தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் - பகுதி : 02ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 13.03.2022 அன்று நடாத்தப்பட்ட "தமிழ் தலைமைகள் கோரும்  சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிமுறையும்'' என்கிற உரையாடல் வகுப்பின் இரண்டாம் பகுதி இங்கே பிரசுரமாகிறது. 

அடுத்ததாக, ஈழத்தமிழர்களின் மத்தியில் இன்று பேசப்படும் சமஸ்டி கோரிக்கையினுடைய வரலாறை சுருக்கமாக பார்ப்போம். முதல் முறையாக சிங்கள தலைவர்கள் தான் இந்த சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள். பண்டாரநாயக்காவும் கண்டி சிங்களவர்களும் தான் பேசுகிறார்கள். தமிழ் தலைவர்கள்  பேசவில்லை. இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் இரண்டு கட்சிகளும் இடதுசாரித் தன்மையானவை. லங்கா சமஜமாஜ கட்சி 1935 ஆம் ஆண்டும்,  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1943 ஆம் ஆண்டும் தோற்றுவிக்கப்பட்டன. இவை இரண்டும் இடதுசாரி கட்சிகள். இவர்கள் சமஸ்டியை பற்றி பேசவில்லை. அவர்கள் ஒற்றை ஆட்சியைத் தான் பேசுகிறார்கள். 

அதற்கு பின்பு மூன்றாவதாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கையினுடைய மூன்றாவது பெரிய கட்சி தமிழ் மக்களினுடைய முதலாவது கட்சி. அது இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944 ஆம் ஆண்டு ஒற்றை ஆட்சி கொள்கையை மட்டுமே அதுவும் முன்வைத்தது. ஒற்றையாட்சியின் கீழ் 50 க்கு 50 என்கிற கோரிக்கையை முன் வைத்தது. எனவே இலங்கையினுடைய மூன்று பெரிய கட்சிகளும் ஒற்றை ஆட்சியை பற்றியே பேசியது. அதன் பின்பு 1946ஆம் ஆண்டு தோன்றிய ஐக்கிய தேசிய கட்சி ஒற்றை ஆட்சியின் கீழ் அரசியல் யாப்பை உருவாக்கி அதன் கீழ் நிர்வாக பொறுப்பை ஏற்று, ஆட்சி பொறுப்பை ஏற்று ஒற்றை ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. தமிழர்களையும் இணைத்து அது ஒற்றை ஆட்சியை இறுக்கமாக வளர்த்து எடுத்தது.
 
டி. எஸ். சேனநாயக்கா தமிழர்களையும் இணைத்துத் தான் ஒற்றை ஆட்சியை வளர்த்து எடுத்தார் என்பதை தமிழர்கள் கருத்தில் கொள்ள தவற கூடாது. லங்கா சமஜமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி, இந்த ஐந்து கட்சிகளும் ஒற்றை ஆட்சி கொள்கையை கொண்டவை தான். இதற்கு இடையில் 49ஆம் ஆண்டு தொடங்கிய சமஸ்டி கட்சி தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியது. அந்த பெயரை முன்வைத்தவரே நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேரன் இளம் முருகனார்.

1949ஆம் ஆண்டு உருவான தமிழரசு கட்சி தான் இலங்கையில் தமிழர்கள் பக்கத்தில் முதல் முறையாக ஒரு அமைப்பு ரீதியாக சமஸ்டியை முன்வைத்தது. தந்தை செல்வா சமஸ்டி முறையை முன்வைத்து 49ஆம் ஆண்டு ஆற்றிய உரை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. செல்வநாயகத்தினுடைய அந்த உரைக்கு மிக சிறப்பான அம்சங்கள் உண்டு. அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து ‘நேரடி போராட்டத்தின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்த தந்தை செல்வநாயகம் 57ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் போது சமஸ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டார். பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பது இலங்கையை மூன்று பிராந்தியங்களாக பிரித்து சமஸ்டி அல்லாத பிராந்திய சபைகளை அமைப்பது என்பதை அடிப்படையாக கொண்டது. எனவே எங்களுக்கு தந்தை செல்வா என்ன சொன்னார் என்பதை விடவும் என்னத்தை பிரகடனப்படுத்தினார் என்பதை விடவும் வரலாற்றில் எப்படி நடந்து கொண்டார் என்பது தான் முக்கியம். வரலாறு நடைமுறையினால் தான் மெய்பிக்கப்படுமே தவிர  எந்த ஒரு இலட்சிய பிரகடனங்களினாலும் சத்தியங்களினாலும் அது மெய்ப்பிக்கப்படமாட்டாது. அதாவது, நடைமுறையில் அவர் 1957 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை எழுதி கையெழுத்து இட்ட போது சமஸ்டி கோரிக்கையிலிருந்து கீழே இறங்கி பிராந்திய சபை என்று வந்து விட்டார். அதைக் கூட சிங்கள தலைவர்கள் கிழித்து எறிந்து விட்டார்கள்.
 
அடுத்ததாக 65 ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் போது பிராந்திய சபைகளையும் கைவிட்டு மாவட்ட சபைகளுக்கு வந்தார். இருபத்தைந்து மாவட்டங்கள் இலங்கையில் உள்ளன. தமிழ் மண் வடக்கு கிழக்கில் ஏழு மாவட்டங்கள். எனவே இது ஒரு நிர்வாக ஏற்பாடு. எனவே அவர் சமஸ்டி கோரிக்கையை 57ஆம் ஆண்டு கைவிட்டு 65ஆம் ஆண்டு இன்னும் கீழே போனார். டட்லி-செல்வா ஒப்பந்த காலத்தில் பொன்னம்பலம், செல்வநாயகம் ஆகிய இரண்டு தமிழ் தலைவர்களும் ஒரு அங்கமாக தான் இருந்தனர். பொன்னம்பலம் ஒற்றை ஆட்சி என்கிறார். செல்வநாயகம் சமஸ்டி என்று சொன்னாலும் மாவட்ட சபைகளை ஏற்றுக் கொள்கிறார்.

சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து பெரும் தலைமைத்துவம் ஒன்று தமிழ் மக்களின் மத்தியில் உருவாகி இருந்தது. 1956ஆம் ஒற்றை ஆட்சியை முன்வைத்த தமிழ் காங்கிரஸ் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. அந்த கட்சி தோற்கடிக்கப்பட்டாலும் அந்த கொள்கையில் மாற்றமில்லை. அப்படியே 1965 ஆம் ஆண்டு வந்த அரசாங்கத்தின் கீழும் அது ஒற்றை ஆட்சி கொள்கையோடு நிற்கிறது.

சமஸ்டி கோரிக்கையை முன்வைத்த பெரும் தலைமைத்துவம் செல்வநாயகம் வழியில் சமஸ்டி கொள்கை கைவிட்டு ஒற்றை ஆட்சியோடு இணைந்து செயல்பட்டது. 5 வருடங்கள் அமைச்சரவையில் பங்கெடுத்தது. இந்த பங்கெடுத்தல் தான் அரசியல் யாப்பு. எல்லோரும் அரசியல் யாப்பை பற்றி கற்பதில் பெரும் தவறு செய்கிறார்கள். அரசியல் யாப்பு என்பது எழுதப்பட்ட வரிகள் என்று நினைத்து கொள்கிறார்கள். நடைமுறை தான் அரசியல் யாப்பு. தீர்ப்புக்கள் தான் அரசியல் யாப்பு. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஒவ்வொன்றும் அரசியல் யாப்பு. அரசியல் யாப்பை அதன் செயல் வடிவத்தின் ஊடாக அடையாளம் காண்பது தான் முக்கியம்.
 
செல்வநாயகத்தின் செயல் வடிவம் மாவட்ட சபைக்குள்ளே போய்விட்டது. அதுவும் நிறைவேறவில்லை. இதன் பின்பு 70ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு தமிழ் கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டன. ஆயினும் செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசு கட்சியையே மக்கள் ஆதரித்தார்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு மூன்று ஆசனங்களே கிடைத்தன. ஏனைய ஆசனங்கள் பதின்மூன்றும் தமிழரசு கட்சிக்கு கிடைத்தன.
 
1956ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட காலத்தில் சி.சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். நடேசன் என்கின்ற மூவரையும் இணைத் தலைவர்களாக கொண்டு தனிநாட்டு கோரிக்கையோடு தமிழர் மகாசபை ஆரம்பிக்கப்படுகிறது. தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் தாங்கள் தமிழர்களுக்கு ஒரு தனி இராச்சியம் வேண்டும் என்ற வகையில் போராடுவோம் என்று இவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்து அறிக்கை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையை வெளியிட்டவர் தமிழர் மகாசபையின் அமைப்பாளராக இருந்த ஆ. தியாகராஜா என்பவர். தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராக வட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து பிற்காலத்தில் தெரிவு செய்யப்பட்டவர். இவர் பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்று இருந்தவர். பின்னாட்களில் ஒரு கல்லூரியின் அதிபராக இருந்தவர். இவர் அமைப்பாளராக இருக்கும் போது தான் தமிழ் மக்களுக்கு ஒரு தனி இராச்சியம் வேண்டும் என்கின்ற அறிக்கையை எழுதினார். அந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்ததும் அப்படியே கைவிடப்பட்டது. 

இதன் பின்பு 1957ஆம் ஆண்டு ஆ. தியாகராஜா "இருபத்து நான்கு இலட்சம் தமிழ் மக்களுக்கு ஒரு தனி இராச்சியம் வேண்டும்" எனும் தலைப்பில் ஒரு சிறிய நூலை எழுதுகிறார். அப்பொழுது தமிழ் ஈழம் என்கிற கோரிக்கை வரவில்லை. இந்த நூலை 1982 ஆம் ஆண்டு திருமதி ஆ. தியாகராஜாவை அவர் வீட்டில் சந்தித்து, வாங்கி, முக்கியமான நூலகங்களுக்கு அதன் பிரதியை கொடுத்தேன்.  இந்த நூல் தான் தனி நாடு வேண்டும் என்று ஈழ தமிழர்கள் பற்றி எழுதப்பட்ட முதலாவது நூல். இந்த நூலில் மலையகம் உள்ளடக்கப்பட்டிருந்தது. மலையக பிரதேசத்தை கிழக்கு மாகாணத்துடன் புவியியல் ரீதியாக இணைத்த அட்டைப்படம் தான் இந்த நூலினுடைய அட்டைப்படம். இதில் பதுளை தமிழ் ஈழத்தின் ஒரு பகுதியாக புவியியல் ரீதியாக இணைக்கப்பட்டிருத்தது.

இதன் பின்பு, 1963 ஆம் ஆண்டில் சி. சுந்தரலிங்கம் ஆங்கிலத்தில் Eylom: Beginnings of the Freedom Struggle என்கின்ற ஒரு நூலை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில் ஒரு பெறுமதியான பகுதி இருக்கிறது. சோல்பரி பிரபு எழுதிய கடிதங்களை கொண்ட பகுதிதான் அது. அதில் சோல்பரி பிரபு தான் எழுதிய அரசியல் யாப்பில் விடப்பட்ட தவறுகளை எழுதுகிறார். அவர் வரலாற்றில் தான் மிகப்பெரும் பாவி என்று சொல்வதை போல உள்ளது. அது ஒரு பாவ மன்னிப்பு போன்று தான் தவறு செய்து விட்டேன் என்று சொல்கிறார். அந்த தவறை அவர் Bertram Hughes Farmer இன் Ceylon A Divided Nation என்கிற நூலில்  அதை விட ஆழமாக எழுதி இருக்கிறார். நான் இலங்கை அரசியல் யாப்பில் ஒரு டி. எஸ் சேனநாயக்காவை நம்பி கெட்டு போனேன் என்று சொல்கிறார். அவரை தான் நம்பினேன் என்றும் அவர் இல்லாதபட்சத்தில் இலங்கை அரசியல் கலாச்சாரம் அழிந்து போய் விட்டது என்று சொல்கிறார். அதாவது, அரசியல் கலாச்சாரம் ஊடாக தான் அரசியல் யாப்பை பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையை அவர் அதில் சொல்கிறார். இவ்வாறு சுந்தரலிங்கத்தினுடைய புத்தகம் பல தகவல்களை சொல்கிறது.
மேலும், முதல் முறையாக ஈழம் என்ற சொல்லை பிரயோகித்தவர் சி.சுந்தரலிங்கம். அவர் ஈழம் என்கின்ற சொல்லை ஆங்கில உச்சரிப்பில் எழுதுவதாக இருந்தால் EYLOM என்று வரும் என்ற வகையில் அந்த சொல்லை தலைப்பில் வைத்து அந்த நூலை எழுதி இருந்தார்.
 
இதன் பின்பு செல்வநாயகத்தினுடைய மூளையாக செயற்பட்டது கோ. வன்னியசிங்கம் என்பவர் தான். அவருக்கு பின்பு செல்வநாயகத்தின் மூளையாக செயற்பட்டது வி. நவரட்ணம். இவர் செல்வநாயகத்தோடு அந்நியோன்னியமாக இருந்தார். செல்வநாயகம் சொல்வதை கேட்பார். சத்தியாக்கிரகம் சம்பந்தமான  போராட்டத்தில் செல்வநாயகத்தின் ஆலோசகராகவும் அதன் பிரச்சனைகளில் நெருக்கமாக சம்பந்தபட்டவராகவும் வி. நவரட்ணம் இருந்தார். சரி இதன் பின்பு நவரட்ணம் செல்வநாயகத்தோடு முரண்பட்டு தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுகிறார். மு. திருச்செல்வத்தின் வருகையும் அவர் செல்வநாயகத்தின் மூளையாக மாறியதால் ஏற்பட்ட அரசியல் பின்னணியில் தமிழரசு கட்சியை விட்டு வி. நவரட்ணம் வெளியேறுகிறார்.

தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்பு, வி. நவரட்ணம் 1969 ஆம் ஆண்டு "தமிழர் சுயாட்சிக் கழகம்'' என்கின்ற ஒன்றை ஆரம்பிக்கிறார். இது தான் தமிழ் ஈழ கோரிக்கை சம்பந்தமாக உருவாக்கப்பட்ட முதலாவது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் பின்பு 1991ஆம் ஆண்டு வி. நவரட்ணம் "The Fall And Rise Of The Tamil Nation" என்கின்ற ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
1972ஆம் ஆண்டு வந்த பின்பு இலங்கை அரசியல் யாப்பில் ஒரு வினோதமான நிலைமை உருவாகிறது. இலங்கையில் சோல்பரி அரசியல் யாப்பில் ஒற்றை ஆட்சி, இரட்டை ஆட்சி என்ற சொல் பிரயோகங்கள் இல்லை. சமஸ்டி என்ற பத பிரயோகமும் இல்லை. சோல்பரி அரசியல் யாப்பில் இரு சபைகளை கொண்ட இலங்கை அரசு தான் இருந்தது. நாடாளுமன்றம் என்பது பிரதிநிதி சபையையும், செனட் சபையையும் கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கா  பதவிக்கு வந்த 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பில் திட்டவட்டமாக ஒற்றை ஆட்சி தான் என அரசியல் யாப்பு பதம் பிரயோகிக்கப்பட்டது. இந்த யாப்பை எதிர்த்து தான் தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோட்ட தொழிலாளர் காங்கிரசும் ஒன்று சேர்கின்றன.
1972ஆம் ஆண்டு மே மாதம் "தமிழர் ஐக்கிய கூட்டணி" (TUF) என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். 1976 ஆம் ஆண்டு மே மாதம் பதினான்காம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் வருகிறது. தனி நாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அப்போது தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் அதிலிருந்து விலகி சென்று விட்டது. இப்போது இதுவரை சமஸ்டி கோரி வந்தவர்களும்  ஒற்றை ஆட்சி தான் வேண்டும் என்று கோரி வந்தவர்களுமாக இருவரும் இணைந்து 1976 ஆம் ஆண்டு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். 1944 ஆம்ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரைக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய தெளிவான கொள்கை அவர்களுடைய நடைமுறை சார்ந்த கொள்கை ஒற்றை ஆட்சி தான்.

 செல்வநாயகத்தினுடைய 1949 ஆம் ஆண்டிலிருந்து எழுத்தளவில் சமஸ்டி என்று இருந்தாலும் அவருடைய நடைமுறை சார்ந்த கொள்கை செயற்பாடு ஒற்றை ஆட்சி தான். ஆனால் சமஸ்டி தான் வேண்டுமென்று கோரியவர்களும் சமஸ்டி வேண்டாம் ஒற்றை ஆட்சி தான் வேண்டும் என்று கோரியவர்களும் இரண்டு பகுதியினரும் இணைந்து 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானத்தில் முற்று முழுவதும் சிங்கள அரசில் இருந்து பிரிந்து  நின்று தனி அரசை அமைத்தல் என்கிற வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தில் இரண்டு நாடு என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

மு. திருநாவுக்கரசு-

மார்கழி 2022 நிமிர்வு இதழ்-

1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும்
    https://www.youtube.com/watch?v=Xk5IusH9GAw&t=2727s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.