தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக செயற்படுகின்ற தமிழ் தலைமைகள்!
ஒரு பக்கம் வடக்கில் காணி அபகரிப்பு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் ஜனாதிபதி அழைத்தவுடன் பேச்சுக்கு பாய்ந்தடித்து செல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை கடந்த 13 ஆம் திகதியன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை கடற்படையினர் அமைத்துள்ளார்கள். அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரித்துள்ளார்கள்.
தமிழ் அரசியல் தலைமைகளை பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்த பொழுது குறைந்தபட்சம் இந்த காணி அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற முன்னிபந்தனையாவது கூட்டமைப்பினரால் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சர்வ கட்சி மாநாட்டை நடத்தி இனப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பது போன்றும் அதனூடாக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு ஒரு வழியை திறக்க முடியும் என்றும் காட்ட வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு உள்ளது. அதனூடாக கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தையை முன்கொண்டு செல்ல முடியும் என்று அவர் நம்புகிறார். மொத்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் பல முனைகளிலும் பலம் இழந்த நிலையில் இன்று இருக்கிறது.
ஆயுதப் போராட்ட காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் பலமிழந்து காணப்பட்ட போதெல்லாம் போராளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து காலம் கடத்தி அதன் போது இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்தியதையே செய்து கொண்டது. அதே போன்ற ஒரு நடவடிக்கையையே இந்த பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் அரசு செய்ய நினைக்கிறது. சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கையறு நிலையை குறைந்த பட்சம் காணி அபகரிப்பை நிறுத்துவதற்காகவாவது பேரம் பேச கூட்டமைப்பு பயன்படுத்தி இருக்க வேண்டும்.
தமிழர் தாயக பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம், காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் என்பன தொடர்ந்து வருகின்றன. எங்களின் அரசியல் தலைமைகள் இப்போராட்டங்களில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. மக்களுடன் களத்தில் நிற்பதுவுமில்லை.
கடந்த மாவீரர் தினத்தன்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வையே தமிழ்மக்கள் மீண்டும் மறைமுகமாக வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில் சிறிலங்கா அரசினால் நியமிக்கப்படும் ஆளுனரின் கையில் அதிகாரங்கள் குவிந்துள்ள 13 ஆம் திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக வைத்து நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கூட்டமைப்பு முனைவது ஏன்?
மீண்டும் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ வை தூசி தட்டி எடுத்து ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தீர்வு முயற்சியைத் தள்ளத் தான் சிங்கள அரசு நகர்ந்து வருகிறது. அதற்கு கூட்டமைப்பு உடன் போவது போல தென்படுகிறது. ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் அதற்கான காலம் கடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை சொல்லி நிற்கின்றன.
இப்பொழுது சிங்கள அரசுக்கு தான் தமிழ்மக்கள் தேவைப்படுகிறார்கள். சர்வதேச நாணய நிதியம் இனப்பிரச்சினை தீர்வையும் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ள நிலையில் தமிழ்மக்களின் பேரபலம் அதிகரித்துள்ளது. சிறிலங்கா அரசு கீழிறங்கி வரும் நிலையில் உள்ளது. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால் மட்டுமே பேச்சில் கலந்து கொள்ள முடியும். இதற்கு சிங்கள மக்களையும் சிங்கள அரசியல் தலைமை தான் தயார்படுத்த வேண்டும். தமிழ்த் தலைமைகளும் தமிழ்மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படக் கூடாது.
செ. கிரிசாந்-
நிமிர்வு மார்கழி 2022 இதழ்
Post a Comment