நீதி இன்றி சமாதானம் இல்லை - ரோஹிங்கியா மக்களுக்கான நீதி

 


பல தசாப்தங்களாக பர்மா இராணுவமும் அரசும் கட்டமைக்கப்பட்ட ரீதியில் திட்டமிட்டு மியான்மரிலுள்ள ரோஹிங்கியா மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி வருகிறார்கள்.  இதற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) இன் அரசும் கூட விதிவிலக்கல்ல. இந்த மனித உரிமை மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது அந்த மக்களுக்கான குடியுரிமையை மறுத்தமையாகும். 

ரோஹிங்கியா மக்கள் அந்த நாட்டிற்கு சொந்தமான இனக்குழுமத்தினர் என்று அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களின் தேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அதாவது, வாக்களிக்கவோ, கல்வி கற்பதற்கோ, பயணம் செய்வதற்கோ, திருமணம் செய்வதற்கோ, தமது சமயத்தை கடைப்பிடிக்கவோ, சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளவோ அருகதை அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவான இராணுவ அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் ரோஹிங்கியா  மக்கள் மீது நடத்தப்பட்டன. 720 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேசத்துக்கு தப்பி ஓடினர். மேலும் ஒரு இலட்சத்துக்கு மேலான மக்கள் உள்ளக இடப்பெயர்வாகி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ரோஹிங்கியா மக்கள் படுகொலைகள், பாலியல் அடிப்படையிலான வன்முறை மற்றும் பிற அட்டூழியங்களுக்கு உட்பட்டுள்ளனர். “உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்” என்று ஐ.நா. செயலாளர் குறிப்படும் அளவுக்கு ரோஹிங்கியா மக்கள் இனப்பாகுபாட்டுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி உள்ளனர்.

ரோஹிங்கியா மக்களின் நீதிக்கான சட்ட முன்னெடுப்புகள்

2019 கார்த்திகையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organization of Islamic Cooperation, OIC) என்ற அமைப்பில் இருக்கின்ற நாடுகள் சார்பாக ரோஹிங்கியா வழக்கை காம்பியா (Gambia) என்கின்ற நாடு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் கொண்டு வந்தது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால  நடவடிக்கைகளை அந்த வழக்கு கோருகிறது. மேலும் இனப்படுகொலையைச் செய்தவர்களைத் தண்டித்தல் மற்றும் உரிய ஆதாரங்களைப் பாதுகாத்தல் என்பவற்றை உத்தரவிடுமாறு அது கேட்கிறது.

இன்னொரு புறம், 2019 ஆடி மாதத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC), வழக்குத் தொடுனர் படாஉ பென்சோடா (Fatou Bensouda) வங்காளதேசம்/மியான்மர் பகுதிகளில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்க அங்கீகாரம் கோரினார். அதேவேளை, உலகளாவிய சட்ட அதிகாரம் (universal jurisdiction) என்ற கோட்பாட்டின் கீழ் ரோஹிங்கியாக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களை காட்டி ஆர்ஜன்டீனா நீதிமன்றத்தில்  இங்கிலாந்தில் இருக்கும் பர்மிய ரோஹிங்கியா அமைப்பின் தலைவர் Tun Khin ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மூன்று வழக்குகளும் 2019 கார்த்திகையில் பலமான சூறாவளியாக ஒரு புள்ளியில் இணைந்தன. இது ரோஹிங்கியாக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை எழுப்பியது. இந்தக் கட்டுரை சர்வதேச அதிகார வரம்புகளுக்குள் உள்ள இரண்டு வழக்குகளில் கவனம் செலுத்துகிறது. இங்கு, நீதிக்கான பாதை நெடியதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எந்தளவுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை செயற்படுத்த முனைப்பு நடக்கிறதோ அந்தளவுக்கு ரோஹிங்கியா மக்களிற்கான நீதி சாத்தியமாகும்.

இரு நீதிமன்றங்களில் ஒரு வழக்கு: ஐ.நா. சர்வதேச நீதிமன்றம்

ஐ.நா.வின் முதன்மை நீதிமன்றமான ICJ, நாடுகளுக்கு இடையே ஐ.நா உடன்படிக்கைகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் சட்டரீதியான உடன்படிக்கைகளில் ஏற்படும் தகராறுகள் மீதான அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. அங்கு மியான்மருக்கு எதிராக ஒரு சர்ச்சைக்குரிய வழக்கைத் கார்த்திகை 2019 இல் காம்பியா தாக்கல் செய்தது. அதில் இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கவும் அதை செய்வோரை தண்டிக்கவும் வழி செய்யும் ஐ.நா. உடன்படிக்கையின் கீழ் சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து மியான்மார் விலகி விட்டது என்று காம்பியா குற்றம் சாட்டியது. இந்த உடன்படிக்கை 1956 ஆம் ஆண்டில் மியான்மாரால் அங்கீகரிக்கப்பட்டது. காம்பியா 1978 இலேயே இந்த உடன்படிக்கையில் இணைந்து கொண்டது. இந்த வழக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இனப்படுகொலையில் நேரடியாக தொடர்பில்லாத ஒரு நாடு இனப்படுகொலை வழக்கை ICJ முன் கொண்டு வருவது இதுவே முதல் முறை.

ICJ இல் இரு கட்சிகளும் 2019 மார்கழியில் வாய்வழி சமர்ப்பிப்புகளைச் செய்தன. மியான்மரின் ஆங் சான் சூகி போர்க்குற்றங்கள் நடந்து இருக்கலாமே ஒழிய இனப்படுகொலை அங்கு நடக்கவில்லை என்று கூறினார். மியான்மர் தரப்பினர் 2017 பர்மிய இராணுவ நடவடிக்கை ரக்கைன் மாநிலத்தில் சமூக அமைதியின்மையை தணிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று சொன்னார்கள். மியான்மரின் சட்டக் குழுவின் எந்த உறுப்பினரும் ரோஹிங்கியா என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. அரக்கான் ரோஹிங்கியா மீட்பு படையால் (Arakan Rohingya Salvation Army) தொடங்கப்பட்ட தாக்குதல்களினாலேயே இராணுவ நடவடிக்கைகள் அவசியமாகின என்ற என்ற கூற்றில் மட்டுமே அவர்கள் "ரோஹிங்கியா" என்ற வார்த்தையை உச்சரித்தனர்.

இதற்கு நேர்மாறாக, காம்பியா, ரோஹிங்கியாக்கள் மீதான நீண்டகால துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகள், வெகுஜன கொலைகள், சித்திரவதைகள், எரித்தல் மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் பெரிய அளவிலான தகவல்களை வழங்கியது. 

காம்பியாவின் நீதித்துறை அமைச்சர் அபூபக்கர் மாரி தம்பாடோ (Aboubacarr Marie Tambadou) அவர்கள் தனது தொடக்க அறிக்கையில், “காம்பியா கேட்பது என்னவென்றால், எங்கள் கூட்டு மனசாட்சியை உலுக்குகின்ற, இந்த முட்டாள்தனமான கொலைகளை நிறுத்துங்கள், இந்த காட்டுமிராண்டித்தனம் மற்றும் மிருகத்தனமான செயல்களை நிறுத்துங்கள். சொந்த மக்களின் இனப்படுகொலையை நிறுத்துங்கள்”. என்று குறிப்பிட்டார்.

ICJ உடனடியாக செய்யப்பட வேண்டிய இடைக்கால நடவடிக்கைகள் குறித்த தனது முக்கிய முடிவை 23 தை 2020 அன்று வெளியிட்டது. வழக்கத்துக்கு மாறாக அந்த முடிவு அனைத்து 17 நீதிபதிகளாலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான மேலும் துஷ்பிரயோகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மியான்மருக்கு இந்த சட்டரீதியான முடிவு கட்டளையிடுகிறது. மேலும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிப்பதையோ அல்லது சேதப்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும், இந்த நோக்கங்களை அடைவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ICJ க்கு தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்த தகவல்கள் ஆரம்பத்தில் 4 மாதங்களுக்குள் தரப்பட வேண்டும் என்றும் பின்னர் 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது. இந்த இடைக்கால நடவடிக்கைகளுக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளை ICJ கட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய வளர்ச்சியாகும். இதனைத் தொடர்ந்து இனப்படுகொலை வழக்கை இறுதி விசாரணைக்காக கட்டியெழுப்புவதற்கான கடின உழைப்பு ஆரம்பமாகிறது. அதற்கான ஆரம்ப மனுக்களை காம்பியா 23 ஆடி 2020 முன்னரும் மியான்மர் 25 தை 2021 அன்றுக்கு முன்னரும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இரு நீதிமன்றங்களில் ஒரு வழக்கு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

ICC என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைசிப் புகலிடமாக இருக்க கூடியதாக, 1998 ஆம் ஆண்டின் ரோம் சாசனத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு நீதிமன்றமாகும். இங்கு நடைமுறைகள் சற்று வித்தியாசமானவை. ICJ போலல்லாமல், ICC ஆனது அரசுகளின் மீது தீர்ப்பளிக்காது, ஆனால் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உட்பட ரோம் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சர்வதேச சட்ட மீறல்கள் செய்த தனிநபர்கள்களை விசாரிப்பதற்கும் தீர்ப்பு வழங்குவதற்குமான அதிகார வரம்பை அது கொண்டுள்ளது. அதற்கென ஒரு காவல்படையோ சிறைச்சாலையோ கிடையாது. சாசனத்தில் கையொப்பமிட்ட நாடுகளே ICC இன் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
ஒரு ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் இல்லாத நிலையிலோ அல்லது ஒரு அரசு அங்கு வழக்கு தொடராத பட்சத்தில் ஒரு வழக்கு ICC இற்குப் போக முடியும். ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதேசத்தில் நடக்கும் குற்றங்களை அல்லது அந்த நாட்டு குடிமகன் ஒருவரால் செய்யப்படும் குற்றங்களை விசாரிக்க மட்டுமே ICC இற்கு அதிகாரம் உள்ளது. ICC உடன்படிக்கையில் மியான்மர் அரசாங்கம் கையொப்பமிடவில்லை.  ஆனாலும், ரோஹிங்கியா வழக்கு என்பது ICC யின் அதிகார வரம்பிற்குள் வரும் குற்றங்களை உள்ளடக்கியது. ஏனெனில் குறிப்பாக மனிதகுலத்திற்கு எதிரான நாடுகடத்தும் குற்றம் மியான்மரில் தொடங்கினாலும் அதனால் பாதிக்கப்பட்ட பர்மிய ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்கள். வங்கதேசம் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள ஒரு நாடு.

மியான்மருக்கு எதிராக ஒரு வழக்கை தொடரவேண்டும் என்ற ICC இன் வழக்கு தொடுனரின் கோரிக்கையை 2019 ஆடி மாதம் ICC நீதிபதிகள் பெற்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் முறைப்பாடுளை அவர்கள் கேட்டனர். இதனையடுத்து 2019 கார்த்திகை 14 அன்று ICC  நீதிபதிகள் இந்த வழக்குக்கான விசாரணையைத் தொடங்க அனுமதித்தனர்.
 
மேலே குறிப்பிட்டவாறு இந்த நிலைமை விசித்திரமானது, ஏனெனில் வங்காளதேசம் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மியான்மர் அப்படி இல்லை. வழக்கமான நடைமுறைகளில், மியான்மரில் செய்யப்படும் குற்றச்செயல்கள் மீதான வழக்குகள் ICC யின் முன் ஏற்றுக்கொள்ளப்படாது, ஏனெனில் அவை அதன் அதிகார வரம்பிற்கு வெளியே வரும். எவ்வாறாயினும், இந்த வழக்கில், குற்றம் தொடர்பான தனது வியாக்கியானத்தை ICC விரிவுபடுத்தி உள்ளது. அதாவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் “குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது வங்காளதேசத்தின் பிரதேசத்தில் (அல்லது ரோம் சாசனத்தை ஏற்றுக் கொண்ட அங்கத்துவ நாடு ஒன்றின் பிரதேசத்தில்) நடந்திருக்கின்றமையால் அக்குற்றம் மீதான விசாரணையை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. 

பர்மிய ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் வங்காளதேசத்துடன் போதிய அளவுக்கு தொடர்புபட்டு இருப்பதால் அக்குற்றங்களை செய்தவர்கள் மீதான விசாரணை அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் மேற்கொள்ளப்பட முடியும்.” இவ்வாறாக ICC இன்  குறைநிரப்பு மற்றும் ஒத்துழைப்பு பிரிவின் இயக்குனர் பாகிசோ மொசொசொகோ (Phakiso Mochochoko) இதனை விளக்கி உள்ளார். இதனடிப்படையில், ICC வழக்கு தொடுனரின் அலுவலகம் தற்பொழுது உண்மையை கண்டறிவதற்கும்  அதற்கான ஆதாரங்களை சேகரித்து வழக்குகளை கட்டமைக்கவும் வேண்டிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அடுத்து என்ன?

ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) இன் முடிவு உலகளாவிய ரீதியில் ரோஹிங்கியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், இது போன்ற ஒட்டுமொத்த மற்றும் திட்டமிட்ட முறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ போகாது என்ற தெளிவான செய்தியையும் இது உலகுக்கு சொல்லியுள்ளது. ‘நீதி இன்றி சமாதானம் இல்லை’ என்ற அமைப்பும் வேறு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து நடத்திய ரோஹிங்கியா பற்றிய நோக்குகள் தொடர்பான கலந்துரையாடலில் ரோஹிங்கியா ஆர்வலர்கள் ICJ தீர்ப்பு தொடர்பாக தமது திருப்பதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள். சிறிய வெற்றியாக இருந்தாலும் இது குறிப்பிடத்தக்கது எனவும் இந்த செயற்பாட்டின் வேகத்தை தணிய விடக்கூடாது என்றும் கூறினார்கள். முக்கியமாக, இனப்படுகொலை உடன்படிக்கையின் (Genocide Convention) கீழ் ரோஹிங்கியாக்களை பாதுகாக்கப்பட்ட இனக்குழுவாக ICJ அங்கீகரித்துள்ளது.
 
எவ்வாறாயினும், மியான்மர், ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான எந்தவொரு இனப்படுகொலையும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்து வருகிறது. 2017 சம்பவங்கள் குறித்து உள்நாட்டு சுயாதீன விசாரணை ஆணையம் (Independent Commission of Enquiry , ICOE) மூலம் தாங்கள் சொந்த விசாரணையை மேற்கொள்கிறோம் என்று கூறி வருகிறது. ICJ தனது இடைக்கால நடவடிக்கைகள் குறித்த தீர்ப்பை வெளியிடுவதற்கு சற்று முன்னதாக, ICOE ஒரு அறிக்கையை வெளியிட்டது. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், அவற்றில் இனப்படுகொலை நோக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சொல்லியது. ICJ குற்றச்சாட்டுகளை மழுங்கடிப்பதற்கான முயற்சியே இது என்று தெளிவாக தெரிந்தது. ரோஹிங்கியா ஆர்வலர் யாஸ்மின் உல்லா (Yasmin Ullah) இந்த நடவடிக்கையை அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க சூகியின் அரசாங்கம் செயல்படுத்திய "புதிய ஊடக உத்தி" என்று வரையறுத்தார்.

இதற்கிடையில், ICJ  இடைக்கால நடவடிக்கைகளை அறிவித்திருந்த போதிலும் ரோஹிங்கியா மக்கள் இன்னும் இனப்பாகுபாடு காட்டப்பட்டு மியான்மர் இராணுவப் படைகளால் குறிவைக்கப்படுகிறார்கள். பர்மிய இராணுவத்தின் தலைமை தளபதி, இந்த நடவடிக்கைகள் குறித்து, மியான்மர் தற்போதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். அதாவது, இந்த சூழ்நிலையை முதலில் உருவாக்கிய சட்டங்களையே தொடர்ந்தும் பயன்படுத்தப்போவதாக  கூறி உள்ளார். தை மாதத்தில் மியான்மர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான யாங்கி லீ (Yanghee Lee) மியான்மருக்குள் செல்வதற்கான அனுமதியை மியான்மர் மறுத்தது. அதனால் அவர் தாய்லாந்து மற்றும் பங்களாதேஷில் இருந்து தனது உண்மை கண்டறியும் பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே, ICJ இன் முடிவு ரோஹிங்கியாக்களுக்கு எந்த வகையில் அர்த்தப்பட்டாலும், மியான்மர் உண்மையில் அந்த உத்தரவுக்கு இணங்குவதை உறுதிசெய்வது சவாலாக இருக்கும். மேலும் மியான்மர் அதற்கு இணங்குமாறு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகம் ஒன்று பட்டு உறுதியாக நிற்க வேண்டும். அவ்வாறு செய்யவதற்கு 2020 ஆம் ஆண்டு மாசி மாதத் தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போதும் அது தவறவிடப்பட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். ICC இல் உள்ள வழக்கைப் பொறுத்தவரை, அவர்களின் விசாரணைகளை முடிக்கவும், தனிப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளை உருவாக்கவும் கணிசமான நேரம் எடுக்கும். குற்றமிழைக்கப்பட்டவர்களையும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களையும் தொடர்பு கொள்வதில் ICC இற்குள்ள ஆற்றல் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்படும். அதாவது, அவர்கள் ரோஹிங்கியாக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் தமது வேலைகளை மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வாறான சவால்கள் இருந்த போதிலும், தற்போது இரண்டு நீதிமன்றங்களிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக அவற்றின் குறியீட்டுச் செய்தி முக்கியமானது. ICJ, ICC மற்றும் பிற இடங்களில் உள்ள வழக்குகள் இறுதியாக ரோஹிங்கியாக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. குற்றவாளிகள் தண்டிக்கப்படல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்தல் என்பவை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு, குறைந்தபட்சம், ஒரு செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மறைக்கப்படமாட்டாது என்பதே அது. அதற்கு நிலையான அர்ப்பணிப்பும் பொதுவான முயற்சிகளும் இப்போது தேவைப்படுகின்றன.

நன்றி: coalitionfortheicc.org
அலிசன் ஸ்மித், பிரான்செஸ்கா பாஸோ (Alison Smith and Francesca Basso)
தமிழில் - நிமிர்வு
மார்கழி 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.