புலிகள் பாசிஸ்டுகளா?

2023 ஐப்பசி 7 இல் ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை என்று ஐப்பசி 24 இல் நடந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குதேரஸ் தெரிவித்திருந்தார். 70 ஆண்டு காலமாக தமது வீடுகளிலிருந்து அநியாயமாக துரத்தப் பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 365 சதுர கிலோமீற்றர் பரப்பளவை மட்டும் கொண்ட காசா எனும் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் 2 மில்லியனுக்கும் மேலான மக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்வினை தான் இது என்பதைத் தான் அவர் சொல்கிறார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஹமாஸ் செய்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்பதையும் அவர் சொல்கிறார். ஒரு மக்கள் கூட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகள் வன்முறையாக வெடித்து எழுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. அந்த மக்களுக்கு நடந்த அநீதிகளை கதைக்காமல் அந்த எதிர்வினையை மட்டும் பயங்கரவாத நடவடிக்கை என்று சுட்டிக் காட்டுவது நியாயமான ஒன்றல்ல.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே இனரீதியான அடக்குமுறைகளை தமிழ்மக்கள் எதிர் கொண்டார்கள். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த சாத்வீக போராட்டங்கள் எல்லாம் வன்முறை கொண்டு அடக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக எழுந்ததே தமிழ் மக்களின் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம். அந்த ஆயுதப் போராட்டத்தில் கடைசி வரை நிலைத்து நின்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அந்த தனிநாட்டு கோரிக்கைக்கு எதிரான இந்திய ஆக்கிரமிப்பு ஏற்பட்ட பொழுது அதனையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துக்கு பின்னர் இலங்கை இராணுவத்துடனான அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. 

இந்த 30 ஆண்டுகால இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் வடக்கு கிழக்கு மக்கள் தரை, வான், கடல் மார்க்கமாக சிறீலங்கா அரசின் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்கள். தமது வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள். பொருளாதாரத் தடைகளுக்கு ஆளானார்கள். இவ்வாறாக அடக்குமுறைகளுக்கு உள்ளான மக்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் அவற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததில் வியப்பு எதுவும் இல்லை. மக்களின் இந்த செயற்பாடு வெறும் வெற்றிடத்திலிருந்து வரவில்லை.

ஓர் மக்கள் கூட்டம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலங்கள் அபகரிக்கப்படும் பொழுது, அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த விவசாயம், கடற்றொழில் என்பவை அழிக்கப்படும் பொழுது, அரச மற்றும் தனியார் வேலைகள் மறுக்கப்படும் பொழுது, எந்த அடையாளத்தை முன்வைத்து இவை எல்லாம் செய்யப் படுகின்றதோ அந்த அடையாளத்தை பற்றிப் பிடித்துக் கொண்டு அம்மக்கள் கூட்டம் போராடத் தொடங்கும். தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டமும் இவ்வாறு தான் தோற்றம் பெற்றது. எந்த சக்திகள் எல்லாம் அந்தப் போராட்டத்தின் பக்கம் தம்மை இணைத்துக் கொண்டனவோ அவற்றை மக்கள் ஆதரிக்கும் நிலைக்கு பேரினவாதத்தால் தள்ளப்பட்டார்கள். அந்த வகையில் கடைசி வரை  தமிழ்த் தேசியத்துடன் தங்களை இனம் காட்டிக் கொண்ட புலிகளை மக்கள் விரும்பியோ விரும்பாமலோ ஆதரித்தார்கள்.   

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் தமிழ் தேசியம் என்ற ஒன்று மட்டுமே தமது வளங்கள் தொடர்ந்து பறிபோகாமல் இருப்பதற்கான காப்பரண் என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் பின்னணியில் தான் புலிகள் மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகின்றன. புலிகள் போன்ற அர்ப்பணிப்போடு தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்கக் கூடிய இன்னொரு அமைப்பு வரும் வரை இந்த நிலை தொடரும்.  தமிழ் தேசியத்தை முன்னெடுக்கக் கூடிய ஒரு பலமான அமைப்பைக் கட்டாமல் வெறும் உதிரிகளாக அல்லது தமிழ்த் தேசியத்தை நிராகரித்துக் கொண்டு புலிகள் மீது எதிர்மறை விமர்சனம் வைப்பது எதற்கும் உதவப் போவதில்லை. மாறாக அவ்வாறு விமர்சனம் வைப்பவர்களை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தவே செய்யும்.

புலிகளை பாசிஸ்டுகள் என்றும் சிறிலங்கா அரசை பாசிச கூறுகளை மட்டும் கொண்ட ஓர் அரசு என்றும் கட்டமைக்கப்படுகிறது. புலிகள் ஜனநாயகத்தை முற்றாக மறுதலித்ததாகவும் சிறிலங்கா அரசில் ஜனநாயக கூறுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஓர் அரசு தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகிறது என்பதனால் மட்டும் அது பாசிச அரசு அல்ல என்றாகி விடாது.  அப்படி பார்க்கப் போனால் இன்றைய இஸ்ரேலிய அரசு கூட ஒரு ஜனநாயக அரசு தான். 

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் தெற்கிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். தெற்கில் தமிழ் மக்கள் கண்காணிக்கப்பட்டார்கள். வடக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் தேசத்தில் இனவழிப்பு மும்மரமாக நடைபெற்றது. சிங்கள இனம் அரசினால் முன்னிறுத்தப்பட்டது. இவை எல்லாம் சிறிலங்கா அரசை ஒரு பாசிச அரசாகவே சுட்டி நிற்கின்றன. உண்மையில் சிறிலங்கா அரசு இன்றும் தனது இனவழிப்பு நடவடிக்கைகளின் மூலம் தான் ஒரு பாசிச அரசு தான் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. 

புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்பாடுகள் மக்களால் வெளிப்படுத்தப்படுவதை புலிகள் முற்றாக தடுக்கவில்லை. புலிகளின் நிழல் அரசின் கீழ் வாழ்ந்த பலரும் இதற்கு சாட்சி சொல்வார்கள். புலிகளால் நிறுவப்பட்ட நிழல் அரசிலும் பல ஜனநாயகக் கூறுகள் இருந்தன. மக்கள் தமது குறைகளை எடுத்துச் சொல்லி நீதியை பெற்றுக் கொள்ளக் கூடிய வழி வகைகள் இருந்தன. புலிகள் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு கூட கலை கலாசார பரப்பில் வெளி இருந்தது. எவ்வாறு சிறிலங்கா அரசு பாசிச அரசு இல்லை பாசிச கூறுகளை கொண்ட அரசு என்ற வாதம் வைக்கப்படுகிறதோ அந்த வாதம் புலிகளுக்கும் பொருந்தும்.  

புலிகள் பாசிஸ்டுகள் என்றால் அவர்கள் பாசிஸ்டுகளாக வந்ததற்கு தாமும் ஒரு காரணம் என்பதை இன்று அந்த விமர்சனத்தை முன்வைக்கும் புத்திசீவிகளும் இடதுசாரிகளும்  புறந்தள்ளி விட்டு போக முடியாது. அதே போன்று அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறது. இன்றும் புலிகளின் தோற்றுவாய்க் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்த காரணங்களை களைவதற்கான செயற்பாடுகளை எடுக்காமல் புலிகளை பாசிஸ்டுகள் என்று சொல்வது மக்களை மேலும் புலிகளை நோக்கியே ஓடச் செய்யும். புலிகள் பாசிஸ்டுகள் என மேடை போட்டு முழங்குபவர்கள் சாதாரணமாகவே வெகுஜனத்தளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிலையே உள்ளது. 

இப்போதும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி அபகரிப்பு போராட்டம், மேய்ச்சல் தரை போராட்டம்  உள்ளிட்ட தமிழ்மக்கள்  அன்றாடம் சிங்கள பேரினவாதத்தால் எதிர்கொள்ளும் இனஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்தத் தரப்பினர் தொடர்ச்சியாக போராட மாட்டார்கள். அவர்களால் உண்மையாக போராடவும் முடியாது. வேண்டுமானால் சமூக வலைத்தளங்களில் ஒரு இடுகையை இட்டுவிட்டு காணாமல் போய் விடுவார்கள். அந்த மக்களின் அவலங்களை அவர்களுடன் இருந்து நேரடியாக முகம் கொடுப்பார்களேயானால் தமது கருத்துகள் தம்மை ஏன் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 

இவர்களின் இந்த வகையறா கருத்துகள் சிங்கள பேரினவாதத்தையே பலப்படுத்தும். சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் எவ்வாறு தமிழ்மக்களுக்குள் ஊடுருவி நச்சு விதைகளை விதைத்து சமூகத்துக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்து சிதைக்க விரும்பினார்களோ அதையே இப்படியானவர்களும் செய்ய முனைந்தால் எம்மினத்தின் எதிர்காலம் என்னவாவது?

புலிகள் பாசிஸ்டுகள் என்பார்கள், அவர்களின் போராட்ட வழிமுறையும் பிழை என்பார்கள்,  தமிழ்மக்களுக்கு போராட்டமே தேவையில்லை என்பார்கள், போராடி பலதையும் இழந்துவிட்டோம் என்பார்கள்.    ஆனால், காஸாவில் நடப்பவற்றை கண்டித்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கூட்டம் போட்டு முழங்குவார்கள். இங்கேயும் அதே சம்பவங்கள் தான் நடந்தது என்றால் பதில் சொல்லாமல் நகர்ந்து விடுவார்கள்.

ஆக மொத்தத்தில் இவர்கள் யாருமே மக்களோடு இல்லை. மக்களின் ஆத்மார்த்தமான உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலும் பின்னர் அறிந்து கொண்டவைகளையும் வைத்து அதனை சரியாக பகுத்தாராயாமல் மேடை போட்டு முழங்கி அந்நியப்படுவதை தவிர வேறொன்றுமில்லை. இங்கே நாம் மக்கள் என்று குறிப்பிடுவது இந்த இலங்கைத் தீவில் அரச அடக்குமுறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் எல்லா இனத்தையும் சேர்ந்த மக்களையும் தான். அரகலய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க இவர்களால் முடியாமல் போனமைக்கான பிரதான காரணம் அந்த மக்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமின்மையே தான்.

தமிழ் மக்களின் மீதான அடக்குமுறைகள் என்று குறிப்பாக வரும் பொழுது இவர்களின் புரிதல் இன்னும் மோசமாக இருக்கின்றது. இன்று தமிழினம் எப்படி நகர வேண்டும் என்கிற தூர தரிசனம் இவர்களுக்கு இல்லை. கடந்தகாலம் பற்றிய வெற்று விமர்சனங்கள் மட்டும்தான் இவர்களிடம் இருக்கின்றன. இனரீதியாக ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தங்களை எவ்வாறு ஒரு பலமான இனமாக கட்டமைத்துக் கொண்டு தமது உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டும் என்பதற்கான  சிந்தனையை இவர்கள் வளர்க்க வேண்டும். அதனை தமிழ் மக்களுடன் கலந்துரையாடி வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தன்னை நம்பியிருக்கும் மக்களையும் தமது இலட்சியத்தையும் பாதுகாப்பதற்காக எடுத்த சில நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு அந்த அமைப்பையே பாசிஸ்டுகள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது. இது ஒரு பிரச்சனையை வெறுமனே கறுப்பு வெள்ளையாக பார்ப்பதற்கு ஒப்பானது. தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமானது உலகில் நடந்த மற்றைய போராட்டங்கள் போன்று பல சிக்கல்களை கொண்டது. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் எல்லாவற்றிலும் கோலோச்சிக் கொண்டிருந்த அரச அடக்குமுறை, வடக்கு கிழக்கில் வாழ்ந்த பல்வேறு இன மக்களுக்குள்ளே இருந்த ஊடாட்டங்கள் மற்றும் தமிழ் இனத்துக்குள்ளேயே இருந்த சாதிய, வர்க்க, பாலின வேறுபாடுகள் தொடர்பான பிரச்சனைகள்  என்பவற்றை எல்லாம் ஆராய்ந்து அதன் நுணுக்கங்களை பேசாமல் அந்த மக்களை தலைமை தாங்கிய ஒரு இயக்கத்தை ஒரு குறுகிய அடையாளத்துக்குள் அடக்க முனைவது அறியாமை.

இலங்கை முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் மேலும் மேலும் மக்களின் மீது பொருளாதார சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் மக்களுக்கு ஒரு நேர உணவு மட்டுமே உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ளது. இளையோரிடையே போசாக்கின்மை அதிகரித்துக் கொண்டு போகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தின் அநியாயமான வரிக் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். 

இந்த போராட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். அதற்கான ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டியது எல்லா சமூகங்களிலும் இருக்கின்ற முற்போக்கு சக்திகளின் கடமை. இப்படியான நிலைமையில் இந்த முற்போக்கு சக்திகள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினரே தமது இனத்தின் பாதுகாவலன் என்று ஒரு சமூக மக்கள் நம்பிய ஓர் அமைப்பை பாசிஸ்டுகள் என்று முத்திரையிட்டு இருக்கிறார்கள். இந்த முட்டாள்த்தனமான நடவடிக்கை அந்த மக்களுடன் ஒரு ஐக்கிய முன்னணியை கட்டுவதை பன்மடங்கு சாத்தியமில்லாமல் செய்துள்ளது.

இப்படி முத்திரை குத்திவிட்டு அந்த மக்கள் மத்தியில் உரையாட முற்பட்டால் அந்த மக்கள் உரையாடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள். குறிப்பாக இன்றும் அன்றாடம் அரச ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கும் மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். இந்த முத்திரை குத்தல் அரசுக்கு ஆதராவனது என்றே அவர்கள் புரிந்து கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த முத்திரை இடுபவர்கள் தமக்கு வெளியே இருந்து வரும் பொழுது அதனை மேலும் மூர்க்கமாக எதிர்ப்பார்கள். இதுதான் மனித இயல்பு.

அது பிற்போக்கானது என்று வரட்டுத்தனமாக வாதிடுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவதற்கான மூலோபாயத்தில் இவ்வாறான சிக்கல்களை தவிர்ப்பது என்பது தந்திரோபாயமாக இருக்க வேண்டும். அதற்காக இந்த உரையாடல் நடத்தப்படக் கூடாது என்பதல்ல. முதலில் ஐக்கிய முன்னணியை கட்டிய பின் இந்த உரையாடல் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

ஒரு அமைப்பின் மீது விமர்சனம் வைப்பதற்கான கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது ஒரு அடக்குமுறை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு பொத்தாம் பொதுவாக சொல்லி விடமுடியாது. ஒரு அரசு தனது பலத்தைக் கொண்டு சில கருத்துகளை அடக்குவதும் தனக்கு இயைபான கருத்துகளை பிரபலப்படுத்துவதும் கருத்துச் சுதந்திரத்தை அடக்கும் செயற்பாடுகள் தான். ஒரு அரசுக்கு எதிராக போராடிய அமைக்கு எதிரான ஒரு விமர்சனத்தை வைப்பது என்பது கருத்து சுதந்திரம் என்றாலும் ஒரு வகையில் அது அரசுக்கு ஆதரவான செயற்பாடு தான். அவ்வாறாக தம்மை அடக்கும் அரசுக்கு ஆதரவான கருத்தை வைத்துள்ள ஒருவர் தமக்கு வந்து வகுப்பு எடுப்பதை, அது எந்த விடயமாக இருந்தாலும் கூட எந்த ஒரு மக்கள் கூட்டமும் ஒத்துக் கொள்ளாது.

மேலும், ஒரு அமைப்புக்கு எதிராக அரசுக்கு துணைபோகும் அளவுக்கு விமர்சனம் வைப்பதற்கு இவர்களுக்கு கிடைக்கும் மேடை அந்த அமைப்புக்கு ஆதரவாக பேசக் கூடியவர்களுக்கு கிடைக்காது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான அசமத்துவம் இருக்கும் இடத்தில் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது எந்த அளவிற்கு நியாயமானது? கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

சிவா- 

நிமிர்வு மார்கழி 2023 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.