கடல் உரிமையை பறிக்கும் கடலட்டைப் பண்ணைகள்
விரைந்த இலாபம் தரும், கூடிய இலாபம் தரும் என்பதற்காக எங்களுடைய உள்ளூரில் சிறு மீன்பிடியாளர்களின் மீன்பிடி களங்களை எல்லாம் கடலட்டை பண்ணைகளாக மாற்றுவது எல்லாம் எந்தளவுக்கு பொருத்தமானது என ஒரு கேள்வி எங்களிடம் இருக்கிறது.
யாழ்ப்பாண குடாநாட்டில் கடல் நீர் ஏரியில் களங்கட்டி அல்லது சிறகுவலை என்கிற வலையை கட்டி மீன்பிடித்தல் என்கிற ஒரு முறை இருக்கும். அதற்காக தடிகளை ஊன்றி அதில் வலைகளை பொருத்தி மீன்களை பிடிப்பார்கள். ஒரு பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம் கழிந்து அந்த வலைகளை எடுத்து கொண்டு வந்து கரையில் போட்டு காய வைத்து பாசிகளை நீக்கி ஒரு மூன்று - ஐந்து நாட்கள் இடைவெளிக்குள் மீண்டும் கொண்டு போய் அந்த இடத்தில் போட்டு மீன்பிடி செய்வார்கள்.
இங்கு இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பரஸ்பர ஊடாட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
கடலட்டை பண்ணைகளில் என்ன நடக்கிறது என்றால் கடலுக்குள் வேலிகள் போடுகின்றார்கள். அது ஒரு கிழமை இரண்டு கிழமை ஒரு மாதத்தில் பிடுங்கப்படும் வேலிகள் அல்ல. அந்த வேலிகளுக்குள் அவர்கள் கடலட்டை குஞ்சுகளை போடுகிறார்கள். குஞ்சுகள் காணாமல் போகும் என்பதற்காக காவலுக்கு நிற்கின்றார்கள். கடலுக்குள்ளேயே மரக்கால்கள் அல்லது சீமெந்து தூண்களையோ ஊன்றி அதற்கு மேலே ஒரு தளம் அமைத்து காவல் கொட்டில் போடுகின்றார்கள். அந்த கடலட்டை குஞ்சுகள் களவு போகாமல் இருப்பதை பார்ப்பதற்காக மின்சார வேலிகளை போடுகிறார்கள். மின்விளக்குகளை பொருத்துகிறார்கள் மின்விளக்குகளை பொருத்துவதால் இப்பகுதியில் உள்ள மீன் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரதேசத்தில் மீனவர்கள் பாரம்பரியமாக இறால் பிடிக்கும் தொழிலை செய்தவர்கள். மிக நீண்ட ஒரு தலையணை உறை போன்ற வலையை இரு பக்கம் இருவர் பிடித்து அப்படியே இழுத்து கொண்டு போவதன் மூலம் இந்த இறால்களை பிடிப்பார்கள். இப்பொழுது அத்தகைய தொழில்கள் செய்ய முடியாதவாறு கடலுக்குள் எல்லைகள் போடப்பட்டுள்ளன. இப்போது இந்த எல்லைக்குள் படகுகள் எதுவும் செல்ல கூடாது, இது தங்கள் எல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளார்கள். இதனால் பல முரண்பாடுகள் கடலில் தோன்றி உள்ளன.
இதுவரை கடல் தொழிலில் ஈடுபட்ட பல சிறு கடல் தொழிலாளர்களை பேராசை காட்டி அவர்களுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அவர்கள் தொழில் செய்கின்ற பிரதேசங்களை எல்லாம் வாங்கியது போன்று கையகப்படுத்தி அங்கு பண்ணைகளை போடுகிறார்கள். எங்களிடம் இரண்டு மூன்று கேள்விகள் இருக்கின்றன. ஒன்று எங்களுக்கு தேவையான கடல் உணவை புரத உணவை நாங்கள் எங்கிருந்து பெறுவது? ஏற்கனவே நாங்கள் பிடிக்கின்ற இறால்கள் மீன்கள், நண்டுகள், போன்றவற்றில் தரமானது எல்லாவற்றையும் கொழும்பு சந்தைக்கு அனுப்பி விட்டு நாங்கள் கழிவுகளை தான் சாப்பிடுகின்றோம். எங்களுக்கு ஒரு தரமான இறால், தரமான மீன், தரமான நண்டு, தரமான கணவாய் போன்றவை கிடைப்பதில்லை. இப்படியான நிலையில் இந்த சிறு தொழில் செய்கின்ற இடங்களையும் கடலட்டை தொழில் செய்யும் இடங்களாக மாற்றினால் எங்களுக்கு கடல் புரத உணவை வழங்குவது யார்? கடலட்டையை ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை உழைத்து அதை திருப்பி கொடுத்து தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்குமதி செய்து வாங்கி சாப்பிட போகிறோமா?
ஒரு காலத்தில் இலங்கையின் 40 வீத கடல் உணவுத் தேவையை பூர்த்தி செய்த சமூகம் இன்றைக்கு தனக்கு தேவையான கடல் உணவு புரதத்தை கூட பெற முடியாமல் போராடிக் கொண்டு இருக்கும் நிலைமையில் இருக்கின்ற குறைந்தபட்ச கடல் தொழிலையும் வளம்குன்றச் செய்கின்ற ஒரு ஆபத்தான விடயத்திற்கு நாங்கள் செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனெனில் கடலட்டையை நாங்கள் சாப்பிட முடியாது. நஞ்சு அல்ல அது எங்களுடைய உணவுப் பண்பாட்டில் இல்லாத ஒரு பொருள். இரண்டாவது, இந்த கடல் உணவு தயாரித்தல் என்பது எமது உணவுப் பண்பாடு. இந்த உணவு பண்பாடு இல்லாமல் அழிந்து போகப் போகிறது. தகரத்தில் அடைக்கப்பட்ட ஏதோ ஒரு விதமான மீன்களை மட்டும் வாங்கி சமைத்து சாப்பிடும் ஆட்களாக நாங்கள் மாற போகிறோமா?
எனவே இங்கே ஒரு அடிப்படையான உணவு பாதுகாப்பு என்கிற உணவு இறைமை என்கிற ஒரு விடயம் முற்றிலுமாக நாசமாக்கப்படுகின்றது. இது நீண்ட காலத்தில் எங்களுடைய சமூகம் மிகப்பெரிய ஒரு உணவு நெருக்கடிக்கும் உணவு இறைமை என்ற கேள்விக்குமே போகின்றது. இது ஒன்று, இரண்டாவது கடலட்டை வளர்ப்பதற்காக களங்களை தாங்கள் கையகப்படுத்திய போது கடல் தொழில் செய்கின்றவர்களின் எண்ணிக்கை குறையும். கடலட்டை வளர்ப்பு என்பது ஒரு சிறுத்தொழில் முயற்சி அதற்கு தேவையான அறிவு மட்டுப்படுத்தப்பட்டது ஒரு விடயம் சார்ந்தது.
ஆனால் கடலில் மீன்பிடிப்பது அறிவு நுணுக்கம் கொண்டது. அந்த இடத்தை நாங்கள் விட்டு வெளியேறி கடலட்டை வளர்ப்பதற்காக எங்களை அர்ப்பணிப்போமாக இருந்தால் அது ஐந்து வருடங்களாக இருக்கலாம் பத்து வருடங்களாக இருக்கலாம் அதற்கு பின்பு கடலட்டை வளர்ப்பு தன்னுடைய உன்னதத்தை இழக்கும் பொழுது நாங்கள் மீண்டும் வந்து கடலில் மீன் பிடிக்கும் திறமையை தொழிலாண்மையை கொண்டவர்களாக இருக்க மாட்டோம். அப்பொழுது எங்களிடம் ஒட்டு மொத்தமாக கடலில் இறங்கி கடல் வேளாண்மை செய்வதற்காக எந்த வாய்ப்புகளும் எம்மிடத்தில் இல்லாமல் போகும். எங்களுடைய உற்பத்தி சாதனங்கள் எல்லாமே கைவிடப்பட்டிருக்கும். நாங்கள் கடல்களில் இருக்க வேண்டிய தேவை இல்லாதவர்களாக இருப்போம். கடலுக்குள் செல்ல தேவை இல்லாதவர்களாக இருப்போம். கரையை விட்டு உள்நோக்கி நகர்வோம். பண்பாட்டு இருப்பு சமூக இருப்பு பொருளாதார இருப்பு என்பவை ஒரு ஐந்து வருடங்கள் பத்து வருடங்களில் தகர்க்கப்படும். எங்களுக்கு கடற்கரையோரங்களில் உள்ள உரிமையும் கடல் மீது வளங்களின் மீது உள்ள உரிமையும் இல்லாது செய்யப்படும்.
உள்ளூர் சமூகங்களை காட்டிற்குள் இயற்கை வளங்களுக்குள் செல்ல முடியாது மறித்து விட்டு நடு காட்டுக்குள் போய் கள்ள மரம் அரிந்து மரங்களை பொருளாதார பண்டமாய் ஏற்றுமதி செய்கின்ற பெரும் முதலாளிகளை இவர்கள் காப்பாற்றுகின்றார்கள். அதே போன்று தான் கடற்கரை எங்கள் கையை விட்டு போகும் போது நாங்கள் கடற்கரைக்கு போக முடியாமல் போகும். கடலுக்கு போக முடியாமல் போகும். இப்பொழுது எங்களுடைய இயலுமையை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல நாள் படகுகளை கொண்டு நாங்கள் ஆழ்கடலுக்கு போக முடியாமல் எங்களுடைய இயலுமையை சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றார்கள். இந்திய இழுவை படகுகளை இங்கு அனுமதிப்பதன் மூலம் இப்பொழுது எங்களுடைய இயலுமையை இன்னொரு திசையில் முடக்க போகின்றார்கள். கரையோரங்களில் கடலட்டை பண்ணைகளை போடுவதன் மூலமாக சிறு கடல் தொழிலை இல்லாமல் செய்து எங்களுடைய சமூகத்தின் இருப்பையே இல்லாமல் செய்ய போகின்றார்கள். தமிழ் சமூகம் கடலின் மீது கொண்டு இருக்கின்ற ஆளுகையை அந்த ஆளுகைக்கான வலிமையை தகர்ப்பதற்கான நீண்டகால திட்டமாக தான் என்னால் இதை இலங்கையில் இருந்து புரிய முடிகின்றது.
ஒரு சமூகத்திற்கு ஒரு மனிதனுக்கு சொந்தமான வளத்தை அவனுடைய அனுமதி இன்றி இன்னொருவர் பயன்படுத்துவது என்பது மிக பெரிய திருட்டு. இங்கே நடப்பது அது தான்.
இன்றைய பொருளாதாரம் யுத்தத்திற்கு பிறகு கொஞ்சம் நலிந்து போய் சமூகத்திற்குள் சில இலட்சம் ரூபாய்களை எறிந்து அந்த பிரதேசங்களை கையகப்படுத்துகின்றார்கள். உள்ளூர் மீன் பிடியாளர்கள் தான் இந்த பண்ணைகளை செய்கின்றதாக இப்பொழுது ஆரம்பத்தில் அவர்கள் சொல்லலாம். அது ஒரு கேள்விக்குரிய விடயமாக தான் இருக்கிறது.
முன்பு 70 களில் சுற்றுலாத்துறை விரிவாக்கம் செய்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நிரம்ப கடற்கரையோரங்களில் சுற்றுலா விடுதிகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டது. கரையோரங்களை அண்டியதாக கட்டப்பட்ட அந்த விடுதிகளுக்கு முன்னால் உள்ள கடற்கரை பிரதேசங்களையும் பயன்படுத்துவதற்கான சிறப்புரிமை வழங்கப்பட்டது. குறிப்பாக திருகோணமலையில் நிலாவெளி போன்ற கடற்கரைகளில் அந்த விடுதி உரிமையாளர்கள் அந்த பிரதேசங்களை சுத்தமாக பாதுகாத்து சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்களை அந்த கடற்கரை பிரதேச பகுதிகளுக்குள் அனுமதிக்காமல் மறுத்தார்கள். மிக பெரிய சங்கடமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.
அதே போன்றுதான் இன்று சிறு சிறு தொழிலாளர்கள் கடலட்டை பண்ணை உரிமையாளர்களாக இருப்பார்கள். கொஞ்சம் இந்த பண்ணை சோர்வுறும் பொழுது ஒரு பெரிய முதலாளியின் பெயரால் ஒரு பல்தேசிய கம்பெனியோ ஒரு தேசிய கம்பெனியோ வந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தாங்கள் வாங்குவார்கள்.
பொருளியலில் வினைதிறன் என்பது முக்கியமானது. வினைதிறன் கொண்டதாக தொழில் இருக்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்ச அளவு என்று ஒன்று இருக்க வேண்டும். குறைந்தபட்ச உற்பத்தி அளவு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நீங்கள் தனித்தனியே வைத்து பராமரித்தால் கஷ்டம், நாங்கள் அது எல்லாவற்றையும் எடுத்து ஒரு கம்பனியாக செய்ய போகின்றோம் என்று சொல்வார்கள். அப்படி செய்ய ஆரம்பித்தால் இந்த பண்ணைகள் எல்லாம் பின்பு உள்ளூர் சமூகத்திற்கு சொந்தம் அல்லாத யாரோ ஒரு பல்தேசிய கம்பெனிக்கோ அல்லது தரகு முதலாளித்துவத்திற்கோ போகும். அதனூடாக எமது கடலின் மீதான எமது இறைமையை நாம் இழப்போம்.
செல்வின் -
நிமிர்வு மார்கழி 2022 இதழ்-
Post a Comment