பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் - இருப்பதை விட மோசமான சட்டத்தைத் தான் அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது

 



பங்குனி மாதம் 17 ஆம் திகதி அரசாங்கம் முன்வைத்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Anti Terrorism Act, ATA) தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்திலும் (Prevention of Terrorism Act, PTA) பார்க்க மிகவும் மோசமானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வழங்குகையில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

இந்த சட்டத்திலும் பயங்கரவாதம் என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் இல்லை. பயங்கரவாதம் என்பதற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் ஒன்று இருக்கின்றது. ஆனால் இந்த சட்டத்தில் அதற்கு மாறாக ஒரு பரந்த வரைவிலக்கணம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒரு தடுப்பாணையை பாதுகாப்பு அமைச்சர் தான் கொடுக்கலாம். ஆனால் புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ATA சட்டத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒரு தடுப்பாணையை கொடுக்கலாம். அந்த தடுப்பாணையில் ஒருவரை முதல் தடவையாக மூன்று மாதத்திற்கு தடுத்து வைக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகும் அவரை தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டுமென்றால் பொலிஸ் ஓர் இரகசிய அறிக்கையை நீதிபதிக்கு கொடுத்து அவரை தொடர்ந்து தடுத்து வைக்க சொல்லி கேட்கலாம். நீதிபதி அந்த அறிக்கையைப் பார்த்து இவரை தடுத்து வைப்பதற்கான காரணம் இல்லை என்று நினைத்தால் அவரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவரை கைது செய்து சிறையில் அனுப்புவதற்கு காரணம் இருக்கிறதா என்று நீதிபதி கட்டாயமாக பொலிஸிடம் கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி காரணம் இல்லாவிட்டாலும் கூட தடுத்து வைக்கப்பட்டவரை முழுமையாக அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கான அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. நீதிபதி அந்த நபரை பிணையில் மட்டும் தான் அனுப்ப முடியும்.

இது ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஒருவரை தடுப்பாணையின் கீழ் தடுத்து வைக்க ஆதாரம் இல்லை என்று நீதிபதி முடிவு செய்து விட்டால் அவர் ஏன் பொலிஸிடம் கேட்க வேண்டும்? அந்த மாதிரியாக தடுத்து வைப்பதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட ஒருவரை அந்த வழக்கில் இருந்து  விடுவிக்காமல் பிணை மட்டும் கொடுக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்ற சொல்லப்பட்டிருப்பது ஏன்? ஆகையால் இதைப் பார்த்தோமானால் எப்படியாவது ஒருவரை சட்ட பொறிமுறைக்குள் முடக்கி வைப்பதற்கே இந்த ATA சட்டம் எத்தனிப்பதாக தெரிகின்றது.

அடுத்தது இராணுவ மயமாக்கல். தற்போதுள்ள PTA இல் இராணுவத்திற்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் புதிய சட்டத்தில் இராணுவம் ஒருவரை கைது செய்யலாம். கைது செய்த பின்பு 24 மணித்தியாலயத்திற்கு பிறகு தான் கட்டாயமாக பொலிஸிற்கு அவரை  கையளிக்க வேண்டும். மற்றையது இராணுவம் வேண்டுமென்றால் வீதியில் உங்களையும் உங்களது வாகனங்களையும் தடுத்து பரிசோதிக்கலாம். அதாவது புதிய சட்டம் இராணுவ மயமாக்கலை சட்டமாக்குகின்றது. இதனூடாக இராணுவ மயமாக்கலை சர்வ சாதாரணமாக்குவதற்கு தான் அரசாங்கம் எத்தனிப்பதாக தெரிகின்றது.

இந்த புதிதாக முன்வைத்த சட்டமானது ஓர் இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக வர்த்தமானியூடாக பிரகடனப் படுத்துவதற்கு சனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. அவ்வாறு தடை செய்யப்பட்ட இடத்திற்கு ஒருவரும் போக முடியாது. அந்த இடத்தை மேற்பார்வை செய்வதற்காக ஒரு அலுவலரை சனாதிபதி நியமிக்கலாம். அந்த அலுவலர் தான் ஒருவரை அந்த இடத்துக்குள் அனுமதிப்பதா இல்லையா என்று தேவையான நேரத்தில் முடிவு செய்யலாம்.

உதாரணமாக நாம் காலிமுகத்திடலை எடுத்து கொள்வோம். சனாதிபதி அதனை தடை செய்யப்பட்ட இடம் என்று பிரகடனம் செய்தால் அதற்கு பொறுப்பான அதிகாரி அந்தந்த நேரங்களில் தனக்கு ஏற்றவாறு ஒருவரை உள்ளுக்குள் செல்ல அனுமதிப்பதா இல்லையா என்று முடிவு எடுக்கலாம். நீதித்துறை இதனை மேற்பார்வை செய்ய முடியாது. எப்படி இந்த முடிவுகளை எடுக்கப் படுகின்றன என்பதற்கு வெளிப்படைத் தன்மை இல்லை. முடிவுகளை அந்த நேரத்தில் இருக்கும் அலுவலர் தமது விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். வேண்டுமென்றால் 10, 20 வருடத்திற்கு கூட தடை செய்யப்பட்ட இடமாக ஓர் இடத்தை ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவிக்கலாம்.

அடுத்தது ஒரு நிறுவனத்தையோ ஒரு குழுவையோ தடை செய்யப்பட்ட குழுவாக ஜனாதிபதி வர்த்தமானியில் பிரசுரிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர் சமூகத்தை கூட இந்த விதத்தில் தடை செய்யலாம். ஒரு வருடத்திற்கு இந்த குழுவை தடை செய்யலாம் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.  ஆனால் ஒவ்வொரு வருடமும் அதை புதுப்பித்துக் கொண்டே போகலாம். ஒரு இடத்தை தடை செய்வதாகட்டும் ஒரு நிறுவனத்தை தடை செய்வதாகட்டும் எல்லா விதங்களிலும் இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன.

அரசியல் அமைப்பில் எமக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் பல விடயங்கள் இந்த சட்டத்தில் உள்ளன. மேலும், சர்வதேச மனித உரிமை சாசனங்களில் உள்ளடக்கப்பட்ட உரிமைகளை மீறுகின்ற பல விடயங்களும் இந்த சட்டத்தில் உள்ளன. தற்போது இருக்கும் PTA இன் கீழ் மரண தண்டனை இல்லை. ஆனால் புதிய சட்டத்தில் கொலை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த புதிய சட்டம் சர்வதேச மட்டத்திலும் கண்டிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் கூட இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்த சட்டத்தில் இப்பொழுது நான் குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் பிரச்சனைக்கு உரிய விடயங்கள். இவை மனித உரிமைகளை மீறுகின்ற விடயங்கள். இப்பொழுது இருக்கும் சட்டத்தை நீக்கி விட்டு அதிலும் பார்க்க மிகவும் மோசமான சட்டத்தை தான் அரசாங்கம் கொண்டு வர எத்தனிக்கின்றது என்று அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

GSP+ சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ளது. அதனை நீக்கி சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால் PTA ஐ நீக்குவது போல் நீக்கி விட்டு அதிலும் மோசமாக சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் ஒரு சட்டத்தை தான் அரசாங்கம் முன் வைத்திருக்கின்றது.

எமது நாட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை  (INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS, ICCPR) என்ற ஒரு சட்டம் இருக்கின்றது. நடைமுறையில் அந்த சட்டம் எமது குடியியல் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் அந்த சட்டத்தை ஆயுதமாக்கி எமது உரிமைகளை மீறத்தான் அந்த சட்டத்தை நடைமுறையில் பாவித்து இருக்கிறார்கள்.

உதாரணமாக, அஹ்நாப் ஜசீமை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு கவிஞர். அவரும் இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அதற்கு பிறகு சப்திஹ சரத்குமார, அவர் ஒரு எழுத்தாளர். நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு அவரும் இந்த சட்டத்தின் கீழ் தான் தடுத்து வைக்கப்பட்டார். இந்த சட்டம் என்ன கூறுகிறது என்றால் ஒரு சமூகத்திற்கு எதிராக, ஒரு குழுவுக்கு எதிராக நீங்கள் வன்மத்தை அல்லது வன்முறையை அல்லது பாரபட்சத்தை தூண்டினால் அது ஒரு குற்றமாகும் என்று. தற்போது புதிதாக முன்வைக்கப்பட்ட இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை நாம் பார்த்தோமானால் அதில் இந்த பிரிவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, ஒரு குழுவிற்கு அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் பயங்கரவாதம் என்று ஆக்கி இருக்கின்றார்கள். இந்த மாதிரியான நோக்கங்களுக்காக சில “குற்றங்களை” புரிந்தால் அது பயங்கரவாதம் ஆகும். அதாவது ஒரு சமய தலத்தையோ அல்லது கலாச்சார தலத்தையோ இடத்தையோ பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது ஒரு குற்றமாகும். உதாரணமாக குருந்தூர் மலையை எடுத்துக் கொள்வோம். குருந்தூர் மலையில் இருந்த இந்து ஆலயத்தினை தகர்த்து விட்டு அவர்கள் இப்பொழுது பௌத்த ஆலயத்தை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு எதிராக பல தடவை அங்குள்ள மக்கள் போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். இந்த புதிய சட்டத்தை பாவித்து அந்த போராட்டங்கள் அங்கு இருக்கும் அந்த  கலாசார சமய தலத்திற்கு பாதகம் விளைவிக்கின்றது என்று அவர்கள் கூறலாம். அதனை தகர்த்த முனைகிறார்கள், குற்றம் புரிய முற்படுகின்றார்கள் என்று சொல்லலாம். அதை அவர்கள் செய்வதன் நோக்கம் சிங்கள மக்களுக்கு எதிராக வன்மத்தை வன்முறையை பாரபட்சத்தை தூண்டுவதற்கே என்று கூறலாம். இந்த புதிய சட்டத்தின்படி அது ஒரு பயங்கரவாத குற்றமாகும். அங்கு போராடும் மக்களை இந்த சட்டத்திற்கு கீழ் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த சட்டம் இலகுவாக துஸ்பிரயோகப்படுத்தப்படக் கூடிய சட்டம் என்பதை இங்கு நாங்கள் காணலாம்.

இந்த புதிதாக முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் நல்லாட்சி காலத்தில் முதலில் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது பயங்கரவாத முறியடிப்பு சட்டம் (Counter Terrorism Act, CTA) என்று சொல்லப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள பல விடயங்களைத் தான் ATA சட்டத்திலும் உள்ளடக்கி இருக்கின்றார்கள். ஆனால் இதில் வேறு என்ன நடந்திருக்கிறது என்றால் அந்த நேரத்தில், 2018இல், நல்லாட்சி அரசாங்கம் அந்த சட்டத்தை கொண்டு வந்த போது பலர் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கின் பின்பு உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அதாவது எமது அரசியல் அமைப்பிற்கு ஏற்ப இந்த சட்டம் இருக்க வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன மாற்றங்களை இந்த சட்டத்திற்கு செய்ய வேண்டுமென்று பரிந்துரைத்தார்கள்.

நல்லாட்சி காலத்தில் இருந்த CTA இலிருந்து 75 அல்லது 80 வீதமானவை இந்த புதிய ATA சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சொல்லலாம். உச்ச நீதிமன்றம் கொடுத்த பரிந்துரைகளும் இதில் இருக்கின்றன. ஆகையால் இதனை மேலோட்டமாக பார்க்கும் பொழுது இதில் எத்தனையோ பாதுகாப்புகள் இருப்பது போல் தான் எமக்கு தெரியலாம். ஆனால்  நுணுக்கமாக பார்த்தால் அதில் இருக்கும் பிரச்சனைகள் தெளிவாகத் தெரியும். உதாரணமாக, புதிய சட்டத்தில் நீதிபதி மேற்பார்வை இருப்பது போல் இருக்கின்றது. ஆனால் உண்மையாகவே நீதிபதியின் கைகள் கட்டுப்பட்டு இருக்கின்றன. அவருக்கு அதிகாரம் அவ்வளவாக இல்லை. மறுபுறத்தில் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் இந்த சட்டத்தை இயற்றும் போது கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றம் கூறிய பரிந்துரைகளையும் உள்ளடக்கி இருப்பதாக தோற்றப்பாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் பரிந்துரைகளை உள்ளடக்கி இருந்தாலும் கூட, சர்வதேச சட்டங்கள், சர்வதேச மனித உரிமை சாசனங்கள் முக்கியமாக சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கைக்கு இருக்கும் கடமைகளுக்கு எதிராகத் தான் இந்த சட்டம் உள்ளது.

இலங்கையில் தற்போது இரண்டு சந்தர்ப்பங்களில் தான் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ஓர் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி, அந்த அவசரகால நிலைமைக்கு கீழ் அவசரகால விதிமுறைகளை வெளியிட வேண்டும். அதற்கு கீழ் தான் இராணுவத்திற்கு பொலிஸாரின் அதிகாரங்கள், அதாவது கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்குமான அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன. 

இரண்டாவது சந்தர்ப்பம், பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ் ஜனாதிபதிக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக இராணுவத்தை பாவிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் அவர் ஒரு வர்த்தமானி அறிவிப்பை பிரசுரிக்கலாம். அது அவசரகால நிலைமையை பிரகடனம் செய்வதிலும் பார்க்க மிகவும் மோசமானது.

அவசரகால நிலைமையை பிரகடனபடுத்தினால் அது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் பிரிவு 12 இன் கீழ் இருக்கும் இந்த அதிகாரம், அதாவது ஒவ்வொரு மாதமும்  ஒரு வர்த்தமானியை பிரசுரித்து இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம் கொடுப்பது மிகவும் பயங்கரமான விடயம். அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற காலத்தில் இருந்து செய்து கொண்டே தான் இருக்கிறார். அதற்கு முன்பு கோட்டாபய இராஜபக்சவும் பதவி ஏற்ற காலத்தில் இருந்து செய்து கொண்டே இருந்தவர். அதற்கு முன் மைத்திரி பால சிறிசேன கூட ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு பிறகு பிரிவு 12ஐ பாவித்து ஒவ்வொரு மாதமும் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்திருந்தார். அதற்கு முன் மகிந்த இராஜபக்ச  கூட இரண்டு வருடங்களுக்கு இதனை செய்தார். அதற்கு முன் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கூட சில சமயங்களில்  ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை பிரசுரித்து இராணுவத்திற்கு பொலிஸாரின் அதிகாரங்களை கொடுத்தார்.

ஆனால் இந்த புதிய சட்டத்தில் இந்த மாதிரியாக ஒவ்வொரு மாதமும் செய்யாமல் அதனை நிரந்தரமாக்குவதற்கு அவர்கள் எத்தனிக்கின்றார்கள். அதை சட்டமாக்குவதற்கும் அதை சர்வ சாதாரணமாக்குவதற்கும் இந்த புதிய சட்டத்தின் ஊடாக செய்ய முற்படுகிறார்கள்.

தொகுப்பு - ரஜீந்தினி 

நிமிர்வு சித்திரை 2023 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.