பூமிதான இயக்கமே காலத்தின் தேவை

 


 

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த வயதான பெண்ணொருவர் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான காணியை இங்கே உள்ள நிலமற்றோருக்கு பிரித்து வழங்கிய செயற்பாடு கடந்த மாதம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதாசண்முகநாதன் என்பவரே தங்களுக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான  காணி உறுதி வழங்கும் நிகழ்வு 18-02-2023 மேலை- கரம்பொன்முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது. குறித்த வேலைத் திட்டத்தை வரதா சண்முகநாதன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவரிடம் படித்த மாணவன் கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ச.ஸ்ரீரங்கநாதன் ஆசிரியரும் வேலணையைச் சேர்ந்த செந்தூரன் இராமேஸ்வரனும் சிறந்த முறையில் செய்து முடித்துள்ளார்கள்.

காணியை பகிர்ந்தளித்த வரதா சண்முகநாதனிடம் பேசிய போது,

ஊரில் இருந்த போது ஆசிரியராக பணியாற்றிய தான் காந்திய கொள்கைகளால் சிறு வயது முதலே ஈர்க்கப்பட்டதாக  கூறுகிறார். “50 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டை விட்டு நானும் கணவரும் வெளியேறினோம். இப்போது எனக்கு 89 வயது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது காணியை ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு தானம் செய்யும் எண்ணம் ஏற்பட்டது.   வேலணை கரம்பொனில் உள்ள எனது கணவருக்கு சொந்தமான நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்தாலும் எனது வயது, உள்ளிட்ட காரணங்களால் எவ்வாறு நிலத்தை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் எவ்வித செயற்பாடும் இடம்பெறாமலே இருந்தது. நான் கனடாவில் இருந்து கொண்டு எப்படி அதனை நிறைவேற்றுவது என்பது தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டது. பின் எனது மாணவனின் துணையுடன் இந்தப் பணியை பல்வேறு சிக்கல்களையும் தாண்டி செய்து முடித்துள்ளேன். முதலில் அங்கே எமது காணிகளை அடையாளம் காண்பதே பெரும் பிரச்சினையாக இருந்தது. கிணறு, மரங்களை வைத்தே குறித்த காணிகளை அடையாளம் கண்டார்கள். பின் சட்டத்தரணி, பிரதேச செயலகம், கிராமசேவகரின் ஒத்துழைப்புடன் இப்போது காணிகள் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் சட்டப்படி முறையாக கையளிக்கப்பட்டிருக்கிறன.”  கனடாவில் இவர் தனது 87 ஆவது வயதில் முதுகலை பட்டத்தினை பெற்று பலருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். அங்குள்ள முன்னணி ஊடகங்களில் நன்கு அறியப்பட்டவர்.  

                                  

இதற்கு முன்னரும் ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் இங்குள்ள ஏழை மக்களுக்கு காணிகளை இலவசமாகவழங்கியிருந்தாலும், இப்போதுள்ள நிலையில் நிலத்தை நன்கொடையாக வழங்குதல் முக்கியத்துவம்பெறுகிறது. இந்நிலைமை மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

 

 

 

தமிழ் மக்கள் தேசமாக இருப்பதன் அடிப்படையே நிலமாகும். ஆனால் இன்று நிலம் இல்லாத மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கே வாழ்ந்து வரும் நிலையில் பயன்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் இங்கே உள்ளமை தான் துயரமானது. சாதி ஒடுக்கு முறைக்கும் நில உரிமைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. 

இப்போதும் வயாவிளான், தெல்லிப்பழை, பலாலி, மாவிட்டபுரம் போன்ற இடங்களில் இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ள காணிகளில் ஏராளமானவை மக்களின் பயன்பாடின்றியே உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்  யாழ். மாவட்ட இராணுவ அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறியிருந்தார்: “காணிகளை விடுவிக்க சொல்லி கேட்டு குறிப்பிடத்தக்களவான மக்கள் போராடி வருகின்றார்கள். ஆனால், விடுவிக்கப்பட்ட பல காணிகளில் மக்கள் குடியேறாமல் அக்காணிகள் எவ்வித பயன்பாடுமின்றி உள்ளன. இந்த முரண் தொடர்பில் தமிழ் மக்கள் தேசமாக தமது பார்வையை செலுத்த வேண்டும். 

வலிகாமத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களில் நான்கில் ஒரு பகுதியினருக்கு பலாலி, வசாவிளான், காங்கேசன்துறை, மயிலிட்டி போன்ற இடங்களில் சொந்தமாக ஒரு துண்டு காணி கூட இல்லை. இவர்கள் முன்பு கூலி தொழிலாளியாகவோ, வாடகை வீடுகளிலோ வசிப்பவர்களாகவோ இருந்துள்ளார்கள். சுன்னாகம் நலன்புரி முகாமொன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிமிர்வு இதழுக்காக வயதான  அம்மா ஒருவரோடு உரையாடிய போது, மயிலிட்டியில் இருந்து மூன்று வயதில் தனது மகளுடன் போட்டிருந்த உடுப்புடன் இடம்பெயர்ந்ததாகவும் தற்போது மகளுக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் சொன்னார். மூன்று தலைமுறைகள் இப்படியான சிறு முகாம்களில் எப்படி வாழ்வது என்று வினவினார். இந்நிலை இந்த மக்களுக்கு இப்போதும் தொடர்கிறது. அரசோ இந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான எவ்வித முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு காணி கூட இல்லாமல் 14,862 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், கிளிநொச்சியில் 4,512 குடும்பங்கள் எந்த காணியும் இல்லாமல் வாழ்வதாகவும் மாவட்ட செயலக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான தொகை இன்னும் கூடவாக இருக்கலாம். ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக நிலமும், வீடும் இருக்கிறது. இந்த அடிப்படைகளின் மீது தான் ஆரோக்கியமான சமுதாயம் கட்டமைக்கப்படுகிறது. சொந்தமான வாழிடம் இல்லாமல் மனிதனின் ஆரோக்கியமான வளர்ச்சி எவ்வகையில் சாத்தியம்

ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி இலங்கையில் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. பாடசாலைக்கு செல்லும் வறிய நிலையில் உள்ள மாணவர்களில் பலர் காலை உணவைக் கூட சாப்பிடாமல் செல்லும் நிலை ஒருபுறம், குடும்பங்களில் சத்தான உணவுக்கு செலவழிக்கும் பணம் மிகவும் குறைவடைந்துள்ளது இன்னொரு புறம். இதனால் ஊட்டச் சத்து குறைபாடுள்ள நிலையில் பிள்ளைகள் வளரும் நிலை உள்ளது. இதற்கும் காணிப் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

வறிய நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட அளவான காணிகள் இருந்தால் கூட அதில் இயற்கையில் கிடைக்கும் இலை வகைகள், மூலிகை தாவரங்களை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மரக்கறிப் பயிர்களை வளர்ப்பதூடாகவும், ஆடு, மாடு, கோழி என கால்நடைகளை வளர்ப்பதூடாகவும் தாவர ஊட்டச் சத்துக்களையும் முட்டை, பால், இறைச்சி என புரத சத்துக்களையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். அது எமது மக்களை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும்.

புலம்பெயர்ந்த மக்களின் காணிகளில் ஒரு தொகுதி முறையாக பராமரிக்கப்பட்டு வந்தாலும் ஏராளமானோரின் காணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் பற்றைகள் வளர்ந்து புதர் காடுகளாகத் தான் காட்சியளிக்கின்றன. 

தாயகத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அப்படிப் போராடிப் பெற்ற காணிகள் பயன்பாடற்றுக் கிடப்பது அந்தப் போராட்டத்தை மலினப்படுத்துவதாக முடியும். இந்த முரணை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த வேலைத்திட்டம் பயன்படுத்தப்படாது இருக்கும் காணிகளை காணிகளற்றவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதையும், மீதமிருக்கும் காணிகளை விவசாயம், கைத்தொழில் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் சொந்தமாக நிலமில்லாத மக்களின் நிலைமையை சிறிது யோசித்து பாருங்கள்.ஆகவே புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள் இங்கே உள்ள எம் மக்களுக்கு குறைந்தது குத்தகை அடிப்படையிலாவது காணிகளை வழங்கி குறைந்த பட்சம் விவசாய பயிர் செய்யவாவது உதவ வேண்டும். அல்லது தங்கள் காணிகளை இங்குள்ள ஏழை மக்களுக்கு தானமாக வழங்க முன் வரவேண்டும்.

ஒரு சில புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் உள்ள தங்கள் காணிகளை இங்குள்ள வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கி அவர்களின் விவசாய முதலீடுகளுக்கும் தங்கள் பணத்தை வழங்கி பின் முதலை பெற்றுக் கொண்டு இலாபத்தை முயற்சியாளர்களிடமே வழங்கி விடுகின்றனர். இப்படியான நிலையை சில இடங்களில் காணக் கூடியதாக உள்ளது. இது மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும், பரவலாக்கப்பட வேண்டும்.  

தாயகத்தில் எந்த ஒரு காணியும் வெறுமையாகவோ, பற்றைகள் படர்ந்தோ இருக்க கூடாது. இங்குள்ள ஒவ்வொரு காணியும் ஏதோ ஒரு வகையில் பொருளாதார ரீதியாக பயன் பெறக் கூடியளவு இருக்க வேண்டும். 

இந்த நேரத்தில் இந்தியாவில் பல புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய பூமிதான இயக்கம் பற்றி அறிந்து கொள்வோம். 

பூமி தான இயக்கம் அல்லது நிலக்கொடை இயக்கம் என்பது காணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் காணிகளின் ஒரு பகுதியை நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு கொடையாக வழங்கிய சமூக இயக்கமாகும். இது இந்தியாவில் 1951 ம் ஆண்டு வினோபா பாவேவால் (Vinoba Bhave) தொடங்கப்பட்டது. அரசாங்கம் ஏழைகளுக்கு காணிகளை இலவசமாக வழங்கப் போவதில்லை. காணிகளை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை கொடையாக அளிக்க வேண்டுமென கோரினார். இதனை கேட்டு பெருந்தொகையானோர் நிலங்களை கொடையாக அளிக்க முன்வந்தனர். அது பின் பெரியதொரு பூமிதான இயக்கமாக வளர்ச்சியடைந்தது. 

வினோபா பாவே இந்தியாவெங்கும் நடை பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆச்சிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன. 70,000 ஏக்கர் நிலங்கள் தானமாகப் பெறப்பட்டு53,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலும் பூமிதான இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொடையாளர்கள் வழங்கினார்கள். 

பூமிதான நாள் முதன் முதலில் 1951 சித்திரை 18 ஆம் நாள் கொண்டாடப் பட்டது. இராமச்சந்திர ரெட்டி என்பவரால் பூமிதான இயக்கத் தந்தை வினோபா பாவே முன்னிலையில் இந்த இயக்கத்திற்கு நூறு ஏக்கர் நிலம் இந்நாளில் தானமாக வழங்கப்பட்டது. 

பூமிதான இயக்கம் செயல்படத் துவங்கிய இந் நாள் பூமிதான நாளாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை 18 ஆம் திகதியை தொடர்ந்து தாயகத்திலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் தமிழர்கள் இது தொடர்பான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம். புலம்பெயர் நாடுகளில் வளமோடு இருக்கும் எம் மக்கள் இங்குள்ள ஏழை மக்களுக்கு தங்கள் காணிகளை தானமாகவோ அல்லது குத்தகைக்கோ வழங்கி அவர்களும் பொருளாதார ரீதியாக முன்னேற வழியமைக்க வேண்டும். காணிகள் பெருமளவில் இருந்தால் பெரிய கூட்டுப் பண்ணைகள் அமைத்து எமது இளையோரின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேலை வாய்ப்புகளை வழங்கலாம். அல்லது சொந்தமாக விவசாயம் செய்ய ஊக்குவிக்கலாம். எல்லாவற்றுக்கும் நிலமே அடிப்படையானது.

 தொகுப்பு: அமுது  

 நிமிர்வு பங்குனி 2023 இதழ்






No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.