அதானி குழுமத்துக்கு எதிரான பழங்குடி மக்களின் போராட்டம்

 



அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் எமது சமூகம் பொருளாதார வளர்ச்சி அடைகிறது, மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, மேற்குலக கருத்தியலின்படி எமது வாழ்க்கைத்தரம் உயர்கிறது. ஆனால் இவற்றுக்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்பதையும் அதன் மூலம் நாம் பெறுபவை உண்மையிலேயே எமது வாழ்வியலுக்கு ஒத்திசைபான நன்மைகள் தானா என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது பாரம்பரிய வாழ்வியலையும் அதனூடாக நாம் அடைந்த உடல் உள ஆரோக்கியங்களையும் கைவிட்டு ஒரு மேற்குலக கருத்தியலின் படி உயர்த்தப்படும் வாழ்க்கைத்தரம் எம்மை ஒரு மகிழ்ச்சியான சமூகமாக வளர்த்தெடுக்குமா என்பது பற்றி ஆராய வேண்டும்.

இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான் இன்று எம்மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்படும் ஒரு தொழில் முயற்சியையும் அதனூடாக சமூகத்தில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் பற்றியும் BBC இல் வந்த ஒரு கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கையை எதிர்த்து சுற்றுச்சூழலையும் தமது வாழ்வியலையும் பாதுகாக்க விளையும் மூதாளர்களுக்கும் இளையோர்களுக்கும் இடையில் நடக்கும் ஊடாட்டத்தை இந்தக் கட்டுரை சித்தரிக்கிறது.  

மத்திய இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் தமது வாழ்விடங்களில் அதானி குழுமத்தினால் உருவாக்கப்பட இருக்கும் புதிய நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அண்மைக்காலங்களில் பல உயர் அரசியல்வாதிகளினதும் பிரபல்யங்களினதும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்துள்ள போதிலும், பழங்குடி மக்களுக்கு வெற்றி என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும்.

சட்டீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் பழங்குடி மக்களின் குடில்களைக் கொண்ட ஹரிஹர்பூர் (Hariharpur) என்ற சிறிய கிராமம் இரண்டு முரண்பட்ட உலகங்களைப் பிரிக்கும் எல்லைக் கோட்டில் அமைந்திருக்கின்றது. அதன் கிழக்குத் திசையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதானி குழுமத்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் பரந்து கிடக்கிறது. மேற்குத் திசையில் ஹஸ்டியோ (Hasdeo) காடு பரந்து விரிந்து கிடக்கிறது. அங்கு நிலத்துக்கு அடியில் பல பில்லியன் தொன்கள் கணக்கில் உயர் ரக நிலக்கரி புதைந்து கிடக்கிறது. அந்தக் காட்டை அழித்து நிலக்கரியை அகழ்ந்து எடுக்க நினைக்கும் அதானி குழுமத்திலிருந்து அந்தக் காட்டையும் தமது வாழ்வியலையும் பாதுகாக்க அக்கிராமத்து பழங்குடியினர் போராடி வருகிறார்கள். தாவீது என்ற சிறுவனுக்கும் கோலியாத் என்ற பலவானுக்கும் (David vs Goliath) இடையில்  நடக்கும் போர் இது.

420,000 ஏக்கர்கள் (1700 சதுர கி.மீ) பரப்பளவு கொண்ட இந்த அடர்ந்த காடு மத்திய இந்தியாவின் மிகப் பெரிய தொடர்ச்சியான காடு என்று சொல்லப்படுகிறது. இதனை பலரும் “சட்டீஸ்கரின் சுவாசப்பைகள்” என்று அழைக்கிறார்கள்.

புதிய நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படுவதை பழங்குடி மக்கள் மிகவும் கடுமையாக எதிர்த்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அரசாங்கத்துக்கு சொந்தமான காடுகள் தொடர்பான ஆய்வு நிறுவனம் கூட இந்த சுரங்கத்தால் ஏற்படக்கூடிய சூழல் மற்றும் வாழ்வியலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை காரணம் காட்டி கடும் எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி புதிய சுரங்கத்துக்கான அனுமதிப் பத்திரம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தை பங்குனி 2, 2022 இலிருந்து பழங்குடி மக்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் அதானி குழுமத்துக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டீஸ்கர் அரசாங்கம் தான் இந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கி இருக்கிறது.

அதிகரித்து வரும் எதிர்ப்பு

ஹரிஹர்பூரிற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருக்கும் புற்களால் வேயப்பட்ட ஒரு கொட்டகைதான் இந்தப் போராட்டத்தின் மையமாகும். இங்குதான் பழங்குடி மக்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அண்டையிலுள்ள பாடேபூர், காட்பர்ரா, சால்கி (Fatehpur, Ghatbarra and Salhi) ஆகிய கிராமங்களிலிருந்து இங்கு வந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி அதானியை “திரும்பிப் போ” என்று கோசமிட்டு வருகிறார்கள்.

“எமது கிராம சபை இந்த காணிகளை தமக்கு தந்து விட்டதாக காட்டும் போலிப் பத்திரங்களை தயாரித்து இந்த காணிகளை சட்டவிரோதமாக அதிகாரிகள் கையகப்படுத்தி விட்டனர். இந்தக் காணி அபகரிப்புக்கு நாம் ஒரு பொழுதும் இயையவில்லை.” என்று Hasdeo Arand Bachao Sangharsh Samiti என்ற போராட்டக் குழுவின் உறுப்பினர் BBC இற்கு தெரிவித்தார்.

கருத்து கேட்டு BBC மேற்கொண்ட வேண்டுகோள்களுக்கு சட்டீஸ்கர் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தன்னுடைய வேலைகளை அந்த நிலத்தின் சட்டங்களுக்கு முற்றுமுழுதாக கட்டுப்பட்டுத்தான் செய்வதாக தெரிவித்தது. தற்பொழுது இருக்கும் சுரங்கத்தையும் அங்கு புதிதாக அமைக்கப்படவிருக்கும் சுரங்கத்தையும் Rajasthan Rajya Vidyut Utpadan Nigam (RRVUNL) என்ற நிறுவனம்தான் கையாள்கிறது என்று தெரிவித்தது. இந்த நிறுவனம்தான் நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் இறுக்கமான சட்டவிதிகள், ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளித்தல் என்பவற்றை கவனித்து வருவதாக தெரிவித்தது. இந்நிறுவனம் கிராம மக்களின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்து அவற்றைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தது. அதானி குழுமம் இந்த நிறுவனத்தின் சுரங்க அபிவிருத்தி மற்றும் இயக்கத்துக்கு பொறுப்பாக இருப்பதோடு அதன் 74% பங்குதாரராகவும் இருக்கின்றது.

ஆனால், BBC பயணம் செய்த பல கிராங்களிலும், கிராம சபைகளினது கருத்துக்கள் மீறப்பட்டன அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட்டன, என்று போராடும் பழங்குடி மக்கள் குற்றம் சுமத்தினார்கள்.  ஹஸ்டியோ அரன்ட் (Hasdeo Arand) பிரதேசங்களில் உள்ள பழங்குடி பகுதிகளில் கிராமசபைகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம் ஆகும். குறைந்தது மூன்று கிராத்தைச் சேர்ந்த மக்கள் இந்த சட்டமீறல்களை விசாரிக்குமாறு மாவட்ட அதிகாரத்திடம் முறையிட்டுள்ளார்கள். மேலும் இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அனுமதிப்பத்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் இந்த விசாரணைகளுக்குள் அடக்கம்.

“இந்தக் காடுகளில்தான் எங்கள் தெய்வங்கள் குடியிருக்கின்றன. நாங்கள் சிலைகளை கும்பிடுவதில்லை. இந்த சுரங்கங்கள் எமது பண்டைய மரபுகளையும் வாழ்க்கை முறைகளையும் உடைத்துப் போட்டு விடும்.”  என்று ராம்லால் காரயம் என்ற போராட்டக்காரர் சொன்னார். 2021 இல் அவர் உட்பட பலர் சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூர் வரை 300 கிலோ மீட்டர் நடந்து சென்று  இந்த சுரங்க நடவடிக்கையை நிறுத்துமாறு போராடினர்.

வளர்ந்துவரும் வேறுபாடுகள்

இந்த மக்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. போராட்டம் கூர்மை அடைய அடைய இந்தக் காட்டுப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுகின்றன. அதனால் மக்கள் தமது முகங்களை காட்ட பயப்படுகிறார்கள்.

நாங்கள் அங்கிருந்த இரு நாட்கள் முழுவதும் உந்துருளிகளிலும் வாகனங்களிலும் வந்தவர்களால்  தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டோம். காட்பர்ரா கிராமத்தின் தலைவரை சந்திப்பதற்காக அந்தக் கிராமத்தில் நுழைய முற்பட்ட பொழுது எமது வாகனத்தை சேதப்படுத்தப் போவதாக சிலர் மிரட்டினார்கள். அவர்கள் அச்சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்கள் சுரங்க அபிவிருத்தியை தீவிரமாக ஆதரிக்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினரேயாகிலும் அவர்களின் குரல்கள் பெரியளவில் ஒலிப்பதாக தோன்றுகின்றன.

“முன்னேற்றம் இருக்க வேண்டுமாயின் ஓரளவு சேதாரம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்கிறார் பாடேபூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவ் சிங் போர்டே. நாம் காட்பர்ரா கிராமத்தை நோக்கி சென்ற போது ஓர் ஒடுக்கமான பாதையில் வைத்து எமது வாகனத்தை இவரும் இன்னும் சிலரும் சுற்றி வந்து மிரட்டினார்கள்.

“காட்டிலிருந்து வரும் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அதைவிட உயரிய அபிலாசைகள் இருக்கின்றன.” என்று அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற கருத்தாடல் நடத்தப்படவேண்டும் என்று அவர் சொன்னார்.

இன்னொரு கிராமத்துக்கு செல்லும் வழியில் சந்திரகுமார் என்பவர் எமது வண்டியை நிறுத்த எத்தனித்தார். அவர் அதானி குழுமத்தின் தற்போதைய சுரங்கத்தில் தொழில்நுட்பவியலாளராக வேலை செய்வதாக சொன்னார். அவர் அந்நிறுவனம் கிராமங்களுக்கு பாடசாலைகள், குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் போன்ற நல்ல விடயங்களை கொண்டு வந்திருப்பதாக சொன்னார்.

உள்ளூர் மக்களின் கொள்ளளவை அதிகரிக்க தாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதானி குழுமம் BBC இற்கு தெரிவித்தது. 800 மாணவர்கள் படிக்கக் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டியது, 4000 இளையோருக்கு தொழிற்பயிற்சி அளித்தது, நடமாடும் சுகாதார நிலையங்களை ஏற்படுத்தியது உட்பட பல வேலைகளை செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். மேலும் 2013 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வரும் PEKB சுரங்கம் மட்டும் 15000 பேருக்கு மேலானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். இது “உள்ளூர் மக்களின் பலமான ஆதரவு இன்றி சாத்தியப்பட்டு இருக்காது” என்றும் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால், இவ்வாறாக  பழங்குடி சமூகத்துடன் நேர்மறையாக ஊடாடுவதன் மூலம் அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு தூண்ட அதானி குழுமம் முயற்சிப்பதாக கிராம மக்களும் போராட்டக்காரர்களும் குற்றம் சுமத்துகிறார்கள். அதானி குழுமம் காட்டைச் சூழ வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் இளையோரைத் திரட்டியுள்ளதாகவும் அவர்களைக் கொண்டு கிராம மக்களை கண்காணிப்பதாகவும் அதனூடக போராட்டம் தனது கட்டுப்பாட்டை மீறிப் போகாமல் இருக்க வகை செய்வதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

மாறிவரும் அலை

கடந்த ஆண்டு ஒரு குறுகிய காலத்திற்கு பழங்குடி மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படுவது போல் ஒரு தோற்றம் இருந்தது.  பிரபலமான அரசியல்வாதியான ராகுல்காந்தி கூட தனது கட்சியைச் சேர்ந்த மாநில அரசாங்கம் சுரங்கத்துக்கு அனுமதியளித்ததை வெளிப்படையாக கண்டித்தார்.

இந்தியாவில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த ராகேஷ் டிகெய்ட் என்பவர் ஹஸ்டியோ காட்டில் ஒரு மரம் வெட்டப் பட்டாலும் போராட்டம் வலுக்கும் என்று கடந்த மாசி மாதம் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சி சுரங்கத்திற்கு தான் வழங்கியிருந்த அனுமதிப்பத்திரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசாங்கத்துக்கு விண்ணப்பித்தது. ஆனால், இதனை “தாமதிக்கும் உத்திகள்” என்று அப்பிரதேசத்தில் இருக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளர் அலோக் சுக்லா கூறினார். வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை திரும்பப் பெறுவதற்கு மாநில அரசுக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது என்றும் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

சட்டீஸ்கர் மாநில அரசாங்கத்துக்கு இதனை நிறுத்த வேண்டிய அரசியல் வேணவா இல்லை, ஏனெனில் இந்த அரசாங்கத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இன்னொரு மாநில அரசாங்கமாகிய ராஜஸ்தான் அரசாங்கத்தால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஏனெனில் இந்த சுரங்கத்திலிருந்து பெறப்படும் நிலக்கரியினால் பயன்பெறப் போவது ராஜஸ்தானில் உள்ள மின்சார உற்பத்தி நிறுவனம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சட்டீஸ்கரில் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இது மேலும் அரசியற் சூழலை சிக்கலாக்குகிறது. வெக்கையான நீண்ட கோடைகாலமும் மின்வெட்டுகளின் சாத்தியப்பாடுகளும் சக்திப் பாதுகாப்பில் அரசியல்வாதிகளின் கவனத்தை அதிகரிக்கும்.

உச்ச நீதிமன்றம் இந்த திட்டத்தை இடைநிறுத்த மறுத்து விட்டது. நிலங்களின் கையகப்படுத்தலுக்கு எதிரான வழக்கானது சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிரான மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று அது சொல்லி உள்ளது. மேலும், பழங்குடி மக்களின் உரிமைகள் வேறாக தீர்மானிக்கப்படும் அதற்காக “அபிவிருத்தி வேலைகளை பலியிட முடியாது” என்றும் சொல்லி உள்ளது.

ஆனால் போராட்டக்காரர்கள் தாம் வெற்றியடைவோம் என்று நம்புகிறார்கள்.  “எங்களுக்கு நீதிமன்றுகளில் நம்பிக்கை இருக்கிறது.” என்று போராட்டக்குழுவின் முன்னணி அங்கத்தவரான உமேஸ்வர் சிங் ஆர்மோ தெரிவித்தார். “இது ஹஸ்டியோவை பாதுகாக்க மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. நாங்கள் இந்த நாட்டை காக்க போராடுகிறோம். காலநிலை மாற்றத்தாலும் சூழல் மாசைடைவதாலும் பாழாகிப் போய்க் கொண்டிருக்கும் பூமியை காக்க போராடுகின்றோம்.”

நிகில் இனாம்தார் (Nikhil Inamdar, BBC News)

தமிழாக்கம் - நிமிர்வு

 நிமிர்வு சித்திரை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.