அரச பல்கலைக்கழகங்களில் பேச்சுரிமை


யாழ்ப்பாணம் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான கற்கை நிலைம் தமிழ் பொது பரப்பில் சமகாலத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பிலே ஒரு ஆழமான உரையாடல் தேவை என்ற அடிப்படையிலே அறம் பேசு என்ற காணொலி தொடரை வெளியிட்டு வருகிறது. அதில் அரச பல்கலைக்கழகங்களில் பேச்சுரிமை என்ற தலைப்பில் கலாநிதி கு. குருபரன் வழங்கிய உரையை வாசிப்புக்காக எழுத்து வடிவில் தருகிறோம்.

அரச பல்கலைக்கழகங்ளில் கருத்து சுதந்திரம் தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் கடந்த இரு வாரங்களாக தமிழ்ப் பொதுப்பரப்பிலே பேசப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்த விவாதம் ஆழப்படுத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக அது தொடர்பாக என்னுடைய சில கருத்துகளை நான் முன்வைக்கின்றேன்.

பல்கலைக்கழகங்கள் அறிவிற்கான இடங்கள். அறிவை தேடுவதற்கான இடங்கள். புலமைத்துவ தேடலுக்குரிய (academic inquiry) இடங்கள். இந்த இடங்களிலே இந்த விடயம் தான் பேசப்படலாம் இந்த விடயம் பேசப்பட கூடாது என்ற விடயம் இருக்க கூடாது என்று பொதுவாக சொல்வார்கள்.

பேசினால் தான் விவாதித்தால் தான் மெய்ப்பொருள் காணப்படலாம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய மகுட வாசகம் “மெய்ப்பொருள் காண்பது அரிது” என்பது.

எல்லா விதமான கருத்துகளும் வந்தால் தான் அந்த கருத்துகள் பேசப்பட்டு விவாதிக்கப்படலாம்; தனி நபர்கள் தமது கருத்துகளை தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விவாதிக்கலாம்; மாணவர்கள் தங்களுடைய சிந்தனைகளை வளப்படுத்தி கொள்ளலாம். 

பொதுவாக தாராண்மைவாத சமூகம் (liberal society) ஒன்றிலே பல்கலைக்கழகங்களின் வகிபாகம் என்ன என்பதன் பார்வை இதுதான். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பல்கலைக்கழகங்கள் சிந்தனைகளுக்கான ஒரு திறந்த சந்தையாக இருக்க வேண்டும், என்று கருத்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அடிப்படையிலே இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அதாவது பல்கலைக்கழகங்கள் என்பவை புலமைத்துவ சுதந்திரமும் புலமைத்துவ தேடலுக்கும் உரிய இடங்களாக இருக்கும் பட்சத்தில் அதில் சில விடயங்கள் பேசப்படக் கூடாத விடயங்கள் என்று இருப்பது அந்த அறிவினுடைய விசாலமான தேடலுக்கு எதிரான ஒன்று என்பதனை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளலாம். 

குறிப்பாக ஏனைய வெளிகளை விட பல்கலைக்கழகத்திலே இருக்கக் கூடிய கருத்துச் சுதந்திரமானது இன்னும் விசாலமாக இருக்க வேண்டும். ஏனெனில் அறிவு தேடல் எனும் சிறப்பு கைங்கரியத்தை செய்யும் இடத்திலே கருத்துகளுக்கான மட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் குறிப்பாக நீங்கள் விரும்பாத அல்லது உங்களை ஆச்சரியத்திற்கு உட்படுத்துகின்ற அல்லது உங்களை காயப்படுத்துகின்ற கருத்துகள் கூட பேசப்பட வேண்டும். ஏனென்றால் அவ்வாறான கருத்துகள் வருகின்ற போது தான், கருத்து கருத்தோடு மோதுகின்ற போது தான் கருத்துகள் செழுமைப்படுத்தப்படும் என்ற விடயம் முன்வைக்கப்படுகிறது. தாராண்மைவாத அரசியல் சமூகத்தில் (liberal political society) பல்கலைக்கழகத்தின் பங்கு என்னவென்று பார்க்கும் போது இந்த கருத்து முன்வைக்கப்படுகிறது. 

இதில் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிச்சயமாக இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையிலும் தனிப்பட்ட ரீதியாக கருத்துகளுக்கு நிச்சயமாக இடம் இருக்க வேண்டும். அவை பேசப்பட வேண்டும். அனைத்து கருத்துகளுக்கும் இடம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மட்டுப்பாடுகள் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

அமெரிக்காவில், இங்கிலாந்து உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக குறிப்பாக பல்கலைக்கழகங்களில் ‘மேடை மறுப்பு’ (No Platforming) என்று சொல்லப்படுகின்ற ஒரு விடயம் நடந்தேறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அதாவது சிலருக்கு நாங்கள் மேடை அமைத்து கொடுக்க கூடாது. 

அதனுடைய இரண்டாவது பாகமாக ஒருவரை பேச அழைத்தால் அவருக்குரிய அழைப்பை மீள பெறுகின்றதும் வாடிக்கையாக நடந்து வருகின்ற விடயமாக இருக்கிறது. இதனை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வலதுசாரி மாணவ இயங்கங்களும் செய்கின்றன. இடதுசாரி இயக்கங்களும் செய்கின்றன. உதாரணமாக வலதுசாரி மாணவர் அமைப்பு என்று சொல்பவர்கள் இடதுசாரி கருத்துகளோடு வருபவர்களை பேச விடுவதில்லை.

அல்லது இடதுசாரி தன்மையாக வருகின்ற, உதாரணமாக தற்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசுகின்றவர்களை பல்கலைக்கழகத்திற்குள் பேச விடுவதில்லை. இஸ்ரேலிற்கு ஆதரவான போக்கை காட்டுகின்ற தன்மை வலதுசாரி போக்கு. மற்றைய போக்கு இடதுசாரிகள் மத்தியிலும் இருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள அரசாங்கங்களும் இதனை மிகக் கவனமாக பார்க்கிறார்கள்.

பெண்ணிய கருத்துகளுக்கு எதிரானவர்கள், காலநிலை மாற்றம் இடம்பெறவில்லை என்று சொல்பவர்கள் (climate change deniers), ஜெர்மனியில் யூத இனத்தவர்கள் அழிக்கப்படவில்லை என்று சொல்கின்றவர்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க கூடாது. இவை போன்ற விடயங்களிலே அப்படியானவர்களை அழைத்துப் பேசுவதற்கு அவர்களுடைய கருத்துகளை கேட்பதற்கு கூடஇடம் கொடுக்க கூடாது என்ற ஒரு பார்வையிலே செயற்படுகின்ற மாணவர் இயக்கங்கள் இயங்குகின்றன. அவர்கள் பல்வேறு நபர்களை அவ்வாறாக பல்கலைக்கழகத்திற்குள் அழைக்காமல் விட்டிருக்கிறார்கள். விடுக்கப்பட்ட அழைப்பை மீள வாங்குவதற்கு அழுத்தம் பிரயோகித்திருக்கிறார்கள்.

இதில் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாவது, உதாரணமாக யூதர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெறவில்லை (holocaust deniers) என்று சொல்வதே ஒரு குற்றமாக பல மேற்கத்தேய நாடுகள் ஆக்கி வைத்திருக்கின்றன. அப்படி சொல்பவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழே கொண்டு வரலாம் என்ற விடயம் கூட இருக்கின்றது. 

அதே போன்று  மாற்றம் என்பது நடைபெறவில்லை, அது மனிதர்களால் ஏற்படுத்தப்படுவது இல்லை, அது இயற்கையானது என்று சொல்கின்ற ஒரு கருத்தானது விஞ்ஞானத்திற்கு எதிரானது. அது விஞ்ஞான நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது; ஒரு அரசியல் சித்தாந்தத்தின்பாற்பட்டது;

குறிப்பாக பல்தேசிய நிறுவனங்களின் (corporate companies) முதலாளிகளினுடைய நலன்களுக்காக செய்யப்படுவது. அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் விட கூடாது என்பதிலும் பொதுவாக ஒரு கருத்து ஒற்றுமை இருக்கிறது.

ஆகவே, சில கருத்துகள் பேசப்படவே கூடாது என்பதில் இன்று ‘கருத்துகளை பேச வருபவர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது’ என்று சொல்கின்றவர்கள் கூட இதற்கு இணங்குவார்கள். அதாவது இடதுசாரிகள் முற்போக்காளர்கள் இணங்குவார்கள். காலநிலை மாற்றத்தை இல்லை என்று சொல்பவர்களுக்கும் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று சொல்பவர்களுக்கும் பாலின சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற விடயத்தை மறுத்து பேசுகின்றவர்களுக்கும் பல்கலைக்கழகத்திலே வாய்ப்பு கொடுக்க கூடாது என்று சொல்லுகின்ற நிலைப்பாட்டில் அவர்கள் இணங்கி வர கூடும். ஆகவே கருத்துகளை பொறுத்து தான் இந்தக் கருத்துகளை அனுமதிப்பதா இல்லையா என்பது ஆராயப்படும்.

உதாரணமாக நான் கேட்கிறேன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணத்தில் தற்போது தீவிரமாக இந்துத்துவ அரசியல் பேசும் நபர் ஒருவரை அழைத்தால், அதற்கு எதிராக மாணவர் போராடி அவரால் பேச முடியாத சூழல் ஏற்பட்டால் அவருடைய கருத்து சுதந்திரம் மீறப்பட்டதாக இந்த முற்போக்காளர்கள் கருதுவார்களா? அல்லது யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முன்னாள் ஆவா குழு தலைவரும் தற்போது அரசியல் செயற்பாட்டாளராகவும் இருக்கின்ற ஒருவரை பேசுவதற்கு அழைத்தால் மாணவர்கள் போராடி அவரை வர வேண்டாம் என்று தடுத்தால் அதற்கு இந்த முற்போக்காளர்கள் அவருடைய கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சொல்வார்களா?

இன்னும் கொஞ்சம் தாண்டிப் போய் இந்திய நாட்டின் பிரதம மந்திரி அல்லது பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவரை அழைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே பேசவிட வேண்டும் என்று சொல்கின்ற போது, இந்துத்துவ அரசியலை முன்னெடுத்து, முஸ்லீம்களை அடக்கி ஓடுக்கி அவர்களுக்கு எதிரான அரசியலை செய்கின்ற ஒரு நபரை பல்கலைக்கழகத்திற்குள் அழைத்து பேச விட கூடாது என்று மாணவர்கள் போராடி அதனை தடுக்கும் பட்சத்தில் அதுவும் குறித்த பாரத பிரதமர் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலைவரை பேச விடாமல் தடுத்தது கருத்து சுதந்திரத்திற்கு முரணானது என முற்போக்காளர்கள் கூறுவார்களா?

ஆகவே கருத்தை பொறுத்து தான் அந்த கருத்துக்கு சுதந்திரம் வேண்டுமா அல்லது எல்லா கருத்துகளுக்கும் இடம் வேண்டுமா என்று நாங்கள் தெளிவாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

நாங்கள் அவ்வாறானவர்களை அழைக்கவே கூடாது என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகின்றது? புலமைத்துவ தேடலுக்கு அப்பாற்பட்ட வெறுமனே சித்தாந்த அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் சொல்லப்படுகின்ற கருத்துகளிற்கு இடம் கொடுக்கப்படக் கூடாது. அதனால் அறிவு தேடல் விசாலமடைவதில்லை. அவை வெறும் பரப்புரை கூட்டங்களாக அமையும் என்கிற அடிப்படையிலே அதனை பல்கலைக்கழகங்களில் அனுமதிக்க கூடாது என்கிற ஒரு பார்வை பொதுவாக இருக்கிறது.

ஆகவே பல்கலைக்கழகங்கள் வெறுமனே பேச்சு சுந்திரத்தினுடைய வரையறைக்குள் நின்று பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் மாத்திரம் அல்ல. ஒரு பல்கலைக்கழகங்களினுடைய அறிவுத்தேடலுக்கு உட்பட்ட, ‘துறைசார் எல்லைகள்’ (disciplinary boundaries) என்று சொல்வார்கள், அந்த எல்லைக்கு அப்பாற்பட்டு, அதற்குரிய செயற்படிமுறைகளுக்கு (methodology) அப்பாற்பட்டு வெறுமனே பரப்புரை நோக்கத்திற்காக முன்வைக்கப்படுகின்ற கருத்துகளை ஒருவர் பேச விரும்புகின்ற போது அவருக்கு மேடை அமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வித்தியாசத்தை நாங்கள் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரத்தை விதந்து, சமூக பாதுகாப்பு தேவையில்லை என்று பேசுகின்ற ஒருவரை பல்கலைக்கழகத்தில் பேச அழைக்கலாம். ஆனால் அவர் தர்க்கத்தின் அடிப்படையிலும் பொருளாதார புலமைத்துவ விடயத்திலே அதற்குரிய வழிமுறையை பாவித்து தன்னுடைய கருத்தை முன்வைக்க கூடிய நபராக இருந்தால் அவரை அழைக்கலாம்.

அதைவிடுத்து அதனை ஒரு அரசியல் கருத்தியலாக எடுத்து பேச வருபவருக்கு பல்கலைக்கழகத்திலே நாங்கள் இடமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விடயம் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஆகவே பல்கலைக்கழகத்திலே யாரை அழைக்கின்றோம் என்று பார்க்கின்ற போது, அந்த அறிவு தேடலுக்கு அவர் வைத்திருக்கின்ற நிலைப்பாடு உதவுமா இல்லையா என்பதல்ல பார்க்க வேண்டியது. அவர் பேசுகின்ற வகை அதை முன்வைக்கின்ற முறையில் அறிவுத் தேடல் கூடுகின்றதா இல்லையா என்பதனை நாங்கள் பார்க்க வேண்டும். ஆகவே பரப்புரைக்காக பல்கலைக்கழகத்தை மேடையாக்க விரும்புபவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக இடமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை சொல்ல வேண்டும்.

இறுதியாக நாங்கள் இந்த விடயத்திலே தொட்டுச் செல்ல வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்கின்ற போது எல்லா கருத்துகளுக்கும் சுதந்திரம் அல்ல. ஹேபட் மார்கியூஸ் (Herbert Marcuse) என்ற மிக முக்கியமான மாக்சிய சிந்தனையாளர் ஒருவர் இருக்கிறார். அரசியல் கருத்துகள் யாவற்றுக்கும், அதாவது உண்மையாக எல்லாவிதமான அரசியல் கருத்துகளுக்கும் இடமில்லாத சூழலில் கருத்துச் சுதந்திரம் பேசப்படுகின்ற போது எந்தக் கருத்தின் பின்னால் அதிகாரம் இருக்கின்றதோ அதற்கான சுதந்திரமாகத் தான் கருத்துச் சுதந்திரம் அமைந்து விடும் என்ற விடயத்தை அவர் சொல்லுகின்றார். 


கருத்துகளுக்கு வழங்கப்படும் பாரபட்சமற்ற சகிப்புத்தன்மை (indiscriminate tolerance) என்பது உண்மையில் அதிகாரத்துக்கு சேவகம் செய்யும் என்பதே தவிர உண்மைக்கு சேவகம் செய்யாது என்கிறார். அதாவது அனைத்துக் கருத்துகளையும் நாங்கள் ஏற்க வேண்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும், கேட்க வேண்டும் என்று சொல்கின்ற பொழுது உண்மையில் எந்த கருத்துகளுக்கு இடமளிப்பது?

உதாரணமாக இன்றைய அரச பல்கலைக்கழக சூழலில் சில கருத்துகளை சொல்லவே முடியாது. அரச பல்கலைக்கழகங்களால் ஜீரணிக்கக் கூடிய கருத்துகளுக்கு மாத்திரம் தான் கருத்து சுதந்திரம் என்றால் அது அதிகாரத்திற்கான கருத்துச் சுதந்திரமே ஒழிய உண்மையை தேடுவதற்கான கருத்து சுதந்திரம் இல்லை என்பதனையும் பார்க்க வேண்டும்.

ஆகவே ஒரு முழுமையான அர்த்தத்தில் கருத்துகளுக்கான சுதந்திரம் (freedom of expression) இல்லாத இடத்தில் தனிய பேசுவதற்கான சுதந்திரம் (freedom of speech expression) என்று நாங்கள் குத்தி முறிஞ்சால் அது அதிகாரத்தோடு நிற்கக்கூடிய freedom of speech க்கு மட்டும் தான் நாங்கள் இடத்தை கொடுக்கிற ஆட்களாக இருப்போம். எங்களுடைய அரச பல்கலைக்கழகங்களின் சூழலில் சில கருத்துகளை பேசுவது சாத்தியமே இல்லை. அரச பல்கலைக்கழகங்களில் அவற்றை நிர்வகிப்பவர்களின் கருத்தியலுக்கு விரோதமில்லாத கருத்துகளுக்கு மாத்திரமான கருத்து சுதந்திரம் எனும்போது அங்கு ஒரு சமனற்ற தன்மை இருக்கிறது.

இவ்வாறாக, பாரபட்சமற்ற சகிப்புத்தன்மையை கேட்பவர்கள் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அரச பல்கலைக்கழகங்களில் அனைத்து கருத்துகளுக்கும் உண்மையாக சமனான இடங்கள் இருக்கின்றனவா என்று. அப்படியில்லாவிட்டால் அதனை மாற்றுவதற்கு அந்த பல்கலைக்கழகங்களில் அவர்கள் பேசுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.

அரச பல்கலைக்கழகங்கள் ஒரு கட்சியினுடைய அரசியலின் அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தின் அல்லது பேரினவாத அரசியலின் நீட்சியாகவோ இருப்பதைக் கண்டிக்காதவர்கள் அந்த சூழலுக்குள் ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு இடமில்லை என்று சொல்வது அந்த அரச பல்கலைக்கழகத்தினுடைய அதிகாரத்தில் இருப்பவர்களோடு சேர்ந்து போவதாக தானே கருத வேண்டும்.

ஆகவே முழுமையாக நாங்கள் பல்கலைக்கழக சூழல் என்பது அனைத்து கருத்துகளுக்கான உண்மையான இடமாக இல்லாத பட்சத்தில், ஒரு கருத்துக்கு மட்டும் இடமளிக்கப்படாத போது அது கருத்து சுதந்திரத்தினுடைய மறுப்பு என்று பேசுவது ஒரு பரிமாணத்தை மட்டும் தான் காட்டுவதாக நான் கருதுகிறேன். ஆகவே அரச பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தை பேசுவோர் பல்கலைக்கழகங்கள் அரச கட்டுப்பாட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவார்த்தத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதையும் பேச முன்வர வேண்டும்.

அப்படியாக பேச முன்வருகின்ற பொழுது தான் அறிவு தேடலும் சிறப்புறும். மெய்ப்பொருள் காணுகின்ற அறிவும் எங்களுக்கு கிடைக்கப்பெறும்.


கலாநிதி கு. குருபரன்

நிமிர்வு கார்த்திகை 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.