இந்தியா 13 ஐ தொடர்ந்தும் வலியுறுத்துமாக இருந்தால் தமிழ் மக்கள் தூரமாக விலகியே செல்வார்கள்!

 

                                             



                                       

13 ஆவது திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு ஆப்பாக எப்பொழுதோ மாறிவிட்டது. சனாதிபதி J.R.ஜெயவர்த்தனா 13 ஆவது திருத்தத்தை கொண்டு வரும் போதே தனக்கு எதிராக வந்த இந்தியாவை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பும் ஓர் உத்தியாகத்  தான் அதனை அவர் உருவாக்கினார். அதற்கு பிறகில் இருந்து அந்த 13ஐ பலவீனப்படுத்துவதில் தொடங்கி இன்று வரையிலும் 13 என்பது தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒரு ஆப்பாகத்  தான் காணப்படுகிறது.

அண்மைக் காலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களும் அந்த 13 ஐ அழுத்திக் கூறுவதை நாம் காண்கிறோம். இந்திரா காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பாரதிய ஜனதாவும் கூட அதனையே அழுத்துகிறது. உண்மையில் 13 ஆம் திருத்தம் இந்திரா காங்கிரஸினுடைய பிள்ளை என்று சொல்லலாம். அப்படியிருக்க பாரதிய ஜனதாவும் கூட அந்த 13 ஐ தான் கதைக்கிறது.இதில் மூன்று விடயங்களை பார்க்க வேண்டும். முதலாவது 13 ஆவது திருத்தம் என்பது உருவாக்கப்படும் போது இருந்த நிலைமை.  ஒருமுறை வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் ஒரு முறை ஒரு தனிப்பட்ட சந்திப்பில் என்னிடம் சொன்னார், ‘இந்தியாவில் இருப்பதைப்  போன்ற அதிகாரங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாக அதனை உருவாக்கத் தான் நாங்கள் யோசித்தோம். ஆனால் சண்டைகளுக்குள் அதை அப்படியே நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது’ என்று. ஆனால் 13 உருவாகும் போது இருந்த உலக சூழலும் இப்பொழுது இல்லை உள்நாட்டு சூழலும் இப்பொழுது இல்லை. குறிப்பாக இந்தியாவின் மாநில சூழலும் அப்படி இல்லை.

13 உருவாகும் போது இருந்த இந்திய மாநிலங்கள் இப்பொழுது இல்லை. குறிப்பாக மன்மோகன்சிங்கின் வருகைக்குப் பின் குறிப்பாக நரசிம்மராவ், மன்மோகன்சிங் போன்றவர்கள் திறந்த சந்தை பொருளாதாரத்தினை நோக்கி இந்தியாவை திறந்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு கூட்டுத்  தயாரிப்புக்கள் வருகின்றன. ஹீரோஹொண்டா, சுசுக்கி மாருதி இப்படி பல வருகின்றன. அப்படி கூட்டுத் தயாரிப்பிற்கு வருகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசாங்கத்தினோடு மினக்கடுவதை விடவும் மாநில அரசாங்கத்தோடு நேரடியாக தொடர்புகொள்ளும் உரிமையை கேட்டன. அது ஒரு நடைமுறையாக மாற்றப்பட்டது. அதன் விளைவாக தான் குஜராத்தில் மகத்தான ஒரு பொருளாதார எழுச்சி ஏற்பட்டது. அதைக் காட்டி அங்கிருந்து வந்த ஒரு முதலமைச்சர் இப்பொழுது நாட்டின் பிரதமராகவும் வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கும் இது பொருந்தும்.

அதாவது பல்தேசிய கம்பெனிகளோடு உள்ளூர் நிறுவனங்கள் ஒரு கூட்டுத் தயாரிப்பிற்கு போகும் போது அவை மாநில அரசுகளுடன் நேரடியாக பேசுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களின் நிதிக் கையாளுகை அதிகாரம் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கை செய்தகாலத்தோடு ஒப்பிடும் போது இன்றைக்கு இந்திய மாநிலங்களின் நிதி அதிகாரம் அதிகரித்து இருக்கிறது. எனவே இந்த மாற்றத்தை கவனத்தில் எடுக்காமல் 13 ஐ பற்றி கதைப்பது பிழை.

இரண்டாவது, புவிசார் அரசியல். 13 உருவாகும் போது இந்தியாவும் அமெரிக்காவும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தன. இன்றைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்கின்றன. புவிசார் அரசியற் பங்காளிகள். எனவே 13 ஐ உருவாக்கும் போது இருந்த புவிசார் அரசியற் சூழல் இப்பொழுது இல்லை.

மூன்றாவது, உள்நாட்டு அரசியல். 13 உருவாகும் போது விடுதலைப் புலிகள் இயக்கம் போரில் ஈடுபட்டிருந்த காலம். தமிழ் மக்கள் இரத்தம் சிந்தி போராடியதன் விளைவு தான் 13. தமிழ் மக்கள் இரத்தம் சிந்தி போராடியதனால் தான் இந்தியா இலங்கைத் தீவில் தனக்கு என்றென்றும் உரிமை உண்டு என்று நிலை நாட்டத்தக்க ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் விளைவாக தான் 13 வந்தது. 13 இல் தமிழ் மக்கள் கையொப்பம் வைக்கவில்லை. இந்திய இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் ஒரு பங்குதாரர்களாக கையொப்பம் வைக்கவில்லை. அதில் இந்தியாவும் இலங்கையும் தான் கையொப்பம் வைத்திருக்கின்றன.

அப்படி பார்த்தால் 13 ஐ நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தான் இருக்கிறது. தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள் அதனை கேட்கவில்லை. அப்படி பார்த்தால் யுத்தம் நடந்த காலத்தில் 13 ஐ அமுல்படுத்தாமல் விடுவதற்கு அவர்கள் சாட்டு சொல்லலாம். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக 13 ஐ அமுல்படுத்தாமல் விட்டதற்கு இந்தியாவும் பொறுப்பு. 13 ஐ அமுல்படுத்து என்றுஇலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்க இந்தியாவால் முடியவில்லை என்பதை தான் கடந்த 13 ஆண்டுகளிலும் நிரூபித்து இருக்கிறது. இந்தியா 13 இன் பெற்றோரின் ஒருவர் என்ற அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்ற கேள்விக்கு இந்தியா பதில் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல தன்னால் நிர்ப்பந்தித்து நிறைவேற்ற முடியவில்லை என்றால் பிறகு எதற்காக 13 ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ் மக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்? சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்து 13 ஐ முழுமையாக அமுல்படுத்து என்று கூறக் கூடிய நிலைமையில் தான் இல்லை என்றால், தான் அமுல்படுத்த முடியாத தீர்வை இதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஏன் இந்தியா முன்வைக்கிறது? ஏன் முன்வைக்க வேண்டும்?

தவிர இன்னுமொரு விடயத்தை நாங்கள் உள்நாட்டு அரசியலில் பார்க்க வேண்டும். அது என்னவென்றால், 13 க்கு சிங்கள பகுதியிலும் எதிர்ப்பு இருக்கிறது. பிக்குகள் அதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் சொல்வது போல இந்தியாவிற்கு எதிராக தான் அவர்கள் 13 ஐ எதிர்க்கிறார்கள். தமிழ் மக்கள் ஏன் அதனை எதிர்க்கிறார்கள் என்றால் தங்களுக்கு அது போதாது என்று எதிர்க்கிறார்கள். இரண்டு பேரும் அதனை எதிர்ப்பதற்கு வெவ்வேறு நோக்கு நிலைகள் உண்டு.

இந்த பின்னணியில் 13 தான் தமிழ் மக்களுக்கு தீர்வு என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான சூழ்நிலையை வைத்துக் கொண்டு இன்றைக்கு இந்தியா சொல்ல முடியாது. இந்தியா ஏன் திரும்ப திரும்ப 13 ஐ சொல்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் தான் இருக்கலாம். இந்திய இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சி இருக்கும் பதாங்க உறுப்பு பதாங்க உறுப்பு 13 தான். அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை ஒரு அனைத்துலக உடன்படிக்கை. இரண்டு தலைவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை என்ற படியால் இலங்கைக்குள் இந்தியா என்றென்றும் தலையிடக் கூடிய ஒரு வாய்ப்பை அது வழங்கும். 13 ஐ சொன்னால் தான் இலங்கையின் மீது இந்தியாவிற்கு இருக்கின்ற அந்த அனைத்துலக உரிமையை வலியுறுத்த முடியும். 13 ஐ நடைமுறைப் படுத்து என்று சொல்வதன் மூலம் இந்திய இலங்கை உடன்படிக்கை இப்பொழுதும் உயிர்ப்போடு இருக்கிறது என்று இந்தியா சொல்ல முயற்சிக்கிறது.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் இதயமான பகுதி 13 இல்லை. இலங்கைத் தீவு இந்தியாவிற்கு எதிரான சக்திகளால் பயன்படுத்தப்படக் கூடாது என்பது தான் இந்திய இலங்கை உடன்படிக்கையின் இதயமான பகுதி. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. சீனா அம்பாந்தோட்டையில் 99 ஆண்டுகளுக்கும் இருக்கும். கொழும்பில் துறைமுகப்பட்டினம் ஒன்றை சீனா கட்டிக்கொண்டு இருக்கிறது. அப்படி பார்த்தால் இந்திய இலங்கை உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் முழுமையாக இலங்கை இல்லை. இந்த நிலைமையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உயிர்ப்போடு வைத்திருக்க இந்தியா 13 ஐ நடைமுறைப்படுத்து என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது.

இந்தப் பின்னணியை கவனத்தில் எடுத்து பார்க்கும் போது திரும்ப திரும்ப 13 ஐ சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. திரும்பத் திரும்ப 13 ஐ சொல்லுகிற ஒரு நாடு அந்த 13 இல் தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து அந்த நிர்ப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும். அவர்கள் பிரயோகிப்பதும் இல்லை. எனவே 13 என்பதை இலங்கையில் தலையிடுவதற்கான ஒரு வழியாகத் தான் அவர்கள் தொடர்ந்தும் கையாளுகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

அதிலும் பிரச்சனை இருக்கிறது. அப்படி கையாண்டாலும் கூட 87 ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்யப்படும் போது அதாவது முதலாம் கட்ட ஈழப்போரில் இருந்த அதே அணுகுமுறையை தான் இந்தியா இப்பொழுதும் வைத்திருக்கிறது. அது என்னவென்றால் கொழும்பை கையாளுவதன் மூலம் இலங்கையை கையாளுவது. இலங்கையை கையாளுவது என்பது கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை கையாளுவது. இந்தியா மட்டுமல்ல சீனாவும் அதனைத் தான் செய்கிறது. அமெரிக்காவும் அதனைத் தான் செய்கிறது. ஐ. நாவும் அதனைத் தான் செய்கிறது. உலகில் உள்ள எல்லா அரசுகளும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுகளின் ஊடாக தான் இலங்கையை அணுகுகின்றன.

சீனா யுத்தத்தில் இலங்கைக்கு உதவியது ஏனென்றால் அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு. கடைசி க்கட்ட போரில் அரசாங்கத்திற்கு 60 வீதமான ஆயுதங்களை வழங்கிய நாடுகள் தான் பிறகு ஐ. நாவில் அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்ததாக இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அதை எதிர்த்து பேசிய கியூப பிரதிநிதி சுட்டிக்காட்டி இருந்தார்.

அரசுக்கும் அரசுக்குமான உறவு என்று வரும்போது எல்லோரும் கொழும்பை தான் கையாளப் பார்க்கிறார்கள். இந்தியாவும் அதைத் தான் செய்கிறது. அரசைக் கையாள முடியாமல் போகும் போது இந்தியா தமிழ் மக்களை கையாளுகிறது. அதனூடாக அரசைப் பணிய வைக்கிறது.

இப்பொழுது பார்ப்போம் இந்தியா அரசைக் கையாளுவதன் மூலம் தான் வடக்கு கிழக்கை கையாளப் பார்க்கிறது. வடக்கில் இந்தியாவிற்கு ஒரு உப தூதரகம் உண்டு தான். அது சமூக மட்டத்தில் உறவுகளை பலப்படுத்தி வருகிறது என்பதுவும் உண்மை தான். ஆனாலும் இன்றைக்கும் முக்கியமான முடிவுகள் என்று வரும்பொழுது குறிப்பாக இனப்பிரச்சனை சார்ந்த முடிவுகளில் மத்தியில் இருக்கும் அரசாங்கத்தை கையாள்வது என்ற இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.

இதுமட்டுமல்ல இந்தியா என்ன நினைக்கிறது என்றால் தாங்கள் இரண்டு பேரையும் சம தூரத்தில் வைத்து கையாள்வதாக காட்டப் பார்க்கிறது. அப்படி கையாள இயலாது. ஏனென்றால் சிங்கள மக்கள் ஒரு அரசினுடைய தரப்பு தமிழ் மக்கள் அரசற்ற தரப்பு. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுகளுக்குள்ளால் பார்த்தால் அது எப்பொழுதும் பலமானது. அந்த உறவு எப்பொழுதும் இருக்கும். அது தொடர்ச்சி அறாமல் இருக்கும். அரச உபகரணங்களும் அரச நிறுவனங்களும் அதை தொடர்ந்து பேணும். எனவே அந்த உறவு தொடர்ந்தும் ஒரு கட்டமைப்பிற்கு கீழாக பேணப்படும். தமிழ் மக்களுக்கு அப்படி இல்லை. தமிழ் மக்களிடம் அந்த கட்டமைப்புக்கள் இல்லை.

தமிழ் மக்கள் ஒரு அரசற்ற தரப்பு என்று பார்க்கும் போதே இந்தியா தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் சமதூரத்தில் வைத்து கையாள்கிறது என்ற தர்க்கமே பிழை.

அப்படி கையாள வெளிக்கிட்டால் இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு பக்கத்தில் தான் நெருங்கிப் போகுமே தவிர, தமிழ் மக்களுக்கு பக்கத்தில் வரமாட்டாது. சிறிலங்கா அரசாங்கத்தை பகைக்க கூடாது என்ற அடிப்படையில் இந்தியா தொடர்ந்தும் 13 ஐ வலியுறுத்துமாக இருந்தால் கடந்த 13 வருடங்களாக இரண்டு தரப்பையும், சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் சமமாக கையாளப் போகிறோம் என்று சொல்லி வரும் நடவடிக்கை தோல்வியிலேயே முடியும். ஏற்கனவே சிங்கள மக்களை இழந்தாகிற்று. சிங்கள மக்கள் தெரிந்தெடுத்த அரசாங்கங்கள் இந்தியாவின் பக்கம் இருக்குமாக இருந்தால் அம்பாந்தோட்டையை சீனர்களுக்கு கொடுத்திருக்க மாட்டார்கள். அல்லது ஒரு சீனப் பட்டினத்தை கட்டுவதற்கு கொழும்பு துறைமுகத்தில் தீவை உருவாக்குவதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள்.

வரலாறு முழுக்க நிரூபிக்கப்படிருக்கிறது என்னவென்றால் கொழும்பில் இருக்கும் அரசாங்கங்கள் என்றைக்குமே இந்தியாவை கண்டு பயந்தன. அவை இந்தியாவிற்கு உண்மையாக இல்லை. வரலாறு முழுக்கஅவர்கள் இந்தியாவிற்கு எதிராக தான் சிந்தித்து இருக்கிறார்கள். இந்தப் பின்னணிக்குள் தாங்கள் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் சமமாக கையாளப் போகிறோம் என்று இந்தியா நினைக்கிறது. ஏற்கனவே சிங்கள மக்களை இழந்தாகிற்று. அது இழந்தது தான். ஒரு போதும் சிங்கள மக்கள் அவர்களோடு நிற்கவில்லை. நிற்கப் போவதும் இல்லை.

இப்பொழுது தமிழ் மக்களையும் அவர்கள் இழக்கப் போகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் 13 ஐ தொடர்ந்தும் அவர்கள் வலியுறுத்தும் பொழுது தமிழ் மக்களும் இந்தியாவிற்கு தூரமாகவே போகப் பார்ப்பார்கள். ஏனென்றால் 13 ஐ வலியுறுத்தும் இந்தியாவினால் அந்த 13 ஐ முழுமையாக நிறைவேற்று என்று சொல்லி இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. 13 ஆண்டுகளாக இந்தியா அந்த விடயத்தில் தோற்றுக்கொண்டே இருக்கிறது. எனவே 13 என்பது இன்றைக்கு இருக்கும் நிலைமையில் இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஆப்பாக மாறி இருக்கிறது என்பதுதான் உண்மை.

  நிலாந்தன் —

(தொகுப்பு: ரஜீந்தினி)

நிமிர்வு பங்குனி 2023 இதழ்

 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.