உன்னதமான நீர் முகாமைத்துவத்தை கைக்கொண்ட எமது முன்னோர்கள்
உலக நீர் தின நிகழ்வு 2023 பங்குனி 22ஆம் திகதி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச.சர்வராஜா 'யாழ்ப்பாணத்தில் தண்ணீர் நெருக்கடியை வெற்றி கொள்வது எப்படி?' எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் முக்கியமாக தெரிவிக்கையில், எங்களுடைய வாழ்விற்குப் பிரதான ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரை எங்கள் முன்னோர்கள் பொக்கிஷமாக கருதினர். நீரைச் சேமிப்பது, அதனை உரிய வகையில் பயன்படுத்துவது, நீரை மாசடையாமல் பாதுகாப்பது இவை மூன்றும் தான் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தின் மூன்று அடிப்படை விதிகள். ஒரு ஊரில் மழை பெய்தால் எந்தப் பகுதியை நோக்கி மழைநீர் அதிகளவில் ஓடிவருமோ அந்த இடத்தில் எமது முன்னோர்கள் குளத்தை அமைத்தார்கள். அந்தக் குளத்திற்குள் நிற்கும் நீர் தூய்மையாக நிலத்திற்குக் கீழே செல்வதற்கு வசதியாகவும், ஆவி ஆவதைக் குறைக்கும் வகையிலும் குளங்களைச் சுற்றி மருது, நெல்லி, நாவல் போன்ற மரங்களை நடுகை செய்தார்கள். குளங்களை யாரும் மாசுபடுத்தி விடக் கூடாது என்பதற்காக குள மரத்தடியில் பிள்ளையார் அல்லது அம்மன், முருகன் சிலையை வைத்தார்கள். ஏதாவது தப்புச் செய்தால் கடவுள் கண்ணைக் குத்தும் எனவும் சொன்னார்கள். இதனால், குளத்து நீர் மாசடையாது பாதுகாக்கப்பட்டது.
குளம், குளத்திற்கு அருகில் மரம், மரத்தடியில் சிறிய கோயில். கோயிலுக்குப் பக்கத்தில் கிணறு இருந்தது. அந்தக் கிணறு தூய்மையாகவும், குளிர்மையாகவும், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அந்தக் கிணற்றிலிருந்து தான் ஊர் மக்கள் பெரும்பாலானவர்கள் நீர் பெற்றுக் கொண்டனர். இன்றும் சில கோயில்களின் கிணற்று நீரை நாம் அள்ளிப் பருகும் போது குளிர்மையையும், மருத்துவ குணங்களையும் எம்மால் உணர முடிகின்றது என்றால் அதற்குப் பழமையே காரணம்.
கோயில்களை விடக் கோயில் குளங்களே முக்கியமானவை என்பதை உணர்ந்து கொண்ட எமது முன்னோர்கள் அதனை உரிய வகையில் பேணினார்கள். முன்னைய காலத்தில் குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக குளத்தின் அருகில் தெய்வ விக்கிரகத்தை வைத்தார்கள். ஆனால் இன்றோ, பிள்ளையாருக்கு அர்த்த மண்டபம் வேண்டும் என்பதற்காகப் பாதிக் குளத்தையும், அம்மனுக்கு மகா மண்டபம் வேண்டும் என்பதற்காக மீதிக் குளத்தையும் மூடினோம். இவ்வாறு மூடி மூடியே பல குளங்கள் காணாமற் போய்விட்டன.
முற்காலத்தில் வீடுகளில் வரம்பு கட்டி மழைநீரைச் சேகரித்தனர். இன்று இந்த நிலை இல்லை. தற்போது வீடுகளைச் சுற்றி திண்கரைத் தரைகள் போட்டுள்ளதுடன் கருங்காரை வீதிகளும் அமைத்துள்ளனர். இதுபோன்ற செயற்பாடுகளால் மழைநீர் நிலத்திற்குக் கீழ் செல்லும் அனைத்து வழிகளையும் பெரும்பாலும் மூடி விட்டோம். அதேவேளை தினந்தோறும் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவையும் நாங்கள் அதிகரித்து விட்டோம். பல செயற்பாடுகளாலும் நீர் மாசடையும் சூழலையும் நாங்கள் ஏற்படுத்தி விட்டோம். இது மிகப் பெரிய ஆபத்தான விடயம்.
எங்களுடைய நாடு 103 ஆற்றுப்படுக்கைகளைக் கொண்டுள்ளது. வடமாகாணத்தில் 24 ஆற்றுப்படுக்கைகள் இருந்தன. எனவே, நீரைப் பொறுத்தவரை நாங்கள் வரம் தான் பெற்றிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆறும் இல்லை என்பது ஒரு அபாக்கியமான நிலை. நாங்கள் தொண்டைமானாறு என்கின்றோம், வழுக்கையாறு என்கின்றோம், உப்பாறு என்று சொல்கின்றோம், பின்னர் ஏன் ஆறு இல்லை என்று சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆறில்லா ஊரிற்கு அழகு பாழ் என்று ஒளவையார் கூறியுள்ளார். இதனால் தான் நாங்கள் ஆறு என்ற பெயருடன் சேர்த்துச் சில பெயர்கள் வைத்திருக்கின்றோம். ‘யாழ் மாதா தன்னை யாரும் மலடி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சத்திரசிகிச்சை பெற்று எடுத்த பிள்ளை தான் வழுக்கையாறு’ என எழுத்தாளர் செங்கை ஆழியான் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய குளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. நடுத்தரக் குளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களும் இல்லை. ஒரு வாசலை மூடினாலும் மற்றைய வாசலைக் கடவுள் எங்களுக்காகத் திறந்தே வைத்துள்ளார். நிலத்திற்குக் கீழ் தேவையான நீர் உள்ளது. நிலத்தடி நீர் தான் யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய வரம். வரமாக வாங்கிய நீர் வளத்தை மனித நடவடிக்கைகளால் நாங்கள் மாசாக்கி சாபமாக மாற்றி விட்டோம்.
யாழ்ப்பாணம் ஆறில்லாத மாவட்டமாக காணப்பட்டாலும் வருடாந்தம் 1300 மில்லியன் கனமீற்றர் நீர் கிடைக்கிறது. எங்களின் குடிநீர்த் தேவைக்காக 20 மில்லியன் கனமீற்றர் போதுமானது. கடவுள் இவ்வளவு நீர் தந்தும் அதிலிருந்து குடிநீர்த் தேவைக்கான நீரை நாம் உரிய வகையில் பெற்றுக் கொள்ள முடியவில்லையே என்றால் அது எத்தனையோ கல்விமான்களையும், அறிவு ஜீவிகளையும் கொண்ட யாழ்.மாவட்ட மக்களின் இயலாமையின் விளைவையே வெளிப்படுத்துகின்றது.
யாழ். மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் மலக் கழிவுகளாலும், பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள், கிருமி நாசினிகளாலும் நீர் மாசடைந்துள்ளது. சுன்னாகத்தில் கழிவு எண்ணையால் நீர் மாசு, கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் உவர் நீரால் நீர் மாசு எனப் பல வழிகளாலும் நீர் மாசுபடுத்தப்பட்டு விட்டது.
நீர் பொய்த்துப் போனால் இந்த உலகத்தில் அத்தனை அசைவுகளும் நின்று போய்விடும் எனத் திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எத்தனையோ புதிய விடயங்களைக் கண்டுபிடித்து விட்டது. எத்தனையோ பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களும் கண்டுபிடித்தாகி விட்டது. ஆனாலும், நீருக்கு மாற்றீடாக இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இனியும் கண்டுபிடிக்க முடியாது.
மிக மோசமான நீரைப் பருகுகின்ற எத்தனையோ சமுதாயத்தினர் வெளிநாடுகளில் காணப்படுகின்றனர். சில நாடுகளில் ஒரு இடத்தில் மாத்திரம் தான் நீர் உள்ளது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எத்தனையோ பேர் குவிகிறார்கள். இவ்வாறான அபாயகரமான நிலைமை எம்மை நோக்கியும் வரும் என்ற சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் தங்கம் கொடுத்து நீர் வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாங்கள் முன்னர் நிவாரணத்திற்காக, பாணுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அண்மையில் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எதிர்காலத்தில் நீருக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனச் சொல்கிறார்கள்.
ஆளில்லா வீட்டிற்குள் அரைக் குவளை நீர் திருடினான் என்பதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் நிலைமை கூட எதிர்காலத்தில் உருவாகலாம். நீரின் பெறுமதி எதிர்காலத்தில் நிச்சயம் உச்சத்தைத் தொடும் என்பதை நாங்கள் இன்றே உணர்ந்து கொள்ள வேண்டும்.
20 ஆம் நூற்றாண்டைப் பெற்றோலியம் தீர்மானிக்கும் என்று கூறினார்கள். அவ்வாறு தான் அமைந்தது. 21 ஆம் நூற்றாண்டை நீர் தான் தீர்மானிக்கும் என்று சொல்கிறார்கள். உலகிற்கே உணவளிக்கக் கூடிய வளம், ஆற்றல், வாய்ப்பு அனைத்தும் இலங்கையில் உள்ளன. அதனைச் சரிவரப் பயன்படுத்தினால் நாங்கள் நிச்சயம் உயர்நிலையை அடையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
செ. ரவிசாந்-
நிமிர்வு இதழ் - சித்திரை 2023
Post a Comment