மகாவலியை எதிர்கொள்ளல்
29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்த மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு வருமாறு:
சிலோன் தியேட்டர், டொலர் பாம், கென் பாம், நாவலர் பண்ணை என எல்லைப்பிரதேசங்களில் காணப்படுகின்ற பல பண்ணைகளின் பெயர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றின் பின்னணியை முதலில் பார்ப்போம். பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தக் காலத்திலே அரசாங்கத்தினால் நீண்டகால குத்தகை அடிப்படையிலே இப்பண்ணைகளுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக டொலர் பாம், கென்; பாம் என்ற இரண்டு பண்ணைகளும் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த பண்ணைகளாகும். 1977 ஆம் ஆண்டு தென்பகுதியிலே குறிப்பாக மலையகத்திலே ஏற்பட்ட இனமுரண்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்ட மலையக தமிழர்கள் அந்தப் பண்ணைகளிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த பண்ணைகளிலே இருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியான ஒரு வாழ்வு வாழ்ந்ததாகவும் உழுந்து மற்றும் மிளகாய் செய்கையிலே பெயர் பெற்ற பண்ணைகளாக அந்த பண்ணைகள் இருந்ததாகவும் பல தகவல்களை வரலாற்று ஆவணங்களில் படித்து அறிந்திருக்கிறோம். அவர்கள் நியாயமான ஊதியம் பெற்றதாகவும் அதன் மூலம் நல்ல வாழ்வு வாழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது.
1983 ஆம் ஆண்டு திருகோணமலையிலே அரசாங்க அதிபராக இருந்த ஒருவர் ஒருவர் வவுனியாவில் சிங்கள மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரோடு நெடுங்கேணிப்பகுதிக்கு ஒரு களவிஜயம் மேற்கொள்கின்றார். அவர் ஒரு காலத்திலே 75 வீதத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டிருந்த திருகோணமலை மாவட்டத்தினுடைய சனத்தொகையை திட்டமிட்ட குடியேற்றங்களூடாக மாற்றியமைத்து அரசினால் சிறந்த சேவையாளராக போற்றப்பட்டவர். இந்த களவிஜயத்தினூடாக மேற்குறித்த பண்ணைகளை பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கிறது.
அங்குள்ள இருப்பிடங்கள், காடுகள், குளங்கள் எங்களுடைய வளமான நிலங்களைப் பார்த்து எவ்வாறு இந்த நிலங்களை கைப்பற்ற முடியும் என்ற சிந்தனையோடு அவர் திரும்பி போகிறார். போய் அன்றைய பாதுகாப்பு அமைச்சரான அத்துலத் முதலியிடமும், அன்றைய மகாவலி துறைசார்ந்த அமைச்சராக இருந்த காமினி திஸநாயக்கவிடமும் தான் கண்டவற்றை சொல்கிறார். தமிழர்களை தொடர்ந்து இந்த பண்ணைகளை ஆள விடுவது ஆரோக்கியமானதல்ல என தெரிவிக்கின்றார். இன்று அந்த சிங்கள அதிகாரியின் கனவு அடாத்தாக நிறைவேறியிருக்கிறது.
பண்ணைகளில் வேலை செய்து நிர்க்கதியான தமிழர்களின் நேர்காணல்களில் பார்த்த போது நிறைய விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தீவிரமான காலம் அது. “இது பயங்கரவாதிகள் தங்கியிருப்பதற்கான இடமாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. அதனால் இது பாதுகாப்பில்லாத ஒரு பிரதேசம். இங்கே தங்கியிருப்பது உயிர்களுக்கு ஆபத்தான விடயம். ஆகவே இங்கே தங்கியிருக்க வேண்டாம்” என்று சிங்கள அதிகார தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். பண்ணையில் இருக்கின்ற எல்லோருக்கும் கூட்டம் கூட்டி சொல்லியுள்ளனர். பண்ணையில் இருந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அங்கே வந்திருந்த அதிகாரிகளுடன் குறிப்பாக பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டனர். ஆனால் அவர்கள் மிகவும் பலவந்தப்படுத்தப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கண்டி ஹற்றன் போன்ற இடங்களில் இறக்கி விடப்படடிருக்கின்றார்கள்.
“இரவு பேரூந்திலிருந்து தெருவில் இறக்கிவிடப்பட்ட நிலையில் விடிந்த பின்னர் பார்த்த பொழுது தான் நாம் இருப்பது கண்டி என்று தெரிந்து கொண்டோம். அப்பொழுது தொண்டமான் அவர்கள் பிரபல அரசியல் தலைவராக இருந்தார். இதனை தொண்டமான் அலுவலகத்தில் முறையிட்டோம்” என்று சொல்லுக்கின்றார்கள். இவ்வாறாகவே மிகவும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த பண்ணைகளில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்த பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
பின்னர் தென்பகுதிகளில் சிறைச்சாலைகளில் மிகவும் மோசமான குற்றங்களை செய்து ஆயுள் தண்டனைகளைப் பெற்ற 160 கைதிகளை குடும்பங்களோடு கொண்டு வந்து இந்த பண்ணைகளில் குடியேற்றினார்கள். பண்ணைகளை திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றினார்கள். அந்த பண்ணைகளில் வேலை செய்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சொல்லுகின்றார் “எனக்கு கடவுள் தந்த கொடையாகவே அந்த பண்ணைச் சிறைச்சாலைகளில் வேலை செய்திருக்கின்றேன். எனக்கு காய்த்திருந்த மிளகாய் செடி, உழுந்து என்பவை இருந்த தோட்டக்காணியோடு வீடு தந்தார்கள்.”என்று மகிழ்வாக சொன்னார்.
இதெல்லாம் அவர்கள் தங்களுடைய வாயாலே சொன்ன வசனங்கள். இவ்வாறாக மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டிக்கொண்டிருந்த பண்ணைகளிலிருந்து பலவந்தமாக தமிழர்களை வெளியேற்றி சிங்களவர்கள் குடியேற்றறப்பட்டது வரலாறு.
அதற்கு பின்னர் இது ஒரு அநீதியான செயற்பாடு என்ற வகையில் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களில் ஒன்று மிகவும் ஆக்ரோசமான முறையில் வன்முறைச் செயற்பாடுகளை நடத்தியிருக்கின்றது. இதனால் சிங்களவர்கள் அந்த பண்ணைகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இது 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்றது. இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த நாள் காலையில் கொழும்பிலிருந்து விசேட இராணுவ அணி ஒன்று நடந்த சம்பவங்களை விசாரிக்க வந்திருந்தார்கள்.
குறித்த அணி முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இடைப்பட்ட ஒரு கிராமமான ஒதியமலைக்கு சென்று, முக்கியமான ஒரு கலந்துரையாடல் இருக்கின்றது எல்லோரும் வாருங்கள் என்று சொல்லி, ஆண்களை மட்டும் கூட்டம் ஒன்று வைப்போம் என்று கூப்பிட்டு அத்தனை பேரையும் அதிலே வைத்து படுகொலை செய்தார்கள். மொத்தம் 28 தமிழர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டார்கள். திட்டமிட்ட படுகொலையை செய்துவிட்டு, திறந்தவெளி சிறைச்சாலையை தாக்க வந்த பயங்கரவாதிகளை தாம் கொன்றோம் என அரசாங்கம் அறிக்கை விட்டது.
தங்களுடைய திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு முதலாவது அடிவிழுந்துவிட்டது என்ற ஆத்திரத்தில் 1984 டிசெம்பரில் கொக்கிளாயில் இந்த காடுகளில் எல்லாம் பயங்கரவாதிகள் பரவியிருக்கின்றார்கள் என ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். அவர்களை தேடி அழிச்சு இந்தப் பிரதேசத்தை நாங்கள் சமாதானமான பிரதேசமாக பிரகடனப்படுத்தும் வரையில் நீங்கள் கையில் எடுக்கக்கூடிய உடமைகளை எடுத்துக் கொண்டு இந்தப்பகுதியைவிட்டு வெளியேறுங்கள என்றார்கள். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக் கேணி, தென்னைமரவாடி எல்லையில் இருந்த ஆறு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற செய்தார்கள். இக்கிராமங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற இதய பூமி என்று நாங்கள் அடிக்கடி சொல்லுகின்றனாங்கள். இப்பிரதேசத்தை மணலாறு மாவட்டம் என்றும் நாங்கள் சொல்லுவதுண்டு. வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்காகவே அந்தக் கிராமங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இப்படி புதிய குடியேற்றங்களை செய்வதாயின் உண்மையில் மிகவும் வலிமையான சட்டம் ஒன்று வேண்டும். மகாவலி திட்டம் இலங்கையில் நெடுங்காலமாக இருந்தாலும் நாங்கள் எல்லாம் இடம்பெயர்வு செய்யப்பட்ட போது இப்பிரதேசம் மகாவலித்திட்டத்திற்குள் வரவில்லை.
அந்தநேரத்தில் வரலாற்று ஆவணங்களின் தகவல் படி, அநுராதபுரத்தில் ஓய்வு பெற்ற ஒரு கடற்படை அதிகாரியின் தலைமையில் விசேட நடவடிக்கை பணியகம் ஒன்று வைத்திருந்தார்கள். அதாவது அந்த பிரதேசத்தில் அரசாங்க அதிபர் அல்லது ஏனைய அலுவலக அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற அதிகாரங்களை விட மேலதிக அதிகாரங்களை கொடுத்து அந்த அலுவலகம் வைத்திருந்தார்கள். திட்டமிட்டவகையில் சிங்கள குடியேற்றங்களை செய்வதுதான் அந்த அலுவலகத்தின் நோக்கம்.
1988 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தின் L வலயம் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்குள் வருகின்றது என்று அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுகின்றது. அந்தநேரத்தில் இலங்கை இந்தியா ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் வர்த்தமானி அறிவிப்பின் படி அந்த எல்லைக்கு அப்பால் குடியேற்றங்களை விஸ்தரிக்க முடியவில்லை. கொக்கிளாயிலோ, கொக்குதொடுவாயிலோ, நாயாற்றிலோ சிங்கள குடியேற்றம் வரவில்லை. அதற்கு பிறகு விடுதலைப்போராட்டம் தீவிரம் அடைந்த பின்னர் அந்தப் பிரதேசங்களில் குடியேற்றங்களை செய்யவில்லை.
1988ஆம் ஆண்டு வர்த்தமானி கடலில் முடியவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு மகாவலி திட்டம் என்று பிரகடனப்படுத்திய புதிய வர்த்தமானியில்மகாவலி அதிகாரத்தை கொக்கிளாய்க்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட கடலையும் கொண்டு போய் தொடுத்து கொக்கிளாய் கொக்குதொடுவாயில் தொடங்கி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச அரசாங்க அதிபரின் அலுவலகத்தை தாண்டிக்கொண்டுபோய் கிட்டத்தட்ட 34 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பையும் அதற்கு கீழே வருகின்ற அவ்வளவு கிராமங்களையும் உள்ளடக்கனார்கள். மிகவும் தந்திரோபாயமாக செயற்பட்டு டு வலயத்திற்குள் கொண்டு வந்தாலும் அவர்கள் இப்பிரதேசத்தில அதிகாரங்களை செலுத்த முற்படவில்லை. சட்டபூர்வமாக அவர்களுக்கு முழு உரிமை என்றாலும் அவர்கள் அதற்குள் வரவில்லை. அதேவேளை மணலாறு பிரதேச செயலக பிரிவில் 8, 9 சிங்கள கிராமசேவகர் பிரிவினையும் தமிழர் பிரிவினையும் சேர்த்து தனிய ஒரு சிங்கள பிரதேசசெயலாளர் பிரிவினை உருவாக்கினார்கள். அந்த சிங்கள பிரதேச செயலாளர் பிரிவை முல்லைத்தீவு மாவட்டத்துடன் சேர்த்துவிட்டார்கள்.
எங்களுக்கு சொந்தமான வாழ்வாதாரம் எல்லாம் அதற்குள் போய்விட்டது. 2000 ஏக்கர் வயல் நிலங்கள் குறிப்பாக வாழ்வாதார நிலங்களும் பறிபோனது. எங்களுடைய மக்கள் ஏற்கனவே தோட்டம் செய்து வயல் செய்து குளங்களுக்கு கீழே நீர்ப்பாசனம் செய்து வளமாக வாழ்ந்த இடம். அக்கரைவெளியில் என்னுடைய அம்மப்பாவிற்கு 30 ஏக்கர் காணி இருக்கின்றதாம். விதை நெல்லோட வண்டிலில் போனால் திரும்பி வரும்போது ஏராளமான நெல் மூட்டைகளோடு தான் வருவாராம். அவ்வளவு காலமும் அங்கே தங்கியிருந்து தான் நெல் பயிர் செய்கையை கவனிப்பார்களாம். இன்று அந்த வயல்கள் எல்லாம் சிங்களமயமாகி விட்டது.
06.08.2018 அன்று ஒரு சம்பவம் நடந்தது. கருநாட்டுக்கேணி என்ற தமிழ் கிராமம் மகாவலி வலயத்துக்குள் வந்தாலும் அதுவரை தங்களுடைய அதிகாரத்தை அங்கு பயன்படுத்தாமல் இருந்தார்கள். சிங்கள கோடீஸ்வரர் ஒருவர் முல்லைத்தீவு கடற்கரையில் எல்லா சட்டங்களையும் மீறி ஒருவரின் அனுமதியுமில்லாமல் 50 இலட்சத்திற்கு மேல் செலவழித்து ஒரு ஆடம்பர வீடு கட்டினார். அந்த கடற்கரை பிரதேசம் பாரம்பரியமாக எமது தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் பிரதேசமாகும். கரைதுறைப்பற்று பிரதேசத்தின் காணி உத்தியோகத்தர் ஒருவர் அதற்கு எதிராக ஒரு வழக்கு போட்டார். இது எங்களுடைய காணித்திணைக்கள ஆளுகைக்கு உட்பட்ட நிலம். எங்கள் யாரையும் கேட்கவில்லை. சட்ட நடைமுறைகளுக்கும் உட்படவில்லை என்று மாவட்ட நீதிமன்றில் ஒரு வழக்கு போட்டார். அந்த வழக்கின்படி உடனடியாக அவர் குறித்த காணி, வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அது பிரதேச செயலகத்துக்கு ஆதரவான தீர்ப்பு.
அதன்பிறகு அந்த சிங்களவர் கொழும்பில் போய் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி இதற்கெதிராக வழக்கு போட்டார். அந்த வழக்கும் எங்களுடைய பிரதேச செயலகத்திற்கு சார்பாக வந்தது. இங்கே அடிப்படை உரிமை மீறப்படவில்லை. நீங்கள் (சிங்களவர்) சட்டத்திற்கு மாறாக செயற்பட்டீர்கள் என்று தீர்ப்பு வந்தது. திரும்பவும் அவர் வவுனியாவில் போய் வவுனியா உயர்நீதிமன்றத்தில் முல்லைத்தீவு மாவட்ட தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்று புதிய வழக்கு போட்டார். அந்த வழக்கு 07.08.2018 அன்று நடக்க இருந்தது. ஆனால் 06.08.2018 அன்று குற்றவாளியான அந்த சிங்களவர் உட்பட இன்னும் எட்டு பேருக்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரம் வழங்கியது. ‘2007 ஆம் ஆண்டு வந்த வர்த்தமானியின் படி கடற்கரைவரைக்கும் மகாவலி அதிகார சபைக்குத் தான் அதிகாரம் இருக்கின்றது கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆகவே இவர்களுக்கு நாங்கள் தான் காணி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதன் பிறகு பார்த்தால் ஆடம்பர வீடு கட்டிய சிங்களவர் ஒருபக்கமும் மற்றப்பக்கத்தில் இரண்டு அரச தரப்புகளும் நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்தன. பிரதேச செயலகப்பிரிவும் ஒரு அரச தரப்பு; மகாவலியும் ஒரு அரசதரப்பு.
இப்படி இருக்கும்போது அக்காணி யாரது ஆளுகைக்கு உட்பட்ட இடம் என்பது தொடர்பில் சட்டமா திணைக்களத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற இருந்தது. ஆனால் வர்த்தமானியின் படி பார்த்தால் அது மகாவலிக்கு உரிய இடம். சட்டமாஅதிபரின் திணைக்களத்தில் நடக்க இருக்கின்ற கலந்துரையாடலில் அந்த காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மகாவலிக்கு உரிமை இருக்கின்றது என்று முடிவெடுக்கப்பட்டு அது நீதிமன்றத்தில் தீர்ப்பாக வருமாக இருந்தால் யுத்தத்தின் பின் மீள்குடியேற்றத்திற்கு என எங்களுடைய பிரதேச செயலர் பிரிவால் எங்களுடைய வடமாகாண காணி அதிகாரிகளுடன் அனுமதியுடன் வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 7000 காணி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியில்லையென்று போகும். மொத்தத்தில் பார்த்தமென்றால் 3இலட்சத்தி முப்பதாறாயிரம் ஏக்கர் நிலம் இந்த மகாவலி புதிய வியூகத்துக்குள் வந்துவிடும். அந்த பின்னணியில்தான் நாங்கள் இந்த போராட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
மகாவலியின் தீவிர போக்கை நாங்கள் மேலும் பார்த்தோமென்றால் L வலயத்தில் வெலிஓயா என்ற பிரிவில் மட்டும் மகாவலி திட்டத்திற்காக போருக்கு பின்னர் 3000 மில்லியன் ரூபாய் செலவழித்திருக்கின்றார்கள். ஏனென்றால் எப்படியாவது ஒரு கவர்ச்சிகரமான வாழ்க்கை முறையை காட்டி வீட்டுத்திட்டத்தை கொடுத்து மின்சாரத்தை வழங்கி நல்ல ஒரு பாடசாலையையும் கட்டிக்கொடுத்து அங்கே சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்ற திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்கள் இயங்குகின்றார்கள்.
யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் ஒரு தேசிய பாடசாலை கூட இருக்கவில்லை. நேற்று குடியேறியவர்களுக்கு இன்று ஒரு தேசிய பாடசாலையும் வந்து விட்டது. எவ்வாறான பௌதீக, உட்கட்டமைப்பு வளங்களை எல்லாம் கொடுக்க முடியுமோ கொடுத்து சிங்களவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதுதான் இந்த கபடதாரிகளின் நோக்கமாகும். இரண்டு பேருக்கு முதலில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது நாங்கள் பொத்திக்கொண்டு இருந்தோமென்றால் இன்னும் சிங்களக் குடியேற்றங்களை விரிவாக்கலாம் என்று கணக்கு போட்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் விழித்துக் கொண்டு விட்டோம்.
மகாவலி அறிக்கையில் மிக தெளிவாக போட்டிருக்கின்றார்கள். L வலயம் மட்டுமில்லை K,J என்ற இரண்டு புதிய வலயங்களின் ஊடாக எங்களுடைய வடக்கின் இதயங்களை துண்டாடி குறிப்பாக முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் நோக்கி ஒரு வலயம், அடுத்து மாங்குளத்திலிருந்து மல்லாவிக்குள்ளாலே மன்னார் கிளிநொச்சியையும் சேர்த்து தொடுக்கின்ற மாதிரி இன்னொரு வலயத்தையும் பிரகடனப்படுத்துவது பற்றி முன்மொழிவு போட்டிருக்கிறார்கள். இந்த முன்மொழிவிற்கு பின்னர் போட்டிருக்கின்ற இன்னொரு செய்திதான் அதிர்ச்சியானது. அவர்கள் சொல்லுகிறார்கள் வடமாகாணத்தின் மொத்த சனத்தொகை சராசரியாக ஒரு மில்லியன் என்று. 2030 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தின் உதவியோடு இந்த சனத்தொகை 1.8 மில்லியனாக மாறுமாம். தமிழர்கள் சனத்தொகை விருத்தியில் 2030 ஆம் ஆண்டு 18 இலட்ச்சமாக வரமுடியாது. வானத்திலிருந்து குதிக்கமுடியாது. ஏதோ நடக்கப்போகின்றது. நிச்சயமாக இவை சிங்கள குடியேற்றங்கள் மூலம்தான் சாத்தியமாகும்.
பொருளாதார ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எங்களுக்கு பெரிய பின்னடைவை இது ஏற்படுத்தும். இதற்கு நல்ல உதாரணம் சொல்லுகின்றேன். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த முறை நடந்த உள்ளுராட்சி தேர்தலில் வென்ற தமிழர்களைவிட சிங்கள உறுப்பினர்கள் கூட. நெடுங்கேணியில் தமிழர்களைவிட சிங்களவரின் வாக்காளர் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கின்றது. இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வவுனியா வடக்கு பிரதேச சபை பிரிவின் தலைவராக தமிழர் வரமுடியாது.
இன்னொரு வழியில் பார்த்தோம் என்றால் இதே நிலைமை நாளைக்கு முல்லைத்தீவில் கரைத்துரைப்பற்றுக்கும் நாளையன்றைக்கு கிளிநொச்சிக்கும் அதுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் நகர வெளிக்கிட்டிடும். கருநாட்டுக் கேணியில் 8 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவது சாதாரண விடயம் இல்லை. இது பாரதூரமாக நன்கு திட்டமிடப்பட்டு தமிழர்களுடைய இனப்பரம்பலை திட்டமிட்ட முறையில் மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றியமைத்து அதனூடாக பொருளாதார அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி எங்களுடைய தேசிய கோட்பாட்டினை அழிப்பதற்கான ஒரு முயற்சி. அந்த முயற்சியை வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறார்கள். பருத்துறையிலிருந்து அம்பாறை வரைக்கும் தமிழர்கள் தொடர்ந்தேச்சையாக வாழ்ந்து வருகிறார்கள் என்படு எமது தாயக கோட்பாடு. எங்களுடைய தாயக கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
இதயபூமியில் திட்டமிட்டரீதியில் சிங்கள குடியேற்றங்களை செய்யும் போது எதிர்காலங்களில் இது தமிழர்களின் தொடர்ந்தேச்சையான இடம் இல்லை. நாங்கள் (சிங்களவர்) தான் வாழ்கின்றோம். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான எந்தவிதமான எல்லையும் இல்லை என்று வாதிடுவார்கள். இவ்வாறான ஒரு நிலையில்தான் நாங்கள் மகாவலிக்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
9 நாட்களுக்குள் உருவாக்கிய ஒரு அமைப்பாலை 9 நாட்களும் 24 மணித்தியாலமும் திட்டத்தினை விளங்கி வேலை செய்தவர்களாலை 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் மிக எழுச்சியாக நடந்த ஜனநாயக போராட்டத்தில் மிகவும் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்கள் பங்கேற்றமை வரலாற்றில் பதிவாகியுள்ளது. இப்போராட்டத்தில் நாங்கள் விட்ட சில தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும். இந்த போராட்டத்துக்கு அரசியல்வாதிகள் ஆர்வம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ளுகின்றோம். ஆனால் அந்த போராட்டத்தை அரசியல்வாதிகள் தான் செய்தது போல ஒரு தோற்றப்பாட்டை காட்ட முற்பட்டார்கள். அவர்களுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளித்ததைகூட நாங்கள் தவறு உணர்கின்றோம்.
இது ஒரு பாரதூரமான பிரச்சனை. வேலைக்காக கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து வேலை கிடைத்தவுடன் நிற்பாட்டுகின்ற போராட்டம் இல்லை இது. எங்களுடைய தேசிய இன விடுதலைப் போராட்டம் என்றுதொடங்கியதோ அன்றிலிருந்தே சிங்கள புத்திஜீவிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் இம்முயற்சியை எமது ஒரு நாள் போராட்டத்தால் அவர்கள் கைவிடமாட்டார்கள்.
இதை ஒரு நாள் போராட்டமாக நாங்கள் கருதவில்லை. மக்கள் இயக்கம் உங்களைப் போன்ற புத்திஜீவிகளுடைய நேர்மையானவர்களுடைய அனுசரணையோடு தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். சட்டரீதியாவும், கொள்கைரீதியாகவும், அறிவுரீதியாகவும் நாங்கள் சிந்தித்து இந்த திட்டத்தை தடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம். அந்த செயற்பாடுகளிற்கு நீங்களும் எங்களுடன் கைகோர்த்து வருவீர்கள் என்று நம்புகின்றோம்.
இங்குள்ள சிங்கள மாணவர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கின்றோம். நாங்கள் அவர்களின் (சிங்களவர்) இடத்தில் போய் குந்தியிருந்து எதையும் கேட்கவில்லை. எங்கட மொழியில் சொல்வதாக இருந்தால் "என்ரை வீட்டுக்குள் வந்திருந்து கொண்டு என்னை கலைத்துபோட்டு நீ வந்து சண்டித்தனம் காட்ட நாங்கள் விடமுடியாது". சட்டத்தை மாற்றியெழுதி எங்களுடைய பண்ணைகள், எங்களுடைய காணிகள்,எங்களுடைய வீடுகளில் நீங்கள் வந்து இருக்கிறீர்கள்.
2007 ஆம் ஆண்டு மகாவலி புதிய வர்த்தமானி அறிவிப்பு வருவதற்கு முதல் சிங்கள புத்திஜீவிகளை கூப்பிட்டு முன்னைநாள் ஜனாதிபதி கலந்துரையாடும் போது கேட்டிருக்கின்றார் தமிழர் போராட்டம் சம்பந்தமாக மூன்று விடயத்திற்கு நீங்கள் ஆலோசனை சொல்லவேண்டும் என்று. ஒன்று, ஆயுதப் போராட்டத்துக்கு முக்கியம் நிதிப்பலம்; அதனை இல்லாமல் செய்ய வேண்டும்; இதனால் தமிழர்களுடைய பொருளாதாரத்துக்கு அடி கொடுக்க வேண்டும். இரண்டாவது தமிழர்களுடைய கலை கலாச்சார அடையாளங்களை இல்லாமல் செய்து இந்த இளைய சமுதாயத்தை இன்னொரு வழிக்கு கொண்டு போக வேண்டும். மூன்றாவது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சட்டரீதியான முறையில் செய்ய வேண்டும். இந்த மூன்று விடயங்களுக்கும் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் 2007 ஆம் ஆண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வந்தது. அதனால் தான் நாங்கள் இன்று இங்கு வந்து நிற்கின்றோம். நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. வன்முறையை தூண்டவில்லை. ஆனால் எங்களுக்கு பிடிக்காத விடயத்தை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கும், அரசியல் அமைப்பு ரீதியாக ஒன்றுகூடுவதற்கும், விரும்பாத விடயங்களை விரும்பவில்லை என்று கூறுவதற்கும் எங்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதனை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். மகாவலி எதிர்ப்பு ஆரம்ப போராட்ட கலந்துரையாடல்களின் போது சொன்னார்கள். சி.ஐ.டியினரும் வருவார்கள் தம்பி என. அதற்கு நான் சொன்னேன் “அவர்களும் வரட்டும்; நான் அவர்களுக்கு இந்த போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக விளங்கப்படுத்தி விடுகிறேன்” என கூறினேன்.
இந்த போராட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொண்டு எங்களின் பின்னால் அணி திரண்டார்கள். இதனை முல்லைத்தீவின் பிரச்சினையாகவோ கரைத்துரைப்பற்றின் பிரச்சினையாகவோ பார்க்க வேண்டாம். தமிழர் தாயகத்தின் பிரச்சினையாக பாருங்கள். அறிவு ரீதியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தொடர்பான எங்கள் தொடர்ச்சியான வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.
தொகுப்பு-துருவன்
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்
Post a Comment