மாவீரர் நாள் - 2022 பேரெழுச்சி: உலகுக்கு சொல்லும் செய்தி



தமிழர் தாயகத்தில் இந்த ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் இடம்பெற்று இருக்கின்றன. இம்முறை மாவீரர் நினைவேந்தலில் பல ஆயிரக்கணக்காக மக்கள் தன்னெழுச்சியுடன் பங்கேற்று தங்கள் உறவுகளுக்கு தீபமேற்றி, மலரஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

இத்தீவில் தமிழர்களுக்கு என்று தனியரசு அமைந்தாலே சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு வாழலாம் என்ற கோட்பாட்டை தலைமேற் சுமந்து  போராடி உயிர்நீத்த ஆயிரமாயிரம் வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அலம்பில் துயிலுமில்ல வாசலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவை பொலிஸார் அகற்றிய போதும் மீண்டும் ஏற்பாட்டாளர்களால் வளைவு அமைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேபோல் வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுருப் படத்தை பொலிஸார் வெட்டி எடுத்துச் சென்றனர். பின் பொலிஸார் வெட்டி எடுத்து சென்ற திருவுருவப் படத்துக்கு கறுப்பு மை தீட்டப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேபோல் யாழ்ப்பாணம் - வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகே இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது அங்கு வந்திருந்த மக்களை இராணுவத்தினர் ஒளிப்படப்பிடிப்பு கருவிகளினூடாக படம்பிடித்து கண்காணித்ததுடன் கைபேசிகள் ஊடாக ஒளிப்படம் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அவ்வீதியின் இருமருங்கிலும் 21 ஆம் திகதியில் இருந்து பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் செல்வோர் விசாரிக்கப்பட்டனர்.  இம்முறையும் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டியே தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு இடம்பெற்று இருக்கின்றன.

தங்களது உயிர்களுக்கும் மேலாக தேசத்தின் விடுதலையை எம் மக்களின் சுதந்திர வாழ்வை ஆழமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்துக்காக போராடி தம்முயிர்களை எம்மண்ணுக்கு விதையாக்கிய மாவீரர்களின் நினைவு நாளில் பல்லாயிரக்கணக்கில் ஒரு தேசமாக, ஒரே உணர்வுடன் ஒன்று கூடிய தமிழ்மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், சிங்கள பேரினவாத அரசுக்கும் உலக நாடுகளுக்கும் திட்டவட்டமான செய்தியை சொல்லி உள்ளார்கள்.  

தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கட வேண்டுமென்பதே அதுவாகும்.  குறிப்பாக, சர்வதேச நாடுகள் தமிழ் அரசியற் தலைமைகளிடமும் வெகுசன அமைப்புக்களிடமும்  ‘ஈழத் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டும்’ என்று கேட்கும் கேள்விக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் வேண்டுவது இதுதான் என்ற பதிலை தெளிவாக பறையறைந்து சொல்லியிருக்கிறார்கள்.  இது சர்வதேச சமூகத்துக்கு தெரியாத ஒன்று அல்ல. கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக எமது மக்கள் இதையே பலவேறு வழிகளிலும் உலகுக்கு சொல்லி வந்திருக்கிறார்கள்.  

ஆனால், 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று சர்வதேச சமூகம் நினைக்கத் தலைப்பட்டிருக்குமாக இருந்தால் அதை விட உண்மைக்குப் புறம்பானது வேறு ஒன்றும்  இல்லை என்பதை தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் அரசியற்கட்சித் தலைவர்களுக்கும் இந்த மாவீரர் நாள் எழுச்சி ஒரு தெளிவான செய்தியை சொல்லி இருக்கிறது.  ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் தமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை தமிழ்மக்கள் கைவிடவில்லை என்ற செய்தியே அது.  மீண்டும் பேச்சுவார்த்தை என்ற ஒரு தந்திரத்தை சிங்கள பேரினவாத அரசு கையில் எடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றை ஆட்சியை ஏற்கின்ற எந்தவொரு பேச்சுவார்த்தையும்  தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை தமிழ் அரசியற்கட்சித் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவதனூடாகவோ அல்லது 13+ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதனூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து விடலாம் என்று தமிழ் அரசியற் கட்சித் தலைவர்களும் சிங்கள அரசியற்கட்சித் தலைவர்களும் நினைத்தால் அந்த நடவடிக்கை ஒரு வெறும் விரயம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாவீரர் குடும்பங்கள் தமது குடும்பத்தில் இருந்து மாவீரர் ஆகிப்போனவருக்கு அஞ்சலி செலுத்தவே மாவீரர் நாளில் ஒன்று கூடினார்கள் என்று அர்த்தம் கற்பிக்க சில சக்திகள் விளையக் கூடும்.  ஆனால் மாவீரர் குடும்பங்களையும் தாண்டி ஒரு இனமாக தமிழ் மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி இருக்கிறார்கள் என்பதே உண்மை. எந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்று கூடினார்களோ அந்த மாவீரர்களின் கோட்பாட்டிலேயே தமிழ் மக்கள் இன்னும் நிற்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் இந்த மாவீரர் நாள் எழுச்சியை அர்த்தப்படுத்தி விடமுடியாது. 

துருவன்- 

நிமிர்வு மார்கழி 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.