கிழக்கின் பெண்களின் வறுமையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் திறந்த கதவும்

 



கிழக்கில் அதிகமான பெண்கள் ஏற்கனவே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் அவர்களை பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெண்கள் வறுமைக்கோட்டின் கோரப்பிடியில் சிக்குண்டு காணப்பட மூலகாரணங்களாக கணவன் பொறுப்பற்றவராக அல்லது குடிபோதைக்கு அடிமைப்பட்டவராக காணப்படல், யுத்தத்தால் அல்லது அசாதாரண காரணிகளால் கணவரின் இழப்பு ஏற்பட்டிருத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவ்வாறான சூழலில் பெண்கள் தமது குடும்பத்தை தனியொருவராக நின்று  பாதுகாக்கும் வகையில் வருமானத்தை தரக்கூடிய வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் போதிய கல்வி அறிவு இல்லாததால் கூலி வேலை போன்ற உடலை வருத்தும் வேலைகளுக்கும் குறைவான வருமானம் தரக்கூடிய வேலைகளுக்குமே அவர்களால் செல்ல முடிகின்றது. இது போன்ற நிலையில் கிழக்கில் பெண்களில் பெருமளவானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். அவர்களின் வறுமை மற்றும் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் சில முகவர்கள் தவறான முறையில் அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எனக் கூறி வீட்டு வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கு எனக்கூறி பாலியல்தொழில் போன்றவற்றுக்கும், சில சிறுமிகளுக்கு போலிக் கடவுச்சீட்டை ஏற்பாடு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடுகளும் நடக்கின்றன. இதன் மூலம் பல பெண்கள் இன்றளவு வரை பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளனர். இதனால் அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இவ்வாறாக பல பெண்கள் பல்வேறுபட்ட பகுதிகளில் பாதிக்கப்படுவது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை. இவ்வாறாக எமது சமூகப் பெண்கள் பாதிக்கப்படுவது எமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து பின்னோக்கியே செல்ல வைக்கும். ஏனெனில் ஒரு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பத்தில் அவளைத் தொடர்ந்து அவளது பிள்ளைகளும் அவளைப் போன்றே கல்வியில் ஈடுபாடு இன்றி அடிப்படை கல்வி அறிவின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக முனைகின்றனர். அவர்களும் பிழையாக உபயோகிக்க நினைக்கும் சில சமூக விரோதசெயல்களில் ஈடுபடும் நபர்களால் ஏமாற்றப்படுகின்றனர். இவ்வாறாக ஒரு பயங்கரமான சுழற்சிக்குள் மாட்டுப்பட்டு எமது சமூகத்தின் பெண்கள் முன்னேற முடியாமல் முடக்கப்படுகின்றனர். ஒரு பிழையான தொடர்ச்சி குடும்பங்களுக்குள் ஏற்பட்டு அதுவே சமூகம் பிழையான ஒரு விடயத்தை தொடர்ந்து செய்வதாக முடிகிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த பெண்களை கொரோனாக்கு பின்னான விலையேற்றங்களும், அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளன. இந்த நிலைமை பெண்களை இன்னும் ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில்  ஈடுபடுத்துவதற்கு உகந்த நிலையை கொடுத்துள்ளது. ஓமானுக்குஅழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமையை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டுவேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி, சுற்றுலா விசாவின் மூலம் ஓமானிற்கு பெண்களை அழைத்துசென்று, அங்கு ஆட்கடத்தல் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை, வருகின்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் அண்மையில் வெளிவந்தன. இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச்செயல் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இந்த பிரிவின் பணிப்பாளர் மூத்த போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணைகுழுவொன்று ஓமன் நோக்கி பயணித்ததாகவும் ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 45 இலங்கை பெண்களிடம், குறித்த அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவுசெய்து கொண்டதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன. 

கடவுச்சீட்டில் சுற்றுலா அனுமதிப்பத்திரத்துடன் மட்டும் இலங்கையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட பெண்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து, அதன் பின்னர் தாம் கடமையாற்றிய வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமது தொழில் வழங்குநரிடமிருந்து தப்பிய பெண்களே இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  இவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டஆவணங்களை, இவர்களுக்கு வேலை வழங்கியவர்களே வைத்துக் கொண்டிருப்பது தெரியவந்து. இதனால், இந்தப் பெண்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல்தொழிலில் ஈடுபடுத்தல், அதிக வேலைகளை பெற்றுக்கொள்ளுதல், துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, விசாரணைகளின் ஊடாககண்டறியப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஓர் அதிர்ச்சிகரமாக செய்தியும் வெளிவந்தது. அதாவது, இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளினாலேயே, குறித்த பெண்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஓமான் நாட்டு குடிமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனை  போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். மிகக் குறைந்த வயதுடைய பெண்களை 25 லட்சம் இலங்கை ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை ஓர் அதிர்ச்சித் தகவல்.

இவ்வாறான சூழலில் எமது சமூக தமிழ்ப் பெண்கள் சிக்குண்டு சீர்குலைந்து போவதற்கும் அவர்களை நம்பியுள்ள இளந்தளிர்களின் நிலை கேள்விக்குள்ளாகி இருக்கின்ற நிலைமைக்கும் எம் சமூகம் பொறுப்பு எடுக்க வேண்டும். இந்த சமூகப் பிரச்சனை தொடர்பான, பெண்கள் தொடர்பான விளிப்புணர்வு செயற்பாடுகள், ஒன்றுகூடல்கள், கலந்துரையாடல்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் சமூகத்தில் நடைபெறுவதில்லை. பெண்களிற்கான சுயதொழில் முக்கியத்துவம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள், ஒழுங்கமைப்புகள் தொடர்பில் எந்த சமூக தொண்டு நிறுவனங்களும் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இல்லை. அவர்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் அரச நிறுவனங்களும் அக்கறை எடுப்பதில்லை.

உள்ளூரிலுள்ள கைத்தொழில் நிறுவனங்களும் வறுமை நிலையிலுள்ள பெண்களை உறிஞ்சி இலாபமீட்டுவதில் காட்டும் முன்னெடுப்பை அவர்களுக்குரிய அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய வைப்பதற்கான ஆதாயத்தை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு உதாரணமாக ஆடைத்தொழிற்சாலைத் துறையை குறிப்பிடலாம்.

இவ்வாறான நிலைமைகளை தவிர்க்க பெண்சார் தொழில் முன்னுரிமை உள்நாட்டில் பலப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் தமக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டக்கூடியதாகவும், உடல் உள சுகாதாரத்தை பேணக்கூடியதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் உள்ள தொழிற் துறைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அத் தொழிற்துறைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்திற்கு உள்ளது. அரசாங்கத்துக்கும் உள்ளது. இந்த பொறுப்பை சமூகத்திற்கும் அரசாங்கத்துக்கும் இடித்துச் சொல்ல கிழக்கில் வாழும் பெண்கள் தம்மை ஓர் அமைப்பாக அணிதிரட்டிக் கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் பிரச்சனைகளை தீர்க்கச் சொல்லி அரசாங்க கட்டமைப்பிற்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் வெகுசன அமைப்புகள் முன்வர வேண்டும்.

-ஹா(கா)ர்த்தி-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.