தமிழர் தரப்பு எவ்வாறு பேச்சை அணுகுவது?


தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதன் மூலமே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார பேரிடரில் இருந்து மீள முடியும். இதனை இத்தீவில் வாழும் யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தமிழ்மக்களின் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கு சிங்கள பேரினவாதம் தொடர்ந்து முயற்சிக்கிறது. மறுபுறத்தில் வடக்கு-கிழக்கைத் தமது மரபுவழித் தாயகமாகக் கொண்டு, அரசியல் கோட்பாட்டினடிப்படையில் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துகின்ற தமிழ்மக்கள் அந்த அடையாளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

இனவழிப்பை எதிர்கொண்டிருக்கும் தமிழ்மக்களின் தேசிய இருப்புக்கான பாதுகாப்பும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்பும் மிக முக்கியமானது. இத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதங்களைத் தருவதாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடம் ஒன்றை இருதரப்புகளும் இணைந்து தயாரிக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு சர்வதேசவிசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணைகள், காணி அபகரிப்புகளை நிறுத்துதல், காணிகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கால அட்டவணைக்குள் தீர்த்தல்.

தற்போது சிறீ லங்காவை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்பதற்கு உதவ முன்வரும் நாடுகளும் நிறுவனங்களும் புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை பொருளாதார உதவிக்கான முன்நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சிவில் சமூக பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ளல். இவற்றுடன் பேச்சுக்களை வெளிப்படைத்தன்மையுடன் நடாத்த வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தான் இந்தியாவின் ஒரே நிலைப்பாடு என்று கூறியிருக்கிறார். 13 ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்தாத அரசு நீங்கள் கேட்பதையெல்லாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா 13 ஐ அமுல்படுத்தவே தொடர்ந்தும் விரும்புகிறது. ஆனால் தமிழ்மக்களோ சமஷ்டி அல்லது அதற்கும் கூடிய அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கள்.

செ. கிரிசாந்-

நிமிர்வு தை 2023 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.