வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தொழில்நுட்பவியல் கல்லூரிகள்

 இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் 9  தொழில்நுட்பவியல் கல்லூரிகளும், 30 தொழிநுட்பக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதிலும் வடக்கு கிழக்கில் பழமையானதும் முன்னணி வாய்ந்ததாகவும் யாழ்ப்பாண   தொழில்நுட்பவியல் கல்லூரி காணப்படுகின்றது. இந்த கல்விக்கூடத்தின் பணிப்பாளராக சுப்பையா பரமேஸ்வரன் கடமையாற்றி வருகிறார். இங்கு தை மாதத்தில் புதிய வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் பல தொழில்சார் பாடநெறிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தமை போதாமல் உள்ளது. போதுமான மாணவர்கள் விண்ணப்பித்த பாடநெறிகளுக்கு வகுப்புகள் ஆரம்பமாகி விட்டன. மேலும் சில பயிற்சி நெறிகள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப் படவுள்ளன.இந்த புதிய பாடநெறிகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவித்தல் பாமர மக்கள் மத்தியிலே அல்லது படித்த இளைஞர்கள் மத்தியில் சென்றடையாமல் இருக்கலாம். அரசாங்க திணைக்களத்தின் ஊடாக கொழும்பில் உள்ள பிரபல்யமான ஊடகங்கள் ஊடாக பாடநெறிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், அந்த விளம்பரங்கள் குறித்த மக்கள் கூட்டத்தை சென்றடையாமை ஒரு குறைபாடாக இருக்கின்றது. அப்படி சென்றடைந்தாலும் அவர்கள் இந்த வாய்ப்புகள் மீது அக்கறை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்கு உரிய விடயமாகும். ஏனெனில் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தமக்கு முன்னால் உள்ள அரிய சந்தர்ப்பத்தை அவர்கள் அறியாமையால் தவற விடுகிறார்கள்.

க.பொ.த சாதாரண தரம் வரை படித்த பிள்ளைகள் அல்லது க.பொ.த சாதாரண தரம் வரை  படித்தும் சித்தி அடையாத பிள்ளைகள் என்று ஒரு தரப்பினர் எமது சமூகத்தில் உள்ளனர். க.பொ.த சாதாரண தரம் படித்து சித்தி அடைந்தவர்களில் ஒரு தொகுதியினர் க.பொ.த உயர்தரம் போகின்றனர். மிகுதி மாணவர்கள் படிப்புகளை கைவிட்ட நிலையில் செய்வதறியாது  இருக்கின்றனர்.   இன்னொரு பக்கம் உயர்தரம் போகின்ற ஒரு பகுதி மாணவர்கள் சித்தி அடைகின்றார்கள். இதிலும் ஒரு பகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள். மிகுதி ஒரு பகுதி மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாது வீட்டில் இருக்கின்றார்கள். இவர்கள் தமது இலட்சியத்தை நோக்கி செல்ல முடியாது பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றார்கள்.

நாளாந்த பத்திரிகைகளில் இளையோர்கள் பல்வேறு குற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. ஒரு வயதுக்கு பிறகு பெற்றோர்களும் செய்வதறியாது உள்ளனர். அதன் விளைவாக குடும்ப கட்டமைப்புகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இவ்வாறாக முதலாம் நிலை, இரண்டாம் நிலை கல்வி ஊடாக முன்னோக்கி செல்ல முடியாத மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூன்றாம் நிலைக் கல்வியை வழங்குகின்றன. அங்கு வரும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கி அவர்களுக்கு பொருத்தமான தொழில் கல்வியில் சேர்த்து அவர்களின் இலட்சியங்களை அடைய உதவி செய்கின்றன.ஆனால் சிலருக்கு இந்தக் கல்வியை கற்பதற்கான நோக்கம் என்ன எப்படி கற்க வேண்டும் இதற்கான தகுதி என்ன என்கின்ற விபரங்கள் தெரிவதில்லை. சில பின் தங்கிய பிரதேசங்களில் காணப்படுகின்ற மாணவர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி வசதிகள் இல்லாமல் இருக்கலாம். அப்படியான மாணவர்களுக்கு இப்படியான தொழில்சார்ந்த கற்கை நெறிகள் இருப்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு நாம் ஏதேனும் வழி செய்ய வேண்டும்.யாழ்ப்பாண தொழினுநுட்பவியல் கல்லூரியில் முழு நேரம் பகுதி நேரம் என அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த போதனா ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.  இந்த கல்லூரியில் நூறு வீதமான வளங்கள் காணப்படாவிடினும் கல்வியை சிறந்த முறையில் கொண்டு செல்லக்கூடிய போதிய சிறந்த வசதிகள் காணப்படுகின்றன.

                                 

இங்கு நூற்றுக்கணக்கான கற்கைநெறிகள் உள்ளன. NVQ மட்டம் 4,5,6 ஆகிய எல்லா முழு நேரப் பாடநெறிகளுக்கும் ஆறு மாத கால தொழில் துறைப் பயிற்சி கட்டாயமானதாகும்.

பின்வரும் பிரிவுகளின் கீழ் ஏராளமான பாடநெறிகள் உள்ளன.

*விவசாய தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளத்துறை முழு நேர பாடநெறிகள், 

*மோட்டார் வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் முழு நேர பாடநெறிகள்,

*தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் துறை முழு நேர பாடநெறிகள்,

*கட்டட  நிர்மாணத்துறை முழு நேரப் பாடநெறிகள்,

*தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடக தொழில் நுட்பவியல் துறை,

*இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள் முழு நேரப் பாடநெறிகள்,

*மின் இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்பாடல் துறை முழு நேர பாடநெறிகள்,

*உலோக மற்றும் மென் உலோக பொறியியல் துறை முழு நேரப் பாடநெறிகள்,

*ஹோட்டல் தொழில் துறை முழு நேர பாடநெறிகள்,

*அலுவலக முகாமைத்துவ துறை முழு நேர, பகுதி நேர பாடநெறிகள், 

*குளிரேற்றல் மற்றும் வளிச் சீராக்கல் துறை முழு நேர பாடநெறிகள்,

*புடவை மற்றும்  ஆடைகள் துறை முழு நேர பாடநெறிகள்,

*உணவு தொழில் நுட்பவியல் துறை முழு நேர பாடநெறிகள்,

*நிதியியல் மற்றும் வங்கியியல் முகாமைத்துவம் முழு நேர பாடநெறிகள்,

மேற் குறித்த தலையங்கங்களின் கீழ் பல்வேறு பாடநெறிகள் உள்ளன. உதாரணமாக விவசாய தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளத்துறையின் கீழ் உள்ள முழுநேர பாடநெறிகளை எடுத்துக் கொண்டால் நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர், விவசாய உபகரண இயந்திரவியலாளர்களுக்கான சான்றிதழ், கள உதவியாளர்களுக்கான சான்றிதழ், கால்நடை வளர்ப்பு உதவியாளர், மலர் செய்கை மற்றும் நில அமைவு மேம்பாட்டு உதவியாளர், தாவர இழை வளர்ப்பு ஆய்வுகூட உதவியாளர், நீர் வாழ் உயிர்த் தொழில் நுட்பவியல் என பல்வேறு பாடநெறிகள் உள்ளன. ஆனால் இலங்கை முழுவதும் தொழில் நுட்பவியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும் மேற்குறித்த எல்லா பாடநெறிகளும் கற்பிக்கப்படுவதில்லை. சில நிலையங்களில் சில பாடநெறிகள் கற்பிக்கப்படுவதில்லை. குறித்த நிலையங்களை மாணவர்கள் அணுகி அங்கு கற்பிக்கப்படும் பாடங்களில் தங்களுக்கு பொருத்தமான பாடநெறிகளை தெரிவு செய்து படிப்பது தான் சிறந்தது.

அதற்குரிய சகலவிதமான  வேலைத்திட்டங்களும் இங்கு இருக்கின்றன. இவற்றைக் கற்பதால் மாணவர்கள் தமது எதிர்கால வாழ்வை வளமுள்ளாதாக ஆக்கிக் கொள்ளலாம்.  “ஆனால் இதனை உணர்ந்து பிள்ளைகள் வராவிட்டால் நாங்கள் என்ன செய்வது? அது தான் எங்களுக்கு இருக்கின்ற  பிரச்சனை. இந்தப்  பயிற்சி நெறியை முடித்தால் என்ன நன்மை என்று பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார் பரமேஸ்வரன். அவர் மேலும் தெரிவித்தவற்றை கீழே தருகிறோம்.

யாழ்ப்பாணத்தில் நான் முன்னர் வேலை செய்கிற காலத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தேன். அதில் இருந்த கார்பரேட்டரை சுத்தம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் கார்பரேட்டர் ஆனந்தன் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் எமது மோட்டார் சைக்கிளை கொண்டு போவதானால் முதல் நாளே கேட்க வேண்டும். அந்தளவுக்கு அவருடைய வேலைக்கு கேள்வி இருந்தது. அதனூடாக அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு வருமானத்தையும் ஈட்டிவந்தார். அவர் கார்பரேட்டரை மட்டும் கழற்றி சுத்தம் செய்து தருவார். வேலை மிகவும் நேர்த்தியாக இருக்கும். அதே போன்று டயர் மாற்றுவது சக்கரம் மாற்றுவது என்று ஒவ்வொரு வேலைக்கும் பெயர் போனவர்கள் இருந்தார்கள்.  இவ்வாறான வேலைக்கான தகுதியை அடைவதைத் தான் நாம் தேசிய தொழிற் சான்றிதழ் (NVQ) பெறுவது என்கிறோம்.

NVQ என்பது ஒரு துறையில் சிறந்து விளங்குவது. சிறப்புத் தேர்ச்சி அடைவது, இவ்வாறு இங்கு நிறைய கற்கைநெறிகள் நடக்கின்றன.  தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) யினர் நிறைய நிகழ்ச்சித்  திட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் வேலையிடப் பயிற்சியைத்(On The Job Training) தருகிறார்கள். அதையும் முடித்து பரீட்சையையும் முடித்தால் ஒருவர் அரச துறைக்கு போகலாம் அல்லது தனது சொந்த வீட்டிலேயே ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம். தனக்குத் தானே முதலாளியாக இருக்கலாம். வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கை வைத்தால் ஆயிரம் ரூபாவிற்கு மேல் கேட்பார்கள். ஒரு நாளைக்கு பத்து மோட்டார் சைக்கிள் என்று பார்த்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். திருத்தத்திற்கு ஐயாயிரம் போனால் மிகுதி ஐயாயிரம் ரூபாய் வீட்டில் இருந்த படியே உழைக்கலாம்.

அதே போன்றதே அலுமினியம் தொடர்பான கற்கை நெறிகள். இன்று வீடுகளில் கதவு, ஜன்னல் எல்லாமே அலுமினியம் தான். இந்த அலுமினியப் பொருட்களை உருவாக்குவதை படிப்பதற்கு மூன்று மாதமோ ஆறு மாதமோ பயிற்சி இங்கே இருக்கிறது. இலத்திரனியலில் மூன்று விதமான கற்கை நெறிகள் இங்கு இருக்கின்றன. அடுத்தது கட்டுமானத் துறை. கொழும்பில் துரித கதியில் கட்டப்படும் மாடி கட்டிடங்களின் கட்டுமானத்தில் எங்களிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் நல்ல ஊதியத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

அளவு மதிப்பீட்டு (quantity surveying) துறையில் NVQ level 5 முடித்தால் கட்டார், டோகா, ப்ரூனை போன்ற இடங்களில் மூன்றரை, நான்கரை இலட்சம் மாதச் சம்பளம் பெறலாம். அந்த சான்றிதழிற்கு நல்ல பெறுமதி இருக்கிறது. பலருக்கு அதனுடைய அருமை விளங்கவில்லை. இத்துறையில் படித்தவருக்கு இலங்கையில் பெறுமதி குறைவாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை.

மேலும், குடிசார் பொறியியல் (civil engineering) இருக்கிறது. இதனைப் படித்தால் உள் நாட்டில் வேலை இருக்கிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக கட்டுமான நிலை கொஞ்சம் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது. எங்களிடம் படித்த குடிசார் பொறியிலாளர் பிள்ளைகள் இவ்வளவு நாளும் ஒருவருக்கும் நேரம் இல்லை என்னும் அளவுக்கு வேலை செய்தார்கள். இதனூடாக பெரும் வருவாயை ஈட்டிக் கொண்டார்கள்.

அடுத்து வரைவு தொழில்நுட்பம் என்ற ஒரு துறையை தொடங்கப் போகிறோம். அது ஒரு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான வரைபடங்களை தயாரிப்பது சம்பந்தமானது. ஒரு வீடு கட்டுவது என்றால் அந்த வரைபடத்தினை பிரதேச செயலகம் அங்கீகரித்து அனுமதிக்க வேண்டும். நாங்கள் எப்படி வீடு கட்ட போகிறோம், எத்தனை ஜன்னல், எத்தனை அறை அவற்றின் நீள அகல உயரம் என்ன என்பவற்றை எல்லாம் போட்டு அந்தப் படம் அளவுப் பரிமாணத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும். அதனை வைத்து தான் பிரதேச செயலகத்துக்கு பொறுப்பான செயலாளர் அங்கீகரித்து வீடு கட்ட அனுமதிக்கிறார். அந்த படம் வரைவதற்கு இப்போது இருபதாயிரம் முப்பதாயிரமாவது கேட்பார்கள். அதற்கு அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிடம் தான் கீற வேண்டும். வரைபடவியலாளர்களுக்கு NVQ level 5 இருக்க வேண்டும் என்று பிரதேச செயலகத்தில் கேட்கிறார்கள்.

எங்களுடைய கல்லூரிக்கு தொலைவில் இருக்கிற பிள்ளையை வந்து படிக்க சொல்ல முடியாது. ஆகவே நீங்கள் அதிக தூரம் பயணம் செய்து போக வேண்டாம். ஒரு குறுகிய தூரத்திற்குள் எந்த நிறுவனம் இருக்கிறதோ அங்கு செல்லுங்கள். அது VTA ஆக இருக்கலாம் NAITA ஆக இருக்கலாம் ATI ஆக இருக்கலாம். நாங்கள் படிக்கிற காலத்தில் இவை மிகக்  குறைவு. இப்போது அவ்வாறில்லை. பல இடங்களில் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பிள்ளைகள் குறுகிய காலத்தில், தகுந்த சான்றிதழ், நல்ல வேலைவாய்ப்பு, கண்ணியமான சம்பளம் இவை எங்கு கிடைக்கிறதோ அங்கு போக வேண்டும். எல்லா வளமும் இருக்கிறதா, எல்லாம் சொல்லித் தரக் கூடிய வளவாளர்கள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு பிள்ளைகள் அங்கு செல்ல வேண்டும். மேலும், செய்முறைப் பயிற்சி கட்டாயம் இருக்க வேண்டும். அப்படியான வளங்கள் இங்கே இருக்கின்றன.

பாடசாலைகளில் இருந்து விலகிய மாணவர்களை ஏதாவதொரு வகையில் இங்கே கொண்டு வந்து சேர்ப்பித்துவிடுங்கள். எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளக் கூடிய தொழில் வல்லுனராக மாற்றிவிடுவது எம் அர்ப்பணிப்பான ஆசிரியர்களின் பொறுப்பு. என்றார் அக்கறையுடன்.


சுப்பையா பரமேஸ்வரன்-

(தொகுப்பு - கார்த்திகா)

 நிமிர்வு பங்குனி 2023 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.