இளம்தொழில் முனைவோருக்கான காணிகளை அபகரித்த அரச உத்தியோகத்தர்கள்


இலங்கையில் ஊழல் நிர்வாகம் மலிந்து எவ்வாறு அரச துறைக்குள் புரையோடிப் போயுள்ளது என்பதற்கு தொழில் முனைவோருக்கான காணி வழங்கல் செயற்றிட்டம் ஒரு நல்ல உதாரணம்.

அரச பதவிகளை அதிகாரமிக்க ஆயுதமாக வைத்துக் கொண்டு சாமானிய மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது தெளிவான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச அவர்களினால் 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட "ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கல்" செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திற்குரிய பதினொரு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான காணிகள் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர்கோட்டம் பகுதியில் வழங்கப்பட்டன.

இந்தக் காணி வழங்கல் செயற்றிட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரினால் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் செயற்றிட்டத்தின் தன்மைக்கு அமைவாகவும் நேர்முக தெரிவுகளின் அடிப்படையிலும் 168 இளம் தொழில் முனைவோர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கான காணிகளும் இலவச குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

அந்த காணிகளில் அவர்கள் சமர்ப்பித்த செயற்றிட்டத்தை ஒரு வருடத்தினுள் செய்து முடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. எனினும் அந்த செயற்றிட்டத்தின் ஒரு வருடகால உடன்படிக்கை நிறைவு பெற்றும் கூட எதிர்பார்க்கப்பட்டபடி செயற்றிட்டத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. 168 பயனாளர்களில் அண்ணளவாக 15 பயனாளர்களே இந்த காணிகளை ஓரளவுக்கேனும் பயன்படுத்தி பராமரித்து வருகிறார்கள். ஏனைய பயனாளர்களின் காணிகள் பராமரிப்பற்று காணப்படுகின்றன.

இதற்கான பிரதான காரணமாக இருப்பது காணி பகிர்ந்தளித்ததில் இருந்துள்ள ஊழலே என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழங்கப்பட்ட காணிகளில் பெரும்பான்மையானவை அரச ஊழியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த காணிகள் பராமரிப்பற்று இருப்பதாகவும் இதனை சரியான முறையில் பகுப்பாய்வு செய்து தகுதி உடைய பயனாளர்களுக்கு பெற்று கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக கார்த்திகை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். அதில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.

ஒருங்கிணைந்த பண்ணையை ஆரம்பிக்கவே காணி தேவை! தனுசியா - பெரியகுளம்

நான் பெரியகுளம் கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். நான் திருமணம் முடித்து 14 வருடங்களான போதும் இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவித நன்மையையும் பெற்றுக் கொள்ளவில்லை. நான் வாடகை கொடுத்து ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை செய்து வந்தேன். 

கொரோனா காலப்பகுதியில் உணவிற்கு சிரமப் படாமல் வாழ்ந்தது அந்த பண்ணையினாற் தான். அந்த காலப்பகுதியில் தான் இளைஞர்களுக்காக ஒரு இலட்சம் காணிகள் கொடுக்கப்பட உள்ளது என்று இந்த திட்டம் வந்தது. அப்போது எனக்கு 23 வயது. நானும் இதற்காக விண்ணப்பித்திருந்தேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பண்ணையை மீள செய்வதற்கான பணம் செலவழிந்து போய்விட்டது.

அதனால் வாடகை கொடுத்து பண்ணையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய் விட்டது. எங்களுக்காக தானே இந்த திட்டம் வந்தது. ஆகவே எனக்கும் இந்த காணியை தந்திருந்தால் வாடகை, முற்பணம் எதுவுமின்றி நான் பண்ணையை மீள ஆரம்பித்திருப்பேன். நான் எனது ஒருங்கிணைந்த பண்ணையை மீள தொடங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. நாங்கள் படிக்கும் போது இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையை எப்படி செய்யலாம் என்று சொல்லி தந்த விடயங்கள் நன்றாகவே மனதில் பதிந்திருக்கின்றன.

ஏற்கனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த காணிகள் இந்த இரண்டு வருட காலமும் பயன்படுத்தப் படாமல் இருந்தமையால் அதில் ஒரு காணியை எடுத்து நாங்கள் துப்பரவு செய்து இருக்கிறோம். நாங்கள் அரசாங்கத்திடம் கேட்பது எங்களிடம் இந்த காணியை உத்தியோகபூர்வமாக தாருங்கள், நீங்கள் கொண்டு வந்த திட்டத்தை செய்து காட்டுகிறோம் என்பதைத்தான்.

முதலில் காணிகளை பெற்றவர்கள் இவ்வளவு காலமும் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு, நாங்கள்இந்த காணியை பயன்படுத்தப் போகிறோம் என்று தெரிந்தவுடன், இப்போது தென்னம்பிள்ளையை கொண்டுவந்து நடுகிறார்கள். சிலர் காணியை உழுது விட்டு போகிறார்கள்.

இவ்வளவு காலமும் வர முடியாத உங்களால் இப்போது எப்படி வர முடிகிறது? இவர்களால் இரண்டு வருடங்கள் செய்ய இயலாதவற்றை நாங்கள் செய்து காட்டுகிறோம். எங்கள் கைகளில் இந்த காணிகளை ஆறு மாத காலம் தந்து பாருங்கள். எங்களால் செய்து காட்ட முடியும்.

காணிகளை தந்தால் தோட்டங்களை செய்து அன்றாட வாழ்வாதாரத்தை ஈட்டலாம்! சுகந்தா - கேணியடி

அரசாங்க சார்பானவர்களுக்கே பெருமளவில் காணிகளை கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடமாகியும் ஒன்றுமே செய்யவில்லை. நாங்கள் இந்த பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட 7 - 8 மாதங்கள் ஆகின்றன. சின்ன பிள்ளைகளையும் கொண்டு வந்து எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். 

எங்களுக்கென்று வாழ்வாதாரம் எதுவுமே இல்லை. இந்த காணிகளை தந்தால் தோட்டங்களை செய்து அன்றாடம் எங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டக் கூடியவாறு இருக்கும். ஆகவே தயவுசெய்து இந்த காணியை தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

காணிகளை குறுகிய கால அவகாசத்திலாவது தந்து பாருங்கள்! ரிஷாலினி - கேணியடி

வெறுமையாக இருந்த காணியை தான் நாங்கள் எடுத்தோம். அந்த காணியை துப்பரவு செய்து வேலி அடைத்து கொட்டில் போட்டு இருக்கிறோம். அதில் தென்னம்பிள்ளையும் வைத்திருக்கிறோம். இப்படி இருந்த போது 17ஆம் திகதிக்கு பிறகு தான் உங்களுக்கு பதில் சொல்வோம் என்று மாவட்ட செயலாளர் சொன்னதாக சொல்லி பொலிசார் துரத்தி விட்டு கொண்டிருக்கிறார்கள். 

அரசாங்கத்தினால் எங்களை வெளியே போக சொல்லி எழுத்து மூலமாக எதுவும் தரவில்லை. ஆனால் பொலிசார் விரட்டுகிறார்கள். ஆனால், காணியின் உடைமையை பெற்றவர்கள் இப்போது உள்ளே போகிறார்கள், காணியை துப்பரவு செய்கிறார்கள். இவ்வளவு காலம் வராதவர்கள் தற்போது வருகிறார்கள். அவர்கள் போக முடியுமானால் நாங்களும் போக முடியும்.

எங்களை பொலிசார் விரட்டியதன் பின்பு தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் 17ஆம் திகதி அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த இடங்களை தர வேண்டும்.

நாங்கள் பயிர் செய்ய வேண்டும். இதுவரையில் அரசாங்கத்தினால் ஒரு உதவியும் கிடைத்ததில்லை. எங்களுக்கு ஒரு குறுகிய காலம் அவகாசம் தந்து காணியை தாருங்கள், நாங்கள் திறம்பட செய்து காட்டுகிறோம்.

அரச உத்தியோகத்தருக்கு கொடுக்கப்பட்டு காடாக இருந்த காணியை நான் துப்பரவாக்கி பயன்படுத்துகிறேன்! - நிராஜ்

இந்த காணிகள் இளம் தொழில் முயற்சியாளர்களுக்காக கொடுக்கப்பட்டவை. ஆனால் 85 வீதமானவற்றை அரச உத்தியோகத்தர்கள் தமது உறவினர்களின் பெயரில் காணிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு வருட காலமாக அந்த காணிகளுக்குள் எதுவும் செய்யவில்லை. சில காணிகளில் வேலி மட்டும் இருக்கிறது. பல காணிகள் வேலியும் இல்லாமல் காடாக இருக்கின்றன. அப்படியான காணிகளை தான் நாங்கள் மக்கள் எல்லோரும் சேர்ந்து விவசாயம் செய்வதற்காக, அதாவது என்ன திட்டத்திற்காக இந்த காணிகள் வழங்கப்பட்டதோ அதனை செய்ய முற்படுகிறோம். அவர்களால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. ஆனால் நாங்கள் அதை நிறைவேற்றுவோம்.

இங்கு கடைசி காணி பகுதியில் பண்ணை செய்கிறார்கள், இன்னுமொருவர் 200 மா கன்றுகள் வைத்து கையால் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இப்படியாக சில பேரை குறிப்பிட்டு சொல்ல முடியும். இப்படி சிலர் செய்யும் போது ஏன் மற்றவர்களால் செய்ய முடியாமல் போனது?

அவர்களுக்கு காணிக்கான தேவை இல்லாததால் செய்யவில்லை. நான் துப்பரவு செய்து பராமரிப்பதும் ஒரு அரசாங்க வேலை செய்கின்றவரினது காணி தான். நாங்கள் வீடு கட்டுவதற்கு கேட்கவில்லை. எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு பயிரோ பண்ணையோ செய்வதற்கு தான் கேட்கிறோம்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் எடுத்து வைத்து பயன்படுத்தாமல் இருக்கின்ற காணியை தான் நாங்கள் எடுத்து பராமரிக்கிறோமே தவிர இன்னுமொருவர் பராமரித்து வருகின்ற காணியை நாங்கள் எடுக்கவில்லை. இந்த காணிகள் வழங்கப்பட்டு ஒரு வருடகால செயற்றிட்ட காலம் நிறைவு பெற்று மேலும் ஒரு வருட காலமும் கடந்து விட்டது. ஆனால் காணியில் எதுவும் செய்யவில்லை.

இந்த அரச உத்தியோகத்தர்கள் தங்களின் காணி, தங்களின் உறவினரின் காணி என்று சொல்ல மாட்டார்கள். தாங்கள் கொடுத்த பயனாளர்களின் காணிகளை அடாவடியாக பிடிக்கிறார்கள் என்று தான் இவர்கள் தகவலை கொடுப்பார்கள். உண்மையான விடயம் என்னவென்று பிரதேச செயலாளருக்கோ, மாவட்ட செயலாளருக்கோ, ஆளுநருக்கோ தெரியாது. நேரடியாக கள விஜயம் மேற்கொண்டால் தான் உண்மை என்னவென்று தெரியும். ஏன் இப்படி நடந்திருக்கிறது என்று சரியாக விசாரிக்க வேண்டும். எங்களுக்கு ஆறு மாதம் தாருங்கள், நாங்கள் பயன்படுத்தாமல் விட்டால், எங்களிடம் இருந்து பறித்து நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்.

எனது சுய தொழிலை மேம்படுத்துவதற்கு எப்படியாவது இந்த காணியை பெற்று தர வேண்டும்!- விஜயராணி

எனக்கு நான்கு பிள்ளைகள் அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. கணவரும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டார். நான் இருப்பிடமாக சிறிய காணி துண்டுக்குள் இருக்கிறேன். 4 வருடமாக எனது பெண் பிள்ளை தான் எனது குடும்பத்தை பார்த்து வருகிறார். நான் அரிசி மா அரைத்து விற்கிறேன். அதில் ஒரு சிறிய தொகை கிடைக்கிறது. நான் எனது பண பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக காணி ஒன்றை தரும்படி கிராம சேவையாளர் ஊடாக கதைத்தும் கடிதங்கள் கொடுத்தும் கிடைக்கவில்லை. காணி பெற்று கொள்ள கூடிய வகையில் நான் செய்யற்றிட்டம் ஒன்றை முன்வைத்தும் என்னை கச்சேரியால் காணிக்காக நேர்முகத் தேர்வுக்கு கூப்பிடவில்லை.

மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே காணியை பயன்படுத்திய மிக சிலர் தவிர்ந்த ஏனையோருக்கான காணி அனுமதியை இரத்து செய்து அதனை உண்மையாக கேட்டுள்ள பயனாளிகளுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்.

தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க அடிப்படையானவை காணிகளே! பொதுமகன்- சிவபுரி

என்னை போல தேவைப்பாடு உடைய பயனாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்குமாயின் நிச்சயமாக இந்த காணிகளின் நிலை திறம்பட இருந்திருக்கும். இவ்வாறு கொடுக்கப்பட்ட காணிகளில் 14 காணிகள் இரத்து செய்யப்பட்டும் உள்ளதாக அறிந்தேன். தற்போது நான் பராமரிக்கின்ற காணியும் உடைமையாளரிடமிருந்து பிரதேச செயலாளரால் மீள வேண்டி எடுக்கப்பட்ட காணி தான்.

நான் பயிர், கால்நடை வளர்ப்பு செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த பகுதிக்குள் ஒரு வருடத்திற்கும் மேலாக சென்று வருகிறேன். இந்த காணியின் உடைமையாளர் இல்லாததாலும் இரத்து செய்யப்பட்டது என்பதை அறிந்ததாலும் பெரும் காடாக இருந்த Lot-N குறியீட்டிற்குரிய காணியை துப்பரவு செய்து வேலி அடைத்து தற்போது தானியப் பயிரும் விதைத்திருக்கிறேன்.

இந்த விடயங்களை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். எனக்கு இந்த காணி அவசியமாக தேவைப்படுகிறது. என்னிடம் முருங்கை வளர்ப்பு, பல பயிர் சாகுபடி, இயற்கை பசளை தயாரிப்பு என நிறைய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.

தற்சார்பு பொருளாதாரமாக எங்கள் வாழ்வியலை மாற்ற வேண்டும் என்பதே எனது அவா. எனக்கு 6 மாத காலமே போதுமானது. அதற்குள் நான் செய்ய தவறும் பட்சத்தில் நானாகவே இந்த காணியை விட்டு வெளியேறி அரசாங்கமே காணியை எடுத்து கொள்வதற்கும் இணங்குகிறேன்.

எனவே மாவட்ட செயலாளர் தங்கள் நேரடி கண்காணிப்பில் மீள் ஆய்வுக்கு உட்படுத்தி நடந்தேறிய மாபெரும் ஊழலையும் கண்டறிய வேண்டும். அதேவேளை களவாடப்பட்டுள்ள இந்த காணிகள் உரிய பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

சோதியா-

நிமிர்வு கார்த்திகை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.