சிறீலங்கா அரசின் பண்பாட்டு அழிப்புக்கு எதிராக தாயகமும் புலமும் திரண்டெழுந்து போராட வேண்டும்
சிறீலங்கா அரசாங்கம் பண்பாட்டு யுத்தம் ஒன்றை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. சர்வதேச நாடுகளுக்கு தமிழ்மக்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கி விட்டதாக பிரமையை ஏற்படுத்தும் ரணில் தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தின் பல முனைகளிலும் பரவலாக பௌத்தமயமாக்கும் செயற்திட்டத்தை முடக்கி விட்டுள்ளது.
இத்தனைக்கும் கடன் சுமையில் தவித்து ஐ.எம்.எப் போன்ற நிறுவனங்களின் காலடியில் விழுந்து கிடக்கும் சிங்கள பேரினவாத அரசு தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்புக்களை மட்டும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது. தமிழரின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். தமிழ்மக்களின் பிரதான கோரிக்கைகளான இவற்றை கேட்டு நிற்கும் தமிழினத்தின் போராட்ட ஒருங்கிணைவை சிதறடிக்கும் வகையில் தான் மேற்படி கவனச் சிதறடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்கிற சந்தேகம் எம் மக்களிடம் உண்டு.
தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்படும் நிலங்களை நோக்கி தமிழ்மக்களின் கவனம் சிதறடிக்கப்படும் போது பேரினவாதம் பிரதான கோரிக்கைகளில் இருந்து தமிழ்மக்களை தள்ளி வைக்கும் நிலை உள்ளது. இதனால் தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகள் பின்தள்ளப்படும் பின் காணாமல் ஆக்கப்படும் அபாயமும் உண்டு.
அதேவேளை இவ்வாறான ஆக்கிரமிப்புகள் எமது தேசத்தின் விடுதலைக்காக மக்களை அணிதிரட்டுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. சரியான வேலைத்திட்டம் ஒன்றை தமிழ் சமூகம் அமைத்துக் கொள்ளுமாயின் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் ஊடாக மக்களை ஓரணியில் திரட்டுவது சாத்தியம்.
எமது நிலங்களின் அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள், தமிழ்க் கட்சிகள், வெகுசன அமைப்புகள் இணைந்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த ஒருங்கிணைவில் தமிழ்மக்கள் கூடியளவு திரட்சியாக பங்கேற்க வேண்டும்.
ஏனெனில் தங்களது பண்பாடு, கலாசார அழிப்புக்கு எதிராக கூட போராடாத இனத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான போராட்ட முன்னெடுப்புகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களே இன்று அவசியமாக உள்ளன. அதற்கான ஆரம்பக் கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு போராட்டம், ஹர்த்தால் என்று பல்வேறு போராட்ட வடிவங்களை முன்னெடுக்க முயற்சித்தாலும், எதற்கும் ஒரு தொடர்ச்சியான வலுவான திட்டமிடலுடன் கூடிய பொறிமுறைகளே தேவையாக உள்ளன.
தாயகத்தில் இடம்பெறும் போராட்டங்கள் படிப்படியாக சர்வதேச நாடுகளை நோக்கியும் நகர வேண்டும். இதற்கான போராட்டங்களை தாயகத்தில் முன்னெடுக்கும் போது சமநேரத்தில் புலம்பெயர் தேசங்களிலும் நடாத்தப்படுவது முக்கியமானது. பேரினவாதிகளின் அபாயமான தந்திரங்களுக்கு பலியாகாமல் தமிழினம் விழிப்போடு செயற்பட்டு ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகள் தடுத்து நிறுத்தப்படும் வரை போராட்டங்களை தொடர வேண்டும்.
செ. கிரிசாந்-
நிமிர்வு இதழ் - சித்திரை 2023
Post a Comment