திலீபம்




தியாக தீபம் திலீபனை நேரடியாக அறிந்திராத இளம் தலைமுறையினர் பெருமளவில் திரண்டு இரத்ததானம் செய்கின்றார்கள். மரங்களை நாட்டுகிறார்கள். வாழ்வாதார உதவிகளை வழங்குகிறார்கள். பல்வேறு சமூக சேவைகளை இக்காலப்பகுதிகளில் இன்றைய இளம் தலைமுறையையும் செய்ய தூண்டிய அந்த ஒற்றைச் சொல் தான் திலீபம். கட்சி, இயக்க, மத, பொருளாதார வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றிணைப்பது திலீபம்.


12 நாட்கள் நீராகாரம் கூட உள்ளெடுக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்து உச்ச பட்ச அகிம்சையை அன்று திலீபன் உலகுக்கே போதித்து இருந்தார். அதனால் தான் இன்றும் மக்கள் திலீபனின் நினைவு நாளை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கின்றார்கள். மகாத்மா காந்தியின் நினைவு நாளை உலகெங்கிலுமுள்ள எல்லா இந்தியர்களும் எவ்வாறு நினைவு கூருகிறார்களோ அவ்வாறே திலீபனின் நினைவுநாளை உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் நினைவு கூருகிறார்கள்.


திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளில் குறிப்பாக முதலிரண்டு கோரிக்கைகளும் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை. அவை இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளன.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்துநிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.


திலீபனின் கோரிக்கைகளை இலங்கை அரசும் சர்வதேச அரசுகளும் கருத்தில் எடுக்கவில்லை. ஆயினும் 30 ஆண்டுகள் கடந்தாலும் திலீபத்தின் வீச்சு இன்னமும் குறையாமல் இருப்பது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று சர்வதேசத்திற்கு முரசறைந்து சொல்கிறது. 


சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான மகாவலியை எதிர்த்து கடந்த மாதம் கூட எம் மக்கள் போராடி இருந்தார்கள். சிங்கள அரசின் கடல், நில ஆக்கிரமிப்புக்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.  அதேபோல் திலீபனின் நினைவு நாளில் கூட தமிழ் அரசியல் கைதிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சிறைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உடல்நிலை தொடர்பிலும் மோசமான செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன. 
 

திலீபனின் அகிம்சையை, தியாகத்தை இன்னும் நிறைய மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக இனிவரும் திலீபனின் நினைவு காலங்களில் மாணவர்கள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரைபோட்டிகளை நடாத்த வேண்டும். அத்துடன் போர்க் காலங்களுக்கு முந்தைய காலம்போல் கிராமங்களுக்குள்ளும் திலீபனின் நினைவு தினத்தை பரந்தளவில் அனுட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் வாழைதாரினாலும், பச்சை தென்னை ஓலைகளினாலும் பந்தல் அமைத்து அதற்குள் திலீபனின் நினைவுபடம் வைத்திருப்பார்கள். அப்படியான நிலை மீண்டும் வர வேண்டும்.

தமிழ்மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் ஒப்பற்ற தியாகத்தை சுட்டி நிற்கும் திலீபம் எல்லைகளை கடந்து தமிழர் வாழுமிடங்களில் எல்லாம் நிலைத்து நிற்க வேண்டும். நிலைத்து நிற்கும்.

நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.