இந்துத்துவத்துக்குள்ளால் ஈழத்தமிழர்களை இந்தியா அணுகக் கூடாது
திருகோணமலை மாவட்டமானது இலங்கை காலனித்துவ தேசமாக காணப்பட்ட காலம் முதலும், அதன் பின்னரான சுதந்திர இலங்கையிலும், உள்நாட்டு யுத்தத்தின் போதும் தொடர்ச்சியாக முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பாரத நிலப்பரப்பிற்கு அண்மையிலும், இந்து சமுத்திரத்தின் தொடு தேசமாகவும் காணப்படும் இலங்கையில், திருக்கோணமலை இயற்கையாக அமைந்த ஒரு துறைமுகமாக உலக அரசியல் சக்திகளால் நன்கு உணரப்பட்டுள்ளது. இதனால் இதற்கான வல்லரசுகளின் போட்டி தொடர்ச்சியாக அன்று முதல் இன்று வரை நிலவி வருகின்றது. எனினும் ஈழத் தமிழரின் பிரச்சினைகளில் இந்தியாவை சரியான முறையில் கையாளக்கூடிய தமிழ்த் தலைவர்கள் கிடைக்கவில்லை என்பது வரலாறு சொல்லும் பாடம்.
இந்தியா - சீனா இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவாக இன்றைய கட்டத்தில் இந்தியாவின் நேரடி தலையீடுகள் திருகோணமலையில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
சர்வதேச நீரிழிவு தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ் - இந்திய துணை தூதரகம், கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலை, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் என்பன இணைந்து திருகோணமலையில் கண்காட்சி ஒன்றினை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இது கார்த்திகை 14, 15 ஆம் திகதிகளில் நடந்தது. அதே சமயம் அன்றைய தினத்திலேயே, இந்திய துணை தூதரகம் திருகோணமலையை சேர்ந்த "இராவண சேனை" எனும் அமைப்புடனும் இணைந்து கூட்டங்களையும் நடத்தியுள்ளது. இக்கூட்டங்களில் மக்களுக்கு நிவாரணப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் கலந்து கொண்டிருந்தார். ஒரு துணைத் தூதுவர் இலங்கையில் காணப்படும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. குறித்த அமைப்பானது திருகோணமலையில் தொடர்ச்சியாக இந்துத்துவா நிலைப்பாட்டுடன் இயங்கி வருவதுடன், இஸ்லாமிய வெறுப்பு சிந்தனைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இயங்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் உதவியுடன் நடத்தப்பட்ட விடயங்களில் இந்திய துணைத் தூதர் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் கோபால் பாக்லே கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மாத்திரம் திருகோணமலைக்கு இரண்டு தடவைகள் வந்து சென்றுள்ளார். திருக்கோணேஸ்வரர் ஆலய நிலைமைகளையும், அங்குள்ள பிரச்சனைகளையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
இதற்கு முன்னர் திருக்கோணமலையின் சம்பூர் பகுதியை மையப்படுத்தி அனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் செயற்பாடுகள் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிகளுக்கு எதிராக திருக்கோணமலை நலன்புரி அமைப்புகள் குரல் கொடுத்தன. அதன் பயனாக குறித்த செயல்திட்டம் தள்ளிப் போடப்பட்டது என்பது யாவரும் அறிந்த விடயம்.
எனினும் தற்பொழுது திருகோணமலை சீனன்குடா பகுதியில் காணப்படும் எண்ணெய் தாங்கிகளை இந்தியா தன் வசப்படுத்தவும், சம்பூர் நிலப்பகுதியில் சூரிய மின்கல நிலையங்களை அமைக்கவும் தனது முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் நீண்ட கால இனப் பிரச்சினையின் தீர்வில் இந்தியாவின் தலையீடு ஒவ்வொரு காலப் பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்திராகாந்தியின் காலப்பகுதியில் கிழக்கு பாகிஸ்தானை தனி நாடாக பிரடனம் செய்ய ஒத்துழைத்த இந்தியா தனது தெற்கு பகுதியில் காணப்படும் இலங்கையில் தமிழர்களுக்கான தாயக பூமி அமைவதில் அவ்வளவு விருப்பத்தை காட்டவில்லை என்பது தெரிந்த விடயம்.
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி எனும் காங்கிரஸ் மைய அரசியலில் தமிழர்களின் நிலைப்பாடு அவ்வளவு உகந்ததாக இருக்கவில்லை. எனினும் தற்பொழுது பாரத தேசத்தில் தழைத்தோங்கியுள்ள இந்துத்துவ அரசியலைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களை இந்தியாவுடன் இணைந்து போகச் செய்யும் அழுத்தங்கள் பெருமளவில் உள்ளது என்பது அண்மை கால நிகழ்வுகளில் தெளிவாக உள்ளது. எனினும் இந்திய மத்திய அரசின் இந்த அவாவை மறுதலித்து அல்லது பயன்படுத்தி சரியான பேரம் பேசுதலை இந்தியாவுடன் மேற்கொள்ளக்கூடிய தலைமையை தமிழர் தரப்பு கண்டறிய வேண்டும்.
கடந்த காலங்களில் இந்தியாவின் வேறுபட்ட நிலைப்பாடுகளால் ஈழத்தமிழர்களுக்கு பல அநியாயங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியா தொடர்பில் ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் உள்ளன. குறிப்பாக தற்பொழுது சீனா இந்தியா இடையிலான அதிகாரப் போட்டியில் சீனா இலங்கையில் ஆழ காலூன்றும் நிலைக்கு வந்துள்ளது. அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசை ஒருவகையிலும் ஈழத்தமிழரை இன்னொரு வழியிலும் இந்தியா கையாள முனைந்து வருகிறது.
அந்த வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத்தமிழர் மத்தியில் இந்துத்துவத்தை பரப்பி அவர்கள் மீது செல்வாக்கை நிறுவ இந்தியா முயற்சிக்கிறது. அந்த செல்வாக்கை சிறிலங்கா அரசுடனான தனது பேரம் பேசலுக்கு பலம் சேர்க்க பயன்படுத்த நினைக்கிறது. இந்த நோக்கத்தையும் நடவடிக்கைகளையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஏற்றுக் கொண்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கௌரவமான தீர்வை நோக்கி நகர இந்தியா உதவ வேண்டும். அதனூடாக மட்டுமே இந்தியா தனது செல்வாக்கை ஈழத்தமிழர் மத்தியில் நிறுவ முடியும்.
பிராந்திய வல்லரசான இந்தியாவை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது கடினம். இந்தியா மீது கவனம் செலுத்தாமல் இலங்கையில் அரசியல் நடத்த முடியாது என்பதே யதார்த்தம். இதனை சிங்கள அரசு சரியாக ஆரம்பம் முதலே புரிந்து கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான தனது வெளிநாட்டுக் கொள்கைகளை காலம் காலமாக உருவாக்கி கடைப்பிடித்து வந்துள்ளது.
அதாவது, இந்தியாவுடன் ஒரு இராணுவ யுத்தத்தில் ஈடுபடாமலும் தனது இந்திய எதிர்ப்புக் கொள்கைகளை விட்டுக் கொடாமலும் சிறிலங்கா இந்தியாவை தனக்கு சாதகமான வகையில் கையாண்டு வந்திருக்கிறது.
இதனை சரியாக புரிந்து கொண்டு தமிழ் அரசியற் தலைமைகள் தமக்குள் இருக்கும் கட்சி பேதங்களை பின்தள்ளி இது தொடர்பான உரையாடலை நடத்த வேண்டும். இந்தியாவை கையாள்வது எப்படி என்ற ஒரு செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வெல்லுவதன் பக்கம் உறுதியாக நின்று கொண்டு இந்தியாவுடன் ஒரு சமதளத்தில் நின்று நமது பேரம் பேசலை வலுவாக்கும் நோக்கத்தை அந்த செயற்திட்டம் கொண்டிருக்க வேண்டும். இந்தியா அழைத்தவுடன் எல்லாம் அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டுவதை ஈழத்தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.
இந்த பேரம் பேசல் ‘உங்களுக்கும் நன்மை, எங்களுக்கும் நன்மை’ என்ற அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இது கத்தியில் நடப்பதைப் போன்றது. இந்து சமுத்திர பிரதேச மற்றும் சர்வதேசம் பற்றிய அறிவுசார் நிலையில் நின்று அணுகப்பட வேண்டியது. ஈழத்தமிழரின் நீண்ட கால அரசியல் எதிர்காலமும் அவர்களது இருப்பும் இதில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும். அதேவேளை இந்தியாவுக்கும் எம்மக்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஈழத்தமிழர்கள் சார்பில் தானே கையெழுத்திட்ட இந்தியா இறுதிப்போரில் சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை போரில் தோற்கடிக்க பல்வேறு உதவிகளையும் வழங்கியது. பின் 2009 க்கு பிறகு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அன்று தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தத்துக்குள்ளே தான் ஈழத்தமிழர்களின் அரசியலை முடித்துவிட பார்க்கிறது.
ஆனால் ஈழத்தமிழர்களோ சமஷ்டி தீர்வு தான் தங்களுக்கு வேண்டும் என்பதனை பின்பு நடந்த பல்வேறு தேர்தல்களில் முறையாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஆகவே ஈழத்தமிழர்களின் விருப்புகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு கௌரவமான தீர்வை பெற்றுக் கொடுக்க பிராந்திய வல்லரசான இந்தியா உதவ வேண்டும்.
ஹஜன்-
நிமிர்வு மார்கழி 2022 இதழ்-
Post a Comment