மகாவலித் திட்டத்திற்கெதிராக முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம்




“மகாவலித் திட்டத்தின் ஊடாகத் தமிழர் மரபுரிமை பறிக்கப்படுவதை எதிர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்டனப் பேரணியும் கண்டனப் பொதுக்கூட்டமும் கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (28-08-2018) முல்லைத்தீவில் இடம்பெற்றது.

மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு PWD சந்தியில் ஆரம்பமான மாபெரும் கண்டனப் பேரணி முல்லை மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள மைதானத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

குறித்த பேரணி மற்றும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, வடமாகாண சபை உறுப்பினர்கள்,  சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக மேற்படி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலிருந்தும், கிழக்கு மாகாணத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அணி அணியாக  உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர். அத்துடன் தென்னிலங்கையைச் சேர்ந்த சில முற்போக்குச் சிந்தனையாளர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.


பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பேரணியின் நிறைவில் மகாவலி எதிப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில்,

“முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள சிங்கள மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் வடமாகாணம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழர்களும்  நில அபகரிப்பிற்கெதிராகச்  சிங்கள அரசிற்குத்  தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும்” என மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினர்  அறைகூவல் விடுத்தனர்.

  நாங்கள் மகாவலித் திட்டத்தினை மிகவும் வன்மையாக எதிர்க்கின்றோம். சிங்கள மக்களைப் பொறுத்தவரை மகாவலித் திட்டம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தரும் திட்டமாக அமைந்திருந்தாலும் தமிழர்களான நாம் இந்தத் திட்டத்தை ஆக்கிரமிப்பின் குறியீடாகவே பார்க்கின்றோம். தொன்றுதொட்டு இன்றுவரை மகாவலித் திட்டம் தமிழர்களுக்கெதிராக எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுண்டு. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக் கேணி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த-1984 ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக இடம்பெயர செய்யப்பட்டார்கள். இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதார நிலங்களை சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கும் நோக்கிலும், சிங்களக் குடியேற்றங்களை சட்ட ரீதியாக நடாத்தும் நோக்கிலும் 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலய அரசாணை கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு அரசாணையின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் முதல் நாங்கள் தற்போது கூடியிருக்கின்ற இந்தப் பிரதேசத்தைத் தாண்டி வருகின்ற சின்னாற்றுக் கடல் வரையிலான 34 கிலோமீற்றர் கடற்பரப்பை உள்ளடக்கிய 34 கிராமங்கள் மகாவலியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இன்றுவரை 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களின் 2000 ஏக்கர் விளை நிலங்கள் உட்படப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெலி ஓயா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில்  இன்றுவரை ஆறாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதாகவுள்ள இந்த வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவில் போருக்குப் பின்னர் மாத்திரம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் 3000 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தினால் தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிட்டவில்லை. சிங்கள மக்களுக்கு மாத்திராம் நன்மை பயக்க கூடிய வகையில் மணலாற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும், தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகமான வட-கிழக்கை நிரந்தரமாகப் பிரிக்கும் கபடநோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகின்றோம்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்மணியொருவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,  “முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மண்ணைச் சொந்தப் பிறப்பிடமாகக் கொண்டவள் நான். நாயாற்றிலிருந்து கொக்குத் தொடுவாய்க்குச் செல்லும் வீதியில் இரு மருங்கிலும் கயூ மரங்கள் காணப்படுகின்றன. மரங்களுக்கு மேலால் பார்த்தால் எங்கள் பூர்வீக நிலங்கள் தெரியும். ஆனால், அங்கே செல்வதற்கு வனவளப் பிரிவினர் எங்களை விடுகிறார்களில்லை. காணியைச் சுத்தப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கின்றார்கள்.

முந்திரியக்குளம், எரிஞ்சகாடு, கொக்குமோட்டை, அக்கரைவெளி, ஆமையன்குளம் போன்ற பகுதிகளில் மூன்று கிராமத்து மக்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் காணப்படுகின்றன.  இதில் எரிஞ்ச காட்டுப் பகுதியில் மாத்திரம் 300 ஏக்கர் நிலங்கள் மக்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களுக்கு எந்தவொரு வாழ்வாதாரமுமில்லை. சமுர்த்தி இல்லை. இந்நிலையில் எங்கள் நிலங்களில் சிங்கள மக்கள் விவசாயம் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். இதனைவிட 25 ஏக்கர் நிலம், 30 ஏக்கர் நிலம் என அமைச்சர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் அவர்கள் வீடுகள் கட்டியுள்ளனர். பெரும் பண்ணைகளை அமைத்துள்ளனர். விவசாயம் செய்கிறார்கள்.  எங்களுடைய உறவுகள் அவர்களுக்கு கூலி வேலை செய்கிறார்கள். 

எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்கள் வழங்கும் கூலியில் பிச்சைக்காரர்கள் போன்று எமது மக்கள் வாழ்வாதாரம் நடாத்தி வருகிறார்கள். இவ்வாறான விடயங்களை வாய்விட்டுச் சொல்லும் போதே எனக்கு மிகவும் கவலையாகவுள்ளது.  வீட்டுத் திட்டத்தை எதிர்பார்த்திருக்கும் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனால் பல மக்கள் தொடர்ந்தும் தற்காலிக சிறிய கொட்டில்களில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீடிக்கிறது.

30 வருடங்களாகத் துன்பப்படும் எங்களுக்கு இன்னுமா தீர்வில்லை? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை முழுமையாக நம்பியே தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றம் அனுப்பினார்கள். எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்று தருவதாக கூறிய வீட்டுக்கு வாக்களித்த போதும் எங்களுக்கு இதுவரை மீட்சியில்லை. நல்லாட்சி அரசாங்கம் தமிழனையும், சிங்களவனையும் சமமாகவே பார்க்க வேண்டும். ஓரப் பார்வையால் பார்க்கக் கூடாது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைர் கருத்து தெரிவிக்கையில்,  மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் முழுவதும் பறிபோய்விடும். தமிழினத்தையும், தமிழ்த்தேசத்தையும் பொறுத்தவரை நிலப்பறிப்பு தனியே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரமே உரிய விடயமல்ல. இது தமிழ்த்தேசம் சார்ந்த பிரச்சினை. எங்களது இருப்பு சார்ந்த பிரச்சினை. எனவே, இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மாத்திரமே உரித்தானதென நாங்கள் நினைத்துச் செயற்பட்டால் எங்களது இனம் அழிந்து போய்விடும்.

எங்களுடைய தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். தென் தமிழ்த்தேசப் பறிப்பை முற்றாக நிறைவேற்றுவதற்கு மணலாறு நிலத் தொடர்பை சிதைப்பது ஆட்சியாளர்களுக்கு அவசியமாகிறது. மணலாறு நில அபகரிப்பு மூலம் அவர்களின் திட்டமிட்ட செயற்பாடு உறுதிப்படுத்தப்படும். வலி. வடக்கில் இடம்பெறும் காணி பறிப்பு, மன்னாரில் இடம்பெறும் காணி பறிப்பு, எங்களுடைய மீனவர்களின் தொழில் பறிப்பு ஆகியவற்றிற்கெதிராகப் பிரிந்து நின்று போராடும் அனைத்து மக்களும் அணிதிரண்டு இன அழிப்பிற்கெதிராகப் போராட முன்வர வேண்டும். எங்களுடைய மண்ணில் இடம்பெறும் நில அபகரிப்புக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய போராட்டம் அவ்வாறான தடுப்புக்கு முதற் புள்ளியாக அமைய வேண்டும் என்றார்.

இதேவேளை, குறித்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் கட்சி சார்புகளைக் கடந்து பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கை இராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்" எனும் பெயரில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல்த் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நடாத்தப்பட்ட இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி அணியாகப் பங்கேற்று தமது உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருந்தனர்.

எழுக தமிழ் மாபெரும் பேரணியின் பின்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மகாவலித் திட்டத்திற்கெதிரான போராட்டமே வடக்கு மாகாணத்தில் அதிக மக்கள் ஒரே அணியில் ஒன்றுதிரண்ட நிகழ்வாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 செல்வநாயகம் ரவிசாந்
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.