இலங்கைத்தீவில் மலையக தமிழர்களின் 200 ஆண்டுகள்



சுய பொருளாதாரத்தைக்  கொண்டிருந்த ஒரு தீவு ஐரோப்பியரின் கையில் குறிப்பாக பிரித்தானியரின் கையில் அகப்பட்ட பொழுது தங்களுக்கு தேவையான பொருளை இங்கு உற்பத்தி செய்யலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அதன் விளைவுதான் இந்த தேயிலை, பின்பு இறப்பர், கொக்கோ போன்ற பொருட்கள். இவற்றை இங்கு உற்பத்தி செய்து, விற்பனை செய்து தங்கள் நாட்டிற்கு செல்வம் கொழிக்க வைக்கலாம் என்ற ஒரு நோக்கத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள். மத்திய மலைநாட்டு காலநிலையும் அந்த தரை அமைப்பும் அதற்கு மிகவும் சாதகமானவையாக இருந்தன.

மத்திய மலைநாட்டில் கண்டிய இராச்சியத்தில் பௌத்த மதத்தை பின்பற்றிக் கொண்டு சிங்கள மொழி பேசிக்கொண்டு, மிகவும் அமைதியாக வாழ்ந்து கொண்டு இருந்த அந்த கிராமிய மக்கள் மீது பிரித்தானியரின் கண்கள் பட்டன. அந்த மத்திய மலை நாட்டை கையகப்படுத்தினார்கள். அதில் தங்களுடைய தேயிலையையும் கோப்பியையும் விளைவிக்க வேண்டுமென்று நடவடிக்கை எடுத்தார்கள். அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள் அதற்கு உடன்படவில்லை. தங்கள் நிலங்களை கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை. தங்களுடைய உழைப்பையும் கொடுக்க தயாராக இருக்கவில்லை. பிரித்தானியருக்கு கை கட்டி சேவகம் செய்யவும் தயாராக இருக்கவில்லை. மிகவும் தன்மானமிக்க ஒரு சமூகமாக இருந்தார்கள்.

பிரித்தானியருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இந்தியாவின் தமிழ்நாட்டில் வறுமையாலும், வறட்சியாலும், வேலையின்மையாலும், சமூக சுரண்டல்களாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த கிராமங்களில் இருந்த மக்களை அணுகினார்கள். அவர்களை ஒரு மக்கள் கூட்டமாக பார்க்காமல் உழைக்கும் மிருகங்களாகவே பார்த்தார்கள். தங்களுக்கு தரகு முதலாளித்துவம் செய்ய வந்த கங்காணிமாரைக் கொண்டு அந்த மக்களை ஏமாற்றி பாலும் தேனும் பெருகி வரும் தேசத்திற்கு உங்களை அழைத்து செல்கின்றோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை கப்பல்களில் ஏற்றி இங்கே கொண்டு வந்தார்கள். மன்னாரில் இறக்கி மன்னாரில் இருந்து மலையகம் வரை நடத்தி கொண்டு சென்றார்கள். அவர்களுக்கு லயங்கள் என்று சொல்லுகின்ற நீண்ட மண்டபங்களை குடியிருப்பாக கட்டிக் கொடுத்தார்கள். மத்திய மலை நாட்டின் காடுகளை எல்லாம் வெட்டி சரித்து, கீழே உள்ள கிராமங்களின் மீது பொழிய விட்டு அந்த கிராமங்களை அழித்து மத்திய மலை நாட்டில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை உருவாக்கினார்கள்.

அந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக பல ஆயிரம் வருடங்களாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அந்த மக்களின் வாழ்வியலை வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்து அந்த மக்களை பட்டினி சாவிற்கு கொண்டு சென்றார்கள். நிர்க்கதியாக்கினார்கள். இடம் பெயர்த்தார்கள். தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டே நடுக்காடுகளில் கொண்டு போய் விட்டார்கள். அன்றைய காலகட்டங்களில் கண்டிய சிங்கள மக்கள் அனுபவித்த துயரம் மகா துயரம்.

அந்த சிங்கள மக்கள் நிமிர்ந்து பார்க்கும் பொழுது அவர்கள் கண்களுக்கு தெரிந்தது ஆங்கிலேயரை விட ஆங்கிலேயரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட மலையக தமிழ் மக்கள் தான். தமிழர்கள் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தவர்கள். தங்களது வாழ்வியலை எதிர்க்க வந்த தங்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்க தங்களை துரத்தி விட்டு குடியமர வந்த ஆட்களாகவே அவர்களை பார்த்தார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்.

மலையகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த தமிழ் கூலி தொழிலாளர்களால் தான் பெருந்தோட்டத்துறை செழித்து வளர்ந்தது. பெருந்தோட்டத் துறை செழித்து வளரத் தொடங்கிய போது அந்த பெருந்தோட்டத் துறை உற்பத்திகளை கப்பலில் ஏற்றி தங்கள் நாடுகளுக்கு கொண்டு போவதற்காக அவர்கள் கொழும்பிற்கும் கண்டிக்கும் மத்திய மலை நாட்டிற்கும் இடையில் பாதைகளை அமைத்தார்கள். இரும்பு பாதைகளை அமைத்தார்கள். கற்பாதைகளை அமைத்தார்கள். கொழும்பில் துறைமுகங்களை விருத்தி செய்தார்கள். இந்த தீவின் பொருளாதாரத்தை கொள்ளையடித்துக் கொண்டு போனார்கள்.

ஏதோ ஒரு வகையில் இந்த பெருந்தோட்ட பொருளாதாரம் என்பது இலங்கையில் ஒரு செழுமை மிக்க பொருளாதார துறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கூலி உழைப்பாளர்களாக வந்தவர்களுக்கு போதிய கூலியும் வசதியும் கிடைத்ததோ இல்லையோ இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார ஆதாயம் கிடைத்தது. பிரித்தானியர் காலத்தில் அந்த ஆதாயங்கள் எல்லாமே பிரித்தானியாவிற்கு போனது.

ஆனால் இலங்கை சுதந்திர நாடு என்ற பெயரில் சுதேசிகளின் ஆட்சியின் கீழ் வந்த காலக்கட்டங்களில் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 40 வீதமான பொருளாதாரம் இந்த பெருந்தோட்டங்களால் பங்களிப்பு செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு அது. அந்த காலக்கட்டங்களில் தான் மலேசியாவில் இருந்து தனியாக பிரிந்து நின்ற சிங்கப்பூரின் தலைவரான லீகுவான்யூ இங்கு வந்தார். “என்னுடைய கனவு சிங்கப்பூரை ஒரு கொழும்பு போன்று மாற்றியமைக்க வேண்டும் என்பதே” என்று அவர் சொன்னார். அந்தளவிற்கு கொழும்பு தலைநகரமும் இலங்கையின் பொருளாதாரமும் ஒரு உயர்ந்த இடத்தில் இருந்தன.

நாங்கள் என்ன செய்தோம்? பிரித்தானியர் போகும் பொழுது எங்களிடம் தந்துவிட்டுப் போன அந்த பெருந்தோட்டத் துறையை தக்க வைத்தோமா என்றால் இல்லை. அந்த பெருந்தோட்ட துறையை தக்க வைத்து அதனை இந்த தேசத்தின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் விடயமாக பார்ப்பதற்கு பதிலாக நாங்கள் இனக்குரோதம் கொண்டவர்களாக மாறி இருந்தோம். நாட்டின் அன்றைய அரசியல் தலைவர்கள் எல்லோரும் இனக்குரோதம் கொண்டவர்களாக எல்லாவற்றையும் பார்த்தார்கள். ஒரு பெரிய பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டமைத்து தாங்கி கொண்டிருந்த அந்தப்  பெரிய சமூகத்தை, ஒரு உழைப்பாளிகள் சமூகத்தை மிகப்பெரிய பங்காளிகளாகப் பார்க்காமல், அந்நியர்களாக துரத்தப்பட வேண்டியவர்களாக பார்த்தார்கள். எனவே அவர்கள் முதலாவதாக செய்தது இந்த மலையகத்தில் வந்து இருந்த கூலித் தொழிலாளிகளை நாடற்றவர்கள் ஆக்கியது.

மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கும் கிடைத்த பொழுது அவர்களது பிரதிநிதித்துவம் 8 அல்லது 9 ஆக இருந்தது. அது சிங்களவர்களுக்கு மிகப்பெரிய ஆழமான தாக்கத்தை கொடுத்தது. அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த உழைப்பாளிகள் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களித்தது என்கிற விடயங்களை எல்லாம் மறந்து விட்டு இவர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற தீர்மானம் இயற்றினார்கள். இன ரீதியான வெறி மட்டும் தான் அங்கு இருந்தது. கண்டியர்களுடைய நிலங்களை எல்லாம் இவர்கள் பிரித்தானியர்களின் துணையுடன் கையகப்படுத்தி இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். 

இவர்களுக்கு மத்திய மலை நாட்டில் ஒரு துண்டு நிலம் கூட உரிமையாகக் கூடாது என்றார்கள். கண்டிய நிலம் மீண்டும் கண்டிய மக்களுக்கே சொந்தம் என்று சொல்லிக் கொண்டு இவர்களை எவ்வாறு தேசத்தில் இருந்து அந்நியப்படுத்தலாம் என்று யோசித்தார்கள். இவர்களுடைய வாக்குரிமையை ஒட்டுமொத்தமாகப்  பறித்தார்கள். பிராஜாவுரிமை சட்டத்தை கொண்டு வந்து இவர்களை நாடற்றவர்களாக்கினார்கள். ஒரு தேசத்தின் 40 வீதமான பொருளாதாரத்தை கட்டமைத்து பராமரித்து கொண்டிருந்த மிகப்பெரிய தொழிலாளர் படையை நிர்க்கதியாக்கி அவர்களில் பாதிப் பேரை தேசத்திற்கு வெளியே அகற்றிய மிகப்பெரிய முட்டாள் தனம் இந்த உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்க முடியாது.

நான் முன்பு ஒருமுறையும்  பேசி இருந்தேன், இந்த ஏழை மக்களின் கண்ணீரால் கட்டப்பட்டது தான் இலங்கையினுடைய பொருளாதாரம் என்று. அதுதான் உண்மை. அவ்வாறு 40 வீதமான பொருளாதாரத்தை  தாங்கி வைத்திருந்த அந்த பெருந்தோட்ட துறையை சீரழிக்கும் போது இவர்களுக்கு இலங்கை தேசம், இலங்கை நாடு என்கின்ற ஒரு பரந்த பார்வையே இருக்கவில்லை. அவர்களுக்கு இந்த சிங்கள தேசியவாதம் என்கின்ற அந்த குறுகிய வாதமும், அந்த மக்கள் தமிழர்கள் ஆகவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்கிற ஆவேசமும் மட்டும் தான் இருந்தது. அவர்களுக்கு நாடு என்கிற பார்வை இருக்கவே இல்லை. 

இந்த தீவில் வாழ்ந்த அத்தனை பேரும் இந்த நாட்டின் குடிமக்களாக எந்தக் காலக்கட்டங்களிலும் அவர்கள் கருதியது கிடையாது. 1930,1940 களில் இலங்கையினுடைய சனத்தொகை புள்ளி விபரங்களை எடுக்கும் போது வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் என்று சொல்லுகின்ற தமிழர்களை விட எண்ணிக்கையில் சிறிது அதிகளவு கொண்டதாக தான் அந்த மலையகத்தில் வாழ்ந்த பெருந்தோட்ட துறையில் இருந்த தமிழ் மக்கள் இருந்தார்கள்.

அன்றைய பெருந்தோட்டத் துறையில் இருந்த தமிழ் மக்களின் குடியுரிமையை இல்லாமல் செய்வதற்கு துணை போன எங்களுடைய தலைவர்களுடைய சிந்தனைக்கு பின்னாலும் இந்த மக்களின் பெரும்பான்மை ஒரு பயமாக அமைந்திருந்ததோ என்றொரு கேள்வியும் என்னுடைய மனதில் இருக்கின்றது. சிலவேளைகளில் அவர்கள் தொடர்ந்து குடியுரிமையுடன் இருந்தார்கள் என்று சொன்னால், வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஈழத் தமிழர்களை விட எண்ணிக்கை பெரும்பான்மையானவர்களாகவும் அதிக ஆசனங்களை பாராளுமன்றத்தில்  தக்க வைக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் பலம் பொருந்தியவர்களாக மாறிவிடுவார்களோ  என்கின்ற அச்சம் காரணமாக நாங்கள் அவர்களுடைய வாக்குரிமைப் பறிப்பிற்கு ஆதரவாக நின்றோமா என்கிற கேள்வி கூட என்னுடைய மனதில் இருக்கின்றது.

- செல்வின்

நிமிர்வு இதழ் - சித்திரை 2023 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.