மீண்டும் வருகிறது பேச்சுவார்த்தை



ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த நாளிலிலிருந்து இனங்களுக்கிடையேயான பிரச்சனை இலங்கையின் சமூக, பொருளாதார,  அரசியற் பரப்பில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. இனப்பிரச்சினை காரணமாகத்தான் இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற முடியாமலும் சமூக அபிவிருத்தியில் பின்தங்கியும் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமையிலும் இருக்கிறது என்று பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக சிறுபான்மை இனங்கள் மீது நடத்தப்படும் இனக்கலவரங்களும் அவற்றால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புக்களும் இதற்கு சான்றுகளாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

இந்த பெரும்பான்மை பேரினவாத அடக்குமுறைகளுக்கு முகம் கொடுப்பதற்காக தமிழ் பேசும் மக்கள் தம்மை ஒரு இனமாக ஒன்று திரட்டிக் கொண்டு இனப்பிரச்சனைக்கான தீர்வாக பல தீர்வுகளை முன்வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ஒன்றுபடுவதைத் தடுப்பதற்காக பல பிரித்தாளும் சதிகளை சிங்கள பேரினவாதம் அரங்கேற்றி அவர்களை ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தமிழர் என்று பிரித்துப் போட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று ஈழத்தமிழரை வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர் என்று பிரிக்கும் நடவடிக்கையை பேரினவாத அரசு துரிதமாக முன்னெடுத்து வருகிறது. ஒரு அரசற்ற இனமாக இருக்கும் தமிழ் பேசும் மக்கள் தாம் ஒரு தோற்றுப் போன இனம் என்று எண்ணிக் கொண்டு இந்த சதிகளிற்கு பலியாகி வருகின்றனர்.

அதேவேளை, இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் அபிலாசைகளை அடக்கியாள்வதற்காக சிங்கள பேரினவாதம் தனது இயலுமைக்கும் மேலாக வெளிநாடுகளிடம் கடனை வாங்கி ஒரு யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறது. பல போர்க்குற்றங்களை கட்டவிழ்த்து விட்டு பெருமளவு அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து ஒரு யுத்த வெற்றியை ஈட்டி இருக்கிறது.  அந்த யுத்த வெற்றியின் ஊடாக சிங்கள இனத்தின் மீட்பர்களாக மகிந்த ராஜபக்ச குடும்பம் தம்மை நிலைநாட்டிக் கொண்டது. யுத்த வெற்றி தந்த அங்கீகாரம் ராஜபக்ச குடும்பத்தினர் கண்மூடித்தனமாக வெளிநாடுகளிடமிருந்து மேலும் கடன் வாங்கவும், முக்கியமாக சீனாவின் தங்கு தடையற்ற முதலீட்டை இலங்கையில் ஊக்குவிக்கவும் வழி வகுத்தது. அதன் தொடர்ச்சியாக சிறிலங்கா ஒரு கடன் சுழலுக்குள் சிக்குண்டு ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது.  இன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்கிய கடன்களுக்கான வட்டியையோ முதலையோ திருப்பிக் கட்ட முடியாமல் இருப்பதாக வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்து இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த கோதாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டதும், அவரது இடத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன கட்சியினரே நியமித்துள்ளதும் நடந்தேறி இருக்கிறது. மொத்தத்தில் நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மோசமான வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரவும், வெளிநாடுகளிலிருந்து மேலும் கடன் பெறவும் உதவி செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் கடன் வழங்கிய நாடுகளும், சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் முக்கியமான பேசு பொருளாக இருப்பது, இலங்கையில் ஒரு பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியப்பாட்டுக்கு இனப்பிரச்சனை தீர்க்கப்படுதல் அடிப்படையானது என்பதாகும்.

இந்தப் பின்னணியிலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காகப் பேச வாருங்கள் என்று தமிழ் கட்சிகளை நோக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்து இருக்கின்றார். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த அழைப்பை விடுத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தெரிவு செய்யப்படாத ஒரு நபர். ராஜபக்ச குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்கு வேறு எந்த சிங்கள அரசியற் தலைவர்களும் முன்வராத நிலையில் பொதுஜன பெரமுனவினால் அக்கடமையை நிறைவேற்றவெனத் தெரிவு செய்யப்பட்டவரே இவர். இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் கூட பெரும்பான்மை ஆதரவு இல்லை. இவர் சனாதிபதியாக இருப்பதற்கு சிங்கள இனவாதக் கட்சியான பொதுஜன பெரமுனவின் ஆதரவிலேயே தங்கி இருக்கிறார். அப்படி இருக்கும் ஒரு நபரால் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒரு தீர்வைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது.

சிங்கள மக்களிடமிருந்து எந்தவிதமான தேர்தல் ஆணையையும் பெற்றுக் கொள்ளாத ஒருவருடன் தமிழ்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வீண் விரயமே. 2015ஆம் ஆண்டு சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எடுத்த முன்னெடுப்புக்களுக்கு இறுதியாக என்ன நடந்தது என்ற ஓர் உதாரணமே மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் எடுக்கும் தீர்வு நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கும் என்பதை அறியப் போதுமானது.

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்றவுடன் முந்தி அடித்துக் கொண்டு ஓட நினைக்கும் தமிழ்த் தலைமைகள் இதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக இனப்பிரச்சனைக்கு தீர்வான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது என்பதையும் அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தோல்வியிலேயே முடியும் என்பதையும் உறுதியாக கூற முடியும்.

இரண்டாவதாக, கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா,   உலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அதிலிருந்து மீளும் தந்திரோபாயத்தில் தமிழர்களுடன் பேசுவது என்ற முடிவை எடுத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை இத்தீவில் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத சிங்கள அரசியல் தலைமை ஏதாவது பொருத்தமில்லாத அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடப் பார்க்கின்றது.

அண்மையில் தமிழர்களுக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபைகளே போதும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் முன்மொழிய ரணில் விக்கிரமசிங்க வழிமொழிந்துள்ளார். இவ்வாறாக ஒரு அரைகுறைத் தீர்வை அரசியல் அமைப்பாக எழுதிக் கொண்டு இனப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாக கடன் வழங்கும் நாடுகளுக்கு பிரகடனப்படுத்திக் கொண்டு மீண்டும் கடன்சந்தையில் மேலும் கடன்களை துரிதகதியில் பெறுவதற்கான முனைப்பாகவே இதனை பார்க்க வேண்டி உள்ளது.

மூன்றாவதாக, சிறிலங்கா அரசுக்கும் தமிழ் அரசியற் தலைவர்களுக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையில் வரலாறு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. சிங்களத்தின் ஒரு தரப்பு தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்வதும் அதனை மறுதரப்பு எதிர்த்து இறுதியில் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப் படுவதும் வழமையாக ஒன்றாக இருந்து வந்துள்ளது.  அதனையடுத்து நடந்த ஆயுதப் போராட்ட காலங்களிலும் கூட வெளிநாடுளின் நெருக்குதல்களுடன் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் கூட அந்த நாடுகளை ஏமாற்றவும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை இராணுவ ரீதியில் அடக்குவதற்குமே பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த இழிவான நோக்கத்தை சிறிலங்கா இந்த பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் கூட கைவிட்டதாக எந்தவோர் அறிகுறியையும் காட்டவில்லை. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சபையில் ஆற்றும் உரைகளே இதற்கு பெரும் சாட்சிகளாக உள்ளன. ஆகவே இந்த முறை நிலைமை மாறிவிட்டது என்று சொல்லிக் கொண்டு சிங்கள அரசை நம்பி பேச்சுவார்த்தை மேசையில் போய்க் குந்துவது மீண்டும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே முடியும்.



நான்காவதாக, தமிழர்கள் பல ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த அரசியற் போராட்டத்தில் அவர்கள் கோரிக்கை என்ன என்பதை தெளிவாகவே பலதடவைகளை எடுத்துச் சொல்லி விட்டார்கள்.  1976 ஆம் ஆண்டு தனிநாடே தீர்வு என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று யதார்த்த நிலைமை காரணமாக ஒரு சமஷ்டித் தீர்வுக்கு நாம் தயார் என எல்லா தமிழ்த் தேசிய கட்சிகளும் கூறியுள்ளார்கள்.  அதற்கு குறைந்த எந்த தீர்வையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றம் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார்கள். ஆகவே இங்கே பேசுவதற்கு எதுவுமில்லை. சமஷ்டியை அடிப்படையாக வைத்து ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்குவோம் வாருங்கள் என்று சிங்கள அரசாங்கம் அழைக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது மட்டுமே பேசுவற்கு உள்ளது.    

ஐந்தாவதாக, இந்த பேச்சுவார்த்தை அழைப்பு தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கார்த்திகை 15 ஆம் திகதி கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் சொல்லியவை மிகவும் முக்கியமானவை.  பேச்சுவார்த்தைக்கு முன்னர் அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படைகளாக இருக்கப் போகின்றவை என்ன என்பதை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டிய கடப்பாடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்துக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அரசாங்கம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கு இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்திலாவது இதயசுத்தியுடன் செயற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் உண்மையை சொல்லி தீர்வு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். அந்த உண்மையான தீர்வு என்பது சமஷ்டியின் அடிப்படையை விட வேறு ஒன்றையும் கொண்டிருக்க முடியாது என்றும் அதனை சிங்கள மக்களுக்கு அரசு தெளிவுபடுத்திய பின்னரே நாம் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு போக முடியும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த அடிப்படையை சிங்கள அரசு நிறைவேற்றாதவரை இந்த அழைப்பையும் கடந்த காலங்களைப் போலவே ஒரு கால இழுத்தடிப்பாகவும் கடன் வழங்கிய வெளிநாட்டவரை ஏமாற்றும் நடவடிக்கையாகவும் மட்டுமே பார்க்க முடியும் என்று அவர் சொல்வதில் உண்மை இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது, பேச்சுக்கு போவது என்பதெல்லாம் கால இழுத்தடிப்பே ஒழிய வேறொன்றும் இல்லை என்பது தான் தமிழ்மக்களின் கடந்த கால அனுபவம். இந்திய அரசின் அழுத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட   13ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்ட தமிழ்மக்களுடன் அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கூட பேச தயாரில்லாத சிங்கள அரசு புதிய அரசியலமைப்பை இதய சுத்தியுடன் கொண்டு வந்து தமிழ்மக்கள் விரும்பும் தீர்வை காணும் என்பதனை எவ்வாறு நம்புவது?

சிங்கள அதிகார வர்க்கத்தின் மனநிலையிலும், சிங்கள மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படாதவரை இலங்கைத்தீவின் பொருளாதாரம் மேலும் அதல பாதாளத்தை நோக்கியே செல்லும். பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் அரசியல் ஸ்திரமின்மைக்கும் சமூகச் சீரழிவுக்குமே இட்டுச் செல்லும். அதன் விளைவாக இலங்கையர்கள் அனைவருமே நாட்டின் மீதான தமது இறைமையை இழந்து அந்நிய நாட்டினரின் கட்டளைகளுக்கு இழுபட்டுச் செல்பவர்களாக வாழும் காலம் வருவதை தவிர்க்க முடியாது. 

லிங்கம்-

மார்கழி 2022 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.