தமிழர் தாயகத்தில் பல முனைகளில் விரிவுபடுத்தப்படும் பௌத்தமயமாக்கல்

 


தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதனை அரசாங்க திணைக்களங்களான தொல்லியல் திணைக்களமும் வனவள திணைக்களமும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன. தமிழ்மக்களின் தொன்மையான பிரதேசங்களுக்குள் முதலில் தொல்லியல் திணைக்களம் வலுவாக காலூன்றுகிறது. பின் தொல்லியல் சட்டங்களை காரணங்காட்டி அப்பகுதி மக்களை அந்த இடத்துக்கு செல்ல விடாது தடுக்கின்றது. அதன் பின் பலமாக நிறுவனமயப் படுத்தப்பட்ட அரசாங்க கட்டமைப்பு ஊடாக அப்பிரதேசத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது. இது காலம் காலமாக இலங்கைத்தீவில் இடம்பெற்று வந்தாலும், போர் முடிந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் இலங்கை அரசு தமிழர் பிரதேசங்களில் பரவலான பௌத்த ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

உலக நாடுகள், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் வாங்கிய கடனை தமிழர்களை அடக்கி ஒடுக்கவும், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கவும் சிறீலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது. அதேவேளை, ரணில் அரசு இன்னொரு நோக்கத்தையும் இங்கே நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. அதாவது, அரசாங்கம் சுமத்தும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக தமிழ் சிங்கள மக்கள் இணைந்து போராடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பிரித்தாளும் நடவடிக்கையையும் இந்த நில ஆக்கிரமிப்புகளுக்கு ஊடாக எட்ட நினைக்கிறது. நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான தமிழ்மக்களின் வலுவான போராட்டங்களை பௌத்த சிங்களத்துக்கு எதிரான போராட்டங்களாக சித்தரித்து இனவிரோதத்தை எரிய விடுகிறது. இவ்வாறாக ஒரே நேரத்தில் தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்புகளை செய்யும் அதே நேரம், தன்னால் சுமத்தப்படும் பொருளாதார சுமைகளுக்கு எதிராக போராடாமல் மக்களின் கவனத்தை சிதறடிக்கவும் செய்கிறது.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை அவர்களின் அடிப்படையாக கோரும் நிரந்தர அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதி என்ற போராட்டங்களிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களின் போராட்டத்தை வெறும் மதச் சின்னங்களை பாதுகாக்கும் போராட்டமாக மாற்றப் பார்க்கிறது. இதனூடாக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை மதச்சின்னங்களை காப்பாற்றும் போராட்டமாக சுருக்கி மதவாதத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் உள்ளிட்ட பூர்வீக வழிபாடுகள் அடாவடித்தனமாக நிறுத்தப்பட்டு, சூலம் பிடுங்கி எறியப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி பௌத்த விகாரை கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

மூதூர் கிழக்கு சூடைக்குடாவில் உள்ள மத்தாளமலை குன்றத்தூர் முருகன் ஆலயம் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு தமிழ்மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

காலம் காலமாக புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்து வந்த கச்சத்தீவில் ஒரு புத்தர் சிலை இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன். வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து வரலாறை திரிபுபடுத்தி மாற்றியமைத்து இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணம் நாவற்குழியிலும் தமிழ்மக்களின் எதிர்ப்பை மீறி பௌத்த விகாரை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நிலாவரைப் பகுதியிலும் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்து. ஆனால் அது தமிழ் மக்களின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது.  

இவையெல்லாம் தமிழ்மக்களின் பண்பாட்டு வாழ்விடங்களையும், கலாசார வழிபாட்டு இடங்களையும், தொன்மை வாய்ந்த இடங்களையும் அழிப்பதற்கான முயற்சிகள். அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் தமிழ்மக்களின் நிலங்களை அபகரிக்கும் முயற்சி இது.  இதனூடாக தமிழ் மக்ளின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்யும் முயற்சி.  திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் இந்த முயற்சி குறிப்பிட்ட சமயத்துக்கு எதிராக நடத்தப்படுவது போல் தோற்றமளித்தாலும் மதவேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இருப்புக்கு வைக்கப்படும் ஆப்பு.

வெடுக்குநாறி மலையில் தமிழ்மக்களின் அடையாள அழிப்பு தொடர்பில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பன்னாட்டு குற்றங்கள் நூலின் எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் அவர்களிடம்  பேசிய போது பின்வருமாறு தெரிவித்தார்.

எமது தொன்மையும் எமது அடையாளமுமாக இருந்த வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையின் ஆதிலிங்கங்களும் மூலமூர்த்திகளும் பிடுங்கி  எறியப்பட்ட நிலையில் அதற்காக அழைக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்பதற்காக  30.03.2023  காலை நாங்கள் திருகோணமலையில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்திருந்தோம். வவுனியாவில் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பித்த எங்களுடைய போராட்டம் கந்தசுவாமி கோவிலில் இருந்து மாவட்ட செயலாளரின் அலுவலகம் வரைக்கும் முன்னேறியது. பெருந்தெருக்களின் ஊடாக ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’, ‘எங்கள் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்து’, ‘எங்கள் வழிபாட்டு உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்’, ‘நாங்கள் வெடுக்குநாறி  மலையில்  வழிபாட்டு இடத்தை மீள நிறுவுவோம்’ என்ற  பல்வேறு கோஷங்களை தாங்கியபடி மக்கள் அணி அணியாக கலந்து கொண்டு மாவட்ட  செயலாளரின் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தோம். அங்கு  வெடுக்குநாறிமலை ஆலயத்தின் நிர்வாக சபையினரால் முறைப்பாடு கையளிக்கப்பட்டது. 

வருகை தந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் நெடுங்கேணிக்கு பயணித்தோம். எங்களுடைய தொன்மையும் ஆதியும் மிக்க லிங்கம் அடித்து உடைக்கப்பட்ட பிடுங்கி எறியப்பட்ட இடமான  வெடுக்குநாறி மலைக்கு பயணம் செய்தோம். அங்கு நாங்கள் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மதத் தலைவர்கள், வயதானவர்கள், சிறுபராயத்தினர்  உட்பட பெருமளவான மக்கள் இன்று அங்கு வருகை தந்து எங்களுடைய வழிபாட்டை மேற்கொண்டார்கள். வெடுக்கு நாறி  மலையில் எங்களுக்கு இருக்கின்ற உரிமையை நாங்கள் வலியுறுத்துவதற்கான ஒரு மிக நீண்ட பயணமாக இதனை மேற்கொண்டோம். தற்பொழுது அந்த பயணத்தை நிறைவு செய்து  வெடுக்குநாறி  மலை கோவிலின் பூசாரி அவர்களின் வீட்டில் எங்களுக்கான அமுது மதிய உணவாக இன்று வழங்கப்பட்டது. அதை அருந்தி  விட்டு நாங்கள் இப்பொழுது மீளவும் திருகோணமலையை  நோக்கி பயணப்பட இருக்கின்றோம்.

உலகளாவிய தமிழர்களிடம் நாங்கள் வேண்டுவது ஒன்று தான்.  இங்கு நடக்கின்ற இந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக திரண்டெள  வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விடயத்தில் எம்  மீது நிகழ்த்தப்படுகின்ற அடக்குமுறை என்ற விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். உங்கள் அனைவரதும் உளமார்ந்த உளப்பூர்வமான பங்களிப்புடனேயே  இந்த போராட்டங்கள் வெற்றி அடையும் என்பதை நீங்கள் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள். நாங்கள் மீண்டும்  வெடுக்குநாறி மலையில்  சிவலிங்கத்துடன் எங்களுடைய தொன்மலிங்கத்துடன் ஆதி லிங்கத்துடன் உங்களை சந்திப்போம் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

2009க்கு பிறகான சூழலில் ஒரு இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்தி வருகிறது. எங்களுடைய கவசங்களாக, எங்களை பாதுகாத்து நின்ற பாதுகாப்பு படையாகிய, மக்கள் பாதுகாப்பு படையாகிய விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இந்த இனப்படுகொலை உக்கிரமடைந்து வருகிறது. அவர்களையும்  அழித்து அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலும் இனப்படுகொலையின் ஓர் அங்கமாகிய பின்னர் இன்று நாங்கள் ஆதரவற்று அல்லது பாதுகாப்பற்றவர்களாக இருக்கின்றோம். இந்தச் சூழலில் வடக்கு கிழக்கு எங்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பானது பெருமெடுப்பில் நிகழ்த்தப்படுகின்றது.

கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் அந்த ஆக்கிரமிப்பை தற்காலிகமாக நிறுத்தி தமிழ் மக்களுடன் ஒன்றித்து போராட்டங்களை செய்து   உலக நாடுகளின் கடன்களை பெற்றுக் கொள்ளும் வரை வாழாதிருந்த  பௌத்த சிங்கள பேரினவாதம் இன்று தன்னுடைய முகத்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றது. வடக்கு கிழக்கு எங்கும் உடனடியாகவே பெருமெடுப்பில் பௌத்த பேரினவாத  தாக்குதல்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம். உண்மையில் ஒரு இடத்தில் நடக்கின்ற தாக்குதலை நாங்கள் எதிர்கொள்ள தயாராகும் பொழுது மற்றொரு இடத்தில் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பரவலான இந்த தாக்குதலை எதிர் கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  உங்களுடைய நாடுகளில் இருக்கின்ற தூதரகங்களின் முன்னால் நீங்கள் எங்களுடைய இருப்பை, எங்களுடைய பாதுகாப்பை, எங்களுடைய தொன்ம அடையாளங்களை பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிபுணத்துவ தந்துரோபாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

அமுது - 

நிமிர்வு இதழ் - சித்திரை 2023 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.