இலங்கையின் எதிர்கால இருப்பு சீனாவின் நலன்களையும் உள்ளடக்கியதே


இலங்கை தீவின் மீதான இந்தியாவின் அணுகுமுறையும் சீனாவின் அணுகுமுறையும் தனித்துவமானவை. சீனாவைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட செயற்பாட்டு ஊடாக, நீண்ட ஒத்துழைப்பு ஊடாக, அல்லது நீண்ட கடன் பொறிக்கு ஊடாக தன்னுடைய செல்வாக்கை உலகளாவிய ரீதியில் விஸ்தரித்து கொண்டு வருகிறது. அதில் ஒரு வெற்றிகரமான சூழலை அது ஏற்படுத்திக் கொண்டுள்ளது. குறிப்பாக அதனுடைய பட்டுப்பாதைத் திட்டம் (silk road project) முக்கியமானது. அதனூடாக உலகளாவிய ரீதியான இணைப்புக்கு ஒரு களத்தை சீனா ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

சீனாவின் முத்துமாலைத் தொடர் திட்டம் (string of pearls project) இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி இருந்தாலும் பட்டுப்பாதை பெருமளவுக்கு ஆசிய ஆபிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகளை அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளை சீனாவுடன் இணைப்பதற்கான பாதையை வகுத்திருக்கின்றது. இப்படியான பின்னணியில் தான் சீனா இலங்கைத் தீவில் ஏறக்குறைய 1952 முதல் ராஜதந்திர ரீதியிலான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து சீனாவின்  அணுகுமுறை இலங்கையோடு நெருக்கமானதாகவும் அதனுடன் ஒத்துழைத்துப் போகும் நோக்கு நிலையிலும் தான் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகளாவிய வல்லரசுகள் எப்படி இலங்கை தீவையும் அதனூடாக இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியை தமது ஆதிக்கத்தை வைத்துக் கொண்டனவோ அதேபோன்று படிப்படியாக இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சீனாவின் அணுகுமுறை 2022 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமான ஒன்றாக இருக்கின்றது. ஆரம்ப காலகட்டத்தில் அம்பாந்தோட்டையை மையப்படுத்தி  தென் இலங்கையில்  விரைவுப் பாதைகள்,  போக்குவரத்து, மற்றும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற அடிப்படையில் சீனாவின் அணுகுமுறை இருந்தாலும் படிப்படியாக அது வடக்கு கிழக்கையும் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க அபிவிருத்தி சார்ந்து பொருளாதார ரீதியான அம்சங்களை கொண்டு இருக்கக் கூடிய ஒத்துழைப்புகளை எடுத்திருக்கின்றது.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சுதந்திர காலப்பகுதியில் இந்தியர்கள் புவிசார் அரசியல் கட்டமைப்புகள் சார்ந்து ஒரு நெருக்கமான உறவையும் பரிச்சயத்தையும் இலங்கையோடு வைத்து இருந்தார்கள். இலங்கை தீவோடு இந்தியர்களுக்கு இருந்த அத்தகைய உறவாடலானது ஒரு வகையில் அதிகமான முரண்பாடுகளையும் அதிகமான பகைமைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக சுதந்திரத்திலிருந்து இலங்கையை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் இந்தியாவுக்கு எதிரான வெளியுறவு கொள்கைகளைக் கொண்டிருந்தார்கள். அதற்கு அடிப்படையான காரணம் இந்தியர்களுடைய அல்லது இந்திய ஆட்சியாளர்களுடைய ஆதிக்கம் இலங்கை தீவில் அதிகமாக நெருக்கடியை ஏற்படுத்துமோ என்ற பயம். அந்த பயத்தின் அடிப்படையிலே இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள்  தங்களது கொள்கை வகுப்பை முதன்மைப்படுத்தி இருந்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து இந்தியாவோடு நெருக்கமான உறவு வைத்தவர்கள் ஈழத் தமிழர்களாகவே இருந்தார்கள். அதிலும் குறிப்பாக தந்தை செல்வநாயகம் அவர்களுடைய காலப்பகுதியைச் சொல்லலாம். 1962 ஆம் ஆண்டு இந்தியா சீனாவுக்கு இடையில் போர் நிகழும் போது இந்தியாவுக்கு ஆதரவாக படை திரட்டப்பட்டது. அவர்களுக்குரிய பொருளாதார உதவிகள் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான செய்முறை பற்றிய உரையாடல்களை வடக்கு கிழக்கு முதன்மைப்படுத்தி இருந்தது.

குறிப்பாக இலங்கையினுடைய வடக்கு கிழக்கு இளைஞர்களை அணிதிரட்டி போரில் ஈடுபடுத்துவதற்கு கூட தமிழரசு கட்சியின் தலைமையில் இருந்த தந்தை செல்வா முயற்சிகளை மேற்கொண்டதாக வரலாற்று தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த அளவுக்கு நெருக்கமான ஒரு பிணைப்பை ஈழத் தமிழர்கள் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்துடன் இருந்த உறவு ஒரு தனித்துவமானதாக இருந்தது. அது ஒரு பரிச்சயத்தை இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையே ஏற்படுத்தி இருந்தது. இலங்கையினுடைய வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து பின்னர் எழுந்த ஆயுதப் போராட்டம் இந்தியாவுடன் நெருக்கமான ஒரு தன்மையை ஏற்படுத்தியது. பின்னர் அதன் விளைவுகள் பாரிய அளவிலான முரண்பாட்டை இந்த உறவில் ஏற்படுத்தி இருந்தது.

தற்பொழுது இருக்கின்ற இந்த களத்தை அவதானிக்கின்ற பொழுது பொருளாதார ரீதியான இந்தியர்களுடைய ஒத்துழைப்புகள்  முதன்மையாக இருந்த போதிலும் சீனர்களின் ஒத்துழைப்பும் அதே சம வலுவோடு வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்கப்படுவதைக் காணலாம்.

இந்த அடிப்படைகளுக்குள் இருந்துதான் இலங்கை சார்ந்து சீனா எடுக்கும் நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கை நோக்கி சீனர்களின் ஒரு வகையான அபிவிருத்திச் சார்ந்த நகர்வுகளை நோக்க வேண்டும். எவ்வாறு உலகத்தை அவர்கள் படிப்படியாக கைப்பற்றினார்களோ அதே போன்று இலங்கையையும்  தங்களுடன் இணைத்துக் கொள்வதில் அவர்களை காட்டும் அக்கறையை பார்க்க வேண்டும். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் முதலிடுவதற்கு அல்லது இலங்கையை கடன் பொறியில் இணைத்துக் கொள்வதற்கு தமக்கு கிடைத்த காத்திரமான வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

இனி வரும் காலப்பகுதிகள் முழுவதும் உலகளாவிய ரீதியான அரசியல் போக்குகளில், குறிப்பாக ரஷ்யா உக்ரைன் யுத்தத்துக்கு பின்னர், சீனாவின் தாக்கம் முக்கியமாதாக இருக்கும். ரஷ்யாவினுடைய இருப்பில் நெருக்கடியான நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்றவற்றிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சீனாவுக்கு ஒரு வாய்ப்பான களத்தை தந்துள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவினுடைய செல்வாக்கு அல்லது வலுச் சமநிலை மேலும் பலமடைவதற்கான ஒரு வாய்ப்பை இந்த யுத்தம் உருவாக்கி உள்ளது.

ஆகவே இந்த பின்னணியை வைத்து அவதானிக்கின்ற பொழுது இலங்கை தீவில் சீனாவின் உடைய இருப்பு நிரந்தரமாகி உள்ளது. இலங்கையில் ஆட்சியாளர்கள் மாறினாலும், ஆட்சி முறைகள் மாறினாலும், ஏன் இலங்கை அரசின் அடிப்படைக் கொள்கையே மாறினாலும் இலங்கையில் சீனாவின் இருப்பு மாறப் போவதில்லை. இலங்கையின் அரசியல் இருப்பு சீனாவுடன் பொருளாதார ரீதியில் பின்னிப்பிணைந்த ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புத்தான் அதிகம் இருக்கின்றது.

கடந்த காலங்களில் எவ்வாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இலங்கை வைத்திருந்த வெளியுறவுக் கொள்கைகள் ஒரு காத்திரமான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை பெற்றிருந்தனவோ அதேபோன்ற முக்கியத்துவத்தை சீனாவும் கொண்டிருக்கின்ற நிலையை இலங்கை சீன உறவு ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக இந்தியா என்கின்ற ஒரு சக்தியை இலங்கை ஆட்சியாளர்கள் கையாள வேண்டுமாக இருந்தால் அதற்கு பின்னால் சீனா இலங்கை இடையிலான உறவு என்பது அவர்களுக்கு அவசியமான பலத்தை தந்து இருக்கிறது. நிச்சயம் இலங்கையில் எதிர்வரும் காலப் பகுதியில் அரசினுடைய இருப்பு முழுக்க முழுக்க சீனர்களுடைய நலன்களோடும் சீனர்களுடைய வாய்ப்புக்களோடும் சேர்ந்து பயணிக்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில், வரலாற்று ரீதியாக அண்மைக் காலங்களில் சீனா உலகத்திலுள்ள ஏனைய நாடுகளை எவ்வாறு தன்னுடைய உத்திகள் ஊடாக, செயற்பாடுகள் ஊடாக, மூலோபாயத்தின் ஊடாக கட்டுப்படுத்தியதோ அதேபோன்று செயல்முறையை இலங்கையில் செய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இதற்கூடாக இலங்கையின் வடக்கு கிழக்கும் கூட ஒரு பாரிய நெருக்கடிக்கு உட்படுகின்ற சூழலும் காணப்படுகிறது.

இந்த நடவடிக்கை ஊடாக இந்தியா இந்து சமுத்திரத்தைச் சார்ந்து அல்லது இந்து-பசுபிக் பிரதேசத்தைச் சார்ந்து இருக்கின்ற இருப்பையும் அது தொடர்பாக செயற்படக்கூடிய வாய்ப்புகளையும் சீனா நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏனென்றால், இலங்கைத் தீவு ஒரு இந்து சமுத்திர மையப் பகுதியில் அமைந்திருப்பதனால் இந்தியா உட்பட உலகளாவிய வல்லரசுகளுக்கு அது தேவையானது என்ற அடிப்படையில் சீனாவின் நடவடிக்கைகள் நோக்கப்பட வேண்டியதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதும் அவசியம்.

பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம் 

நிமிர்வு மார்கழி 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.