்கிறது. கண்டிப்பான ஆசிரியரே சிறந்தவர் என்ற ஒரு கருத்து பொதுவாக தமிழ் நடுத்தர வர்க்கத்திடம் உள்ளது.

இந்த பின்னணிக்குள் பிள்ளைகளை சரீர தண்டனைக்கு வெளியே எப்படி கையாள்வது என்பது தொடர்பாக ஆசிரியர்களுடைய ஆளுமையை விருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

அதை விருத்தி செய்ய முடியாமல் தடுத்த அம்சங்களில் ஒன்று உக்கிரமடைந்த போர். போருக்கு பின்னர் கடந்த 13 ஆண்டுகளாக நிலவுகிற வெற்றிடங்கள். மற்றையது, தொழில்நுட்ப பெருக்கம்.

அதாவது, ஒரு பிரச்சனை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போகிறதோ இல்லையோ விரைவில் முகநூலில் செய்தியாக வந்து விடும்.

ஆனால், ஆசிரியர்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது போட்டிக்கல்வி. நாங்கள் ஒரு பக்கம் இலவசக்கல்வி என்கிறோம். ஆனால் இன்னொரு பக்கத்தில் ஒரு பிள்ளையை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலேயே மரத்துப் போகச் செய்கிறோம். இது தான் கல்வி இது தான் வாழ்க்கை என்று பிள்ளை அதற்கு பழகுகிறது. அதற்கு பிறகு மரத்துப்போன பிள்ளைக்கு தான் நாங்கள் படிப்பிக்கிறோம்.

ஒரு போட்டியிட முடியாத பராயத்தில் அந்த பிள்ளையை போட்டிக்குள் இறக்கிபந்தயக்குதிரையாக மாற்றி பிள்ளையின் உணர்வுகளை நாங்கள் மரத்துப் போக செய்கிறோம். எல்லாத்துறைசார் நிபுணர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிராகரிக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இன்றுவரை அதனை நிறுத்துவதாக இல்லை. மரத்துப்போன பிள்ளையை தான் நீங்கள் செதுக்கி செதுக்கி O/L, A/L பிறகு அடுத்தடுத்த துறைகளிலும் கொண்டு வந்து விடுகிறீர்கள். 

ஆகவே போட்டிக்கல்வி எங்களுடைய இலவசக்கல்வியின் அடிப்படையையே தகர்ப்பதாக இருக்கிறது. இலவசக்கல்வியின் விழுமியங்களை இல்லாமல் செய்கிறது.

உண்மையில் இலங்கையில் இலவசக்கல்வி என்பது இனப்படுகொலையை, இனப்பிரச்சனையை தடுக்க தவறிய ஒன்று. இலவசக்கல்வியால் ஒடுக்கப்பட்ட மக்களும், நலிவுற்ற மக்களும் கல்வி வசதி அற்ற மக்களும் கற்கக் கூடிய ஒரு நிலைமை உருவானது என்பது முக்கியம். 

ஆனால் அதே நேரங்களில் இலவசக்கல்வி மூலம் வந்த அறிஞர்களும் அரசியல்வாதிகளும் நாட்டை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்? எரிபொருள் வரிசையில் தான் கொண்டு போய் விட்டார்கள். இனப்படுகொலையில் தான் கொண்டு போய் விட்டார்கள்.

இனப்பிரச்சனையை இன்னும் தீர்க்க முடியவில்லை. இலங்கைத் தீவின் இலவசக்கல்வி இன முரண்பாடுகளை தீர்க்க தவறி இருக்கும் பின்னணியில் இந்த இலவசக்கல்வியில் போட்டிப்பரீட்சை என்று வந்தவுடன் இலவசக்கல்வியின் புனிதம் போய் விட்டது.

போட்டிக்கல்வியானது பாடசாலைகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்து விட்டது.

இன்றைக்கு பாடசாலைகளுக்கும் பிரத்தியேக தனியார் வகுப்புகளுக்கும் இடையே சந்தைப் போட்டி என்று வரும் பொழுது பிரத்தியேக தனியார் வகுப்புகளுக்கு தான் சந்தைப் பெறுமதி இருக்கிறது. பாடசாலை ஆசிரியருக்கு சந்தை பெறுமதி குறைவு. அவருக்கு சந்தைப் பெறுமதி குறையும் பொழுது அவர் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டும் என்பது இல்லை.

ஏனெனில் அவரிடம் படித்து பிள்ளைகள் சித்தியடைய போவதில்லை தானே. இது ஒரு அடிப்படை பிரச்சனை.

ஆகவே பாடசாலைகளுக்கு உரிய முதன்மையை அதிகப்படுத்துவது தான் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்குமான உறவை நாங்கள் சீர் செய்ய உதவும். ஆனால் அது சாத்தியமில்லை.

ஏனென்றால் போட்டிக்கல்வி பிள்ளையை பந்தயக் குதிரையாக மாற்றி விட்டது. பந்தயத்தில் ஓடுவது என்று வந்துவிட்டாலே சமூக உணர்வு இருக்காது.

கிட்டத்தட்ட 500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று கடந்த 2022 ஆண்டு 8ஆம் மாதம் அளவில் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. “இந்த z ஸ்கோர் எல்லாம் போட்டு தனக்கு கீழே இருந்த பிள்ளையை தள்ளிவிட்டுத் தான் இவர் மருத்துவராக வந்தவர். இன்றைக்கு நாட்டினை விட்டு வெளியே போய் விட்டார். இது பெரிய அநீதி அல்லவா?” என்று என்னை ஓர் ஆசிரியர் கேட்டார். 

அநீதி இல்லை. அவர் அந்த கட்டமைப்புக்கு (system) உள்ளிருந்து தான் வருகிறார். அந்த கல்விமுறை அவரை போட்டி போட சொல்கிறது. அந்தபோட்டிக்குள்ளால் மற்றவரை தட்டிவிட்டு அவர் மேலே வருகிறார். இப்போது அடுத்த போட்டி வந்துவிட்டது. யார் இந்த நாட்டிலிருந்து முதலில் வெளியேறுவது என்று. இந்த நாட்டில் இருக்க முடியாது என்று வெளியேறுவதில் போட்டி. நாங்கள் அவருக்கு அதனைத் தானே கற்றுக்கொடுத்து இருக்கிறோம். 

நீ போட்டியில் வெல்வதன் மூலம் இங்கிருந்து தப்பிப் போ என்று தப்பித்தலைத் தான் போட்டிக்கல்வி சொல்லி கொடுத்து இருக்கிறது. மற்றவர்களை முந்திக்கொண்டு ஓடு என்று தான் சொல்லி கொடுத்து இருக்கிறது. அங்கு சமூக உணர்வை சொல்லி கொடுக்கவில்லை.

இந்த பின்னணிக்குள் சமூக உணர்வினை தர முடியாத ஒரு கல்வி முறைக்குள் நீங்கள் ஆசிரியர்களை ஆளுமை உருவாக்கிகளாக மாற்றுவது என்பது சவால்களுக்கு உரியது. இந்த போட்டிக்கல்விக்குள் பாடசாலைகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? பாடசாலைகளில் உள்ள இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? 

உயர்தரக் கல்வி என்று வந்துவிட்டாலே இணைப்பாடவிதான செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை வந்துவிட்டது. அவ்வளவு போட்டி! இந்த பின்னணிக்குள் போட்டிக்கல்வி முறைமையானது பாடசாலையின் முதன்மையை குறைக்கிறது. இது ஆசிரிய - மாணவ உறவு உட்பட பல விடயங்களை பாதிக்கிறது. மாணவர்களின் உணர்வுகளை மரத்துப் போகச் செய்கிறது. அவர்களின் ஆளுமையை மழுங்கடிக்கிறது.

நிலாந்தன்

நிமிர்வு தை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.